ஏகாதிபத்தியத்தை வீழ்த்திய இந்திய விவசாயிகள் !- -பிரபாத் பட்நாயக்சில குறிப்பிட்ட போராட்டங்களுக்கு, உடனடி முக்கியத்துவத்தைத் தாண்டியும், கூடுதலான முக்கியத்துவங்கள் உருவாகின்றன. அந்தப் போராட்டம் நடக்கும்போது களத்தில் இருந்தவர்களும் கூட அதன் முக்கியத்துவத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டிருப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு போர்க்களம்தான் பிளாசி. பிளாசியில் நடைபெற்றதனை யுத்தம் என்று கூடச் சொல்ல முடியாது. ஏனென்றால் ஒரு புறத்தில் படைக்கு தலைமையேற்ற தளபதி, கையூட்டு பெற்றுக்கொண்டு தனது படையை முன் நடத்தாமல் இருந்துகொண்டார்; இருந்தாலும் கூட, பிளாசியின் காடுகளுக்குள் போர் நடைபெற்ற அந்த நாள், உலக வரலாற்றில் புதிய சகாப்தத்திற்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது.

விவசாயிகள் இயக்கத்திற்கும், மோடி அரசாங்கத்திற்கும் இடையே நடந்த போராட்டமும் அந்த வகையிலான ஒன்றுதான். கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் வியப்புக்குரிய உறுதிப்பாட்டிற்கு முன்பாக மோடி அரசாங்கம் மண்டியிட நேர்ந்திருப்பது, வெளிப்படையாகத் தெரிகிறது. இன்னொரு மட்டத்தில், இது நவ தாராளமயத்தினை பின்னடையைச் செய்துள்ளது. வேளாண்மை துறையில் கார்ப்பரேட் நுழைவு அதிகரிக்கும் போது, விவசாயிகளின் வேளாண்மை கார்ப்பரேட்டுகளுக்கு அடிபணிந்ததாகிறது. நவீன தாராளமய நிகழ்ச்சி நிரலில் இது மிக முக்கியமான விளைவு ஆகும். அந்த விளைவினை உருவாக்குவதுதான் வேளாண் சட்டங்களுடைய நோக்கமும் ஆகும்.

ஏகாதிபத்தியத்தின் விருப்பம்:

மேலே குறிப்பிட்ட இரண்டு பார்வைகளும் தெள்ளத் தெளிவானவையே. ஆனால் அவைகளுக்கு அப்பாற்பட்ட மூன்றாவது ஒரு நிலையும் இருக்கிறது, அது விவசாயிகளின் வெற்றிக்கு கூடுதலான முக்கியத்துவம் தருகிறது. இதுவரை அது போதுமான அளவு கவனிக்கப்படவில்லை. மிகவும் அடிப்படையான பொருளில், ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுதான் விவசாயிகளின் இந்த வெற்றி என்ற உண்மையோடு அது தொடர்புடையது. எனவே, பின்னடைவைச் சந்தித்த மோடி அரசாங்கத்தின் மீது, மேற்கத்திய ஊடகங்கள் வைத்த விமர்சனங்கள்  யாருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்காது.

ஏகாதிபத்தியமானது, உலகின் அனைத்து உணவு வளங்களையும்,ஆதார வளங்களையும் வளைத்துப்போட விரும்புவதைப் போலவே, கச்சா எண்ணை வளங்களை கட்டுப்படுத்த விரும்புவதைப் போலவே, உலகம் முழுவதும், நிலப் பயன்பாட்டின் முறைகளைக் கட்டுப்படுத்தவும்  விரும்புகிறது. குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளில் இதைச் செய்ய விரும்புகிறது. பூமியின் வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்பமண்டல பகுதிகளில் அமைந்த இந்த நாடுகளில்தான் மித வெப்ப மண்டல விவசாயத்தை மேற்கொள்ள முடியும், பெருநகர முதலாளித்துவம் (metropolitan capitalism) அமைந்த பகுதிகளில் இந்தப் பயிர்கள் வளரும் சூழல் இல்லை.

