அம்பாறை வன்செயலும் நவீன நீரோ மன்னர்களும்! -இத்ரீஸ்

“ரோமாபுரி தீப்பற்றி எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம்” என்றொரு பழமையான சொற்றொடர் வழக்கில்
உண்டு. அதுபோல் கிழக்கில் உள்ள அம்பாறை நகரில் முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல், வாகனங்கள் என்பன எரிக்கப்பட்டும் உடைக்கப்பட்டும் வன்செயல்கள் நிகழ்கையில்
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும் அதன் காவல்துறையும் ஏனோதானோ என்று இருந்த நிலை நடந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த அரசாங்க காலத்தில் அளுத்கமவில் முஸ்லீம் மக்களுக்கு
எதிராக வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது,  வானத்துக்கும்
பூமிக்குமாகத் துள்ளிக் குதித்து ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிய முஸ்லீம்
அரசியல்வாதிகள் தமது அமைச்சுப் பதவிகளையும் சொத்துச் சுகங்களையும் பாதுகாப்பதற்காக இந்தப் பாரிய சம்பவம்
சம்பந்தமாக அடக்கி வாசிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்று நாட்கள் கடந்துவிட்ட போதிலும் முஸ்லீம்
மக்களுக்கெதிரான இந்தச் சம்பவம் என்ன காரணத்தால் நடைபெற்றது என இந்தப் பத்தி எழுதும் வரை அரசாங்கமோ முஸ்லீம் தலைமைகளோ எதனையும் தெரிவிக்கவில்லை. அம்பாறையில் இத்தகைய சம்பவங்கள்
நடப்பது இதுதான் முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் பல சம்பவங்கள்
நடந்துள்ளன. அதற்குக் காரணம் அம்பாறை எப்பொழுதும் சகல தரப்பு இனவாதிகளாலும் கொதி நிலையில் வைத்திருக்கப்படுவதுதான்.



வரலாற்றை எடுத்து நோக்கினால், இலங்கையின் வரை படத்தில் அம்பாறை
என்பது 1948ஆம் ஆண்டுச் சுதந்திரத்துக்குப் பின்னர் உருவான மாவட்டம் என்ற உண்மை தெரிய வரும். சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை அமைத்த டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய
தேசியக் கட்சி அரசாங்கம் தமிழர்களும் முஸ்லீம்களும் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வடக்கு கிழக்குப் பகுதிகளில் இனவாத நோக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கியது. அப்படி உருவாக்கிய ஒரு மாவட்டம்தான் அம்பாறை.அதன் காரணமாகவே அம்பாறையில் காலத்துக்
காலம் தமிழ் முஸ்லீம் மக்களுக்கெதிராக இன வன்செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டு வந்துள்ளன. அரசாங்க ஆதரவு பெற்ற
இனவாதிகளால் மட்டுமின்றி, புலிகளின் கட்டுப்பாடு நிலவிய காலத்தில் அவர்களாலும் இந்த மாவட்டத்தில் சிங்கள – முஸ்லீம்
மக்களுக்கு எதிராக வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

எது எப்படி இருப்பினும் தற்போதைய சம்பவம் தற்செயலாக நிகழ்ந்திருக்க கூடிய ஒன்றல்ல என்பதே உண்மை. அரச ஆதரவுச் சக்திகளினதும் பாதுகாப்புச் சார்ந்தவர்களினதும் மறைமுக ஆதரவு இல்லாமல் இத்தகைய
பாரிய சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை.இலங்கையின் கடந்தகால வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை தெரிய வரும்.
எனவே அரசாங்கம் உடனடியாக இந்தச் சம்பவம் பற்றி பாரபட்சமற்ற விசாரணை நடாத்தி குற்றவாளிகளைக் கைது செய்து உரிய தண்டனை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரணமும் வழங்க வேண்டும். இனிமேலும் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக
வன்செயல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியாத கடமையாகும்.

மூலம்  வானவில்  இதழ் 87 பங்குனி 2018

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...