சண்முகா வித்தியாலய அதிபர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!--ஜிப்ரி கரீம் (ஓட்டமாவடி, மட்/மம/மாஞ்சோலை அல் ஹிரா பாடசாலையின் அதிபர்)

 திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், அக்கல்லூரியின் அதிபருக்கு, ஓட்டமாவடி, மட்/மம/மாஞ்சோலை அல் ஹிரா பாடசாலையின் அதிபர் ஜிப்ரி கரீம் பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அவரது Facebook பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள குறித்த மடல் வருமாறு,

மரியாதையாதைக்குரிய சண்முகா வித்தியாலய அதிபர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்!

கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரியை சகோதரி பஃமிதா அவர்களுக்கும் ஓர் மடலினை வரைந்திருந்தேன் ஆனாலும் உங்களுக்கு அப்படியொரு மடலினை வரைய வேண்டும் என்கின்ற எண்ணம் எனக்குத்தோன்றவில்லை ஆயினும் உங்களது தன்னிலை விளக்கமளிக்கும் காணொளி ஒன்றினை முகநூலில் காணக்கிடைத்ததும் எழுதாமல் இருக்கவும் என்னால் முடியவில்லை

மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே!
பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றுவது என்பது எத்துணை சவாலான விடயமென்பதை நான் அறிவேன்

விதவிதமான கொள்கைகள், குணாதிசயங்கள்,சிந்தனைகள் கொண்ட மனிதப்பிறவிகளுடன் சரிநிகர் சமானமாக அத்தனை பேரையும் திருப்திப்படுத்தி ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதென்பது முகநூல் சண்டியர்களுக்கு இலேசானதாக இருக்கலாம் அது எவ்வளவு மனஅழுத்த்தினை தரவல்லது என்பதும் அது எத்தனை சவாலானது என்பதும் அதிபர்கள் மாத்திரமே அறிந்து கொள்ளக்கூடிய ஒருவிடயம் என்பதை மறுப்பதற்கில்லை

அதற்காக இக்காலப்பகுதியில் தங்களுக்கேற்பட்டுப்போன மனத்தாங்கல்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

இருப்பினும் உங்களிடம் சில கேள்விகள் கேட்காமலிருக்க முடியவில்லை

  1. சாதி,மதம்,இனம் என்பதற்கப்பால் நீங்கள் மாதாமாதம் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் ஓர் அரச ஊழியரா?
  2. நீங்கள் தலைமை தாங்கும் குறிப்பிட்ட பாடசாலை நாட்டுமக்களின் வரிப்பணத்தில் அரச உதவி பெற்று இயங்குகின்ற ஒரு பாடசாலையா?
  3. அங்கு கடமை புரியும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அரசாங்கப் பணத்தில் மாதாந்த ஊதியம் பெறுபவர்களா?
  4. நீங்கள் தலைமை தாங்கும் பாடசாலை அரச பாடத்திட்டத்தின்படி கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பாடசாலையா?
  5. நீங்களும்,நீங்கள் தலைமை தாங்கும் பாடசாலையும் அரசின் கல்விக் கொள்கை,சட்டதிட்டங்கள் மற்றும் சுற்றுநிரூபங்களுக்கேற்ப நிர்வாக செயற்பாடுகளையும்,அதனோடினைந்த செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துகின்ற ஒரு பாடசாலையா?
  6. இங்கு பயிலும் மாணவர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் வரப்பிரசாதங்களை (சீருடை,பாடநூல்,போசாக்குணவு,புலமைப்பரிசில் கொடுப்பனவு போன்ற)இலவசமாகப் பெற்றுக் கொள்பவர்களா?
  7. வருடா வருடம் நடைபெறுகின்ற அரச பொதுப் பரீட்சைகளுக்கு (O/L, A/L, புலமைப் பரிசில் பரீட்சை) கட்ணமின்றி தோற்றுபவர்களா?
  8. பொதுப்பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய அரச பல்கலைக்கழகங்களில் இலவசமாக பட்டப்படிப்பை மேற்கொள்ள இக்கல்லூரி மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்களா?

மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே மேலே கேட்கப்பட்ட கேள்விகள் அத்தனைக்கும் “ஆம்” எனப் பதில் அளிப்பீர்களானால்  மட்டுமே கீழ் வரும் விடயங்கள் உங்களுக்கானதாகும்

நீங்கள் உங்கள் மீது சாட்டப்பட்ட அரச கடமையை நிறைவேற்றுவதிலிருந்தும் வேண்டுமென்றோ அல்லது நிர்ப்பந்தத்தின் பேரிலோ தவறிவிட்டீர்கள் என்பதே எனது வாதமாகும்

உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைப் பொறுப்புக்களுக்கமைய குறிப்பிட்ட பாடசாலைக்கு திணைக்கள பொறுப்பதிகாரிகளின்  நியமனக்கடிதத்துடன் வரும் அரச ஊழியரை கடமையேற்கச் செய்யவேண்டியதும், வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட அனுமதிக்க வேண்டியதும் அதிபர் என்கின்ற வகையில் உங்களது கடமை மட்டுமல்ல பொறுப்பும் கூட இந்த இடத்தில் அரச உத்தரவொன்றை நிறைவேற்றத் தவறிய குற்றத்திற்கு ஆளாகி இருக்கின்றீர் என நினைக்கிறேன் இது எவ்வளவு பாரதூரமான விடயம் என்பதனை உணராமல் செய்யுமளவுக்கு தாங்கள் அனுபவமில்லாத ஒருவராக இருப்பீர்கள் என நான் நினைக்கவில்லை

மேலும் தங்களது தன்னிலை விளக்க முகநூல் காணொளியிலும் கையொப்பமிடுவது தொடர்பாக விளக்கமொன்றினை வழங்குவதை கண்ணுற்றேன் கைவிரல் அடையாளம் பதிவு செய்ய வேண்டியிருந்ததாலேயேகுறிப்பிட்ட ஆசிரியையை கடமையேற்கச் செய்வதில் தாமதமாகி விட்டதாகச் சொல்லியிருக்கிறீர்கள்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 2021.10.01திகதிய 2/2021/(V) இலக்கம் கொண்ட அரச நிர்வாக சேவைகளை வழமை போன்று கொண்டு செல்லல் எனும் தலைப்பிடப்பட்ட சுற்றறிக்கையின் 07ம் பந்தி கடமைக்கு வரும் ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேறுகை தொடர்பில் வழமையான பதிவேடொன்றை கையாளுதல் போதுமானதாகும்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளதும் இதற்குப் பிந்தியதாக வந்த சுற்று நிரூபம் கூட திருத்தப்பட்டு வெளியிடப்பட்ட போதும் மேற்படி 07பந்தி திருத்தப்படாமல் இன்று வரை அமுலில் உள்ளதும் ஒரு பெரிய பாடசாலை ஒன்றின் அதிபர் அறியாமல் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்

மேலும் 22.01.2022 புலமைப்பரிசில் பரீட்சை நடந்து கடந்த சனிக்கிழமைதான் வினாத்தாள் திருத்தும் பணிகளே நிறைவு பெற்றுள்ள நிலையில் தரம் 5  புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுக்கான ஏற்பாடகளுக்காக பாடசாலை வந்த பெற்றோர்களே பிரச்சினைக்குரிய பெற்றோர்கள் என்பதும்,பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலேயே  இவ்வாறான கூட்டங்களுக்கு பெற்றோர்கள் அழைக்கப்படுகின்றார்கள் என்பதும் தங்கள் பக்கத்தில் விடப்பட்ட தவறுகளை மறைப்பதற்காக சோடிக்கப்பட்ட சிறுபிள்ளைத்தனமான நகைப்பிற்கிடமான கட்டுக்கதைகள் என்பதை காணொளியை பார்க்கும் எவரும் அத்தோடு பாடசாலையொன்றின் அன்றாட நடவடிக்கைகளை அறிந்துள்ள எவரும் புரிந்து கொள்வார்கள்

ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நீங்கள் ஆளாகிப்போயுள்ளதை நினைத்து கவலைப்படுகின்றேன்,சூழ்நிலைக் கைதியாகி தவறொன்றுக்குத்துணை போனதால் கடும்மன அழுத்தத்திற்கு ஆளாகிப் போன நிலையிலேயே இந்தக் காணொளியும் வெளியிடப்பட்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.எதுவாக இருப்பினும்  என்மனம் உங்களை நினைத்து கவலை கொள்கிறது

ஆயினும் என்ன செய்ய “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே”

Source: chakkaram.com

No comments:

Post a Comment

இலங்கை வரலாற்றில் அழியாத சுவடுகளைப் பதித்துச் சென்ற1953 ஓகஸ்ட் 12 ஹர்த்தால்!--மாவலியான்

மே 18, 2022 1953 இல் ஒரு பெரிய ஊர்வலத்தில் என்.எம். பெரேரா உரையாற்றுகிறார் 1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலையும் தற்போது காலிமுகத்திடலில் முகாமிட்டிர...