Friday, 27 December 2019

தமிழ் சீரியல்கள் பார்ப்பதினால் நிம்மதியை விற்கிறோமா நாம்? –ஜா.தீபா

சென்னை வளசரவாக்கத்தில் ஒரு பூங்கா. காலை நேர நடைப் பயிற்சியில் ஒரு மனிதர் சத்தமாகத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தார். “அந்த கேரக்டரை நாம முடிச்சுவிட்டுரலாம்… எமோஷனை ஏத்திவிட்டுருங்க… வெள்ளிக்கிழமை எபிசோட்ல கிரிஜா தூக்குல தொங்கப்போற மாதிரி காட்டிடலாம்… டெம்போ ஏறும்” என்று பேசிக்கொண்டே போனார். அவருக்குச் சூழல் குறித்த பிரக்ஞை இல்லை. இருக்கவும் தேவையில்லை. லட்சக்கணக்கானவர் தினமும் தொடர்ந்து ஒன்றிப்போயிருக்கும் சீரியல்களின் ஒரு பாகம் அவர். சொல்லப்போனால், தமிழ்நாட்டு மக்களின் நாடி பிடிக்கத் தெரிந்தவர்.
இவரைப் போன்றவர்கள்தான் தமிழக மக்களில் கணிசமானோரின் உளவியலில் விளையாடுகிறார்கள். காலை 10 மணிக்குத் தொடங்குகிற சீரியல் உலகம், இரவு 11 மணி வரை நீள்கிறது. சனிக்கிழமைதோறும் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்கூட அற்றுப்போய், சீரியல்களால் அந்த நேரங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த அளவுக்கு மக்கள் அதனோடு ஒன்றிப்போய்க் கலந்திருக்கின்றனர்.
25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாலை நேரம் எப்படியாக இருந்தது என்று இன்றைய தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் பேச்சுக் கச்சேரிகள் நடந்துகொண்டிருக்கும். தெருக்கள் பேச்சொலியாலும், குடும்பங்களின் உளவியல் பிரச்சினைகள் தீர்க்கும் இடங்களாகவும் மாறிக்கொண்டிருந்த காலகட்டம் அது. அதை இழந்துவிட்டோம். நிச்சயம் இதற்கு நம்மைத் தேடி அடுத்தடுத்துத் தாக்குதல் நடத்துகிற சீரியல்களுக்குப் பெரும் பங்கு உண்டு. வீட்டினுள் உரையாடல் குறைந்து, யாரோ யாரையோ தொடர்ந்து பழிவாங்குவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
டிஆர்பி என்ற ஒற்றைச் சொல்
ஒரு தெலுங்கு சீரியலின் எழுத்தாளர் ஒருமுறை சொன்னார், “என்னையெல்லாம் திருப்பதி மலை முழுக்க உருளச் சொன்னாலும் பாவம் தீராது. ‘பச்சைக்குழந்தையை எப்படிக் கொல்வது’ என்று விதவிதமாக யோசிக்கிற வில்லியின் கதாபாத்திரத்துக்கு வசனம் எழுதிவிட்டு, அன்றைய தினம் பெருமாளுக்கு விரதம் இருந்தேன்” என்றார். ஒரே ஒரு மந்திரச் சொல்தான் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. ‘டிஆர்பி’ என்கிற அந்த ஒற்றைச் சொல்லுக்குப் பின்னால்தான் ஒட்டுமொத்த சீரியல் உலகமும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் ஒரு பரபரப்பு, வெள்ளிக்கிழமை இதயத் துடிப்பை நிற்க வைக்கிற அளவுக்கான ஒரு அதிர்ச்சி சம்பவம், கதாநாயகிக்கு உலகத்தில் யாருக்கு ஏற்படாத விசித்திரப் பிரச்சினைகள், குழந்தைகள் குறிப்பாகப் பெண் குழந்தைகள் கடத்தப்படுவது, தனக்குக் கிடைக்காத ஒரு ஆண் மகன் கதாநாயகிக்குக் கிடைப்பதால் மற்றொரு பெண்ணுக்கு ஏற்படுகிற மனவோட்டம் எனச் சூத்திரங்களால் நிறைந்திருக்கிறது சீரியல் உலகம்.
இதோடு அவ்வப்போது மந்திரவாதிகளும், பில்லி சூனியம், அம்மன் அருள் போன்றவற்றையும் கலந்துகட்டிவிட்டால் வெற்றி நிச்சயம். அந்த வாரம் டிஆர்பி தன்னை உயர்த்திக் காண்பிக்கும். இதற்கு நாம் யாரைக் குறைசொல்ல முடியும்? மக்களும் இவற்றையெல்லாம் விரும்புகிறார்கள். ஒரு சீரியலில் மக்கள் எதை உற்றுக் கவனிக்கிறார்களோ, தொடர்ந்து பார்க்கிறார்களோ அதையே மற்ற சீரியல்களிலும் பின்பற்றுகிறார்கள். ஆக, சீரியல்கள் தொடர்ந்து பரப்பும் விஷயங்கள் மக்களின் உளவியலின் ஒரு பகுதியுமாகிறது.
பெண்ணாக இருந்தாலும்…
இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு சீரியலில் கதாநாயகி தைரியமான ஒரு கலெக்டராக வந்தார். எத்தனை நாள் ஒரு பெண்ணை நீங்கள் தைரியமாகத் திரையில் காட்ட முடியும்! தனக்கு வரும் பிரச்சினைகளை அந்தப் பெண் தன் சாதுரியத்தால் முறியடிக்கிறாள் என்று சொல்லவா முடியும். அதனால், அந்த கலெக்டர் நாயகிக்கும் ஒரு சோதனை, அதுவும் ‘தாலி பாக்கியத்துக்கே’ வருகிறது. குடும்ப மருத்துவர் தன்னால் அவளது கணவனைக் காப்பாற்ற இயலாது என்று கைவிரித்துவிட, கலெக்டர் உடனே ஒரு முடிவுக்கு வருகிறார். கோயிலுக்குச் செல்கிறார். அவர் கோயிலுக்குக் கிளம்புவதே தனியாக ஒரு எபிசோடாக வந்தது என்று சொல்லத் தேவையில்லை. கோயிலுக்குள் நுழைந்ததும் அந்தப் பெண், கடவுளிடம் தன் கணவனுக்காக எதையும் செய்யத் தயார் என்கிறாள். அங்கிருக்கும் பூசாரி சொல்லும் யோசனைப்படி தரையில் அமர்கிறாள். எல்லோரும் நடந்து போய்க்கொண்டிருக்கும் ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கிறாள். முகத்தில் உறுதி ஏறுகிறது. கைகள் கண்களின் கண்ணீரை அழுந்தத் துடைக்கின்றன. தரையில் சோறு வைக்கப்படுகிறது. கதாநாயகி அம்மனைப் பார்க்கிறாள், தன் கணவனை நினைக்கிறாள். பிறகு, ஒவ்வொரு பருக்கையாக மண்சோறு தின்கிறாள். ஒவ்வொரு கவளமாக அவள் சாப்பிடச் சாப்பிடக் கணவர் உயிர் அவளிடம் திரும்பி வந்துகொண்டே இருக்கிறது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு அம்சம், நாயகி ஒவ்வொரு பருக்கையும் சாப்பிடும்போது, அவள் கலெக்டராக நடந்துவந்தது, காரில் ஏறியது, மற்றவர்களை வேலை வாங்கியது எனக் காட்டப்படுகின்றன. எல்லாம் டிஆர்பி-க்கான விளையாட்டுக்கள்தான்.
சீரியல் எனும் போதை
மக்கள் மனதில் ஒரு போதை வஸ்துபோல சீரியல்கள் படிந்துவிட்டன. இப்போது ஸ்மார் ட்போன்களின் வருகையால் பணிக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள், நாற்பது வயதைக் கடந்த ஆண்கள் எனப் பலரும் தவறவிட்ட சீரியல்களை இணையத்தில் பார்த்துவிடுகின்றனர். ஒரு சீரியல் ஒளிபரப்பான அரை மணி நேரத்துக்குள் இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. அவற்றை ஒரு நாளைக்குள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைச் சர்வசாதாரணமாகத் தாண்டுகின்றன. எனில், தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இதைவிடப் பெரு மடங்கு இருக்கும். ஆக, ஒரு தலைமுறை முழுக்கத் தன்னுடைய நேரத்தை அழுகையிலும் துயரத்திலும் பழிவாங்குதலிலும் கழிக்கின்றன என்றுதானே பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது?
உளவியல் நிபுணர்கள், மனநல மருத்துவர்கள் இவர்கள் எல்லோருமே சீரியல்கள் சமூகத்தின் மனநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றே சொல்லிவருகின்றனர். இது குறித்து மேற்கொள்ளப்படுகிற ஆய்வுகளும் அதையே தெளிவுபடுத்துகின்றன. திரைப்படங்களில் இடம்பெறுகிற வன்முறைக் காட்சிகள், பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள், மது மற்றும் புகைபிடிக்கும் காட்சிகள் போன்றவற்றுக்குத் தொடர் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பவர்களைவிட அதிகம் சீரியல் பார்வையாளர்களின் எண்ணிக்கை. ஆனால், சீரியல்கள் எந்த அளவுக்கு ஒருவரின் மனதைப் பாதிக்கிறது என்பதை நாம் கண்டுகொள்வதில்லை.
இதில் மாற்றம் எப்படி வரும், எங்கிருந்து தொடங்கும் என்று யாருக்கும் தெரியாத புலிவால் பிடித்த கதையாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. இதில் மிகக் கொடுமையான ஒன்று வயதானவர்கள் இருக்கும் வீட்டில், அவர்களுடன் பள்ளி செல்லும் சிறு குழந்தைகளும் அமர்ந்து பார்ப்பதுதான்.
சீரியல் குடும்பங்கள் நிம்மதி அற்றவை, நம் நிம்மதியைக் குலைப்பவை. சீரியலில் நடிப்பவர்கள் தொடங்கி, அதைத் தயாரிப்பவர்கள், கதையை உருவாக்குபவர்கள் அதை வெளியிடும் சேனல்கள், சீரியல்களின் பார்வையாளர்கள் என அனைவருமே இந்த சீரியல்களினால் நிம்மதியற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். அப்படியான மன அழுத்தத்தைத் நாம் ஒரு நாளில் பெரும்பான்மை நேரம் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். அதற்கு நம்மிடம் காரணமும் உண்டு, ‘சும்மா பொழுதுபோக்குக்குத்தானே…’ ஆக, நிம்மதியிழப்பு என்பது நமக்குப் பொழுதுபோக்காகிக் கொண்டிருக்கிறது.
-இந்து தமிழ்
2019.12.18

No comments:

Post a comment

Bengal polls: Abbas Siddiqui's ISF seals seat-sharing deal with Left, talks on with Congress

  Indian Secular Front leader Abbas Siddiqui (Photo | Youtube screengrab) Addressing a press conference, Siddiqui said the Left Front has ag...