தப்புமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு?-–பிரதீபன்



மிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் பூசல்கள் கிளம்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதைய அதன் பங்காளிக் கட்சிகளில் இரண்டு கட்சிகளான புளொட் மற்றும் ரெலோ என்பன கூட்டமைப்பில் இருந்து வெளியேறி வேறு சில கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளும், உடைவுகளும் ஏற்படுவது இதுதான் முதல்தடவையல்ல.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் தமது அரசியல் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. ஆரம்பத்தில் அதில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், ரெலோ என்பன அங்கம் வகித்தன. பின்னர் அதில் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பனவும் உள்வாங்கப்பட்டன.
ஆனால் வெவ்வேறு கட்டங்களில் ஆனந்தசங்கரியும், கஜேந்திரகுமாரும் தமது கட்சிகளை கூட்டமைப்பிலிருந்து விலக்கிக் கொண்டனர். பின்னர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தனது ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியை விலக்கிக் கொண்டார். அதேநேரத்தில் கூட்டமைப்பின் ஆதரவால் வடக்கு மாகாணசபை முதலமைச்சராக பதவி வகித்த விக்னேஸ்வரனும் கூட்டமைப்பை விட்டு விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய அமைப்பொன்றை உருவாக்கிக் கொண்டார்.
கூட்டமைப்பிலிருந்து காலத்துக்குக் காலம் விலகிய கட்சிகள் எல்லாமே அதன் தலைமை மீது இரண்டு பிரதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. ஒன்று, தமிழரசுக் கட்சி மற்றைய கட்சிகளின் கருத்துக்களைக் கேட்காமல் தன்னிச்சையாக ‘பெரியண்ணனாக’ செயல்படுகின்றது என்பது. இரண்டாவது, கூட்டமைப்பின் தலைவர்களாக இருக்கும் சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோர் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளுக்குத் துரோகம் இழைத்து ஆளும் வர்க்கத்துக்கு சோரம் போயுள்ளார்கள் என்பது.


இந்த நிலையில் மூன்று கட்சிகளே கூட்டமைப்பில் எஞ்சி இருந்தன. அதிலும் தமிழரசுக் கட்சியின் சில உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்தார்கள் என்பதற்காக அவர்கள் மீது கட்சித் தலைமை ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேநேரத்தில் ரெலோ இயக்க முக்கியஸ்தர் எம்.கே.சிவாஜலிங்கம் கட்சியின் தடையை மீறி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதற்காக அவரை தலைமை கட்சியிலிருந்து நீக்கியது. அதுமாத்திரமின்றி ரெலோ, ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க. வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என எடுத்த முடிவை கட்சியின் தலைவர்களில் ஒருவரான சிறீகாந்தா தலைமையிலான யாழ்.மாவட்ட கிளை நிராகரித்த காரணத்தால் அவரும் அவரது ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே தாம் புதிய கட்சியொன்றை அமைக்கப்போவதாக சிறீகாந்தா அறிவித்துள்ளார்.
அதாவது, கூட்டமைப்பில் எஞ்சியுள்ள மூன்று கட்சிகளுக்குள்ளும் புதிதாக முரண்பாடுகள் தோன்றுவதற்கு முன்னர் அதில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி, ரெலோ என்பனவற்றுக்குள் உள் முரண்பாடுகள் ஏற்பட்டு அவை பலவீனப்பட்டுப் போயுள்ளன. இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான், ரெலோவும், புளொட்டும் கூட்டமைப்பை விட்டு விலகுவது பற்றி ஆலோசிக்கத் தொடங்கியுள்ளன.
முன்பு கூட்டமைப்பிலிருந்து விலகிய கட்சிகள் தமிழரசுக் கட்சி மீது வைத்த அதே குற்றுச்சாட்டுகளையே தற்பொழுது ரெலோ, புளொட் என்பனவும் முன்வைத்துள்ளன.
இம்முறை, “போறவர்கள் போகட்டும், கூட்டமைப்பை எவராலும் அசைக்க முடியாது” என தமிழரசுக் கட்சி தலைமை இருந்துவிட முடியாத ஒரு கூழல் நிலவுகின்றது. ஏனெனில் ஏற்கெனவே வெளியேறிச் சென்ற சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் ஆகியோருடன் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் இணைந்த ஒரு கூட்டணி அமைந்தால், அது தமிழரசுக் கட்சியை விட பலம் வாய்ந்த அணியாகவே இருக்கும். அப்படியான ஒரு கூட்டணி அடுத்த பெதுத் தேர்தலிலும் தாக்கத்தைச் செலுத்தும்.
இது ஒருபுறமிருக்க, யாழ் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகை ஏழிலிருந்து ஆறாகக் குறைக்கப்பட்டுள்ளதால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடும் போட்டி நிலவும். இதில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் வெற்றி எப்பொழுதும் முன்கூட்டி எழுதப்பட்ட ஒன்றாக இருந்து வருகின்றது. அவரது இணக்க அரசியலையே கடந்த நான்கரை வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பின்பற்றி வருவதாலும், டக்ளஸ் இப்பொழுது அமைச்சு பதவியில் இருந்துகொண்டு மக்கள் சேவை செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாலும், அவருக்கு அடுத்த தேர்தலில் சில வேளைகளில் மேலும் ஒரு உறுப்பினர் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகலாம்.
இந்தச் சூழ்நிலையில், மிகுதி நான்கு உறுப்பினர்களுக்காக தமிழரசுக் கட்சியினரும், அவர்களுக்கு எதிரான அணியினரும் கடும் போட்டியில் ஈடுபட வேண்டியிருக்கும். அந்தப் போட்டி தமிழரசுக் கட்சிக்குள்ளேயும் நிகழ வாய்ப்புண்டு. ஏற்கெனவே சுமந்திரனுக்கும் மற்றைய இரு தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் மாவை சேனாதிராசா மற்றும் சிறிதரனுக்கும் இடையில் புகைந்து கொண்டிருக்கும் நெருப்பு சுவாலை விட்டு எரியும் நிலையும் தோன்றலாம்.
எதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க பல அற்புதங்கள் நிகழ வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...