( தேசிய கீதத்துக்கு ! ) "தலை வணங்காமல் நீ வாழலாம்"

எஸ்.எம்.எம்.பஷீர்
நான் தேசிய கீதத்துக்கு கீழ்படிந்து எழுந்து நிற்கிறேன் என்று நீ மகிழ்ச்சியடையலாம், ஆனால் நீ எழுந்து நிற்காமல் அமர்ந்து இருப்பாயானால், உனது அந்த உரிமையை நான் நிச்சயமாக பாதுகாப்பேன்                    
                                இரா கிளேசர் (Ira Glasser)

எம்.ஜி ஆரின் வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற "உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்" என்ற பாடலில் வருகின்ற ஒரு பாடல் வரிதான் "உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்"   என்பது.   ஒரு மனிதன்  எந்த இடத்தில் இருந்தாலும் அவன் தலை வணங்காமல் வாழ வேண்டும் என்று எம்.ஜி ஆர் பாடுவதாக வரும் பாடல்  வரிகள் இவை. ஆனால் தலை வணங்காமல்  வாழ்வது என்பது ஒருவன் மற்றவனுக்கு  அடிமையாகாமல்  , தனது மனித உரிமைகளைக் கைவிட்டு, கட்டுப்படாமல் சரணாகதி ஆகாமல்  சுதந்திரமாக வாழ்வதைக் குறிக்கிறது என்றுதான் பொருள் கொள்ள தோன்றுகிறது.


ஆனால் , மனதளவில் அல்லது பண்பாட்டு அடிப்படையில் சிரம் தாழ்த்துவது , சாஸ்டாங்கமாக மனிதர்களின் முன் வீழ்ந்து , தாள் படிந்து மரியாதை செய்வது என்பது வணக்கமல்ல , மரியாதையின் உச்சமாக செய்யப்படுவது என்று கூட பலர் அதற்கு விளக்கம் அளிக்கலாம். அப்படியே மரியாதையின் உச்சமாக வைத்துக் கொண்டாலும் அல்லது அவ்வாறான பண்பாட்டு விழுமியங்களும் பண்பாட்டு சிறப்புக்களும் கொண்டவர்கள் தாங்கள் என்று சொல்பவர்களும், அல்லது அத்தகைய எண்ணப்பாட்டை வெளிப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்பவர்களும் தத்தம் சமூக அங்கீகாரத்தைக்  கொண்டுள்ளனர். மேலும் அவை பரந்தளவில் மத சமூக அங்கீகாரத்தை பெற்றிருப்பினும் அவை அந்த சமூக மத பின்பற்றுபவர்களின் உரிமையுடன் சம்பந்தப்பட்டது.


வரலாற்றுக் காலம் தொடங்கி நாம் அறிந்த வரையில்   பொதுவாக ஆசியாவின் பல நாடுகளில் ,குறிப்பாக இந்தியா ஜப்பான் சீன உட்பட்ட நாடுகளில் தலை வணங்கி அரசனை வழிபடுவது, சாஷ்டாங்கம் செய்வது என்பவற்றுக்கு அப்பால் மத குருக்களுக்கு  தலை வணங்குவது ,  அவர்களின்  தாள் பணிந்து சாஸ்டாங்கம் செய்வது என்பது பொதுவாக காணப்படும் ஒரு அம்சமாகும்.

ஆனால் தனி மனிதர்களுக்கு அவர்களின் வயது , தகுதி பதவி அல்லது சமூக மத அந்தஸ்த்தைக் கொண்டு அவர்களிடம் ஆசி பெறுவதற்கோ , அல்லது அவர்களுக்கு மரியாதை செய்வதற்கோ அல்லது தமது நன்றிக்கடனை செலுத்துவதற்கோ சிலரின் கால்களில் விழும் நடைமுறை உலகில் ஆசிய மத சமூக ஒழுங்கு முறையில் அவதானிக்கக் கூடியது.

அதேவேளை , முரண் நகையாக உயர்ந்தவரும் (!) தாழ்ந்தவரும் (!) என எம். ஜி.ஆரின் காலில் சாஷ்டாங்கமாக  விழுந்து ஆசி பெற்றவர்கள் சிலர். அவரும் தனது வாழ் நாளில் சிலரின் காலில் விழுந்து ஆசி பெற்றிருப்பார். அப்படி ஆசி பெறுவது என்பது பொத்தாம் பொதுவாக இந்திய பண்பாட்டு அம்சமாக இருந்து வருகிறது. மனைவி கணவனுக்கும் , பிள்ளைகள் பெற்றோருக்கும் இளையவர்கள் மூத்தவர்களுக்கும் , என ஆசி வேண்டி காலில் விழுவதும் சாஸ்டாங்கம் செய்வதும் "கடவுளை " வழிபடுவதற்கு ஒத்ததான ஒரு நடைமுறை, பொதுவாக அதில் உள்ள அம்சம் தலை வணங்குவதாகும்.

