கோத்தபாய ராஜபக்ச சகல மக்களினதும் நலன்களுக்கான தீர்வை முன்வைப்பது அவசியம்!

2019 நொவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்தத் தேர்தலில் 30இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றபோதும், பிரதான கட்சிகளான பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களே கவனத்துக்குரியவர்களாக இருக்கின்றனர். இரண்டு அணிகளும் பல சகோதரக் கட்சிகளை இணைத்துக்கொண்டே தேர்தலைச் சந்திக்கின்றன. இலங்கை ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வந்திருக்கின்றன. 2015இல் பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகளால் நிறுத்தப்பட்டு வெற்றீட்டிய மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும் தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குகளே தீர்க்கமான பங்களித்திருந்தன. அதாவது, வடக்கு கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பனவும், மலையக மற்றும் தென்னிலங்கை வாழ் இந்திய வம்சாவழி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும் மைத்திரிபால சிறிசேனவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தன. இந்த சிறுபான்மை இனங்களின் வாக்குகளைத் தவிர்த்துப் பார்த்தால் சிங்கள மக்களின் வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் அத்தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே கிடைத்திருந்தன. அந்த வகையில் எதிர்வரும் தேர்தலிலும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கை வகிக்கக்கூடும். அப்படிப் பார்க்கையில், சிறுபான்மை இனங்களில் கூடுதலான வாக்காளர்களான தமிழ் மக்களின் வாக்குகளை வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என இதுவரை தீர்மானிக்காது காலம் கடத்தி வருகின்றது. இதற்குக் காரணம் அவர்களுக்குள் உள்ள குழப்ப நிலையா அல்லது தந்திரமா தெரியவில்லை. ஏனெனில், தமிழ் தலைமைகள் காலம்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே கூட்டு வைத்து வந்திருக்கின்றன. அதனால் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எந்தப் பலாபலனும் கிடைக்காத போதும், அவர்களது ஏகாதிபத்திய சார்பு மற்றும் முதலாளித்துவ வர்க்க அரசியல் நிலைப்பாடு காரணமாக அவர்கள் ஐ.தே.கவுடன் கூட்டுச் சேர்வதே இயல்பாக இருந்து வந்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் கூட்டமைப்பு தலைமை ஐ.தே.க. நிறுத்திய வேட்பாளர்களையே நிபந்தனை எதுவுமின்றி ஆதரித்து வந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, தற்போது பதவியில் இருக்கின்ற ரணில் தலைமையிலான அரசாங்கத்தையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டமைப்புத் தலைமை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து வருகின்றது. இந்த ஆதரவு காரணமாக கூட்டமைப்பு தலைமைக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி உட்பட சில அனுகூலங்கள் கிடைத்தாலும் சாதாரண தமிழ் பொதுமக்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் இன்றைய அரசாங்கத்தின் மீது மட்டுமல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை மீதும் அதிருப்தியும் வெறுப்பும் நிலவுகின்றது. இதன் காரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தல்களின் போது செய்தது போல கூட்டமைப்பு தலைமை எடுத்த எடுப்பிலேயே ஐ.தே.க. நிறுத்திய வேட்பாளரை ஆதரிக்க முடியாமல் திண்டாடி வருகிறது. அதனால்தான் ‘பிரதான கட்சிகள் இரண்டுடனும் பேசி அவர்களது தமிழ் மக்கள் சம்பந்தமான கொள்கைகளைத் தெரிந்துகொண்டு அதன்பின்னர்தான் யாரை ஆதரிப்பது என முடிவு செய்வோம்’ என கூட்டமைப்பு தலைமை தமிழ் மக்களுக்கு சாக்குப்போக்கு சொல்லி வருகிறது. ஆனால் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் எவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நியாயமான அடிப்படையில் தீர்க்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குறுதி அளிக்கப் போவதில்லை. ஏனெனில் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இலங்கையின் சனத்தொகையில் 74 சத வீதத்தைக் கொண்டிருக்கும் சிங்கள மக்களின் வாக்குகள்தான் முக்கியமானது. எனவே இலங்கையின் சனத்தொகையில் வெறுமனே 12 வீதத்தை மட்டும் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக, அதிலும் அந்த தொகையிலும் சுமார் 5 வீதத்தை மட்டும் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளுக்காக ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியைப் பாதிக்கும் திட்டங்கள் எதையும் முன்வைக்கப் போவதில்லை. எனவே, அவர்கள் பொதுவாக ‘தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்’ என பொத்தாம் பொதுவாகச் சொல்லவிட்டு அப்பால் நகர்ந்துவிடுவார்கள். நிலைமை இதுதான் என்றபோதிலும் கூட்டமைப்பு தலைமை இறுதியில் ஐ.தே.க. வேட்பாளரை ஆதரிப்பது என முடிவு எடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில், இலங்கை ஆட்சி அதிகாரத்தில் ஏகாதிபத்திய சார்பான ஒருவர் தவிர வேறு எவரும் வெற்றிபெறக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாகவும், திடமாகவும் இருக்கின்றனர். அதனால்தான் கூட்டமைப்பு தலைமை யாரை ஆதரிப்பது என இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனக் கூறினாலும், அவர்களது இரண்டாம் மட்ட தலைமைகள் ஐ.தே.க. வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஏற்கெனவே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர். இது ஒருபுறமிருக்க, முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஐ.தே.