ஃபிடல் கஸ்ட்ரோவின் மகன் தற்கொலை செய்து கொண்டாரா?-எஸ்.பி.ராஜேந்திரன்


டாக்டர் பிடல் காஸ்ட்ரோ தியாஸ் பலார்ட், (Fidel Castro Diaz-Balart) 2018 பிப்ரவரி 1 அன்று மரணததைத் தழுவினார்.

‘பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை’ என்று உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன. கியூபப் புரட்சியின் மாபெரும் தலைவரது மகன் கடைசியில் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனார் என இழிவுபடுத்துவதே இந்த தலைப்பின் நோக்கமாக இருந்தது.
உண்மையில் டாக்டர் பிடல் தற்கொலை செய்து கொண்டாரா?
கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘கிராண்மா’ வெளியிட்ட செய்தியில், தற்கொலை என்ற வார்த்தை இடம்பெறவில்லை.

“பிடலிட்டோ (டாக்டர் பிடல் காஸ்ட்ரோவின் செல்லப்பெயர்; அவரை ‘லிட்டில் பிடல்’ என்றும் அழைப்பார்கள்) கடந்த சில மாதங்களாக மன அழுத்தம் சார்ந்த உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்த நிலையில் வியாழனன்று (2018,பிப்ரவரி 1) அதிகாலை மரணமடைந்தார். தோழர் பிடலிட்டோ, தனது வாழ்நாள் முழுவதையும் அறிவியலுக்காக அர்ப்பணித்தவர். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த பல அங்கீகாரங்களை பெற்றிருந்தவர்” என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.


இந்தச் செய்தியை உலக முதலாளித்துவ ஊடகங்கள் முற்றாகத் திரித்து, பிடல் காஸ்ட்ரோவின் மகன் அனாதையாக தற்கொலை செய்து கொண்டார் என்பது போல சித்தரித்து பரப்பியிருக்கின்றன என்பதே உண்மை. அதுமட்டுமல்ல, பிடலிட்டோவின் மரணம், பிடல் காஸ்ட்ரோவின் குடும்பத்தில் முரண்பாடு நிலவுவதை காட்டுவதாகவும் கியூபாவில் சோசலிச அரசே வீழ்ந்துவிடுவதற்கான அறிகுறி போலவும் இல்லாத கதையெல்லாம் சேர்த்து அவரவர் விருப்பம்போல ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

கியூப புரட்சித் தலைவர் தோழர் பிடல் காஸ்ட்ரோ, 1948ல் மிர்தா தியாஸ் பலார்ட் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர், ஹவானா பல்கலைக்கழகத்தில் பிடலுடன் பயின்றவர் 1949ல் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிடல் காஸ்ட்ரோ தியாஸ் பலார்ட் என்று பெயர் வைத்தனர். இந்நிலையில், 1953ல் கியூபாவின் சாண்டியாகோவில், பாடிஸ்டா அரசாங்கத்தின்ஆயுதக் கிடங்கான மன்கடா ராணுவ முகாம் மீது பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான ஆயுதம்தாங்கிய புரட்சியாளர்களின் குழு அதிரடி யாக தாக்குதல் நடத்தியது. இந்த எழுச்சி தோற்கடிக்கப்பட்டது;. பிடல் உள்ளிட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில்தான், “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற மகத்தான நீதிமன்ற உரையினை பிடல் ஆற்றினார்.

