தூண்டலும் தொக்கிய விளைவுகளும் !



                                                                        எஸ்.எம்.எம்.பஷீர் 

"கோபத்தை கோபத்தைக் கொண்டு அடக்காதே,
நன்மையால் தீமையை அடக்கு
உலோபத்தன்மையை தாராள மனப்பான்மையால் .அடக்கு
பொய்மையை வாய்மையால் அடக்கு "  ( தம்மபதம் 223)

 "Subdue anger with no anger,
Subdue evil with good,
Subdue stinginess with generosity,
Subdue untruth with truth". (Dhp. 223)
 
"துறவியே ஆந்தையும் வௌவாலும்
அலைகின்ற இந்த நேரத்தில்
கழுகும் கோட்டானும் குடியிருக்கும்
இந்த இடத்தில் தாங்களா ?

என்று அசோகச் சக்கரவர்த்தி யுத்த களத்திலே நிற்கும் துறவியைப் பார்த்துக் கேட்க , புத்த துறவி "நோயிருக்கும் இடத்தில்தானே வைத்தியனுக்கு வேலை " என்று கூறி   " அன்புதான் இன்ப ஊற்று , அன்புதான் உலக ஜோதி , அன்புதான் உலக மகா சக்தி"  என்று புத்தர் போதித்த   அன்பின் மகத்துவத்துவத்தையும் மனித நேயத்தையும் அசோகனுக்கு போதிக்கிறார். கலிங்க யுத்தம் தொடங்க முன்னரே அசோகனுக்கு யுத்தத்தின் தீங்கு பற்றி அவர் வழங்கிய உபதேசங்களை உதாசீனம் செய்துவிட்டு  கலிங்கப் போரில்  பல்லாயிரக்கனக்கான  போர் வீரர்களைக் கொன்றழித்தபின் அசோகன் கழிவிரக்கம் கொள்கிறான்.மீண்டும் யுத்த களத்தில் வைத்து போதி மரத்து புத்தனின் பக்கம் அவனைத் திருப்புகிறார் அந்த புத்த துறவி.  அசோகனின் மண்ணாசையையும் , அதனால் விளைந்த மனித அழிவுகளையும் , அவன் கண்டு மனம் நெக்குருகி கழிவிரக்கம் கொள்ளும் அந்த சம்பவத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் "அன்னையின் ஆணை"  படத்தில் ஒரு நாடகமாக நடித்ததன் மூலம் சித்தரிப்பதையே அசோகனின் நினைவாக தமிழ் வரலற்றுப் பக்கத்தில் நிலைத்து நிற்கச் செய்துவிட்டார் சிவாஜி கணேஷன்.

அசோகன் மௌரிய சாம்ராஜ்யத்தை இந்தியாவில் உருவாக்கியவர். ஆனால் தனது ஆட்சி . அதிகாரம் செல்வம் என்று எல்லாவற்றையும் கைவிட்டு புத்த மதத்தை தழுவி தனது  சொந்த மகன்  மஹிந்தரையும் சங்கமித்தையையும் புத்த போதனை செய்ய பணித்தவர். . அவர்களும் அரச கட்டிலையும் ஆட்சியையும் தகப்பன் வழி தொடர்ந்து , துறந்து புத்த கோட்பாடுகளைப் பரப்ப இலங்கை உட்பட அண்மைய நாடுகளுக்கு பயணித்தவர்கள். அசோகச் சக்கரவர்த்தியின் அர்ப்பணங்கள் மூலமே இலங்கையிலும் பௌத்த மதம் காலூன்றியது என்பது வரலாறு . ஆயினும் புத்தனின் போதனைக்கு உயிர் கொடுத்தவன் ஒரு சாமராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக இருந்து சாமான்யனாயாக மாறிய அசோகன். இந்த மாபெரும் தியாகத்தின் மூலம் அவன் புத்தனின் கோட்பாடுகளை வாழ்ந்து காட்டியவன். அவனுக்கு பௌத்த  தர்மம் அன்பைப் போதித்தது , புத்தனைப் பின்பற்றிய துறவி . அசோகன் சக்கரவர்த்தி என்றும் பொருட்படுத்தாமல் அன்பை அவனுக்கு போதித்து , அதனால் அவன் ஞானம் பெற்றது , எல்லாமே ஒரு சங்கிலிக் கோவை போல் "அன்பு" மனிதனை துறவியிலிருந்து , அரசன் வரை கட்டிப் போட்ட வரலாறு அது. "யாக்கை நிலையாமை"  என்பதை கவுதமன் தான் நம்பியவாறு செய்து காட்டினான் , அசோகனும் அவனின் பிள்ளைகளும் அதனை நடைமுறையில் தாங்கள் பின்பற்றிக் காட்டினர்.

