தேர்தல் தோல்வியின் வெளிப்பாடே முஸ்லீம் மக்களுக்கெதிரான வன்முறை!

வானவில் இதழ் 87

தேர்தல் தோல்வியின் வெளிப்பாடே


நாட்டில் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் மக்களுக்கெதிரான இன வன்முறை மீண்டுமொருமுறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இந்தக் கோர நடவடிக்கைகள் குறித்து விளங்கிக் கொள்வதற்கு இன்றைய அரசியல் சூழ்நிலையைப் புரிந்த கொள்வது அவசியம். அதன் அடிப்படையில் பார்த்தால் –
நாட்டில் கடந்த மூன்று வருடங்களாக ‘நல்லாட்சி’ என்ற பெயரில் நடந்து வந்துள்ள ஐ.தே.க. – சிறீ.ல.சு.க. கூட்டரசாங்கம் சகல வழிகளிலும் எமது நாட்டைச் சீரழித்து வந்ததால், பெப்ருவரி 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் அரசுக்கு தகுந்த பாடம் புகட்டினர்.


உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் ஆட்சியை நடாத்திய இரண்டு கட்சிகளும் பலத்த இழுபறிகளுடன்தான் அரசாங்கத்தை நடாத்தி வந்தனர். அதன் காரணமாக அவர்களால் நாட்டை அபிவிருத்தி செய்யவோ, விலைவாசிகளைக் கட்டுப்படுத்தவோ, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவோ, இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை எடுக்கவோ முடியவில்லை. அவர்கள் செய்த ஒரேயொரு பாரிய சாதனை இலங்கை மத்திய வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கொள்ளையடித்ததுதான்.
இதன் காரணமாக அரசுக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ந்தது. எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய அரசு உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை உரிய காலத்தில் நடாத்தாது இரண்டு வருடங்களுக்கும் மேலாக இழுத்தடித்தது. தெற்கில் நடைபெற்ற சில பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களில் அரசின் பங்காளிக் கட்சிகள் இரண்டும் கூட்டு எதிரணியிடம் மண் கவ்வியதால் அரசின் அச்சம் மேலும் வலுவடைந்தது. போதாததிற்கு மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களையும் உரிய காலத்தில் நடாத்தாது அரசு இழுத்தடித்து வருகின்றது.
இந்த நிலைமையில்தான் நாட்டு மக்களினதும், கூட்டு எதிரணியினதும், ஜனநாயக இயக்கங்களினதும் இடையறாத வற்புறுத்தல் காரணமாக அரசு பெப்ருவரி 10இல் உள்ளுராட்சித் தேர்தலை நடாத்த நிர்ப்பந்திக்கப்பட்டது. அதில் எதிர்பார்த்தபடியே அரசின் பங்காளிக் கட்சிகள் இரண்டும் கூட்டு எதிரணியிடம் மோசமாகத் தோற்றுப் போயின. மிக அண்மையில் உருவான ‘பொதுஜன பெரமுன’ என்ற கட்சியின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டு எதிரணி உள்ளுராட்சித் தேர்தலில் அமோக வெற்றியை அறுவடை செய்தது.
இதிலிருந்து ஒரு உண்மை வெளியாகியது. அதாவது, ஐ.தே.க., சிறீ.ல.சு.க. என்பன நீண்ட வரலாற்றப் பாரம்பரியங்களைக் கொண்டிருந்தும் மக்கள் அவற்றுக்கு வாக்களிக்காமல் பதிய கட்சி ஒன்றைத் தேர்ந்தெடுத்ததின் மூலம் ஒரு செய்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது மக்களைப் பொறுத்தவரை கட்சியின் பெயரோ, சின்னமோ முக்கியமல்ல. அக்கட்சி முன்வைத்திருக்கும் கொள்கைகளின் சரி பிழையைப் பார்த்தே அவர்கள் வாக்களிக்கிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த உண்மை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்ததிலும் வெளிப்பட்டிருக்கிறது.
