வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (9)


வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (9)

எஸ்.எம்.எம்.பஷீர்.

முதன் முதலில் தனியாக  நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சேகுதாவூத் பசீர் தனியான அதிகார சபை ஒன்றினை உருவாக்குவதற்கு தமக்கு ஆதரவு தெரிவிக்கும் ஏனைய அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டாரோ ஒழிய , தாங்கள் அப்படியான கோரிக்கையை ஒரு கோரிக்கையாக முன் வைக்கவில்லை.  மாறாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னணித் தலைவர்கள் பின்னரான காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராக  மாறிய பின்னரும் முஸ்லிம்களுக்கு இணைந்த வடக்கு கிழக்கில் ஒரு அதிகார அலகு வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்பதை வலியுறுத்தி வந்திருந்த காரணத்தினாலும் ,  சேகுதாவூத் பசீர் அப்படியான கருத்தை முன் வைத்திருந்தார்.

இந்திய இலங்கை  ஒப்பந்தம் செய்யப்பட்ட பொழுது முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளிகளாக இருக்கவில்லை என்றாலும் , முஸ்லிம் காங்கிரஸ் பங்காளிக் கட்சி போலவே மிக நெருக்கமான உறவைப் பேணி வந்தனர் . முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற பிரதிநிதி ஒருவர் திவாலாகப் போகும் நிலையில் அவருக்கு உதவ பிரேமதாசா  தனது முக்கிய பொருளாதார ஆலோசகரான பாஸ்கரலிங்கத்தை கலந்தாலோசித்து செயற்படப் பணித்தார். முஸ்லிம் மக்களின் உரிமைக்காக தேர்தலில் போட்டியிட்டவர்கள் தனிமனித பொருளாதாரத்தில் தங்கி அவர்களுக்கு கடமைப்பட்டவர்களாகவும் அவர்களின் கஷ்டங்களைப் போக்க அரச ஆதாரவை அணுக வேண்டிய நிலைக்கும் ஆளாகினர்.

 பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறை செய்யப்பட்ட பொழுது இலங்கை அரசு முஸ்லிம் காங்கிரசை புறக்கணித்தாலும் , ( 1988 ஆம்  ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், 1989 ஆம் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ) வடக்கு கிழக்கு மாகாண சபையில் பதவி  ஏற்ற காலகட்டங்களில் பிரேமதாசாவே ஆட்சியில் இருந்தார். முஸ்லிம் காங்கிரஸ் வெளிப்படையாக அரச பங்காளிகளாக இல்லாவிடினும் பிரேமதாசாவுக்கு ஆதரவளித்து ஜனாதிபதியாக்கியமை (!) , பிரேமதாசா மூலம் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான , தங்களுக்கு சவாலாக அமையும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களை போட்டியிடாமல் தடுத்தமை என்பன மூலம் பரஸ்பரம் நன்மையடைந்திருன்தனர்.

ஆனாலும் பிரேமதாசா புலிகளுடன் பேச்சுவார்த்தை செய்த பொழுது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் முஸ்லிம் காங்கிரசுக்கு தகுந்த இடமளிக்கவில்லை. இந்திய இராணுவம் முஸ்லிம்களுக்கு கிழக்கில் அநியாயங்கள் இழைத்த பொழுதும் (அடிப்படையில் இந்திய ஒப்பந்தம் அமுலில் இருக்கும் பொழுது) உதவ முடியவில்லை. ஆனாலும் ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பீடு கூற வேண்டி உள்ளது புலிகள் திகாமடுல்ல மாவட்டத்தில் பல முஸ்லிம் இளைஞர்களை ஜிகாத் இயக்க இளைஞர்கள் என்று கடத்திச் சென்ற பொழுது அஸ்ரபின் வேண்டுகோளுக்கு இணங்க பலரை பிரேமதாசா புலிகளுடன் பேசி விடுதலை செய்வித்தார்.

முஸ்லிம் காங்கிரசின் தொடர்ச்சியான முஸ்லிம்  மாகாணத்துக்கான அல்லது முஸ்லிம்  சுயாட்சிக்கான  வாக்குறுதிகள் யாவும் இறுதியில் தேய்ந்து கரையோர மாவட்டமாகவும் தமிழ் தரப்பினரின் அங்கீகாரத்துடன் மட்டுமே நடைமுறையில் செயற்படுத்த இயலுமான ஒரு கோரிக்கையாகவும்  முஸ்லிம் காங்கிரஸ் சமரசம் செய்து கொண்டது. பகிரங்க மேடைகளில் , பல அரசியல் அவைகளில் தனி முஸ்லிம் மாகாண சபைக்கான அல்லது அதை ஒத்த அலகுக் கான கோரிக்கைகளில்  காட்டிய வீரியத்தை   முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தரப்பினருடனோ அல்லது அரசுடனோ பேச்சுவார்த்தைகள் நடத்திய பொழுது முஸ்லிம் காங்கிரஸ் காட்டவில்லை , காட்டவும் முடியவில்லை.  

