விளையாட்டுத் துப்பாக்கி வீரர்கள் (வினையர்கள்) அல்லது கோமாளிகளும் கோமாளிகளும்


விளையாட்டுத் துப்பாக்கி வீரர்கள் (வினையர்கள்) அல்லது கோமாளிகளும் கோமாளிகளும்
-  வடபுலத்தான்
'ஹம்பாந்தோட்டை நகரசபைத்தலைவர் எராஜ் பெர்னண்டோ துப்பாக்கியை ஏந்தியவாறு எதிர்க்கட்சியினரைத் துரத்தி துரத்தி அச்சுறுத்தினார்...' என்ற செய்தியைப் படித்தபோது முதலில் அதிர்ச்சியாக இருந்தது.

'எராஜ் பெர்னண்டோ கையில் வைத்திருந்தது மெய்த்துப்பாக்கியில்லை. அது பொய்த்துப்பாக்கியே' என்று பிறகு சொன்னார்கள். இதைக் கேட்டபோது உண்மையில் எனக்கு அதிர்ச்சி கூடியிருக்க வேணும். ஆனால், சிரிப்புத்தான் வந்தது.

எராஜ் பெர்னண்டோ வைத்திருந்தது மெய்த்துப்பாக்கியா பொய்த்துப்பாக்கியா என்பதல்லப் பிரச்சினை. அதைப்பற்றிச் சொன்னது பொய்யா மெய்யா என்பதே என்னுடைய பிரச்சினையாகியது. இது என்னுடைய பிரச்சினை மட்டுமல்ல, உங்களுடைய தலையையும் சுற்றும் பிரச்சினைதான்.

'விளையாட்டுத் துப்பாக்கி(?)'யோடு ஒரு நகரசபைத் தலைவர் எதிராளிகளுடன் (அவர்களுடைய உயிருடன்) விளையாடுகிறார் என்றால்...!? அவர் ஒரு 'குழந்தை' இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்?

உலகத்தில் இது மாதிரி ஒரு 'விளையாட்டப் பிள்ளையான மேயரை' நீங்கள் பார்த்திருக்கவும் மாட்டீர்கள்ளூ அறிந்திருக்கவும் மாட்டீர்கள். நிஜத்துப்பாக்கியோடு 'களமாடும்' 'பலே கில்லாடி'களைப் பற்றி சரித்திரத்தில் ஏராளமான பதிவுகளுண்டு. ஆனால், இந்த மாதிரி 'விளையாட்டுத் துப்பாக்கி(?)'யைக் காட்டித் தன்னுடைய எதிராளிகளை மிரட்டி நிர்வாகம் செய்யும் மேஜரை இப்பொழுதுதான் பார்ப்பீர்கள். எனவே, இதை அறியும்போது  உங்களுக்குச் சிரிப்பு வரும். அல்லது கோபம் வரும்.

உங்கள் காலத்தில் இப்படியெல்லாம் 'காதில பூ' வைக்கும் புதினங்கள் நடக்கவும் அதை நீங்கள் அறியவும் முடிந்திருக்கிற பாக்கியவாளிகள் என்று நினைத்துச் சந்தோசப்பட்டுக்கொள்ளுங்கள்.
'அதெல்லாம் சரி, இந்த ஆள் ஹம்பாந்தோட்டையில் என்ன 'கள்ளன் - பொலிஸ்' விளையாட்டா விளையாடிக்கொண்டிருக்கிறார்?' என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

'இப்படி 'விளையாட்டுத் துவக்கோடு' கள்ளன் - பொலிஸ் விளையாடத்தான் சனங்கள் இந்தப் 'பரதேசி'க்கு வாக்களித்தார்களா?' என்றும் கோபப்படுகிறீங்கள். எனக்கும்தான் கோபம் வருகிறது. இந்த நாட்டில் இப்படி நம்மைப்போல எத்தனைபேருக்கு அடிக்கடி கோபம் வந்திருக்கிறது? ஆனால், அந்தக் கோபங்களினால் ஆனது என்ன?

இதைப்போல சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவரான பாரத லக்ஸ்மனும் பாராளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வாவும் (இந்த விளையாட்டுத்) துப்பாக்கியால் சுடுபட்டார்கள். இரண்டு பேரும் ஒரே கட்சிக்கார்கள். அப்படியிருந்தும் இப்படிச் சுடுபட்டார்கள். ஆனால், இந்த 'விளையாட்டுத் துப்பாக்கி' பாரலஷ்மனைப் பலியெடுத்ததுதான் விசித்திரம்.