உள்ளுராட்சி தேர்தல் முடிவு இன்னொரு முக்கியமான விடயத்தையும் தெளிவுபடுத்தி இருக்கிறது. அதாவது இனி நடைபெறப்போகும் மாகாண சபைத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பனவற்றிலும் பொதுஜன பெரமுன பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டு எதிரணியே நிச்சயம் வெற்றி பெறும் என்ற செய்தியே அது.
இதன் காரணமாக அரசின் பங்காளிக் கட்சிகள் இரண்டும் தமது எதிர்காலம் பற்றிய அச்சத்தில் உறைந்து போயுள்ளன. அவை மட்டுமல்ல, தமது மறைமுக நடவடிக்கைகளால் இந்த மக்கள் விரோத அரசைப் பதவிக்குக் கொண்டு வந்த சர்வதேச மற்றம் பிராந்திய வல்லாதிக்க சக்திகளும் இந்த நிலைமையால் தடுமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளன.
உள்ளுராட்சித் தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசின் செயற்பாடுகள் முற்றுமுழுதாகச் சீர்குலைந்ததிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம். தேர்தலில் மண் கவ்விய ஆளும் கட்சிகள் இரண்டும் ஒருவர் தொண்டையை ஒருவர் பிடிப்பதிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம். இருவரும் விவாகரத்துச் செய்து கொண்டு தனிவழி போகும் முயற்சிகளிலும் இறங்கினர். ஆனால் அதற்கும் இவர்களுக்கிடையே ‘திருமணம்’ செய்து வைத்த சர்வதேச – பிராந்திய வல்லாதிக்க சக்திகள் விடவில்லை. இரண்டு கட்சிகளுக்கிடையிலும் மோதல் தீவிரம் அடைந்ததும் அமெரிக்க, இந்திய மற்றும் ஐரோப்பிய யூனியன் இராஜதந்திரிகள் நேரடியாகவே களத்தில் இறங்கி சமரச முயற்சிகளில் இறங்கியது இதற்குச் சான்று.
இந்தச் சூழ்நிலைகளால் நாட்டில் அரசாங்கம் ஒன்று நடைமுறையில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசாங்கத்தின் எந்த நடவடிக்கைகளும் செயற்பாட்டில் இல்லாமல் அரசு இயந்திரம் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. நாட்டில் சட்டம் – ஒழுங்கு முற்றாகச் சீர்குலைந்துள்ளது. அமைச்சர்கள் நாளுக்கு நாள் வாயில் வந்ததையெல்லாம் முரண்பாடாகப் பேசி வருகின்றனர். (அமைச்சர் ராஜித சேனரத்ன இதில் அதிக புள்ளிகளுடன் முன்னணியில் இருக்கிறார்)
இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் முதலில் அம்பாறையிலும் பின்னர் கண்டியிலும் முஸ்லீம் மக்களுக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. வன்முறைகளை உரிய நேரத்திலும் முறையிலும் கட்டுப்படுத்தத் தவறிய அரசு, அதற்கான பழியை கூட்டு எதிரணி மீது போட முயல்கிறது. ஆனால் எல்லோருக்கும் தெரிந்த அப்பட்டமான உண்மை என்னவெனில், இலங்கையில் காலத்துக்குக் காலம் தமிழ், முஸ்லீம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அத்தனை இன வன்செயல்களும் அந்தந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த – பிரதானமாக ஐ.தே.க. – அரசுகளின் ஆதரவு இல்லாமல் நடைபறவில்லை என்பதே.