வழக்கம் போலவே நடைமுறையில் பல சிக்கல்கள் நிறைந்த கோரிக்கையை முன் வைத்து அரசியல் செய்த போதும் வெளிப்படையாக முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் சார்பில் வரிந்து கட்டிக் கொண்டு அறிக்கைகளை விடுவதற்கு மட்டும் தயங்கவில்லை. குறிப்பாக அஸ்ரப் மறைவதற்கு ஒரு வருடத்திற்கு (1999) முன்னர் கூட ௭ம்.௭ச்.௭ம். அஷ்ரப் பத்திரிகையில் " கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டால் அதில் முஸ்லிம்களுக்கான பங்கை வழங்கி விட்டுத்தான் ௭வரும் அதில் கை வைக்க வேண்டும் " ௭ன்று பத்திரிகையில் பகிரங்கமாக பேட்டி அளித்திருந்தார்.

முன்னர் குறிப்பிட்டது போலவே கிழக்கு மக்கள் தொடர்பில் எத்தகைய பங்கு என்பது பற்றி அவர் தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை. தமிழ் தரப்புடனான  பேச்சுவார்த்தை மூலம் வடக்கு முஸ்லிம்களைப் பற்றிய ஒரு சாத்தியமான ஒரு புரிந்துணர்வினை அஸ்ரப் கொண்டிருந்திருக்கலாம் , அதன் காரணத்தினால் அவர் கிழக்கைப் பங்கு போடுவது பற்றி பிரஸ்தாபித்திருந்தார்.  

அதிலும் மிகக் குறிப்பாக , "முஸ்லிம் தாயகம்" , "முஸ்லிம் தேசம்" போன்ற  உணர்ச்சி மயமான அரசியல் பதப் பிரயோகங்களை அஸ்ரப் தவிர்த்துக் கொண்டார். ஏற்கனவே தமிழ் தாயகக் கோட்பாட்டை -தமிழ் ஈழத்தை- முன் வைத்து அரசியல் செய்த அவரின் கசப்பான அனுபவமும் ,  அவ்வாறான கோரிக்கைகளை முன் வைத்து அரசியல் செய்த தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு ஏற்பட்ட கதியும் , ஆயதப் போராட்டங்களின் அவலங்களையும் பற்றி அஸ்ரப் கவனத்தில் கொண்டிருந்தார் . எல்லாவற்றிற்கும் மேலாக அஸ்ரப் இன(மத)  அடிப்படையில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் இருந்து தேசிய ரீதியான சகல இன மக்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியலுக்கு வித்திடும் முயற்சில் ஈடுபட்டிருந்தார். தேசிய அரசியலில் அவர் வகித்த பதவிகள் , அரசியல் செல்வாக்குகள் , அதன் பின்னணியில் இருந்த முஸ்லிம் மக்களின் ஆதரவு என்பன "தேசிய ஐக்கிய முன்னணி" யை  உருவாக்க அவருக்கு துணிச்சலை வழங்கின.  இனவாத அரசியலின் மூலம் பெற்ற வெற்றிகளை தக்க வைக்க , தனித்து நின்று உரிமைகளை வென்றெடுக்கும் சாத்தியம் இரண்டாவது சிறுபான்மையான முஸ்லிம் மக்களுக்கு இல்லை  என்பதையும் , தமக்கு முன்னாள் பட்டவர்த்தனமாக தெரிந்த தமிழ்த் "தேச" அரசியலின் அவலங்களையும் அஸ்ரப் மனங் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக சந்திரிக்கா அரசியில் அவர் அனுபவித்த அரசியல் அந்தஸ்து , ஆட்சி அமைக்க உதவும் நிலையில் இருந்த அரசியல் அதிகாரம் என்பன வேறு விதமாக ஒருங்கிணைக்கப்பட்டு தேசிய அரசியலில் தமிழ் சிங்கள மக்களையும்  உள்ளடக்கி , தேசியக் கட்சிக்கு சமதையான வகையில்  தேசிய ஐக்கிய முன்னணியை அவர் கட்டி எடுக்க முயன்றார். தனிப்பட்ட வகையில் வேறு பல கனவுகளும் அதில் உள்ளடங்கி இருந்தன என்பது இங்கு முக்கியத்துவம் அற்றவை. 

