மீண்டும் ‘பிரேமதாச யுகம்’ தோன்ற மக்கள் அனுமதிப்பார்களா?

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் நியமனம் சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இடம்பெற்று வந்த இழுபறி ஒருவாறு முடிவுக்கு வந்துள்ளது. அதன் பிரகாரம் சஜித் பிரேமதாச ஐ.தே.க. சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ஒருமனதாக(?) அங்கீகரிக்கப் பட்டுள்ளார். சஜித் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதைத் தடுப்பதற்காக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இறுதி நிமிடம் வரை கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வந்தார். கட்சியின் மூத்த தலைவர்களும் அவருக்கு ஆதரவாக இருந்தனர். இருந்தபோதும், கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளும் கொடுத்த பலமான அழுத்தம் காரணமாக ரணில் தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க வேண்டி ஏற்பட்டுவிட்டது. இந்த நிலைமை ஏறத்தாழ ரணிலின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும், சஜித்தின் தந்தை ஆர்.பிரேமதாசவுக்கும் 1989 ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் ஏற்பட்டது போன்றது. அப்பொழுது ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் இருந்த ஜே.ஆர்., ஐ.தே.கவின் தலைவர் என்ற ரீதியில் தனது இடத்துக்கு புதியவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய நிலையில் இருந்தார். அந்த இடத்துக்கு ஜே.ஆரின் அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ஆர்.பிரேமதாச வர விரும்பினார்.


ஆனால் அவர் வருவதை ஜே.ஆர். கொஞ்சமும் விரும்பவில்லை. அதற்குக் காரணம் பிரேமதாச ஒருமுறை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக வந்துவிட்டால் ஐ.தே.கவின் தலைமை நிரந்தரமாகவே பிரேமதாச குடும்பத்திடம் சென்றுவிடும் எனப் பயந்தார். அதுமாத்திரமின்றி, 1978இல் தான் உருவாக்கிய அரசியல் சட்டத்தை மதித்து இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக இருக்காது தான் ஒதுங்கிக் கொண்டது போல பிரேமதாச இருக்கமாட்டார். அரசியல் சட்டத்தை மாற்றி ஆயுள் பூராவும் தானே ஜனாதிபதியாக இருக்க பிரேமதாச முயற்சிப்பார் எனவும் ஜே.ஆர். அஞ்சினார். ஆனால், கட்சியின் கீழ்மட்டத்தினர் கொடுத்த பலத்த அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி இறுதியில் ஜே.ஆர். ஒதுங்கிக் கொண்டு பிரேமதாசவுக்கு வழிவிட வேண்டியதாயிற்று. பின்னர் இந்திய அமைதிப் படைக்கு எதிரான போராட்டத்தில் புலிகள் பிரேமதாசவை பயன்படுத்திவிட்டு, தமக்கு அவர் தேவையில்லை எனக் கருதியபோது தற்கொலை குண்டுதாரி மூலம் 1993இல் பிரேமதாசவை கொலை செய்துவிட்டனர். அதனால் ஜே.ஆர். அஞ்சியது போல ‘பிரேமதாச யுகம்’ ஒன்று உருவாக வழியில்லாமல் போய்விட்டது.


 பிரேமதாசவை புலிகள் ஒழித்துக்கட்;டாமல் இருந்திருந்தால், ஐ.தே.கவிலும், நாட்டிலும் பிரேமதாசவின் குடும்ப ஆட்சி உருவாகியிருக்கும் என்பது ஒருபுறமிருக்க, பிற்காலத்தில் ஜனாதிபதிகளாக வந்த சந்திரிகாவோ அல்லது மகிந்த ராஜபக்சவோ அல்லது பிரதமராக வந்த ரணிலோ ஒருபோதும் அவ்வாறு வந்திருக்கவும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். ஆனால் தற்போதைய நிலவரம் சற்று வித்தியாசமானது. தனது மாமனார் ஜே.ஆர். செய்தது போல ரணில் ஒதுங்கிக்கொள்ளப் போவதில்லை. ரணிலைப் பொறுத்தவரை சஜித்துக்கு எதிரான போராட்டத்தை அவர் இத்துடன் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை.

சஜித்துக்கு தேர்தல் சின்னமாக ஐ.தே.கவின் யானை சின்னத்தை வழங்காததின் மூலம் இதைப் புரிந்து கொள்ளலாம். சஜித்துடனான ரணிலின் போராட்டம் வெறுமனே பதவி சம்பந்தமானது அல்ல. அது ரணிலைப் பொறுத்தவரை வாழ்வா சாவா என்ற வகையிலான போராட்டம். சஜித் ஜனாதிபதி வேட்பாளராக வருவதைத் தடுக்க முடியாது எனக் கண்ட ரணில் தனது நிலையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சில நிபந்தனைகளை முன்வைத்துப் பார்த்தார். அதாவது, கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தானே தொடர்ந்தும் இருப்பதை ஏற்க வேண்டும் எனக் கூறினார். அத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க உடன்பட வேண்டும் எனவும் கூறினார்.