ஒட்டச் சுரண்டப்பட்ட விவசாயிகள்:

இந்த பெருநகரங்கள் (metropolis) தங்களுடைய சொந்த நன்மைக்காக, உலகமெங்கும் நிலப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியத்தை காலனி ஆதிக்க நடைமுறைகள்  ஏற்படுத்திக்கொடுத்தன. இந்தியா போன்ற நாடுகளில் இந்த நடைமுறை வெட்கக்கேடான விதத்தில் பின்பற்றப்பட்டது.

காலனி ஆதிக்க அரசாங்கங்களின் வருவாய்த் தேவைகளுக்காக, விவசாயிகளின் மீது குறிப்பிட்ட அளவு வரி விதிக்கப்பட்டது (அதனை செலுத்தத் தவறினால், அவர்களுடைய நில உரிமையை இழக்க நேரிடும்), எனவே இந்த வரியை செலுத்துவதற்காக வியாபாரிகளிடமிருந்து அவர்கள் முன்பணம் பெற்றார்கள். இதனால் வியாபாரிகள் விரும்புகிற பயிர்களை அவர்கள் விளைவித்தார்கள், அப்போதுதான் முன்பே ஒத்துக்கொண்ட விலையில் அவைகளை அவர்களிடம் விற்க முடியும்; இந்த வியாபாரிகள், பெருநகரங்களில் உள்ள கிராக்கியை (சந்தை சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப) கணக்கில் கொண்டு பயிர் உற்பத்தியின் மீது தங்கள் கட்டுப்பாட்டை செலுத்தினார்கள். அல்லது, கிழக்கிந்திய கம்பனியின் ஓபியம் முகவர்கள் செய்ததைப் போல, தங்களிடம் முன் பணம் பெற்ற விவசாயிகள், அந்த பயிரைத்தான் விளைவிக்க வேண்டுமென்று நேரடியாகவே அவர்களை கடைமைப்பட்டவர்களாக ஆக்கினார்கள்.

இவ்வாறு, நிலத்தின் பயன்பாட்டை பெருநகரங்கள் கட்டுப்படுத்தின, இதனால், உணவுப்பயிர்களை விளைவித்த நிலங்களில் அதற்கு மாறாக அவுரி, ஓபியம் மற்றும் பருத்தி ஆகிய பயிர்கள் முன்பு காணாத அளவில் பயிர் செய்யப்பட்டன; விவசாயிகளிடமிருந்து திரட்டப்பட்ட வரி வருவாயில் இருந்தே அவர்களுக்கு பணம் தரப்பட்டது, எனவே பெரு நகரங்கள் அந்த விளைச்சலை ‘இலவசமாகவே’ பெற்றுவந்தார்கள்.

இரக்கமற்ற ஆதிக்கம்:

காலனி ஆதிக்கத்தை மேற்கொண்ட நாடுகள், தங்கள் காலனி நாடுகளில் இருந்து சுரண்டிய பண்டங்களை, தேவை போக தங்களுக்குள் வர்த்தகம் செய்துகொண்டார்கள். வர்த்தக பற்றாக்குறையை சரி செய்துகொள்ளும் மும்முனை வணிகமும் அதில் அடக்கம். (உதாரணமாக, பிரிட்டனுடைய வர்த்தக பற்றாக்குறையை ஈடு செய்யும் விதத்தில், இந்திய விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி விளைவிக்கப்பட்ட ஓபியம் பயிர், சீனாவிற்கு ஏற்றுமதி செய்து, அவர்களை வற்புறுத்தி நுகரச் செய்யப்பட்டது). இரக்கமில்லாத வகையில் விவசாயிகள் சுரண்டப்பட்டார்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில், வங்க மொழியில் நடத்தப்பட்ட ‘நீல் தர்பண்’ என்ற நாடகம், அவுரி விவசாயிகளின் பரிதாபகரமான நிலையை விளக்குவதாக அமைந்தது. அந்த நாடகத்தை தீனபந்து மித்ரா உருவாக்கினார். நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வர் சந்திர வித்தியாசாகர் என்ற சமூக சீர்திருத்த முன்னோடி, வேளாண் வியாபாரியாக நடித்தவரை நோக்கி தனது செருப்புக்களை வீசுகிற அளவிற்கு, அந்த நாடகம் தத்ரூபமாக அமைந்தது!

