எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவு: இலங்கையின் வரலாற்றை மாற்றப் போவதற்கான கட்டியம் கூறலா?


-பிரதீபன்
SLPP wins all 17 Wards in Elpitiya PS poll
லங்கையின் தென் மாகாணத்தில் காலி மாவட்டத்திலுள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கு 2019 ஒக்ரோபர் 11ஆம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில் அந்த சபையின் 17 வட்டாரங்கiளிலும் வெற்றிபெற்று மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி ஈட்டியுள்ளது.
இந்தத் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுன 23,372 வாக்குகளைப் பெற்றது (கிடைத்த ஆசனம் 17). ஐக்கிய தேசியக் கட்சி 10,113 வாக்குகளைப் பெற்றது கிடைத்த ஆசனம் 7). ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5,273 வாக்குகளைப் பெற்றது (கிடைத்த ஆசனம் 3). ஜே.வி.பி. 2,435 வாக்குகளைப் பெற்றது (கிடைத்த ஆசனம் 2).


இதில் முக்கியமான விடயம் என்னவெனில், பொதுஜன பெரமுனவைத் தவிர ஏனைய கட்சிகள் பெற்ற ஆசனங்கள் அனைத்தும் விகிதாரத் தேர்தல் முறையின் மூலம் கிடைத்த போனஸ் அடிப்படையில் பெறப்பட்டவையாகும். அவை 17 வட்டாரங்களிலும் எந்தவொரு வட்டாரத்திலும் நேரடியாக வெற்றி பெற்று அங்கத்தவர்களைப் பெறவில்லை.
அத்துடன், இந்தத் தேர்தல் முடிவின் மூலம் தெரியவரும் மிக முக்கியமான விடயம் என்னவெனில், சிறீலங்கா பொதுஜன பெரமுனவும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் தனித்தனியாகப் போட்டியிட்ட போதிலும் அவை இரண்டும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 69 சத வீதமாகும். ஐக்கிய தேசியக் கட்சி வெறுமனே 24.3 சத வீத வாக்குகளையே பெற்றுள்ளது.
இந்த முடிவுகளை வைத்துப் பார்க்கையில், தற்பொழுது பொதுஜன பெரமுனவும், சுதந்திரக் கட்சியும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டுச் சேர்ந்துள்ளதால், அவற்றின் வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச குறைந்தது 60 சத வீதமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெறுவார் எனத் தெரிய வந்துள்ளது.
அதேநேரத்தில், இந்தத் தேர்தல் முடிவுகள் ஐ.தே.கவைப் பொறுத்தவரை அதன் தொடர்ச்சியான தோல்விப் பாதையையே மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது. ரணில் போட்டியிட்டால் தோல்வியடைவார் எனக் கருதி பெரும் பிரயத்தனங்கள் மத்தியில் புதிய முகமான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்திய போதும், அவராலும் வெற்றிபெற முடியாது என்பதையே எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. அதுவும் சஜித் தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதும், அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சபையில் அவரது கட்சி ஒரு வட்டாரத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை.
இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் சஜித் பிரேமதாச தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை கொழும்பு காலிமுகத்திடலில் நடத்தி, அதில் பல்லாயிரம் மக்களைத் திரள வைத்து தனது பலத்தைக் காட்டியிருந்தார். இதேபோன்ற சனத்திரளுடன் ஒரு கூட்டத்தை ஜே.வி.பியும் தனது ஜனாதிபதி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை காலிமுகத்திடலில் நடத்திய பொழுது காட்டியிருந்தது. (எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, ஜே.வி.பி. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆகக்கூட 5 வீத வாக்குகளுக்கு மேல் பெற வாய்ப்பில்லை)
ஆனாலும் இந்த இரண்டு கட்சிகளும் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளன. அதற்குக் காரணம், சாதாரண பொது மக்கள் அரசியல் கட்சிகள் தமது கூட்டங்களுக்கு அழைத்து வரும் சனக் கூட்டத்தை வைத்து எடை போடாது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் கொள்கைகளையும், அவர்களது கடந்த கால வரலாற்றையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதாலாகும்.

Source: chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...