‘வெள்ளையனே வெளியேறாதே!’ – இதுதான் தமிழ் தலைமையின் சுதந்திர தின கோசம்!!--மண்மகன்லங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் – தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் – இலங்கையின் சுதந்திர நாளான பெப்ருவரி 4 ஆம் திகதியை தமிழ் அரசியல்வாதிகள் சிலர் துக்க நாளாக வர்ணித்து கொண்டாடி வருவது தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு சம்பிரதாயம். அன்றைய தினத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களில் கறுப்புக் கொடிகளைப் பறக்க விடுவதும் ஒரு வழக்கம்.

400 வருட அந்நியர் ஆட்சி – முடிவுக்கு வந்த தினம்தான் பெப்ருவரி 4 ஆம் திகதி. குறிப்பாக இலங்கையை ஆண்ட கடைசி காலனித்துவவாதிகளான (குள்ளத் தந்திரம் மிக்க) பிரித்தானியர் ஆட்சி அதிகாரத்தை இலங்கையர்களிடம் (1947 பெப்ருவரி 4 இல்) கை மாற்றிவிட்டு வெளியேறிய தினம்தான் பெப்ருவரி 4 ஆம் திகதி.

இலங்கையின் சுதந்திரம் என்பது தனியே ஒரு இனத்துக்கு உரியதல்ல. அது இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனத்தவர், மதத்தினர் அனைவருக்கும் உரிய நாள். அதைத் பெறுவதற்காக சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், பறங்கியர், மலே இனத்தவர் என அனைவரும் ஒன்றிணைந்து போராடியது வரலாறு. ஆனால் இனவாதம் பேசும் தமிழ் தலைமைகள் இந்த மகத்தான தினத்தை கறுப்பு நாளாக அனுட்டித்து வருகின்றனர். இதன் அர்த்தம் என்ன? இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்திருக்கக்கூடாது, தொடர்ந்தும் அந்நியராட்சி இருக்க வேண்டும் என்பது தானே?

இப்படித் தமிழ் தலைமைகளைச் சந்தேகிப்பதற்கு காரணம் இருக்கிறது. சுதந்திரம் பெற்ற போது முதலாவதாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்து, 1956 இல் பண்டாரநாயக்க தலைமையிலான மாற்று அரசாங்கம் பதவிக்கு வந்தது. அந்த அரசாங்கம் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேசபக்த அரசாங்கமாக இருந்ததினால், இலங்கையின் தேசிய சுதந்திரம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு என்பனவற்றைப் பாதுகாப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்தது.

பண்டாரநாயக்க எடுத்த அந்த நடவடிக்கைகளில் முக்கியமானது, திரிகோணமலையில் இருந்த பிரித்தானிய கடற்படைத் தளத்தையும், கட்டுநாயக்காவிலிருந்த பிரித்தானிய விமானப்படைத் தளத்தையும் நாட்டை விட்டு வெளியேற்றியது. இது ஒரு உறுதியான தேசபக்த நடவடிக்கை. ஆனால் தமிழர்களின் தலைமை என்று தம்மை அழைத்துக் கொண்ட தமிழரசுக் கட்சி அப்பொழுது என்ன செய்தது? தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பிரித்தானியா இலங்கையிலுள்ள தனது படைத் தளங்களை மூடக்கூடாது என பிரித்தானிய அரச தலைவி இரண்டாவது எலிசபெத் மகாராணிக்கு தந்தி அனுப்பி தனது ஏகாதிபத்திய விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார்.

என்னே! தமிழ் தலைமையின் தேசபக்தி. இந்தியாவில் காந்தி சுதந்திரப் போராட்டத்தின் போது ‘வெள்ளையனே வெளியேறு!’ என்று உரக்க முழக்கமிட்டார். ஆனால் தன்னை ‘ஈழத்து காந்தி’ என அழைத்துக் கொண்ட போலிக் காந்தி செல்வநாயகம் ‘வெள்ளையனே வெளியேறாதே!’ என கோசம் எழுப்பினார்.

அது மட்டுமல்ல, பண்டாரநாயக்கவின் அரசாங்கமும், பின்னர் அவரது மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கமும் பல தேசியமய நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்நியர்களின் ஆதிக்கத்திலிருந்த பல சொத்துகளை நாட்டுடைமையாக்கிய போது, தமிழரசுக் கட்சி விதேச சார்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து அனைத்து தேசியமய நடவடிக்கைகளையும் எதிர்த்தது.

இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையை உருவாக்கிவிட்டுச் சென்றவர்கள் பிரித்தானியர் என்பதும், பின்னர் அதை காலத்துக்குக் காலம் வளர்த்தவர்கள் பிரித்தானியா, அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால், தமிழ் தலைமைகள் இந்த உண்மையை மறைத்து இனப் பிரச்சினை சாதாரண சிங்கள மக்களால்தான் உருவாக்கப்பட்டது என தமிழ் மக்களிடம் பொய் சொல்லி இனவாத அரசியல் செய்து வருகிறார்கள்.

அது மட்டுமின்றி, எந்த ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையில் இனப் பிரச்சினையை உருவாக்கி வன்முறையைத் தூண்டி வருகின்றனவோ, அந்த ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையில் தலையிட்டு தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோருகிறார்கள். அதாவது குரங்கை அழைத்து அப்பம் பங்கிடக் கோருகிறார்கள். இன்னொரு பக்கத்தில் சாதாரண சிங்கள மக்களுக்கு எதிராக இனவாதம் பேசிக்கொண்டு, இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிரான மோசமான இனப் பாரபட்ச நடவடிக்கைகளில் கூடுதலான அளவு ஈடுபட்ட வலதுசாரி சிங்களப் பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் கூட்டு வைத்தும் செயல்படுகிறார்கள்.

தமிழ் தலைமைகள் ஆரம்பித்த சுதந்திர தின பகிஸ்கரிப்பு நடவடிக்கைதான் தமிழ் இளைஞர்கள் பின்னர் ஆயுத வன்முறையில் ஈடுபட்டதற்கும், அதிலிருந்து புலிகள் என்ற பாசிசவாத இயக்கம் உருவானதிற்கும் ஆரம்பப் புள்ளி. அப்படித் தமிழ் இளைஞர்களையும், அப்பாவிப் பொதுமக்களையும் தமது பாராளுமன்ற சுகபோகத்திற்காக தூண்டிவிட்டு பலிக்கடாக்கள் ஆக்கிவிட்டு, ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போலவும், அகிம்சாமூர்த்திகள் போலவும் தமிழ் தலைமைகள் ஆசாடபூதித்தனம் செய்கிறார்கள்.

ஆனால் இவர்களது தனிநாட்டுப் போராட்டம் அல்லது சமஸ்டிப் போராட்டம் இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது போல, இவர்கள் 74 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த சுதந்திர தின பகிஸ்கரிப்புப் போராட்டமும் கட்டெறும்பாகிவிட்டது. இம்முறை தமிழ் தலைமைகள் சுதந்திர தினத்தன்று ஓடி ஒளிந்து விட, ஒன்று இரண்டு டசின் புலிகளின் ஆதரவாளர்கள் மட்டும் முள்ளி வாய்க்காலில் சுதந்திர தினத்துக்கு எதிராக கோசம் போட்டதோடு அது மௌனித்து விட்டது. (முள்ளிவாய்க்காலில்தான் புலிகளின் துப்பாக்கிகளும் மௌனித்தன)

தொடர்ந்தும் வரலாற்றுக்குக் குறுக்கே சில தமிழ் சுதந்திர விரோதிகள் ஓடினாலும், பெரும்பாலான தமிழ் மக்கள் நாட்டின் சுதந்திரக் காற்றை இலங்கையின் ஏனைய இன மக்களுடன் இணைந்து சுவாசிக்க ஆவல் கொண்டு விட்டார்கள் என்பதை இவ்வருட சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரமாண்டமான சுதந்திர தினப் பேரணியும், முடிவில் அங்குள்ள வீரசிங்கம் மண்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளும் எடுத்துக் காட்டிவிட்டன.

Source: chakkaram.com  பிப்ரவரி 9, 2022

 

 

No comments:

Post a Comment

இலங்கை வரலாற்றில் அழியாத சுவடுகளைப் பதித்துச் சென்ற1953 ஓகஸ்ட் 12 ஹர்த்தால்!--மாவலியான்

மே 18, 2022 1953 இல் ஒரு பெரிய ஊர்வலத்தில் என்.எம். பெரேரா உரையாற்றுகிறார் 1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலையும் தற்போது காலிமுகத்திடலில் முகாமிட்டிர...