விவசாயிகளிடமிருந்து வரியை வசூலிப்பதில் காட்டப்பட்ட கடுமையும், வியாபாரிகள் கொடுக்கும் முன்பணத்தின் மூலம், பயிர் செய்யும் முறையில் செய்யப்பட்ட தலையீடும், விவசாயிகளிடமிருந்து திரட்டப்பட்ட வருவாயைக் கொண்டே விளைச்சலை வாங்குவது என்ற ஏற்பாடும் தற்போது பெருநகரங்களுக்கு சாத்தியம் இல்லை. சுதந்திரத்திற்கு பிறகு வந்த ஆட்சிகள் பொதுச் செலவினங்களை மேற்கொண்டன (dirigiste regime). உணவுதானிய உற்பத்திக்கு ஆதார விலை வழங்குவது உள்ளிட்ட உதவிகளை மேற்கொண்டார்கள். எனவே உணவு உற்பத்தி நடவடிக்கையின் மீதான பெருநகர கட்டுப்பாடுகளை புறந்தள்ளக்கூடிய சாத்தியத்தை விவசாயிகள் பெற்றார்கள்.

அதீத தேசியமும், ஏகாதிபத்தியமும்:

இப்போதுள்ள பெருநகரங்களுக்கு உணவு தானியங்கள் தேவைப்படவில்லை. ஆனால் அதே சமயம் உணவு தானிய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளை அதிலிருந்து தங்களுக்கு தேவையான பயிர் உற்பத்தியை நோக்கி மாற்றிட அவர்களால் முடியவில்லை. உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியத்தை, முன்பே முடிவு செய்யப்பட்ட ஆதார விலையைக் கொடுத்து, அரசாங்கம் கொள்முதல் செய்கிறது. நவ-தாராளமய திட்டத்தின் ஒரு பகுதியாக, நிதிச் சிக்கனம் என்ற பெயரில், உழைக்கும் மக்களின் வருவாய் சுருக்கப்பட்டுள்ளது. இதனால்  உணவு தானியத்திற்கான உள்நாட்டு கிராக்கி வீழ்கிறது. ஆனாலும்கூட, இதன் மூலமாக ஏகாதிபத்தியத்தின் விருப்பத்தை சாதிக்க முடியவில்லை. ஏனெனில், நிலப்பயன்பாட்டு முறைகளிலோ, உணவு தானிய உற்பத்தியிலோ இது மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக, இதன் விளைவாக அரசின் வசமுள்ள தானிய இருப்புதான் அதிகரிக்கிறது. எனவேதான், ஆதார விலையை உறுதி செய்யும் ஏற்பாட்டையே முற்றாக ஒழிக்க வேண்டுமென்று ஏகாதிபத்தியம் விரும்புகிறது. மேலும்,அதோடு சேர்த்து, பயிர் உற்பத்தியில் தலையீடு செய்யும் விதத்தில், மாற்று வழிமுறை ஒன்றையும் அது எதிர்பார்க்கிறது.

‘அதீத தேசியவாத’வாய்ச்சவடாலை அடித்தபடியே, ஏகாதிபத்தியத்தின்  விருப்பத்தை முன்னெடுக்கும் மோடி அரசாங்கம், மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதன் மூலம் மேற்சொன்னவைகளை சாதிக்க நினைத்தது. வேளாண் துறையை கார்ப்பரேட் வசமாக்கும்போது, நில பயன்பாட்டின் மீதான கட்டுப்பாடு உண்மையில் பெருநகரங்களின் வசமாகும். அந்தச் சந்தைகளின் சமிக்கைகளுக்கு ஏற்ற விதத்தில் விவசாயிகளை பயிர் செய்யவைப்பது, கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கு சாத்தியம். இவ்வகையில் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள விவசாய நிலங்களை பெருநகரங்களின் கிராக்கிக்கு ஏற்ப பயன்படுத்தச் செய்ய முடியும். தனது முகாமை பின்பற்றும் கல்வியாளர்களையும், ஊடக டமாரங்களையும் பயன்படுத்தி ‘அரசாங்கம் கொடுக்கும் ஆதார விலை இல்லாவிட்டால்’ அது விவசாயிகளுக்கு எவ்வளவு நல்லது என்று எடுத்துரைப்பது உட்பட, தன்னாலான அனைத்தையும் செய்து தனது விருப்பங்களைச் சாதிக்க ஏகாதிபத்தியம் முயற்சியெடுத்தது. ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