இதற்கு ஒரு உதாரணம், 1977இல் ஜே.ஆர். அரசு செய்த நடவடிக்கைகளாகும். அந்த ஆண்டுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க. அரசு, உரிமை கோரி நின்ற தமிழ் மக்களைத் தண்டிப்பதற்காக அவர்கள் மீது பாரிய அளவில் இன வன்செயலைக் கட்டவிழ்த்துவிட்டது. அவ்வாறு செய்துவிட்டு அப்பழியை ஜே.வி.பி. மீது சுமத்தி அக்கட்சியைத் தடைசெய்தது. கம்யூனிஸ்ட் கட்சி , லங்கா சமசமாஜயக் கட்சிகளின் தினசரிப் பத்திரிகைகளைத் தடைசெய்து அக்கட்சிகள் மீதும் அடக்குமுறையை ஏவியது. அதுமாத்திரமல்லாமல் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமையைப் பறித்து சிறீ.ல.சு.கவையும் ஒடுக்கியது. அரசியல் அமைப்பில் ஆறாவது திருத்தத்தைக் கொண்டு வந்து தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியையும், அக்கட்சியின் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பறித்தது.
ஆனால் ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்பது போல, 1977 இன வன்செயலையும், 1983 ‘கறுப்பு யூலை’ வன்செயலையும் ஐ.தே.க. அரசுதான் பின்னணியில் இருந்து நடாத்தியது என்ற உண்மை பின்னர் அம்பலத்துக்கு வந்தது. அதுபோல தற்போது முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்செயல்களின் சூத்திரதாரிகள் யார் என்பதும் விரைவில் அம்பலத்துக்கு வரும்.
ஆனால் 1977 இல் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்செயலுக்கும், தற்போது முஸ்லீம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன வன்செயலுக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அன்று தேர்தல் வெற்றியின் மமதையில் வன்செயல் தூண்டப்பட்டது, இன்று தேர்தல் தோல்வியால் வன்முறை தூண்டப்பட்டுள்ளது.
இந்த உண்மையை நாம் எமது ‘வானவில்’ பத்திரிகையின் கடந்த இதழ் (2018 பெப்ருவரி) ஆசிரிய தலையங்கத்தில் சுட்டிக் காட்டியிருந்தோம். அந்தத் தலையங்கத்துக்கு “தேர்தலில் தோற்கையில் பிரிவினைவாதம் பெருக்கெடுக்கும்” எனத் தலைப்புக் கொடுத்திருந்தோம். ‘பிரிவினைவாதம்’ என்ற பதத்தை ‘இனவாதம்’ என்றும் அர்த்தப்படுத்தலாம்.
எது எப்படியிருப்பினும், நாட்டு மக்களின் முன்னால் பாரிய கடமை ஒன்று இருக்கின்றது. அது என்னவென்றால், பிற்போக்கு சக்திகள் தமக்கு அரசியல் தோல்வி ஏற்படும் நேரங்களில் அதற்குப் பதிலடியாக மக்களைப் பழிவாங்குவதே அவர்களது வழமை. அந்தப் பழிவாங்கல் இலங்கையைப் பொறுத்த வரையில் இனவாதம் என்ற பூதத்தைக் கிளப்பி விடுவதன் மூலம் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளது. சூழ்நிலையைப் பொறுத்து அது தமிழ் மக்களுக்கு எதிராக இருக்கும் அல்லது முஸ்லீம் மக்களுக்கு எதிராக இருக்கும்.
எனவே இத்தகைய சூழ்நிலைகளில் எமது தாய்நாட்டின் அனைத்து மக்களும் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து பிற்போக்கு சக்திகளுக்கும், அவர்களது ஏகாதிபத்திய எஜமானர்களுக்கும் எதிராக ஓரணியில் எழுந்து நிற்க வேண்டும். அதன் மூலம் பிற்போக்கு சக்திகளின் சதிகளையும், பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் தோற்கடிக்க வேண்டும்.
மக்கள் ஒரு மனிதனாக ஐக்கியப்பட்டு எழுந்து நின்றால் அவர்களை எந்தப் பிற்போக்கு சக்தியாலும் தோற்கடிக்க முடியாது. இதுவே வரலாறு கூறும் உண்மை.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...