சுமந்திரன் வகுத்த எதிர்க்கட்சியினருக்கான புதிய வியூகம்!--சங்கர சிவன்



லங்கையின் தற்போதைய தேசபக்த அரசாங்கத்தைக் கவிழ்த்து 2015 இல் செய்தது போன்ற ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு உள்நாட்டு – வெளிநாட்டு பிற்போக்கு சக்திகள் படாதபாடு படுகின்றனர். இதை அண்மையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய சக்திகள் முன்னர் நாட்டில் ஜனநாயகம் இல்லை, சர்வாதிகார ஆட்சிதான் நடைபெறுகிறது என்று அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தனர். பின்னர் கொவிட் தொற்றுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ‘சீன ஆதிக்கம்’ குறித்தும் பிரச்சாரம் செய்தனர். அதன் பின்னர் டொலர் பற்றாக்குறையால் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடும், விலைவாசி உயர்வும் ஏற்பட்ட பொழுது அதை சிக்கெனப் பிடித்துக் கொண்டு இப்பொழுது அதை அரசுக்கு எதிராக ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதாவது, இன்றைய அரசாங்கம் வெளிநாடுகளிடம் இருந்து கண்டபாட்டுக்கு கடன் வாங்கியதாலும், குறிப்பாக ‘சீன கடன் பொறி’க்குள் நாட்டைச் சிக்க வைத்ததாலும்தான் நாடு கடனாளியாகியதுடன், டொலர் நெருக்கடியும் ஏற்பட்டது என அப்பட்டமான பொய்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். ஆனால், இவர்களது கடந்த ‘நல்லாட்சி’ அரசாங்கம் வெளிநாடுகளிடமிருந்து அறாவட்டிக்குக் கடன் வாங்கியதால்தான் இன்றைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதென்ற உண்மையை ஊடகங்களின் உதவியுடன் சாதுரியமாக மறைத்துக் கொள்கின்றனர்.

அதேபோல, சீன கடன் பொறி பற்றிய விடயத்திலும் உண்மைக்குப் புறம்பாகப் பேசினர். உண்மையில், அரசாங்கத்துக்கு உள்ள மொத்த வெளிநாட்டுக் கடன்களில் சீனாவிடமிருந்து பெற்ற கடன் 10 சத வீதம் மட்டுமே. அதுவும் சீன கடன் மற்றைய கடன்களை விட குறைந்த வட்டியும், நீண்ட கால இலகு தவணையில் செலுத்தக்கூடிய கடனுமாகும். சீனாவிடம் பெற்ற கடனை விட யப்பானிடம் பெற்ற கடன் அதிகம் என்பதைப் பற்றியோ, சீனாவிடம் பெற்ற கடனின் தொகைக்கு அண்மித்த அளவில் இந்தியாவிடமும் இலங்கை கடன் பெற்றது என்பது பற்றியோ இவர்கள் வாய் திறப்பதில்லை. அது மட்டுமல்லாமல், சீனா, யப்பான், இந்தியா போன்ற நட்பு நாடுகளிடம் பெற்ற கடன்களை விட அதிக கடன்களை (ஏறத்தாழ 60 வீதம்) உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களிடம்தான் இலங்கை பெற்றுள்ளது என்ற உண்மையையும் திட்டமிட்டு இவர்கள் மறைத்து வருகின்றனர்.

ஆனால், இவர்களது பொய்ப் பிரச்சாரங்களின் மத்தியில், இவர்கள் எதிர்பார்த்ததிற்கு மாறாக, இலங்கை அரசு சில வெளிநாடுகளிடமும், நிறுவனங்களிடமும் பெற்ற கடனை குறித்த தவணையில் அண்மையில் வெற்றிகரமாக மீளச் செலுத்தியது. இது இந்த உள்நாட்டு எதிர்ச் சக்திகளுக்கும், அவர்களது வெளிநாட்டு எஜமானர்களுக்கும் பேரிடியாக அமைந்துவிட்டது. எனவே இப்பொழுது இராகத்தை மாற்றிப் பாட ஆரம்பித்துள்ளனர்.
அதாவது, முதலில் வெளிநாட்டுக் கடன்களால்தான் நாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனக் கூப்பாடு போட்டவர்கள், இப்பொழுது வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தாது கடன் தந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி கடனைச் செலுத்துவதற்கு கால அவகாசம் கேட்பதுடன், நிபந்தனைகளுடன் என்றாலும் மேலும் கடன் பெறுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர். இந்தத் திட்டத்தின் பின்னணி சூத்திரதாரியாக தமிழரசுக் கட்சியின் வருங்காலத் தலைவர் எனக் கருதப்படும் எம்.ஏ.சுமந்திரன் செயல்படுகிறார்.