எண்சான் உடம்புக்கு பிரதானமான சிரத்தினை ஒருவன் மற்றொருவரின் அல்லது மற்றொன்றின் காலடியில் மண்டியிடச் செய்வது என்பது  மத நம்பிக்கை உள்ள ஒருவன் கடவுளுக்கு செய்யம் வழிபாட்டு முறையை ஒத்தது  என்பதில் மரியாதைக்குரிய பண்பு என்பதனை வேறுபடுத்துவது என்பது மலையைக் கெல்லி எலி பிடிக்கும் வேலையாகும். உண்மையில் எம்,ஜி யாரின் நெருக்கதுக்குரியவரான இன்றைய தமிழக முதல் அமைச்சர்  ஜெயலலிதா உலகில் அதிகம் தாள் பணியப்படும் ஒரு பெண்மணி என்றால் மிகையாகாது. தன்னை தாள் படிந்து வணங்கும் ஒரு அடிமைச் சமூகத்தையே உருவாக்கி வைத்துள்ளவர் ஜெயலலிதா. மொத்தத்தில் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தன் தலை வணங்கி வாழ வேண்டும் என்று ஒரு உதாரணத்தையே ஏற்படுத்தி உள்ளவர் ஜெயலலிதா.!தேசிய கீதத்தில் தலை வணங்குதல்

பொதுவாக ஒரு நாட்டின் தேசிய கீதம் என்பது அந்நாட்டின் மீது அத்தேச மக்கள் கொண்டுள்ள விசுவாசத்தை அல்லது மரியாதையை அல்லது போற்றுதலை காட்டும் வகையில் அமைவதை  அன் நாட்டின்   ஆட்சியாளர்கள் தீர்மானிக்கின்றனர். அந்த வகையில் கீழைத்தேய காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்த நாடுகளின் வரிசையில்    இந்திய இலங்கை தேசிய கீதங்கள் தமது நாட்டின் பிரதான மத நம்பிக்கைகளை , கலாச்சார பண்பாட்டு இயல்புகளை பிரதிபலிக்கும் வகையில் தங்களின் தேசிய கீதங்களை அமைத்துக் கொண்டனர்.

இலங்கையில் ஆனந்த சமரக்கோன் எழுதிய தேசிய கீதம் அவரின் ஒப்புதலின்றி தொடக்க சொற்கள் சில மாற்றப்பட்டு தேசிய கீதமாக ஆக்கப்பட்டது. சங்கீத புலைமை கொண்ட சமரகோனின் மூல சுருதியில் தேசிய கீதம் அமைக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவில் சமரக்கோனின் ஆதர்சன கவிஞரான ரவீந்திர தாகூரின் இந்திய தேசிய கீதம் , சர்ச்சைக்குரிய பன்கிம் சந்திர சட்டோபாத்யாயின்  வந்தே மாதரத்தின் பாடல்களை தவிர்த்து வெறுமனே அப்பாடலின்   இரண்டு பாடல் வரிகளைக் மட்டும் சேர்த்து  அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றும் வந்தே மாதரம் இந்தியாவில் நடைபெறும் பல அரசிய கலாச்சார , கல்வி பண்பாட்டு நிகழ்வுகளில் ஒலிக்கப்படுகிறது /பாடப்படுகிறது. 1937ல் இந்திய தேசிய காங்கிரஸ் தேசிய கீதம் பற்றிய முடிவினை மேற்கொண்ட பொழுது மதச் சார்பற்ற ஒரு நாட்டுக்கு உரியதாக தேசிய கீதம் அமைய வேண்டும் என்பதில் அக்கறை காட்டினர். அதன் விளைவே தாகூரின் "ஜன கண மண"  தேசிய கீதமாகும்.

