அருளும் பொருளும்





                                            எஸ்.எம்.எம்.பஷீர்

பொருளில்லார்க்கு
இவ்வுலகில்லை;
அருளில்லார்க்கு 
அவ்வுலகில்லை
என்றோதும்
குறளோனே !

நீ அவ்வுலகு
இவ்வுலகு
என்றெதனை
சொல்லிவைத்தாய்?

இவ்வுலகில்
பொருளில்லார்
இக வாழ்க்கை
இழந்திடுவார்.


அவ்வுலகில்
அருளில்லார்
மறு வாழ்க்கை
தொலைத்திடுவார் 


நீ கண்ட
ஈருலகை
மு. வ
வழி மொழிந்தார்
மு.க
முரண்பட்டு
பொருளுரைத்தார்

பொருளில்லா
இல்லறம்
இன்னல் என்றார்
அருளில்லா
துறவறம்
அவலம் என்றார்
இரண்டுமே
இவ்வுலகில்
இருக்குமென்றார்


வள்ளுவனே !
பூவுலகில்
பொருளில்லையாயினும்  , 
அருளோடு வாழ்ந்தவன் நீ
என்னானாய்?
எவ்வுலகம் 
எதுவென்று
என் சொல்வாய் ?



 குறிப்பு:

"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு." குறள் 247:

   


மு. வரதராசன் (மு.வ )உரை:

    பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

கலைஞர் கருணாநிதி (மு.க ) உரை:

    பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...