இந்தத் திட்டத்தை அரசாங்கத்திடம் முன் வைப்பதற்காக அண்மையில் சுமந்திரனின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சிகளின் ( ஐ.தே.க, சஜித் அணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, மனோ கணேசன் அணி, முஸ்லீம் காங்கிரஸ் என்பன) கூட்டம் ஒன்று மூடிய அறைக்குள் கொழும்பில் நடைபெற்றது. பின்னர் ‘பொருளாதார நெருக்கடி’யைத் தீர்க்க தாங்கள் வகுத்த திட்டம் பற்றி சுமந்திரன் ஊடகங்களிடம் சில விடயங்களைத் தெரிவித்தார்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், உண்மையில் இவர்கள் வகுத்த திட்டம் இதுதான். அதாவது, ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் அவர்களிடம் கால அவகாசம் பெற்று, அவர்களுக்கு தொடர்ந்து வட்டியைச் செலுத்தி வர வேண்டும். ஏனெனில், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களின் நோக்கம், கடனை விரைந்து வசூலிப்பது அல்ல. கடன் பெற்றவரைத் தொடர்ந்தும் கடனாளியாக வைத்துக்கொண்டு, கடனுக்கு மேலாக வட்டியை அறவிடுவது. இது சுமந்திரன் போன்ற ‘மெத்தப் படித்த மேதாவி’ வகையறாக்களுக்குத் தெரியாத விடயமல்ல.

அடுத்தது, நிபந்தனையோடு மேலும் கடன் பெற வேண்டும் என்ற இவர்களது ஆலோசனை. இங்கு ‘நிபந்தனை’ என இவர்கள் குறிப்பிடுவதன் அர்த்தம் உவக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற ஏகாதிபத்திய வட்டிப் கடைகளை மனதில் வைத்துத்தான். ஏனெனில், தற்போதைய அரசாங்கம் இந்த ஏகாதிபத்திய நிறுவனங்கள் கடன் வழங்குவதற்கு நிபந்தனையாக மக்களுக்கான நலத்திட்டங்களை வெட்டும்படி கோருவார்கள் என்பதற்காகத்தான் இந்த நிறுவனங்களிடம் கடன் பெறுவதைத் தவிர்த்து வருகிறது. அவர்கள் இலங்கையைத் தமது கடன் பொறிக்குள் வீழ்த்த நேரடியாக எடுத்த முயற்சிகள் பலனளிக்காததால்தான் சுமந்திரன் தலைமையிலான இந்த எதிரணித் தரகர்கள் மூலம் இப்பொழுது முயற்சித்துப் பார்க்கின்றனர்.

இன்னொரு விடயம், டொலர் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காகவும், அநாவசியமான பொருட்களின் இறக்குமதியைக் குறைப்பதற்காகவும், அரசாங்கம் சில பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தத் தடை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் பாதித்துள்ளது. எனவே, அந்த நாடுகள் இறக்குமதித் தடையை இலங்கை அரசு நீக்க வேண்டும் எனவும், இல்லையேல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜிஎஸ்.பி வரிச் சலுகை நிறுத்தப்படும் எனவும் எச்சரித்து வருகின்றன.

இந்தப் பின்னணியில்தான் சுமந்திரன் குழுவினர் வெளிநாட்டுக் கடன்களை உடனடியாக அடைக்காது அந்தக் கடன்களுக்கு தொடர்ந்து வட்டி கட்டிக்கொண்டு மேலும் கடன்களை அந்த நிறுவனங்களிடம் பெற்று, அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்து மக்களின் கஸ்டங்களைப் போக்க வேண்டும் என அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். அவர்களது இந்த ஆலோசனையைப் பார்க்கையில், அவர்கள் ஏதோ மக்களுக்காகப் பரிவு கொண்டு கதைப்பது போலத்தான் தோன்றும். (அதாவது, ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதைதான்) ஆனால் உண்மை அதுவல்ல. இலங்கையை மேலும் மேலும் ஏகாதிபத்திய சக்திகளின் கடன் பொறிக்குள் சிக்க வைப்பதே அவர்களது நோக்கம். அதற்காக அவர்கள் அந்த சக்திகளுக்காக தரகு வேலை பார்க்கிறார்கள்.

அதனால்தான், இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நாட்டின் நீண்டகால நலன்களை கருத்தில் கொண்டு, இறக்குமதியைக் கட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதுடன், ஏகாதிபத்திய நிறுவனங்களின் நிபந்தனைகளுடள் கூடிய கடன்களைப் பெறுவதைத் தவிர்த்து நட்பு நாடுகளிடம் கடன் பெறும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அரசாங்கத்தின் இந்த தேசபக்த நடவடிக்கைக்கும், எதிர்க்கட்சியினரின் ஏகாதிபத்திய சார்பு தரகு நடவடிக்கைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

இதில் எதை ஆதரிப்பது சிறந்தது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

Source: chakkaram.com 

 


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...