அமெரிக்காவினதும் சீனாவினதும் ஜனநாயகங்கள்!--சங்கரன்

 

 

 

 


சீனாவின் சோசலிச ஜனநாயகம் அமெரிக்காவின் முதலாளித்துவ ஜனநாயகத்தை விட உண்மையானதும் பலமானதும் என சீனாவின் அரசியல்வாதிகளும், ஆய்வாளர்களும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். சமீபத்தில் சீனா தனது நாட்டின் ஜனநாயக செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அது பற்றி கருத்து வெளியிடுகையிலேயே சீனத் தரப்பினர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்கள் கூறுகையில், அமெரிக்காவில் அரசியல்வாதிகள் தமது நலன்களில் அக்கறையுள்ள குழுக்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றனர். ஆனால் சீனாவில் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகள் முழு நாட்டு மக்களினதும் நலன் கருதியே அமுல்படுத்தப்படுகின்றது எனவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அவர்கள் இரு நாடுகளிலும் செயல்படும் அரசமைப்பு முறைகளை ஒப்பீடு செய்து இதை விளக்கிக் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் எழுந்தமானமாக பல வாக்குறுதிகயைக் கொடுப்பர். ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் மக்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவர்கள் பின்னர் தன்னலக் குழுக்களின் ஏஜண்டுகளாகச் செயற்படுவர். இதனால் ஏமாந்த மக்கள் இன்னொரு முறை ஏமாறுவதற்காக அடுத்த தேர்தல் வரை காத்திருப்பர். அங்கு அரசியல்வாதிகள் தாம் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுகிறார்களா என பரீட்சித்துப் பார்ப்பதற்கு பொது மக்களுக்கு எந்த விதமான பொறிமுறைகளும் இல்லை. இவ்வாறு அமெரிக்க ஜனநாயகத்தைச் சாடியிருக்கிறார் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் கொள்கை ஆய்வு அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் ரியன் பெய்யான் (Tian Peiyan).

ஆனால் சீனாவில் மக்கள் ஜனநாயக செயற்பாடுகள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழேயே நடைபெறுகின்றன. சீனாவில் மக்களால் அதிகாரம் வழங்கப்பட்ட கட்சி அங்கத்தவர்களும் தலைவர்களும் மக்களின் நலன்களுக்காகச் செயல்படுகிறார்களா என்று கண்காணிப்பதற்கு மக்களுக்கு வழிமுறைகள் உள்ளன என்றும் அவர் கூறினார். அத்துடன் அவர்கள் மக்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதுடன், அவர்களது கருத்துக்களுக்குச் செவி சாய்த்து அவர்களது கோரிக்கைகளை ஏற்று அவற்றைத் தீர்த்தும் வைக்கின்றனர் என்றார்.

அமெரிக்காவில் நிலவும் அரசியல் நிலைமைகளின்படி, அங்குள்ள சட்ட வகுப்பாளர்கள் தன்னலக் குழுக்களுக்காகவும், அழுத்தம் கொடுக்கும் குழுக்களுக்காகவுமே செயலாற்றுகின்றனர். ஆனால் சீனாவைப் பொறுத்தவரையில், அரசியல் அமைப்பு ரீதியாகவும், தேர்தல் சட்ட விதிக்கமையவும் தேசிய மக்கள் காங்கிரசுக்கும் (National People’s Congress) மற்றைய எல்லா மட்ட நிர்வாகங்களுக்கும் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் வாக்காளர்களினாலும், அடிப்படையான தேர்தல் குழுக்களாலும் நிச்சயமாக கண்காணிக்கப்படுவர். அவர்களது அவதானிப்புக்கு இணங்க அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை மீளவும் திருப்பி அழைக்கும் உரிமை வாக்காளர்களுக்கும் தேர்தல் குழுக்களுக்கும் உண்டு என தேசிய மக்கள் காங்கிரசின் நிரந்தரக் குழு உறுப்பினர் ஹோ (Guo) குறிப்பிட்டார்.

Source: vaanavil 123 December 2021

No comments:

Post a Comment

President Chandrika and former Chief Justice Shirani Bandaranayke By Victor Ivan

  Former President Chandrika Kumaratunga and Former Chief Justice Shirani Bandaranayake    Publication of a biography by former Presid...