திரும்பப் பெறுவது மட்டும் போதுமா?

மூன்று சட்டங்களுக்கும் எதிரான விவசாயிகளின் கடுமையான போராட்டம், மோடி அரசாங்கத்தை சரணடையச் செய்து விட்டது. ஆனால், வெறுமனே சட்டங்களை திரும்பப் பெறுவதனால் மட்டும், பழைய நிலைமையை மீட்டெடுத்திட முடியாது. இவ்விடத்தில்தான், விவசாயிகள் வற்புறுத்தக்கூடிய, குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட உறுதி என்ற முழக்கம் அவசியமானதாகிறது. மூன்று சட்டங்களை திரும்பப் பெற்றால், உணவு தானிய சந்தைப்படுத்துதல் ஏற்கனவே நடந்துகொண்டிருந்த குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடத்த முடியும். அரசின் முகவர்களின் மேற்பார்வையில் வர்த்தகம் நடக்கும் மண்டிகளில்தான் அது நடக்கும்.அப்படி நடந்தாலும் கூட, குறைந்தபட்ச ஆதார விலைக்கான ஏற்பாடு இல்லாவிட்டால், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவிலிருந்து சற்று கூடுதலான லாபத்துடன் கூடிய விலை கிடைக்கும் என்ற உத்திரவாதம் ஏதும் இல்லை.

வேறு வார்த்தைகளில் சொன்னால், உணவுதானிய சந்தைப்படுத்துதலை மண்டி அல்லாத பிற இடங்களிலும் மேற்கொள்ள அனுமதிப்பதன் மூலம் (அரசாங்கத்தின் மேற்பார்வை அவசியமற்றதாகிறது). எனவே, அவ்வப்போது அரசாங்கம் குறைந்தபட்ச ஆதாரவிலையை  அறிவித்து வந்தாலும் கூட, அதனை அமலாக்குவது சாத்தியமில்லை. அதே சமயத்தில், வர்த்தகத்திற்கு அரசாங்கத்தின் மேலாண்மையை கட்டாயப்படுத்துவது(மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதன் மூலமாக உறுதி செய்யப்பட்டாலும் கூட) அது குறைந்தபட்ச ஆதாரவிலை என்ற ஏற்பாட்டை உறுதி செய்வதற்கு போதுமான ஒன்றல்ல என்பதே உண்மையாகும். எனவே, ஆதார விலையை உறுதி செய்வதற்காக, குறிப்பிட்ட ஏற்பாட்டினை உருவாக்குவது அவசியம். இதனை சட்டத்தின் மூலமே உறுதி செய்ய வேண்டுமென விவசாயிகள் கேட்கிறார்கள், அப்போதுதான் அரசாங்கம் நினைத்தால்  அந்த ஏற்பாட்டை முடித்துக்கொள்வது என்பது இயலாது.

புரட்டுத்தனம் செய்வதில் பாஜக அரசாங்கத்தை விஞ்ச முடியாது என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான், எனவே இது அவசர அவசியமான தேவையாக உள்ளது. இல்லாவிட்டால், மோடி அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றாலும் கூட, அது தனது விருப்பத்தை வேறு வடிவங்களில் நிறைவேற்றிக்கொள்ளவே முயற்சிக்கும்.

