13வது திருத்தமும் தமிழ் சமூகமும்

 


லங்கை – இந்திய சமாதான உடன்படிக்கையின் விளைவாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 13ம் திருத்தம் காரணமாகவே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதையும் அது தற்போது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக ஆகி இருப்பதையும் நாம் அறிவோம். கடந்த இரண்டு வருடங்களாக பேசப்படாமல் இருந்த இந்த 13ஆவது திருத்தம் தற்போது தமிழ் அரசியலில் பேசு பொருளாக மாறி இருப்பதால் அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தமிழர்கள் அதிகாரங்களைக் கேட்பது இலங்கையில், குறிப்பாக தேசிய அரசியலில், கெட்ட வார்த்தையாக மாறியிருப்பதால், தமிழ்க் கட்சிகளின் கோரிக்கையான 13ம் திருத்த சட்டத்தை முழுமையாக அமுல் படுத்த வேண்டும் என்பது தென்னிலங்கையில் வெவ்வேறான பிரதிபலிப்புகளை ஏற்படுத்த முடியும். இதை வைத்தே மற்றொரு இனவாத அரசியலை கட்டி எழுப்பவும் முடியும்.

புதிய யாப்பு தொடர்பான வரைவு பணிகள் நடைபெற்று வருவதாக அரசாங்கம் தெரிவித்ததையடுத்தே பல்வேறு யூகங்கள் கிளம்பத் தொடங்கின. அவற்றில் முக்கியமானது, புதிய வரைவில் 13ம் திருத்தத்தை முற்றிலுமாக நீக்கி விடுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்ற ஊகமாகும். பாராளுமன்றத்தில் ஒரு திருத்த சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் 13ம் திருத்தத்தை செல்லுபடியற்றதாக்கலாம் என்பது உண்மையானாலும் அது ஒரு பெரிய அரசியல் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதோடு இந்தியாவுடனான நட்புறவில் ஒரு கசப்புணர்வையும் உருவாக்கிவிடும் என்பதால் ஓசையில்லாமல் புதிய அரசியலமைப்பில் 13ம் திருத்தத்தை உள்ளடக்காமல் விட்டுவிடலாம் என அரசு கருதி அதன்படியே நடந்து கொள்ளப்போகிறது என்றெழுந்த ஊகத்தையடுத்தே தமிழ் அரசியலில் 13 ஒரு பேசு பொருளாகி இருக்கிறது.

இதுதொடர்பாக கலந்துரையாடுவதற்கு யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ்க் கட்சிகள் ஒரு விரிவான வரைவைத் தயாரிக்க முடிவு செய்து இரண்டாவது சந்திப்பு கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கூட்டணியில் மிக முக்கியமான பங்காளிக்கட்சியான தமிழரசு கட்சியும் பங்குபற்றுவதைத் தவிர்த்துக் கொண்டன. அதே சமயம் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பாக அதன் தலைவர் மனோ கணேசனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீமும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமது கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

இலங்கை அரசு தனது புதிய அரசியமைப்பில் 13ம் திருத்தம் உள்ளடக்கியுள்ள விடயங்களை உள்ளடக்கப் போவதில்லை என்பதால் அதைத் தடுக்கும் வகையில் இந்தியாவின் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதே இக் கலந்துரையாடலின் மையப் புள்ளி.

இங்கே உரையாற்றிய சட்டத்தரணி சுமந்திரன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே 13ஐத் தாண்டி அதிகாரங்கள் வழங்கப்படும் எனக் கூறியிருக்கும் நிலையில் 13ம் திருத்தச் சட்டமே போதும் என்று அமைதியாகிவிடுவதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். 13க்கு அப்பால் சென்று தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ் அரசியலின் நிலைப்பாடாக இருக்க வேண்டுமே தவிர 13உடன் திருப்தியடைந்து விடுவோம் என்ற நிலைப்பாடு சரியானது அல்ல என்பதை சுமந்திரனின் நிலைப்பாடாக எடுத்துக் கொள்ளலாம். இதே சமயம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒற்றையாட்சிக்குள் 13ம் திருத்த சட்டத்துக்கமைய வாழ்தல் என்பதை முற்று முழுதாக நிராகரித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைத் தவிர வேற எந்த முஸ்லிம் கட்சியும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இக்கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த அரசின் பேச்சாளர் டலஸ்  அலகப்பெரும, கூட்டங்கள் கூடவும் தூதுவர்களைச் சந்திக்கவும் தமிழ்க் கட்சிகளுக்கு முழுச்சுதந்திரம் இருப்பதாகவும் ஆனால் எந்த ஒரு நாடும் இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க முடியாது என்றும் கூறியமை இங்கு கவனிக்கத்தக்கது.