இந்திய தேசத்தை வழிபடும் தெய்வமாக உருவகப்படுத்தப்பட்டு , அதிலும் வந்தே மாதரம் எனும் இந்திய சுதந்திரத்துக்கு  எழுச்சிக் கீதமாய் அமைந்த பாடல் ஹிந்து மதத்தில் வழிபடும் பெண் தெய்வம் ஆன  துர்க்காவை தேசிய மாதாவாக உருவகப் படுத்துகிறது.  தேசத்தின் மாதாவுக்கு தாள் பணிந்து வணங்குவது இந்திய தேசத்தை நேசிக்கும் ஒருவனின் தலையாய கடமை என்பது போல் இந்திய தேசிய வாத ஹிந்துத்துவ சக்திகள் வலியுறுத்தி வருகின்றன. இன்றைய இந்திய பிரதமராகப் போகும்  மோடியின் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமரான வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் பாடசாலைகளில் வந்தே மாதரம் பாடப் படல் வேண்டும்  என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது.   மீண்டும் மோடியின் ஹிந்துத்துவ சார்பு ஆட்சியில்  வந்தே மாதரம்" பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தப் போகிறது என்பது வியப்பான எதிர்கால செய்தியாக இருக்காது.  ஏனெனில் மோடி பிரதிநித்துவப் படுத்தும் ஹிந்துத்துவ இயக்கங்கள் மோடியை வந்தே மாதரத்தை (தேசியப் பாடலை) தேசிய கீத அந்தஸ்துக்கு சமனாக பாடப்படுவதில் தீவிரமாக செயற்படுவார்கள் . ஏனெனில் பாரதீய ஜனதாக் கட்சி தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி மும்பை நகரப் பாடசாலைகளிலும்  மகாராஷ்டிர சட்டசபையிலும் வந்தே மாதரம் இசைக்கப்/படிக்கப்  வேண்டும் என்று தீவிரமாக முயன்று , அதனை எதிர்த்த முஸ்லிம்களை தேசத் துரோகிகளாக காட்ட முயன்றவர்கள்.

ஆனால் சென்ற வருடம் (2013) இதே மே மாதத்தில் இந்திய லோக் சபாபில்  
இந்திய சுதந்திர எழுச்சிப் பாடாலான "வந்தே மாதரம்" பாடலும் இசைக்கப்பட்டது. அப்பாடல் வரிகள் இசைக்கப்பட்ட பொழுது உத்திரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சபீகுர் ரஹுமான்  என்பவர் சபையிலிருந்து வெளியேறினார். வந்தே மாதரம் பாடல் வரிகளில் தாயே உன்னை வணங்குகிறேன் என்றும் துர்க்கையை வணங்குவதாகவும் பாடல் வரிகள் உண்டு. இஸ்லாமிய மத அடிப்படையான இறைவனுக்கு மட்டுமே தலை வணங்க முடியும் என்பதும் , எவருக்கும் எதற்கும் (தாய் தகப்பன் மத குரு என அனைவரும் உட்பட ) தலை வணங்குவது என்பது இஸ்லாமிய மதத்தில் இருந்து நீங்கி விடும் செயலாகும் என்பதால் நான் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் எதற்கும் தலை வணங்கமுடியாது என்று சபீகுர் ரகுமான் தான் அன்றைய சபைக் கூட்டத்தில் இருந்து வெளியேறியமைக்கு காரணம் சொன்னார். இவர் ஒரு பஹுஜன் சமாஜ் கட்சியின் ( இந்திய அரசியலமைப்பின் முதன்மை கர்த்தாவான அம்பேத்காரின் கட்சியைச் சேர்ந்தவர், அம்பேத்கார் சிறுபான்மையினரை பாதுகாக்கும் வண்ணம் சட்டவாக்கம் உருவாக்கப்பட காரணமானவர்   ) 


இலங்கை தேசிய கீதமும் முஸ்லிம்களின் தலை வணங்கலும் !

அண்மையில் பௌத்த பேரினவாத சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான இஸ்லாமிய மத விரோத நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வரும் வேளையில் ஸ்ரீ லங்காவின் தேசிய கீதத்தை முஸ்லிம்கள் முழுமையாக பாட முடியாது என்று இப்போது குறிப்பிட்டால் அல்லது அதில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதி பற்றி ஆட்சேபித்தால் முஸ்லிம்கள் மிகுந்த சங்கடங்களை இலங்கையில் எதிர் கொள்ள வேண்டி நேரிடும்.

ஏற்கனவே , ஒருபுறம், தேசிய கீதத்தை தமிழில் படிக்க முடியாது என்ற சர்ச்சை ஒய்ந்திருக்கும் வேளையில் , மறுபுறம் , தமிழர்களில் பலர் ஸ்ரீ லங்காவின் தேசிய கீதத்தை அங்கீகரிக்க மறுக்கும் வண்ணம் கருத்து முன் வைக்கும் சூழலில் முஸ்லிம்கள் இப்பொழுது தேசிய கீதத்தில் உடன்பாடில்லாத பாடல் வரிகளை சுட்டிக் காட்டினால் , அவற்றை மாற்றியமைக்கும்படி அரசிடம்  வேண்டுகோள் விடுத்தால்  நடக்கப் போவது என்ன ?  . நிச்சயமாக முஸ்லிம்கள் தங்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் ஹலால் ஹராம் ( அனுமதியளிக்கப்பட்டது, தடுக்கப்பட்டது) என்ற விவகாரத்துள் சிக்கிய அனுபவங்களுடன் மீண்டும் ஒரு புதிய நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள். ஆனால் நிச்சயமாக யாருமே இந்த தேசிய கீத விவகாரத்தில் விவாதம் பண்ண முன்வர மாட்டார்கள்.