ஆனால் பிடலின் மனைவி அச்சமுற்றார். அவர் தனது குழந்தையை பாதுகாப்பது முக்கியம் என்று கருதினார். இந்தப் பின்னணியில் பிடலிடமிருந்து விவகாரத்து கோரினார். இதையடுத்து அவர்களது மண உறவு முறிந்தது. குழந்தையாக இருந்த பிடலிட்டோ, தாயோடு அழைத்துச் செல்லப்பட்டார். அவர்கள் அமெரிக்கா சென்று குடியேறினர். எனினும் 1959ல் கியூபப் புரட்சிக்குப் பிறகு மெக்சிகோ வழியாக பிடல் காஸ்ட்ரோ தனது மகன் பிடலிட்டோவை மீட்டு கியூபாவுக்கு அழைத்து வந்துவிட்டார். அப்போது முதல் பிடலிட்டோ, பிடல் காஸ்ட்ரோவின் செல்லக்குழந்தையாக வளர்ந்தார்.
பாதுகாப்பு கருதி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அறிவியலில் தலைசிறந்த மாணவராக உருவான பிடலிட்டோ, பின்னர் சோவியத் ஒன்றியத்தில் அணு அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பயின்றார். பின்னர் கியூபாவின் அறிவியல் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை முன்வைத்து செயலாற்றினார். கியூபாவை முழு மின்மயமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், சோவியத் ஒன்றியத்தின் உதவியோடு ஜூராகுவா அணுமின்சக்தி நிலைய கட்டுமானப் பணி துவங்கியது. அந்தப் பொறுப்பு பிடலிட்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது. பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில், சோவியத் ஒன்றியம் வீழ்ந்தது. இதனால் அங்கிருந்து கிடைத்து வந்த நிதி உதவிகள் நின்றன. வேறு வழியில்லாமல் ஜூராகுவா அணுமின் சக்தி நிலைய பணிகள் 1992ல் நிறுத்தப்பட்டு, திட்டம் கைவிடப்பட்டது.

எனினும் அறிவியலின் இதர அனைத்து துறைகளிலும் கியூபாவை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வதற்கான திட்டங்களுக்கு பிடலிட்டோ பொறுப்பேற்றார். கியூபாவின் அறிவியல் தந்தையாகவே அவர் அறியப்பட்டார். அணுசக்தியை ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கான செயல்திட்டங்களை உருவாக்குவதில் வல்லமை படைத்த தலைசிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவராக உலக நாடுகளின் விஞ்ஞானிகளால் போற்றப்பட்டவர் பிடலிட்டோ.
2016 செப்டம்பரில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற விஞ்ஞானிகளின் மாநாட்டில் கியூப அரசின் அறிவியல் ஆலோசகராக பங்கேற்ற பிடலிட்டோவை அந்நாட்டின் விஞ்ஞானிகள், “இவர் ஒரு ஜப்பானியக் குழந்தை” என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டு பேசினர். இதன்பொருள் என்னவென்றால், ஜப்பானிய விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவி செய்த உலக விஞ்ஞானிகளில் ஒருவர் என்பது மட்டுமல்ல, தானே ஒரு ஜப்பானிய விஞ்ஞானி போல அவர்களோடு இரண்டறக் கலந்தவர் என்பதுதான்.

ஜப்பானில் உள்ள மிக நவீனமான அணு எரிபொருள் மறுசுழற்சி ஆலை, அதிநவீன அணுசக்தி ஆய்வகம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் சிறப்புப் பேராசிரியராக பங்கேற்று வழிகாட்டியவர் பிடலிட்டோ. ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா உள்பட உலகின் பல நாடுகளது விஞ்ஞானிகளின் உள்ளம் கவர்ந்த ஆசிரியர் பிடலிட்டோ.
கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ வாரிசு அரசியல் நடத்தவில்லை. இதுபற்றிக் கூட ஒருமுறை பிடல் காஸ்ட்ரோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். கியூபாவில் மன்னராட்சி நடக்கவில்லை என்பதே அவரது பதில்.
சோசலிச கியூபாவின் மைந்தர்கள், தங்களது வாழ்வின் ஒவ்வொரு பொழுதையும் சோசலித்தைப் பாதுகாப்பதற்கே செலவிடுகிறார்கள். பிடலிட்டோவும் தமது வாழ்நாள் முழுவதும் சோசலிச கியூபாவின் அறிவியல் வளர்ச்சிக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.
அவரது மறைவு கியூபாவுக்கு பேரிழப்பு.

செவ்வணக்கம் தோழர் பிடலிட்டோ.

(‘தீக்கதிர்’ நாளிதழில் எஸ்.பி.ராஜேந்திரன் எழுதிய கட்டுரையின் முக்கியமான பகுதிகள் மேலே தரப்பட்டுள்ளன. தலைப்பு எம்மால் இடப்பட்டுள்ளது – வானவில்-இதழ்  87 )

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...