க. வேட்பாளரை ஆதரிப்பது என ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டது. ஆனால் ஐ.தே.க. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இன்னொரு முக்கிய கட்சியான அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்காமல் மதில்மேல் பூனையாக இருந்து வருகிறது. அதேநேரத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஓரளவு செல்வாக்கு உள்ள முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய மக்கள் காங்கிரஸ் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருக்கிறது. மறுபக்கத்தில் கடந்த காலத்தில் மகிந்த அணியில் இணைந்து இருந்தவரும், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கு உள்ளவருமான ஹிஸ்புல்லா இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். இது ஐ.தே.கவுக்கு செல்லும் முஸ்லீம் வாக்குகளைத் தடுப்பதற்கான ஒரு தந்திரோபாயம் எனக் கருதப்படுகிறது. மலையக மக்களைப் பொறுத்தவரை, அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பது என முடிவு செய்திருக்கிறது. அதேநேரத்தில், ஐ.தே.கவின் மறைமுக கிளையாகக் கருதப்படும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி வழமைபோல ஐ.தே.க. வேட்பாளரை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளது. இதேநேரத்தில், வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்ததான பெரிய கட்சிகளான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) தலைமையிலான தமிழ் மக்கள் சுதந்திர முன்னணி என்பன கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளன. சிறுபான்மை இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் நிலை இவ்வாறாக இருந்தபோதிலும், அவர்களது மொத்த வாக்கு வங்கி இலங்கை சனத்தொகையில் 26 சத வீதம் மட்டுமே. எனவே பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைக் கூடுதலாகப் பெறும் வேட்பாளரே வெற்றி பெறும் சூழல் இருக்கின்றது. கடந்த காலங்கள் போன்று சிறுபான்மை மக்களின் வாக்குகள்தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தி என அறுதியிட்டுக் கூறிவிடவும் முடியாது. அதற்கு ஒரு உதாரணத்தைக் கூறலாம். 1965 பொதுத் தேர்தலில் பிரதான கட்சிகள் இரண்டும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. இருப்பினும் அன்றைய ஐ.தே.க. தலைவர் டட்லி சேனநாயக்க தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சி உட்பட வேறு சில சிறிய கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு ஏழு கட்சி கூட்டரசாங்கம் ஒன்றை நிறுவினார். அவரது இந்த முயற்சியை சிங்கள மக்கள் ஏற்கவில்லை. அதேபோல தமிழ் கட்சிகள் அவரது அரசாங்கத்தில் இணைந்ததை தமிழ் மக்களும் ஏற்கவில்லை. அதன் பிரதிபலிப்பை அடுத்து வந்த 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டின. அந்தத் தேர்தலில் சிங்கள மக்களின் பெருந்தொகையான வாக்குகளைப் பெற்று சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்தது. அதேநேரத்தில் தமிழ் மக்களும் தமிழரசு – தமிழ் காங்கிரஸ் தலைவர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன், மு.ஆலாலசுந்தரம் போன்றோரைத் தோற்கடித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். தற்போது ரணில் தலைமையில் இருக்கும் அரசாங்கத்துக்கும், அதன் மக்கள் விரோத செயல்களை நிபந்தனை ஏதுமின்றி ஆதரித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிராகவும் 1970இல் இருந்தது போன்று இன்றும் சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு நிலைமை உருவாகி உள்ளது. அதை நிரூபிப்பது போல, ‘ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்’ என்பது போல 2019 ஒக்ரோபர் 11ஆம் திகதி நடைபெற்ற தென் மாகாணத்திலுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் முடிவுகள் வெளிவந்துள்ளன. இத்தேர்தலில் போட்டியிட்ட சிறீலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபையின்17 வட்டாரங்களிலும் அமோக வெற்றியீட்டியுள்ளது. ஐ.தே.க. உட்பட இதர கட்சிளுக்கு போனஸ் ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதுமாத்திரமின்றி, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பது என ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் முடிவு எடுத்துவிட்டதால், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுனவும், சுதந்திரக் கட்சியும் சேர்ந்து பெற்ற மொத்த வாக்குகளான 69 வீதம் கோத்தபாயவின் வெற்றியை உறுதிப்படுத்திவிட்டது எனலாம். இந்தத் தேர்தலில் இன்னொரு ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் ஐ.தே.க. வெறுமனே 24.3 வீதத்தையே பெற்றிருக்கிறது. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவை வைத்துப் பார்க்கையில், சிங்கள மக்களில் 60 வீதத்துக்கு அதிகமானோர் கோத்தபாயவுக்கே வாக்களிப்பர் என்பது புலனாகின்றது. அதன் மூலம் ஜனாதிபதி தேர்தலில் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது எனலாம். இந்த நிலைமை இவ்வாறு இருக்க, இம்முறை தேர்தலில் சிறுபான்மை இனங்களான தமிழ் – முஸ்லீம் மக்களில் கணிசமானோரும் கோத்தாவுக்கே வாக்களிப்பர் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசாது, இலங்கையின் சிறுபான்மை இன மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் அடிப்படை நலன்களை நிறைவேற்றக்கூடிய குறைந்தபட்ச வேலைத்திட்டம் ஒன்றையாவது ஜனாதிபதி வேட்பாளரான (தெரிவாவார் என எதிர்பார்க்கப்படும்) கோத்தபாய ராஜபக்ச முன்வைப்பது அவசியமானது. வானவில் இதழ் -2019

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...