இன்று முஸ்லிம் பாடசாலைகள் , முஸ்லிம் பிரதேச நிர்வாகங்கள் தேசிய கீதம் படிக்க முடியாது என்று அல்லது சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை  படிக்க முடியாது என்று முரண்டு பிடிப்பது நடைமுறையில் சாத்தியமா  என்றால் அப்படித் தோன்றவில்லை. ஆனால் முஸ்லிம்களின் அடிப்படையான மத நம்பிக்கையின் பாற்பட்ட  ஒரு சங்கதியை இதுவரை காலமும் கண்டு கொள்ளாமல் அல்லது கண்டும் காணதது போல் இருந்த  முஸ்லிம்கள் இருந்துள்ளார்கள். அப்படியே அவர்கள் தொடர்ந்தும் இருக்கலாம் !


இதற்கு முரண்படுபவர்கள் இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது தேசிய கீதம் பாடும் பொழுது குறிப்பாக " நமதுதி ஏல் தாயே
நம தலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே-நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

“(அ(ப்)பஹ(ட்)ட செ(ப்)ப சிரி செ(த்)த சதனா- ஜீவனயே மா(த்)தா
பிழிகனு மென அ(ப்)ப பக்(த்)தீ பூஜா
நமோ நமோ மா(த்)தா “ ( Lanka! we worship Thee”. )   என்ற வரிகளை பாடாமல் ( முணுமுணுக்காமல் )  விட்டு விடலாம் , அதனை எப்படி ஒரு பொது நிகழ்வில் அல்லது பாடசாலை நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை பாடுபவர் செய்ய முடியும். நிச்சயமாக , அது சாத்தியமானதல்ல , ஆனால்  தேசிய கீதம் பாட/இசைக்கப் படும் பொழுது அத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள் ,அந்த குறிப்பிட்ட பாடல் வரிகளை ஒப்புவிக்காமல் மவுனம் காக்கலாம், அந்த மத நம்பிக்கைக்கு குந்தகமற்ற ஏனைய தேசிய கீதத்தின் பாடல் வரிகளை பாடலாம் அல்லது ஒப்புவிக்கலாம். 


இலங்கையிலும் மனிதரை மனிதர் அவரின் அரசியல் , சமூக , மத உயர்ந்த நிலைக்காக வணகுவது என்பது சகஜமாகும் . ஆனால் அண்மைக் காலமாக இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் சிலர் அவர் தாள் வணங்கி (சாஷ்டாங்கம் செய்து )  வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. ஒரு மனிதனை காலில் வீழ்ந்து வணங்குவது , மரியாதை செய்வது என்பது ஒரு வியாதியாகும். தனி மனித ஆளுமையின் அவலமான ஒரு  நிகழ்வாகவே இதனைப் பார்க்க முடியும்.

இந்த தாள் பணிந்து வணங்கும் மனிதர்கள் பற்றி இக்கட்டுரையினை எழுதும் பொழுது எனது சிறு வயது வாசிப்பு செய்தி ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு தடவை சுதந்திர இந்தியாவின் பிரமர் நேருஜி  ஒரு மேடையில்  உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது , அந்த மேடையின் முன்னாள் நின்றிருந்த ஒருவர் நேருஜியின் காலைத் தொட்டு வாழ்த்தி வணங்க முற்பட்ட பொழுது , நேருஜி தனது கால்களை உதறி , அவரைத்  தள்ளி விட்டு , சுதந்திர இந்தியாவிற்கு தேவை மனிதர்களின் கால்களில் வீழும் அடிமைச் சமூகமல்ல , நிமிர்ந்த நெஞ்சு கொண்ட புதிய சமூகமே தனது கனவு என்று , நனவில் உதாரணத்துடன் சொல்லியும்  செய்தும்  காட்டியவர்   நேருஜி. அதனால்தான் "வந்தே மாதரம் " எனும் தேசிய பாடல் இந்திய முஸ்லிம்கள் , சீக்கியர்கள் , கிறிஸ்தவர்களில் சில பிரிவினர் உட்பட தங்களின் மத நம்பிக்கைக்கு முரணாக அமைவதை சுட்டிக் காட்டியதனால் சுதந்திர இந்தியாவின் தேசிய கீதமாக வந்தே மாதுரத்துக்கு பதிலாக ரவீந்திர நாத தாகூரின் "ஜன கண மன" வை தேசிய கீதமாக்க முன் நின்றவர். 1950ம் ஆண்டு  பிரபல தமிழ்ப் புலவர் பண்டிதர் மு. நல்லதம்பி தேசிய கீதத்தை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தார், அவரும் "சிறி லங்கா" என்று மூல சிங்கள மொழியில் குறிப்பிட்டாலும் , தனது மொழி பெயர்ப்பின் இறுதியில் ஈழம் என்ற சொல்லையும் சேர்த்திருந்தார். ஸ்ரீ லங்கா என்ற நாட்டுக்கு "ஈழம்"  என்ற சொல்லை தேசிய கீதத்தில் இடம் பெற்றிருப்பதையும்  இலங்கை அரசு மாற்ற விரும்பலாம்.

"ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே"

ஆனந்த சமரகோனின்   அனுமதியின்றி அவர் எழுதிய தேசிய கீதத்தில் செய்த மாற்றம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அந்த மாற்றங்களுடன் முஸ்லிம்கள் தங்களின் மத நம்பிக்கைக்கு முரண்படாத  வகையில் தேசிய கீதத்தில் மாற்றங்கள் செய்வது சாத்தியப்படுமா ?

இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டதால் அங்கு வந்தே மாதரத்தை ஓரங்கட்ட முடிந்தது. ஆனால் 2006 களில் வந்தே மாதரம் தேசிய பாடலை பாட மறுத்த கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் முஸ்லிம்கள்  பலர் . இந்திய உச்ச நீதி மன்ற தீர்பான "  மதச் சார்பற்ற  நாட்டின் அரசியலமைப்பில் உருவாக்கப்பட்ட நீதி மன்றங்களுக்கு வந்தே மாதரத்தை பாட மறுத்தவர்களின் அடிப்படை மத உரிமை  குறித்து நீதி வழங்கும் உரிமை இல்லை " என்ற தீர்ப்பின் மூலம்  பாதுகாப்பு பெற்றனர். இலங்கையில் பௌத்த மதம் அரசியலமைப்பில் முதன்மை நிலை பெற்றுள்ள நிலையில் இலங்கை தேசிய கீதம் 
 குறித்த முஸ்லிம்களின் ஆட்சேபனைகள் எதிர்பார்க்கும் பலனைத் தரப் போவதில்லை.
 

இக்கட்டுரை சொல்ல வந்த விடயம் விவாதத்துக்குரியதாக இருக்கலாம்  என்பதால்  கட்டுரையின் தீவிரப் போக்கை தணிக்க சுவாரசியமான சில சங்கதிகளுடன் இக்கட்டுரையினை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று நம்புகிறேன்.

"நீதான் என் தேசிய கீதம்! "

சுதந்திர கீதம் பற்றி, தேசபக்தி பற்றி சிலாகிக்கப்படும் இந்திய நாட்டில் , அதுவும் தமிழ் நாட்டில்  வாலி எனும் கவிஞன் எழுதிய சினிமாப் பாடல் ஒன்று காதலன் காதலியை பரஸ்பரம் தேசிய கீதமாகக் காண்பது 

"நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனோ ரஞ்சனா
ரஞ்சனோ ரஞ்சனா"

என்று பாடி தேசிய கீதத்தின் இறுக்கத்தை இலகுவாக்கி உள்ளார் போலும்  !! . கடவுளை வணங்குவது என்பதில் சினிமாக் கவிஞர்கள் பலே கில்லாடிகள் கடவுளைப்பற்றி ஆகா ஓகோ என்று எழுதி விட்டு  "
அடியேனைப் பாரம்மா பிடிவாதம் ஏனம்மா வணக்கத்திற்குரிய காதலியே" என்று காதலியை வணங்குவதையும் (இப்பாடல் படத்தின் தலைப்பே "வணக்கத்துக்குரிய காதலியே ".என்பதுதான் ) பார்க்கும் பொழுது தலை வணங்காமல் வாழலாம் என்று எழுதும் கவிஞர்கள் மட்டுமல்ல  அவர்களுடன் சேர்ந்து தலை வணங்காதவர்கள் பலரும் கூடக் காணாமல் போய் விட்டார்கள்!

No comments:

Post a Comment

The danger of US-China war and Australia’s anti-democratic election laws-by Peter Symonds

The new anti-democratic election laws in Australia, aimed at deregistering so-called minor parties, go hand in hand with the efforts of the ...