அப்படியான பௌத்த மதம் இலங்கைக்கு அசோகனின் புத்திரனால்,  புத்திரியால் அறிமுகம் செய்யப்பட்ட பொழுது இலங்கை மன்னன்   தேவநம்பிய தீசன் அதனை பின்பற்றி ஒழுகினான் என்று வரலாறு எழுதி வைத்துள்ளது. ஆனால் இன்றைய இலங்கையில் சில பௌத்த துறவிகள் போர்முரசறைந்து , முஸ்லிம்களுக்கு எதிராக புறப்பட்டிருக்கிறார்கள். ஒரு உண்மையான புத்த துறவி ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்ட பேரரசனை   " அன்புதான் இன்ப ஊற்று , அன்புதான் உலக ஜோதி , அன்புதான் உலக மகா சக்தி" என்று அடக்கி ஆண்டான் , ஆனால் இன்று இந்த பல சென , சிங்கள ராவய என , இன்னொரன்ன சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் பௌத்த மத இயக்கங்கள் என்று தங்களை அடையாளப்பபடுத்திக் கொள்வதே பௌத்த மதத்தையே இழிவு படுத்துவதாகும்.  அன்பிற்குப் பதிலாக அழிவை போதிக்கும் மதமல்ல பௌத்த மதம் என்பதற்கு அசோகனின் வரலாற்றை விட வேறு என்ன சான்று வேண்டும். அசோகன் மட்டும் பௌத்த மதத்தை பரப்பாமல் விட்டிருந்தால் கிழக்காசிய நாடுகளில் பலவற்றில் பௌத்த மதம் பரவியிருக்க முடியாது. பொதுவாக எல்லா மதங்களும் நல்லொழுக்கத்தை போதிக்கின்றன. ஆனால் இன்று உலகளாவிய ரீதியில் எல்லா மதங்களிலும் உள்ள சிலரால் அவரவர் மதத்தின் பெயரால் தீவிரவாத  மனித குலத்துக்கு எதிரான , மாற்று மத , இன மனிதருக்கு எதிரான அடாவடித்தனங்கள் அத்து மீறிப் போயுள்ளன. உலக ஏகாதிபத்தியங்களும் இவ்வுணர்வுகளில் குளிர் காய்கின்றன.          

சிங்கள பௌத்த தீவிரவாத இயக்கங்கள் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விடும் களோபரங்கள் அதிகரித்து செல்கின்றன. அடிப்படையில் சிங்கள பௌத்த மக்களின் மனப்பாங்கில் சக வாழ்வுக் கெதிரான விசக் கிருமிகள் பரப்பப்படுகின்றன. சில திட்டமிட்டவை, பதில் நடவடிக்கைகளை எதிர்பார்த்து செய்யப்படுபவை. சில கருத்து வெளிப்பாட்டு ஜனநாயக உரிமையின் அம்சமாக இன மத விரோதத்தை நாசூக்காக விதைப்பவை.  

இலங்கையில் உள்ள செய்தித் தொடர்பு சாதனங்கள் ,தொலைக் காட்சி நாடகங்கள்  சினிமா என்று இன , மத விரோதம் குறித்து பெரும்பான்மை மக்களின் மனப்பாங்கை மாற்றும் கைங்கரியத்தில் ஈடுபடுகின்றன.  இலக்கு வைக்கப்பட்ட சமூகத்தினர் அதற்கு எதிர்வினையாக தொழிற்படும் பொழுது  பரந்து பட்ட அளவில் சமூக உறவுகளை பாதிப்பதற்கான சூழல் கட்டமையும் , அதுவே   நீண்ட காலத்தில் சமூக முரண்பாடுகளின் மூலம் பல்வேறுவகையான அனர்த்தங்களை கொண்டு வரும்.