83ம் ஆண்டின் பின்னர் எல்லா வடக்கு தீவிரவாத இயக்கங்களும் ஈழம் என்ற தனிநாடு என்ற மையப் புள்ளியைச் சுற்றியே இயங்கி வந்தபோதிலும் அவை படுமோசமான இயக்க மோதல்களில் ஈடுபட்டு அழிந்து போயின. தற்போது, 13ஐத் தக்க வைத்துக் கொள்ள இந்தியாவை நாடும் விஷயத்திலும் தமிழ்  அரசியில் கட்சிகள் மத்தியில் ஒரு இணக்கப்பாடு கிடையாது என்பது சாதகமான ஒன்றல்ல.

13ம் திருத்த சட்டத்தை அரசாங்கம் கைவிடுமா என்று தெரியவில்லை. அவ்வாறு தீர்மானிப்பது இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை ஏற்படுவதற்கு நன்மை செய்யாது. சரியோ, தவறோ, 13ம் திருத்தத்தின் ஊடாக மாகாண சபை உருவாக்கப்பட்டது. அது ஒரு தளம். அதை ஜனநாயக ரீதியாக மேலும் ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தமிழர் மத்தியில் காணப்படும் பொதுவான அபிப்பிராயம், மாகாண சபை ஆட்சிக்கு சிங்கள வாக்காளர்களும் கிராம, நகர் மட்ட அரசியல்வாதிகளும் பழகிப் போயிருக்கிறார்கள். எனவே சிங்கள அரசியல்வாதிகளுக்கும் 13ம் திருத்தச் சட்ட நீக்கம் உவப்பானதாக அமைய வாய்ப்பில்லை 13ம் திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் அமுலில் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை சிங்கள வாக்காளர்களுக்கும் இருப்பதால் சிங்கள மக்கள் மத்தியிலும் 13ம் திருத்தம் தொடர்பான விஷயங்களை தமிழ்க் கட்சிகள் கலந்துரையாட வேண்டிய அவசியம் உள்ளது.

இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினைகள் உலகறிந்தவையாக இருந்தாலும் அவை குறித்து சிங்கள சமூகம் மிகக் குறைவாகே அறிந்து வைத்துள்ளது. இதிலும் இதைத் தவறாக புரிந்து கொள்வோரே அதிகம். பெரும்பாலான சிங்கள மக்கள் 13ம் திருத்தச் சட்டத்தைத் தவறாகவே, ஈழத்துக்கான மார்க்கமாகவே, புரிந்து வைத்துள்ளனர். இத் தவறான அல்லது கொஞ்சமான புரிதல், இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலுக்கு வாய்ப்பான களமாக அமைந்து விடுகிறது. ஏனைய நாடுகளின் இனப்பிரச்சினைகள் எப்போதோ தீர்த்து வைக்கப்பட்ட பின்னரும் இலங்கையில் அது எழுபது ஆண்டுகளாக இழுபறியிலும், பொருளாதார பின்னடைவுகளுக்கு வழிவகுத்துக் கொண்டு இருந்தாலும் கூட இதைத் தீர்த்துவிட்டு பொருளாதார வளம் கொண்ட நாடாக மாறுவதில் இன்னமும் தயக்கம் காணப்படுவது வேதனையானது.

அடுத்த வருடம் பொருளாதார ரீதியாக நாடும், தனி மனிதர்களும் பல சிக்கல்களை சந்திக்கவுள்ளனர் என்பது ஒத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு சகலரும் இலங்கையர் என்ற வகையில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதே சரியான நகர்வாக இருக்கும். 13ஐ நீக்குவது தமிழர் பிரச்சினையை மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் நாட்டைத் தள்ளி விடுவதாகவே அமையும். அதேசமயம் ஒற்றையாட்சியை ஏற்கமாட்டோம் என்று ஒற்றைக் காலில் நிற்பதும் தீர்வுக்கு பெருந்தடையாகவே அமையும்.

இங்கே நாம் அவதானிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்றுண்டு. தமிழ் பேசும் மக்களுக்கான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தே 13 தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும். அதுவே ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் குரலாக அமையும். இ.தொ.காவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் இக் கூட்டில் இல்லை. எனவே சகல கட்சிகளும் ஒன்றிணைவது அவசியம். அதுவே ஏன் இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியம் என்பதை உணர்த்தும்.

-தினகரன் வாரமஞ்சரி
2021.12.26

Source: chakkaram.com

No comments:

Post a Comment

President Chandrika and former Chief Justice Shirani Bandaranayke By Victor Ivan

  Former President Chandrika Kumaratunga and Former Chief Justice Shirani Bandaranayake    Publication of a biography by former Presid...