இந்த மாதிரிக் கேஸ்களை அல்லது இந்தமாதிரிக் கோமாளிகளைத் தன்னுடன்  வைத்துக் கொண்டுதான் ஜனாதிபதியும் ஆட்சி நடத்துகிறார். அவருக்கு இவர்கள் தலையிடியைக் கொடுக்கிறார்களா அல்லது இப்படியெல்லாம் செய்து மகிழ்ச்சிப் படுத்துகிறார்களா தெரியவில்லை.

ஆனால், நாட்டு மக்களுக்கு இது கொண்டாட்டம்தான். மக்களுடைய எதிர்காலத்திற்காக என்று 'தங்கத்தை'த் தயாரித்துக் கொண்டிருக்கும் ஊடகங்களுக்கும் இது கொண்டாட்டமே.

பரபரப்பு வேணுமென்றால், இதுமாதிரிச் சம்பவங்களும் இந்த மாதிரி ஆட்களும் தேவையே! கையில் துவக்கோடு யாராவது தெருவில் இறங்கினால்தான் நாடே மகிழ்ச்சிக்கடலில் குளிக்கிறது. இல்லையென்றால் 'தின்ற சாப்பாடே செமிக்கவில்லை' என்கிறார்கள். சில நாட்களுக்கு முன், வடக்கில் 'ஒரு குறூப்' இப்படிக் கையில் துப்பாக்கியை ஏந்துவதற்காக முயற்சித்ததாக அறிந்தோம்.

சிலர் இதை உள்ளுர ரசித்துக் கொண்டும், இதை மறைமுகமாக ஊக்கப்படுத்திக்கொண்டும், சும்மா 'ஒரு இதுக்காக' (திருப்திக்காக) அரசாங்கத்தையோ ஜனாதிபதியையோ அவருடைய சகபாடிகளையோ ஒரு தடவை நன்றாகத் திட்டி விட்டு அவரவர் தங்கள் தங்கள் காரியங்களைப் பார்க்கிறதைப்போல நீங்களும் உங்கள் சோலியைப் பார்த்துக்கொண்டு போங்கள். வேறு என்னதான் செய்ய முடியும் நம்மால்?

நாட்டில் இந்த மாதிரிக் 'கோமாளி'களைச் சனங்கள் தங்கள் தலைவர்களாகத் தெரிவு செய்யும்வரை இந்தக் கோமாளித்தனங்கள் நடந்து கொண்டேயிருக்கும். இதையெல்லாம் நாங்கள் பார்த்து ரசித்துக் கொண்டும் இருக்க வேணும். ஏனென்றால் சனங்களாகிய நாங்கள்தானே மிகப் பெரிய கோமாளிகளாக இருக்கிறோம். நாங்கள் மிகப்பெரிய கோமாளிகளாக இருப்பதால்தான் நாடே கோமாளித்தனத்தில் சிக்கி இப்படிச் சீரழிந்து கொண்டிருக்கிறது.

கொஞ்சக் கோமாளிகள் மேர்வின் சில்வா என்ற கோமாளியைத் தெரிவு செய்தார்கள். வேறு சிலர், மனோ கணேசன் என்ற கோமாளியைத் தெரிவு செய்திருக்கிறார்கள். இன்னும் சிலர் சிறிதரனை, ரணிலை, அனந்தியை, சிவாஜிலிங்கத்தை, அஸ்வரை, அரியநேத்திரனை.... கஜதீபனை...  இப்பிடியே எல்லா இடங்களிலும் ஏராளம் கோமாளிகளைத் தெரிவு செய்து கொண்டாடுகிறார்கள். இதனால் கோமாளிகளே ஆட்சி அதிகாரங்களில், மக்கள் தலைமைகளில் உள்ளனர்.

இப்படிக் கோமாளிகளின் ராஜ்ஜியமாக இருந்தால் எந்த நாடுதான் உருப்படும்?

அது சரி, 'எராஜ் பெர்னண்டோ துப்பாக்கி வைத்திருந்ததற்காக தான் வருத்தமடைவதாக'த் தெரிவித்திருக்கிறார் சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ. அப்படியென்றால், எராஜ் பெர்னண்டோ வைத்திருந்தது மெய்யான துப்பாக்கிதானா அல்லது அது பொய்த்துப்பாக்கியே என்று சபாநாயகருக்குத் தெரியவில்லையா?

என்னவெல்லாம் நடக்கிறதோ தெரியவில்லை இந்த இலங்கை என்ற அமைதிப் பூங்காவிலே...

இந்தக் கோமாளிகளை வைத்துக் கொண்டு எப்படித்தான் ஒவ்வொருநாளையும் சரிக்கட்டுகிறாரோ மகிந்த ராஜபக்ஷ.

என்னைப் பொறுத்தவரை, மகிந்தரின் கிரகபலன் நல்ல உச்சத்தில் நிற்குது என்று நினைக்கிறன்.
 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...