அந்த வகையில் 2011 ஜனவரியில் வெளியிடப்பட்ட சிங்கள சினிமாவான "சிங்ஹவலோகணய " எனும் சிங்கள திரைப்படம் எனது கவனத்தைக் கவர்ந்தது. இந்த திரைப்படம் காலனித்துவ ஆட்சியில் அதிலும் குறிப்பாக இலங்கைக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர்  சூரியசிரிகம எனப்படும் ஒரு கிராமத்தில் உள்ள படிப்பறிவு அற்ற கிராமிய இளைஞர்கள் , அன்றைய பிரித்தானிய காலனித்துவ ஆட்சி நிர்வாகிகளை , கிரிகட் விளையாடமுடியுமா என்ற அவர்களின் சவாலை ஏற்று கிரிகட் விளையாட்டின் மூலம் ஆங்கிலேயர்களை தோற்கடிப்பது என்பதே திரைப்படத்தின் கதை. இலங்கையின் சுதந்திர வேட்கைக்கும் வெற்றிக்குமாக இப்படத்தில் கிரிக்கட் விளையாட்டு வெற்றி காண்பிக்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் கதை ஒரு கற்பனைக் கதையை அடிப்படையாகக் கொண்டதெனினும் வழக்கமான சில மசாலா அம்சங்களை கொண்டிருந்த போதும் சுதந்திர கால கட்ட ஒரு சிங்கள கிராமத்தை , அம்மக்களின் வாழ்வுடன் ஒன்றாய்க் கலந்த வாழ்வியல் அம்சங்கள் பலவற்றை.  நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. ( இந்த படம் பற்றி ஒரு  விமர்சனம் எழுதுவது எனது நோக்கமல்ல )   1895ல்  எச்.ஜி .வெல்ல்ஸ் எழுதிய டைம் மெசின் எனும் நாவலில் சொல்லப்பட்ட காலத்தில் பயணித்தல் பற்றிய கற்பனையை இப்படத்தில் இலங்கையின் மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்துக்கு பிரயாணம் செய்து , மீண்டும் நிகழ்காலத்துக்கு திரும்பும் மனிதர்கள் பற்றிய கற்பனையை கருவாகக் கொண்டு இப்படத்தை சுனத் மலிங்க லோகுஹேவா உருவாக்கி உள்ளார்   . இவரே இப்படத்தின் திரைக் கதையையும் எழுதி இயக்கியும் உள்ளார்.

எனது இக்கட்டுரையில் சிங்ஹவலோகணய பற்றி எழுதும் நோக்கம் என்னெவெனில் இப்படத்தில் காண்பிக்கப்படும் கிராமத்தில் கடை வைத்துள்ள ஒரு முஸ்லிம் கடைக்காரர்.  ஒரு இளைஞரின் தாய் கொடுக்க வேண்டிய கடனை அடைக்க , அந்த இளைஞன் காணாமல் போய் விட்டதால் (, "எதிர்காலத்துக்குள் சென்றுவிட்ட " )  அந்த வயது போன தாயின் என் மகன் வருவான் , உங்களின் கடனை திருப்பித் தருவான் , எனக்கு வேறு வசதி இல்லை , சற்று பொறுத்துக் கொள்ளுங்கள் " என்ற அழுகையையும் பொருட்படுத்தாது , அந்த வீட்டில் உள்ள ஒரே சொத்தான  மாட்டை , அந்த முஸ்லிம் கடைக்காரர் ஓட்டிச் சென்று விடுகிறார். அவரின் உடை தூக்கலாகவே அவரை முஸ்லிம் என்று காட்டுகிறது . அவர் மனிதாபிமானம் அற்று நடப்பது அந்தக் காட்சியைப் பார்ப்போருக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணக் கூடியது. 