ஆனாலும் இந்த கொள்கை மாற்றத்தை  முஸ்லிம் மக்களுக்குள் , அதிலும் குறிப்பாக தானே உருவாக்கிய இன மத அரசியல் தளத்தில் அறிமுகப் படுத்துவதும் ஆதரவு பெறுவதற்கும் நேரம் கனிந்த வேளை என்று அவர் கருதிய வேளையில்தான் தேசிய ஐக்கிய முன்னணியை அவர் அறிமுகப்படுத்தினார். தேர்தலிலும் தேசிய ஐக்கிய முன்னணி போட்டியிடுவதையும் உறுதி செய்து கொண்டார். இறுதியாக அவர் இறப்பதற்கு முன்னர் மேற்கொண்ட விமானப் பயணத்தில் அவர் பயணிக்க முன்னர்  முஸ்லிம்  காங்கிரசுக்கு "குட் பாய்" என்று சொல்லிவிட்டே விமானத்தில் ஏறினார்.  தேசிய ஐக்கிய முன்னணியின் மிகப் பிராதான குறிக்கோள் . தமிழர்கள் , சிங்களவர்கள் , முஸ்லிம்கள் என்றோ , பௌத்தர்கள் ஹிந்துக்கள் , முஸ்லிம்கள் , கிறிஸ்தவர்கள்  என்றோ சித்திப்பதால் தேசிய ஐக்கியத்தை உருவாக்க முடியாது என்றும் தேசிய ஐக்கிய ஆண்டாக இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டை நிர்ணயித்து அந்த குறிக்கோளை அடைய இலங்கையின் சகல இன மத மக்களையும் தேசிய ஐக்கிய  முன்னணி மூலம் அஸ்ரப் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் தேசிய ஐக்கிய முன்னணியின் அடிநாதமாகத் திகழ்ந்தது "அனைவருக்குமான இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்குவது" இந்த அரசியல் நிலைப்பாடு சகல மத இன பிரதேச அடிப்படையிலான சகல அரசியல்  கோட்பாடுகளில் இருந்தும் இலங்கையர்களாக ஒருமித்து ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்துக்குள் பயணிப்பது என்பதாகும்.

ஆனால் அவரால் உருவாக்கபப்ட்ட முஸ்லிம் இன மதவாத அரசியலை , அதன் மூலம் பெறக்கூடிய அரசியல்  அதிகாரத்தை , ஏற்கனவே உருவாக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தபட்ட அரசியல் வலிமையை கைவிட பின்னர் வந்த முஸ்லிம்  காங்கிரஸ் தலைவர்கள் யாரும் தாயாராக இல்லை.  ஏனெனில் அஸ்ரப் கட்டம் கட்டமாக  புதிய தேசிய அரசியல் பயணத்தை தனது தனிப்பட்ட ஆளுமையைக் கொண்டு முன்னெடுக்க தீர்மானித்திருக்கலாம், அது அவருக்கு சாத்தியமானதாக இருந்திருக்கலாம் . ஆனால் அவரின் பின் வந்தோருக்கு அத்தகைய திராணியும் ஆளுமையும் இருக்கவில்லை. அஸ்ரபை வைத்து பிழைப்பதைத் தவிர அவரை ஒத்த அரசியல் ஆளுமை யாருக்கும் உடனடியாக இருக்கவில்லை. அதன் விளைவுகள் இன்று வரலாறாகி விட்டன. இன்று வரை  கிழக்கின் முஸ்லிம் அரசியல்  பிளவு பட்டதாகவும்  , அம்மக்களின் அரசியல் அபிலாசைகளை தகுந்த  முறையில் பிரதிபலிப்பதாகவும் இல்லை.

சேகு தாவூத் பசீர் முஸ்லிம் மக்களை "ஈழவர்" என்று வகைப்படுத்தி ஈரோஸ் இயக்கத்தில் அரசியல் செய்தவர். முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபைக் கோரிக்கைக்கு எதிராக சவால் விட்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக சென்ற மஹிந்த ராஜபக்ச அரசியல் முல்சிம் காங்கிரஸ் சேர்ந்து கொண்ட பொழுது  "அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வைராக்கியத்துடனும் பிரிவினைவாத சிந்தனைகளுடனும் செயற்படுகின்றனர். வெறும் 4 வீதமான வாக்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு 96 வீதமான பெரும்பான்மைக்கு சவால் விடுவது வேடிக்கையான விடயம்.
புலிகள் ஆயுதமுனையில் போராடியே தோல்வி கண்டனர். இந்த நிலையில் மீண்டும் தனி நாடு தர வேண்டும். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகம் என்று பேசுவது மீண்டும் அழிவுக்கே வழிவகுக்கும்.

“தனித்தனியான தேசியவாதங்கள் தலைதூக்கியிருக்கின்ற இன்றைய நிலையில் இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்துவதற்கு கூட்டுத் தேசியவாதக் கோட்பாடு அவசியம் என்ற நிலையிலேயே அரசுக்கு ஆதரவு வழங்க முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்திருக்கிறது.”  என்று குறிப்பிட்டவர். இன்று  என்ன சொல்கிறார்.

தொடரும்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...