போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் யு.என்.எச்.ஆர்.சி (UNHCR)


(கொழும்பிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் வெளியான ஆசிரியர் பீட தலையங்கத்தின் சாராம்சம்)

ந்த மாதக் கடைசியில் எமது நாடு மீண்டுமொரு முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை என்ற சித்திரவதைக் கருவியில் சிக்கவுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகளினால் போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி மனோ ரீதியிலான சித்திரவதைக்கு உள்ளாக உள்ளது.

நாடுகளோ அரசுகளோ போர்க் குற்றங்கள் அல்லது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்திருந்தால் அவற்றுக்கெதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நாம் எதிர்க்க முடியாது. ஆனால் நடவடிக்கைகள் தேர்ந்தெடுத்த சில நாடுகள் மீதும் மட்டுமாக இருக்கக்கூடாது.

கவலைக்குரிய விதத்தில் போர் என்பதே ஒரு குற்றம். எல்லாப் போர்களும் தவிர்க்கவியலாதவாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்களைக் கொல்வதில் சென்று முடிகின்றன. ஒரு துப்பாக்கி ரவையோ அல்லது வானத்திலிருந்து வீசப்படும் ஒரு குண்டோ போரிடுபவரிலிருந்து பொதுமக்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு எவ்வித வழிவகையும் இல்லை.

கடந்த வருடம் செப்ரெம்பர் 16 ஆம் திகதி ஐ.நா. விசாரணையாளர்கள் வெனிசூலா அரசாங்கம் குறிப்பிடத்தக்க குற்றங்களைச் செய்திருப்பதாக அறிவித்தார்கள். வெனிசூலா ஜனாதிபதியும், உயர் அதிகாரிகளும் கொலைகள், சித்திரவதைகள், ஆட்களைக் காணாமலாக்குதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக UNHRC ஆரின் உண்மையைக் கண்டறியும் குழுவால் அடையாளம் கண்டுள்ளதாக ஐ.நா. விசாரணையாளர்கள் தெரிவித்ததாக பிபிசி தெரிவித்தது.

வெனிசூலா அதிகாரிகளும், பாதுகாப்புப் படையினரும் திட்டமிட்ட முறையில் கொலைகள், சித்திரவதைகள் என்பனவற்றில் ஈடுபட்டு மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்கு போதியளவு சாட்சியங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக உண்மையைக் கண்டறியும் குழுவின் தலைவர் கூறினார்.

ஐ.நா. அமைப்பு 223 சம்பவங்களை ஆராய்ந்ததாக மேலும் கூறியது. இருந்தபோதிலும், அந்த அறிக்கையின் இறுதியில் குற்றங்கள் நடைபெற்ற இடத்துக்கோ அல்லது குறைந்த பட்சம் வெனிசூலாவுக்கோ தாம் செல்லவில்லை என்பதை விசாரணையாளர்கள் ஏற்றுக் கொண்டனர்!

இலங்கையைப் பொறுத்தவரை, குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளோ அல்லது சாட்சியங்களை விசாரிப்பதற்கான வழி முறைகளோ அற்ற முறையில் இந்த விசாரணையாளர்களின் விசாரணைகள், பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தும் ‘பேட்டி’, தெரிவு செய்யப்பட்ட சாட்சிகளிடம் பெறும் அறிக்கைகள் என்பன நமக்கு நன்கு பரிட்சயமான ஒன்று.