வெற்றியின் இரண்டு அம்சங்கள்

கேடுகெட்ட இந்தப் போக்குகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டியிருப்பினும், விவசாயிகளின் இப்போதைய வெற்றி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்; நமது நாட்டின் வெப்பமண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல நிலப்பரப்பினை, ஏகாதிபத்திய சக்திகளுடைய கட்டுப்பாட்டிற்குள் செல்லாமல் தடுத்து நிறுத்துவதில் இந்தப்  போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. இந்த வெற்றியின் இரண்டு அம்சங்கள் நம்முடைய சிறப்பான கவனத்தை பெறுகின்றன.

மக்களை அணு அணுவாக பிளப்பதன் மூலம், வெகுஜன நடவடிக்கைகளுக்கான சாத்தியங்களை வெகுவாக கட்டுப்படுத்தக் கூடிய நவீன தாராளமயத்தின் போக்கோடு – அதாவது –  ஊடகங்கள் மீது, கல்வியாளர்கள் மீது அது கொண்டிருக்கும் ஆதிக்கத்தின் மூலமாக எந்தவொரு எழுச்சிக்கும் சமூகத்தின் ஆதரவு கிடைக்காத வகையில் தடுக்க முடியும் என்பதோடு தொடர்புடையது. இந்த வெற்றியின் முதலாவது அம்சம் ஆகும்.

இந்த ஒட்டுமொத்த சகாப்தத்திலும், நவீன தாராளமய நடவடிக்கைகளை, வெகுமக்கள் பொதுவாக எதிர்த்து வந்துள்ளனர். அந்த எதிர்ப்பு, நீடித்த வேலைநிறுத்தம் அல்லது முற்றுகை ஆகிய நேரடி செயல்பாட்டு வடிவங்களில் மேற்கொள்ளப்படவில்லை. மறைமுகமான, அரசியல் வழிமுறைகளில், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மாற்று அரசியல் இயக்கங்களை கட்டமைப்பதன் மூலம், லத்தீன் அமெரிக்காவில் நடந்ததைப் போல செய்யப்பட்டு வந்துள்ளது. ஆட்சிக்கு வந்த பின், நவீன தாராளமய கொள்கைகளை எதிர்க்க முயற்சித்த அரசாங்கங்கள், அன்னிய செலாவணி நெருக்கடி தொடங்கி, ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட பொருளாதாரத் தடை வரையிலான தடங்கல்களை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. இத்தகைய தடங்கல்கள், அரசாங்கங்களை முடக்கவும் செய்துள்ளன.

இப்படிப்பட்ட சூழலில் இருந்து மாறுபட்டதாக, இந்திய விவசாயிகளின் போராட்டத்தை குறிப்பிட வேண்டும். வரவிருக்கும் தேர்தல்களில், பாஜகவிற்கு எதிராக இயங்குவோம் என்ற அரசியல் ‘மிரட்டலை’ விவசாயிகள் விடுத்தார்கள். நவ-தாராளமய சூழலில் மிகவும் அரிதாகவே பார்க்க முடிந்த, நேரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.

இரண்டாவது அம்சம், விவசாயிகளின் இந்த நேரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட கால அளவு பற்றியதாகும். தலைநகர் தில்லியின் எல்லைப்பகுதிகளில் ஒரு ஆண்டு முழுவதும் அவர்கள் முகாமிட்டார்கள். வரும் காலத்தில், இதனை ஆய்வுக்கு உட்படுத்தும் ஆய்வாளர்கள், இந்த அற்புதமான சாதனையை சாத்தியமாக்குவது எவ்வாறு சாத்தியமானது என்ற புதிரை அவிழ்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எப்படியும், இந்தச் சாதனை, கொண்டாட்டத்திற்குரிய ஒன்றுதான்.

மூலம்: The Peasantry’s Victory over Imperialism
தமிழில்: சிந்தன்

No comments:

Post a Comment

President Chandrika and former Chief Justice Shirani Bandaranayke By Victor Ivan

  Former President Chandrika Kumaratunga and Former Chief Justice Shirani Bandaranayake    Publication of a biography by former Presid...