இவர்கள் கோமாளிகளா அல்லது சதிகாரர்களா?-சுப்பராயன்


ஜே.வி.பி. இம்முறை தனது ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைவர்
அனுர குமார திசாநாயக்கவை நிறுத்தியுள்ளது. ஜே.வி.பியின்
வரலாற்றை நன்கு அறிந்தவர்கள்  தவிர ஏனையோர் சிலர் "ஜே.வி.பி.
இலங்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் மாற்று சக்தியாக
இருக்கும்’ என அப்பாவித்தனமாக நம்புகின்றனர்  (இவர்களுக்கு எமது
அனுதாபங்களைத் தெரிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை)
ஜே.வி.பி. என்ற சிறு முதலாளித்துவ சிங்கள இனவாத கட்சியின்
கொள்கைகளைப் பற்றி திரும்பத் திரும்ப பேசுவதில் பயனில்லை.
ஏனெனில் அவர்கள் முன்னர் மறைமுகமாகவும்,  கடந்த நான்கு
வருடங்களாக வெளிப்படையாகவும், ஏகாதிபத்திய சார்பு - இலங்கையின்
பெருமுதலாளித்துவ சக்திகளின பிரதிநிதியான ஐ.தே.க. அரசுக்கு
முண்டு கொடுத்து வருகின்றனர் . அத்துடன்  அவரகள் இலங்கையின்
தேசிய சிறுபான்மை இனங்களுக்கு – குறிப்பாக தமிழ் மக்களுக்கு
எதிரானவர்கள் என்பதும் பல தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜே.வி.பி. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதின் நோக்கம் என்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். ஜே.வி.பியின் ஸ்தாபகத்  ; தலைவர்  ரோகண விஜேவீர முதன்முதலாக ஜே.வி.பி சார்பாக 1982 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது அவர் பெற்ற மொத்த வாக்குகள் ; 2 இலட்சத்து 73,428. அதாவது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில்
4.19 சதவீதம். பின்னர் ரோகண விஜேவீர, ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஐ.தே.க.
அரசாங்கத்தால் கொல்லப்பட்ட பின்னர், 1999இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. சார்பாக நந்தன குணதிலக போட்டியிட்டார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் மூன்று இலட்சத்து 44173. அதாவது அளிக்கப்பட்ட வாக்குகளில் 4.08 சதவீதம். இது  விஜேவீரவை விட நந்தன குணதிலக 18 வீத வாக்குகள் குறைவாகப் பெற்றதை எடுத்துக் காட்டுகிறது. பின்னர் நந்தன குணதிலக ஜே.வி.பியை விட்டு விலகி ஐ.தே.கவில் நேரடியாகச் சங்கமம் ஆகிவிட்டார்.

அதாவது ஐ.தே.கவின் வாலான ஜே.வி.பியில் இருப்பதைவிட, நேரடியாக
தலையான ஐ.தே.கவில் இருப்பது மேல் என நந்தன குணதிலக எண்ணி அந்த
முடிவை எடுத்திருக்கலாம்.  இப்பொழுது எதிர்வரும் நொவம்பர் 16இல்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. சார்பாக அதன் தலைவர்
அனுரகுமார திசநாயக்க போட்டியிடுகின்றார். ஜே.வி.பி. கடந்த காலத்தில் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் அனுரகுமார 5 வீதமான
வாக்குகளுக்கு மேல் பெறமாட்டார் என்பது திண்ணம். இருந்தும் ஜே.வி.பி. ஏன் இத்தேர்தலில் போட்டியிடுகின்றது என்ற கேள்வி இருக்கின்றது.

உண்மையைச் சொல்லப்போனால்  ஜே.வி.பி. இந்தத் தேர்தலில் 3 இலட்சம் முதல் 5 இலட்சம் வரையிலான வாக்குகள் பெற்றால் அது ஐ.தே.க. நிறுத்தும்
வேட்பாளருக்குத்தான் சாதகமாக அமையும். அது எப்படியென்றால், 2015 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 62 இலட்சத்து 17162. அவருக்கு எதிராகப் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 57 இலட்சத்து 68,090. இரண்டு பேருக்குமிடையிலான வாக்கு வித்தியாசம் 4 இலட்சத்து 49,072
ஆகும். இந்த வித்தியாசமான வாக்குகளில் 2 இலட்சத்து 25 ஆயிரம்
வாக்குகளை மகிந்த கூடுதலாகப் பெற்றிருந்தால் அவர்தான்
ஜனாதிபதியாகத் தெரிவாகி இருப்பார்.

எனவே இனி நடைபெறப் போகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி வேட்பாளர் சுமார் 5 இலட்சம் வாக்குகள் பெற்றால் அது ஐ.தே.க. வேட்பாளரின் வெற்றிக்கு அனுகூலமாக அமையும். ஏனெனில், ஜே.வி.பி. வேட்பாளர் ஐ.தே.க. வேட்பாளரின் வாக்குகளை உடைக்கப் போவதில்லை. ஜே.வி.பியினர் போடுகின்ற சோசலிச வேசம், போடுகின்ற சிவப்பு
சட்டை,  ஏந்தியிருக்கும் சிவப்புக் கொடிகள்,  வைத்திருக்கும் மார்க்ஸ்,
எங்கெல்ஸ், லெனின் படங்கள் எல்லாம் அவர்களை பொதுமக்கள் மத்தியில்
இடதுசாரிகள் என நம்ப வைத்து அவர்களில் ஒரு சிறு பிரிவினராவது
ஜே.வி.பிக்கு வாக்களிப்பர். அந்த வாக்குகள் அத்தனையும் ஐ.தே.கவுக்கு
எதிரான முற்போக்கு சக்திகளின் வாக்குகள். அதாவது ஐ.தே.கவுக்கு
எதிரான வேட்பாளருக்கு விழவேண்டிய வாக்குகள். எனவே, ஜே.வி.பி. தனது வேட்பாளரை நிறுத்தியிருப்பதன் நோக்கம் எதிரணி வேட்பாளரின் வாக்குகளை உடைத்து, ஐ.தே.க. வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே. ஜே.வி.பியின் இந்த சதித் திட்டத்தை இன்னுமொரு வகையிலும் விளங்கிக் கொள்ளலாம்.

இப்பொழுது நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் ஜே.வி.பி. 2015இல்
நடைபெற்ற தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என நீங்கள் கேட்டுப்
பார்க்கலாம். அந்தத் தேர்தலில் ஐ.தே.கவின் பின்னணியில் மகிந்தவுக்கு
எதிராக பொது வேட்பாளர் என்ற போர்வையில் மைத்திரி நிறுத்தப்பட்டதால்
தாமும் போட்டியிட்டால் மைத்திரியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்று சரியாகக் கணிப்பிட்டே ஜே.வி.பி. போட்டியிடவில்லை. ஆனால் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் மகிந்த அணியினர் நிறுத்தும்
வேட்பாளர் வெற்றிபெறக்கூடிய சூழ்நிலை இருப்பதால் அந்த வேட்பாளரின்
வாக்குகளை உடைத்து ஐ.தே.க. வேட்பாளரை வெற்றிபெற வைக்கவே
ஜே.வி.பி. போட்டியிடுகின்றது. இதில் எந்தவிதமான சந்தேகத்துக்கும்
இடமில்லை.
மூலம்: வானவில் 105 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...