நந்திக் கடலும் நட்டாறும்! -பரிபூரணன்


பிரபாகரன் தமிழ் மக்களை நந்திக் கடலில் கைவிட்டுச் சென்றார்.
சம்பந்தன் தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டுச் சென்றிருக்கிறார்.
இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
தமிழ் மக்கள் பிரபாகரன் விட்டுச்சென்ற கடலில் இருந்து எப்படி திக்குமுக்காடி சிரமப்பட்டு வெளியேறினார்களோ அதேபோல, சம்பந்தன் விட்டுச்சென்ற நடு ஆற்றிலிருந்தும் வெளியே வருவதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
கடலில் சில வேளைகளில் அலையோடு அலையாகச் சேர்ந்து கரையேற முடியும். ஆனால் ஆற்றில் எதிர்நீச்சல் போட்டுத்தான் வெளியே வரவேண்டி இருக்கும்.
அந்த வகையில் பிரபாகரனைவிட சம்பந்தன் தமிழ் மக்களுக்கு அதிகமான பிரச்சினைகளை உண்டுபண்ணி வைத்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் முதலில் விலகி நிற்பது என்றும், பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த 13 அம்சக் கோரிக்கைகளை ஏற்கும் வேட்பாளரை ஆதரிப்பது என்றும், அதன் பின்னர் ஐ.தே.க. நிறுத்தியுள்ள வேட்பாளரை ஆதரிப்பது என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது.
இது, ஏவுகணை ஒன்று விண்ணை நோக்கி ஏவப்பட்டவுடன் கட்டம் கட்டமாக வெடித்து மேலே செல்வது போன்றது. சிலர் கூட்டமைப்பின் முதலாவது வெடிப்பை நம்பினார்கள். இன்னும் சிலர் கூட்டமைப்பின் இரண்டாவது வெடிப்பை நம்பினார்கள். ஆனால் இறுதி வெடிப்புதான் அறுதியானது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஏவுகணையின் வரலாற்றை நன்கு அறிந்த இடதுசாரிகளும் இன்னும் சிலரும்தான் அதன் இறுதி வெடிப்பு எவ்வாறு இருக்கும் என்பதைத் தெளிவாக அறிந்திருந்தார்கள். ஆனால் அப்பாவி தமிழ் பொதுமக்கள்தான் பாவம், ஏமாந்து போய்விட்டார்கள்.
தமிழ் தலைமைகளைப் பொறுத்தவரை, நேற்று எப்படி இருந்தார்களோ அப்படித்தான் இன்றும் இருக்கிறார்கள். நாளையும் அப்படியேதான் இருப்பார்கள்.
சிலருக்கு தமிழ் தலைமைகள் ஏன் தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சியையே ஆதரித்து வருகிறது என்ற கேள்வி இருக்கலாம். இங்குதான் அவர்கள் ஒரு விடயத்தைப் பார்க்கத் தவறுகிறார்கள்.
அதாவது, இனப்பற்றை விட வர்க்கப்பற்று வலிமையானது. அது இனம், மொழி, மதம், நாடு எல்லாவற்றையும் கடந்தது.
தமிழ் தலைமைகள் எல்லாமே மிகவும் மோசமான தமிழ் இனவெறியை ஊட்டி வளர்ந்தவை. அதுபோல ஐக்கிய தேசியக் கட்சி தீவிர சிங்கள இனவாதத்தின் அடிப்படையில் வளர்ந்த கட்சி. ஆனால் உதைத்த காலையே நக்குவது போல தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு இனவாத அடிப்படையில் பல கொடுமைகள் செய்த ஐக்கிய தேசியக் கட்சியையே தொடர்ந்து ஆதரித்து வருகின்றன. இதன் காரணம் என்ன?
ஐக்கிய தேசியக் கட்சி எப்படி சிங்கள மேட்டுக்குடியினரான நிலப்பிரபுத்துவ, பெரும் முதலாளித்துவ வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாக்கின்ற கட்சியாக இருக்கின்றதோ அதேபோல, இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட கடந்த காலத்தில் இருந்த தமிழ் தலைமைகள் எல்லாமே தமிழ் மேட்டுக்குடியினரான உயர்சாதி நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ வர்க்கங்களின் பிரதிநிதிகளாகவே இருந்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, இந்த இரண்டு சிங்கள – தமிழ் வர்க்க சக்திகளும் சர்வதேச ரீதியாக ஏகாதிபத்திய சக்திகளின் அடிவருடிகளாகவும் இருக்கின்றன.
எனவே, உள்நாட்டைப் பொறுத்தவரையில் வர்க்க அடிப்படையில் நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ சக்திகளின் பிரதிநிதிகளாகவும், வெளிநாட்டைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியாக ஏகாதிபத்திய சக்திகளின் அடிவருடிகளாகவும் இருப்பதால் இவர்களது அரசியல் ஒற்றுமை ஆண்டாண்டு காலமாகத் தொடர்கிறது. இனிமேலும் தொடரும்.
ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் என்னவெனில், சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் ஏகாதிபத்திய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்களாக இருப்பதால், அவர்கள் அநேக சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசியக் கட்சியை தேர்தல்களில் தோற்கடித்திருக்கிறார்கள். அதன் மூலம் ஒரு மாற்றை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவ்வாறான நிலைமை இல்லை. மாற்றமில்லாமல் அன்றிலிருந்து இன்றுவரை பிற்போக்கு தமிழ் தலைமைகளையே அவர்கள் தொடர்ந்தும் ஆதரித்து வருகின்றனர். அதற்குக் காரணம், தமிழ் சமூகத்தில் இருக்கின்ற இறுக்கமான சைவ மதச் சிந்தனை, சாதியக் கட்டமைப்பு, நிலப்பிரபுத்துவ சிந்தனையின் மிச்சசொச்சங்கள், குட்டி முதலாளித்துவ தனிமைவாத மனோபாவம், விதேசிய வழிபாடு, இனவாத உணர்வு போன்ற காரணங்களால் பிற்போக்கு தமிழ் தலைமைகளையே அவர்கள் தமக்கு ஏற்ற தலைமை எனக் கருதுகின்றனர்.
எனவேதான், வடக்கில் மிகப்பெரிய படித்த அறிவாளிகளைக் கொண்ட இடதுசாரி கட்சிகள் செயல்பட்ட காலத்தில் கூட, அந்தக் கட்சிகள் குறைந்தபட்ச சித்தியடைவதற்கான 35 புள்ளிகளைக்கூட அவர்களால் முடியவில்லை. இன்று பிற்போக்கு தமிழ் தலைமைக்கு மாற்றாக இருக்கின்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என்பனவற்றின் நிலையும் அதுதான்.
இலங்கை முழுமையிலும் ஒரு பெரும் புரட்சி நடந்து நாடு சோசலிசப் பாதையில் முன்னேறும் நிலை ஏற்பட்டாலும் கூட தமிழ் சமூகத்தை மற்றைய சமூகங்களுடன் அந்த நிலைக்கு கொண்டுவர பிரத்தியேகமாக மேலதிக 50 ஆண்டுகள் தேவைப்படும் என எண்ணத் தோன்றுகிறது.
எனவே, தமிழ் சமூகத்தில் முற்போக்கு சக்திகளுக்கு இருக்கக்கூடிய இடம் வரையறைக்குட்பட்டது என்ற யதார்த்தத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Source: chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...