அவரது தகப்பனார் ஒரு சாதாரண கீழ்மட்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வன்முறை நடவடிக்கைகளின் மூலமே அரசியலுக்கு வந்தவர். அவரது வன்முறைக்காகவே கொழும்பு மாநகர சபையில் அரசியல் செய்த ஐ.தே.க. தலைவர்கள் அவரை அரவணைத்து பயன்படுத்தினர். அவ்வாறுதான் அவர் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார். அந்தச் சந்தர்ப்பத்தை பிரேமதாச நன்கு பயன்படுத்திக் கொண்டு ஜனாதிபதி பதவி வரை வளர்ந்தார்.
இன்னொரு பரிமாணமும் பிரேமதாசவுக்கு உண்டு. அவரது ஞானகுரு ஏ.ஈ.குணசிங்க என்பவர். பிரபலமான தொழிற்சங்கவாதியான இந்த குணசிங்கதான் முதன்முதலாக இலங்கையில் இனவாதத்தைத் தூண்டியவர். அந்தக் காலத்தில் கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கொச்சி துறைமுகத் தொழிலாளர்களே கூடுதலாக வேலை செய்தனர். இவர்கள் குணசிங்கவின் தொழிற்சங்கத்தை நிராகரித்துவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தில் இணைந்து கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த குணசிங்க, “மலையாளிகளைத் திருப்பி அனுப்ப வேண்டும்” என கோசமெழுப்பியதுடன், கம்யூனிஸ்ட் கட்சியை “கொச்சிக் கட்சி” என விளித்தும் இனவாதம் பேசினார். அவரது சீடப்பிள்ளையாக பிரேமதாச இருந்தார்.
பின்னர் பிரேமதாச அரசியலில் மேல்நிலை அடைந்ததும், தான் பிறந்து வளர்ந்த கொழும்பிலுள்ள ‘வாழைத்தோட்டம்’ என்ற பகுதிக்கு தனது ஆசானுக்கு நன்றிக்கடனாக “குணசிங்கபுர” எனப் பெயர் இட்டதுடன், அந்தப் பகுதியின் நுழைவாயிலில் குணசிங்கவின் பெரிய அளவிலான உருவச்சிலை ஒன்றையும் அமைத்தார்.
பிரேமதாசவுக்குள் குணசிங்க மூலம் உருவாகியிருந்த இனவாத சிந்தனை காரணமாகவே அவர் இனப்பிரச்சினை தீர்வுக்காக இந்தியாவின் முன்முயற்சியால் 1987இல் உருவான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்ததுடன் (இந்த ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பிரேமதாசவின் சொந்தக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ஜே.ஆர். தான் ஒப்பமிட்டபோதும்), பின்னர் அந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையை புலிகளுடன் சேர்ந்து திருப்பி அனுப்பியதுடன், அந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவான ஒன்றிணைந்த வடக்கு – கிழக்கு மாகாண சபையையும் கலைத்து முடமாக்கினார்.


பிரேமதாச வன்முறையாளர், இனவாதி என்ற பிம்பங்களுக்கு மட்டும் உரியவரல்லர். அவற்றுக்கும் அப்பால் தான் ஒரு சர்வாதிகாரவாதி என்பதையும் நிரூபித்தவர். அவர் அதிகாரத்தில் இருந்த 1988 – 89 காலப்பகுதியில் ஜே.வி.பியினர் நடத்திய இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி ஒடுக்கியவர். கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்களை மட்டுமின்றி, அதில் ஈடுபடாத இளைஞர்கள் உட்பட சுமார் அறுபதினாயிரம் பேரை கொன்று குவித்தவர்.
பிரேமதாசவின் இத்தகைய கொடூரத்தனங்களுக்கு மத்தியில் ‘தெருவில் தேங்காயை எடுத்து வழியில் பிள்ளையாருக்கு அடித்தது போல’, அரசாங்கப்பணத்தில் அவர் கிராமப்புற மக்களுக்கு அமைத்த வீடமைப்புத் திட்டங்கள் ஒரு பெரிய விடயமல்ல. (தமிழ் அரசியல்வாதிகள்தான் இதைச் சிலாகித்துப் பேசுவதுடன், அவர் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவானதும் ஐ.தே.க. ஆதரவு பழக்கதோசம் காரணமாக தமிழ் பகுதிகளில் மட்டும்தான் சந்தோச ஆரவாரமும் நடைபெறுகின்றது)
இத்தகைய ஒருவரின் புதல்வாரன சஜித் பிரேமதாச, தான் ஜனாதிபதியாக வந்தால் தனது தகப்பனாரின் கொள்கைகளைத் தொடர்வேன் என்கிறார். அவர் தகப்பனாரின் எந்தக் கொள்கைகளைத் தொடரப் போகிறார் என்பது இதன் மூலம் புலனாகின்றது.
எனவே இன்றுள்ள சூழ்நிலையில் இத்தகைய ஒருவர் நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக வருவதைத் தடுப்பதே மக்களுக்கும் நாட்டுக்கும் முன்னால் உள்ள அத்தியாவசிய கடமையாகும்.
இதற்கு இருக்கின்ற ஒரே வழி ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. நிறுத்தியுள்ள வேட்பாளரான சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதாகும். இது மக்கள் சக்தியினாலேயே முடியும்.
யார் கண்டது? சில வேளைகளில் சஜித்துக்கு எதிரான தனது போராட்டத்தின் இரண்டாவது கட்டமாக ரணிலே உள்ளேயிருந்து கழுத்தறுப்புச் செய்து அவரைத் தோற்கடிக்கவும் கூடும்.
ஏனெனில், ரணிலைப் பொறுத்தவரை சஜித்துக்கு எதிரான தனது போரில் (War) ஒரு நடவடிக்கையைத்தான் (Battle) முடித்திருக்கிறார். ஆனால் போர் இன்னமும் முடியவில்லை.
‘தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழையாக அமைய வேண்டும்’ என்ற நிலையில் ரணில் எதற்கும் துணியக்கூடும்.


 Source : vaanavil 105

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...