இந்த அடிப்படையிலேயே இலங்கையும் UNHRC இன் முன்னால் குற்றும் சாட்டப்படுகிறது. ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின்’ போது, அப்பாவிகள் கொல்லப்பட்டதையோ, குற்றங்கள் இழைக்கப்பட்டதையோ நாம் மறுக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுவதே கேள்விக்குரியது. இலங்கையில் மிகவும் குற்றம் சாட்டப்படக்கூடிய வெளிநாட்டு சக்திகளும், அவர்களது எடுபிடிகளும் திட்டமிட்ட முறையில் தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டதுடன், ஆயுதங்களும் வழங்கியதன் காரணமாக பொதுமக்களின் இழப்புகள் ஏற்பட்டன. ஐ.நா. அறிக்கையில் இந்த வெளிநாட்டு சக்திகள் எவையும் கண்டிக்கப்படவோ அல்லது குறிப்பிடப்படவோ இல்லை. மீண்டும் இந்த குறிப்பிட்ட நாடுகள் போர்க் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றன. ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு போன்ற பகுதிகளிலுள்ள பலவீனமான நாடுகள் மட்டுமே மனித உரிமைகளை மீறியதாக UNHRC இல் தூக்கிப் பிடிக்கப்படுகிறது.

‘அழிவுகரமான ஆயுதங்களை’ இல்லாமல் செய்வதற்கு என்று சொல்லிக்கொண்டு, ஈராக்கில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் படையெடுப்பு நடத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், ஐளுஐளு இன் வளர்ச்சிக்கும் அடிகோலப்பட்டது. அதன் மூலம் அந்த நாட்டில் ஏற்பட்ட சொல்ல முடியாத அளவு இழப்பு குறித்து பேசப்படவோ, போர்க் குற்ற விசாரணை நடத்தப்படவோ இல்லை.

பிரான்சும் இங்கிலாந்தும் லிபியா மீது குண்டு வீசி, அந்நாடு முழுவதையும் அழித்து, அதன் கல்வி அமைப்பையும் அழித்து, ஆயிரக்கணக்கான மக்களை மரணத்துக்கு இட்டுச் சென்றன. இது சம்பந்தமாக எந்தவொரு நாட்டையும் UNHRC விசாரணை செய்யவில்லை.

அமெரிக்காவால் மனித குலத்துக்கு எதிராக நடத்தப்பட்ட பாரிய குற்றங்களில் யப்பானைச் சரணடைய வைப்பதற்காக ஹிரோசிமா (Hiroshima) மற்றும் நாகசாகி (Nagasaki) மீது அணுகுண்டு வீசியதும் அடங்கும். முறையே 1946 ஓகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட இந்தக் குண்டு வீச்சுகளில் ஹிரோசிமாவில் 90,000 முதல் 146,000 வரையிலான மக்களும், நாகசாகியில் 39,000 முதல் 146,000 வரையிலான மக்களும் இறந்தனர்.

அத்துடன், வியட்நாம் யுத்தத்தின் போது அமெரிக்கா அந்த நாட்டின் மீது தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதமான ‘ஏஜன்ட் ஒறேஞ்’ (Agent Orange) என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தியது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் நன்கு அறியப்பட்டவை. ஆனால் அவை பற்றி விசாரித்தால் விசாரணையாளர்கள் மீது தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டுவதாக UNHRC கூறுகிறது. தலிபான்களால் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இந்த உலக அமைப்பு அங்கு போர் முடிந்து விட்டதால் விசாரணைகளை நிறுத்திவிட்டதாக அறிவித்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் மேற்படியான குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த உலக அமைப்பு ஏற்படுத்தப்பட்டாலும், கவலைக்குரிய முறையில் அது நடைபெறவில்லை.

கவலை, ஆனால் உண்மை, அமெரிக்காவின் குற்றங்கள் குறித்து ஐ.நா. ஆராயவே இல்லை. ஐக்கிய நாடுகள் சபையில் எம்மீது குற்றம் சாட்டுபவர்கள்தான் மோசமான முறையில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும், போர்க் குற்றங்களையும் இழைத்தவர்கள் என்ற போதிலும், போரினால் தமிழ் சமூகத்துக்கு ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு நாம் மீளிணக்க செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டிய தருணம் இதுவாகும். நாளைய தினம் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வில் சுதந்திர கீதத்தை தமிழில் பாடுவதன் மூலம் இதை ஆரம்பிக்கலாம்.

Source: chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...