அக்காட்சிக்கு முன்னரே ஆங்கிலேயர்களை (சுத்தாக்களை ) எதிர்த்து வெல்ல முடியுமா என்று அந்த முஸ்லிம் நபரின் கடையில் அக்கிராமத்தை சேர்ந்த ஒரு சிங்களவர் பரிகசிக்கும் பொழுது , அவரும் அந்த பரிகாசத்தில் பங்கு கொள்கிறார். இந்த சினிமாவில் காட்டப்படும் முஸ்லிம் கடைக்காரரையும் விட மோசமானவர்களும் முஸ்லிம் சமூகத்தினுள் நடை முறையில் இருப்பார்கள். மனிதர்களில் இழி செயல் செய்பவர்கள்  , கேவலமானவர்கள் எந்த மதத்திலும் எந்த சமூகத்திலும் எந்த நாட்டிலும் இருப்பார்கள். ஆனால் முஸ்லிம் கடைக்காரர் " முதலாளி "என்று அழைக்கப் படுகிறார் , அந்தக் கிராமத்தில் அவரின் ஒரே ஒரு கடைதான் இருக்கிறது. அவரிடம் அங்கு வாழும் மக்கள் கடன் வைத்துக் கொள்கிறார்கள் . அந்த இரண்டு காட்சி தவிர வேறு எந்தக் காட்சியிலும் அவரின் குனாதிசங்கள் பற்றி அறிய, தெரிய வாய்ப்பில்லாமல் இரண்டு சம்பவங்களின் மூலம் அவரை ஒரு விரும்பத் தகாத பாத்திரமாக புனைந்திருப்பது , அந்த திரைப்படத்தைப் பார்க்கும் சாதாரண சிங்களவர்களுக்கு என்ன  விதமான சிந்தனையை ஏற்படுத்தும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. 

அதிலும் குறிப்பாக அந்த கிராமத்தில் ஒரு தமிழர் கூட இல்லை. அல்லது கால இயந்திரத்தை  (Time Machine) பயன்படுத்தி எதிர்காலத்துக்குள் (கொழும்புக்குள் ) பிரவேசித்து  அந்த கிராமியர்கள் டில்ஷான் திலகரத்னாவிடம் (இவரின் தந்தை ஒரு மலாய் முஸ்லிம் ஆனால் தில்ஷான் பௌத்த மதத்தை 2011 மார்ச்சில் தழுவி விட்டார் என்று சொல்லப்படுகிறது. ) பயிற்சி பெறுகிறார்கள். முத்தையா முரளீதரன்  எனும் ஒரு அபாரமான கிரிகட் வீரனைச் சம்பந்தப்படுத்தும் விதத்தில்  எதுவும் இல்லை. எவ்வாறெனினும் மொத்தத்தில் மேட்ச் பிக்ஷிங்க் (Match fixing ) எனப்படும் மோசடி , கிரிக்கட் போட்டியில் ஆங்கிலேயர் வெல்ல சதி செய்ய துணை போவது , “சுத்தாக்களுக்கு எதிராக வெல்ல முடியாது என்று பரிகசிக்கும் அக்கிராமிய மக்களில் சிலர் , குறிப்பாக அவர்களின் கிராம கிரிக்கட் அணித் தலைவனின் காதலியின் தகப்பன்,  ஆங்கிலேயரிடம் பணி புரியும் அராச்சிகே (சனத் குணதிலக) , ஏதோ ஒரு விதத்தில் தனது தெய்வீக சக்தியால் நேர இயந்திரத்தை வழங்கி உதவும் சாமியார் (ஹிந்து)  என்று  ஒரு வித சமன்பாட்டை  கொண்டிராவிட்டால் நிச்சயமாக ஒரு நல்ல திரைப்படம் ஒரு எதிர்வினை சிந்தனையை வளர்த்து விட்டிருக்கும்.  சாமான்ய சிங்களவர்களின் மனதில் முஸ்லிம்களின்  பொருளாதாரத் தேட்டம் பற்றி குற்றம் காணும் , காழ்ப்புணர்வு கொண்ட  இனவாத சக்திகளின் தீய்க்கு இத்தகைய சின்ன சின்ன விசயங்கள் கூட சினிமா மூலம் எண்ணெய் வார்க்காதா?

25/05/2014

தொடரும்  

பிற் குறிப்பு: "கோபத்தை கோபத்தைக் கொண்டு அடக்காதே", என்ற மொழியாக்கம் ,  கோபத்தை  கோபமின்மையைக்  கொண்டு அடக்கு "  என்று மொழியாக்கம் செய்யப்பட்டால்   குழப்பமாக அமையும் என்பதால் மேலுள்ளவாறு  இலகு புரிதலுக்காக மொழியின் தன்மை கெடாமல் மொழியாக்கம் செய்துள்ளேன். 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...