கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்சின் மரணமும் அவரின் இறவா இலக்கிய சாதனையும்
எஸ்.எம்.எம்.பஷீர்

"புதிதாக கதைகளைப் புனையும் நாங்கள் எதையும் நம்புகிறோம். அடுத்தவர் எப்படி சாக வேண்டும் என்று யாரும் தீர்மானிக்க முடியாத; , உண்மையும் மகிழ்ச்சியும் சாத்தியம் என்பதை அன்பு நிரூபிக்கின்ற;  ,   தனிமையில் நூறு ஆண்டுகள்  தண்டிக்கப்பட்ட  இனங்கள் இறுதியாகவும் நிரந்தரமாகவும் பூமியில் இன்னுமொரு சந்தர்ப்பத்தை பெறுகின்ற ஒரு முழுமையான மாற்றத்துக்கு உள்ளாகும் ஒரு புதிய  உன்னத வாழ்க்கை உருவாக்கத்தில் ஈடுபட   அதிகம் காலம் கடந்து விடவில்லை என்று நம்புவதற்கு உரித்துடையவர்கள் என்று உணர்கிறோம் "   

( கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் "தனிமையின் நூறு ஆண்டுகள்" மற்றும் அவரின் சிறுகதைகளுக்காகவும்  நோபல் விருது பெற்ற வேளையில் ஆற்றிய உரையிலிருந்து )உலகின் நன்கு அறியப்பட்ட பிரபல நாலாராசிரியர் , சிறுகதை எழுத்தாளர் பத்திரிக்கையாளர்  "கபோ"  என பரவாக அறியப்பட்ட கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் தனது 87வது வயதில் 17ம் திகதி ஏப்ரல் மாதம் 2014 மரணமடைந்தார் என்பது வெறும் ஒரு சம்பவமாக பார்க்கப்படவில்லை என்பதை தேச எல்லைகளைத் தாண்டி அரசியல் முரண்பாடுகளைத் தாண்டி உலகின் அரசியல் தலைவர்கள், உலகின் தலைசிறந்த இலக்கிய படைப்பாளிகள் , சினிமா துறை சார்ந்தோர் உட்பட ஆயிரக்கணக்கான சாமான்ய மக்களினதும் அனுதாபச் செய்திகள் குவிவதிலிருந்து கண்டு கொள்ள முடிகிறது.

இது , உலக நாவல் சிறுகதை இலக்கியத்துறையில் தனக்கென அழியா இடம்பெற்றுவிட்ட  நாவல் இலக்கியத்தில் ஒரு மொழி நடைக்கு சர்வதேச அங்கீகார வரைவிலக்கணம் அளித்த ஒரு படைப்பாளியின் ஜீவித சரித்திரம் சரிந்திருக்கிறது என்பதையே சுட்டிக் காட்டுகிறது.

1928ல் கொலோம்பியாவில் பிறந்து , தனது சொந்த நாட்டில் வாழ முடியாமல் மெச்சிக்கோவிற்கு சென்று மூன்று தசாப்தங்கள் அங்கேயே வாழ்ந்து  இறுதியில் அங்கேயே இறந்துபோன ஒரு மனிதனின் எழுத்துக்கள் இன்று அவரது மரணத்துடன் மரித்துப் போகவில்லை என்பதை அவரின் எழுத்துக்களை என்று இன்று உலகே நினைவு கூர்ந்து பேசுவதில் கபிரியேல் கார்சியா மார்க்கேசின் படைப்புக்களின் கனதியை அதி உயர் இலக்கியத் தரத்தை  சொல்லாமல் சொல்லி நிற்கிறது.


உயர்தர இலக்கியம் படைப்புக்கள் மூலம்  முழு மக்கள் மீதும் செல்வாக்கு செலுத்திய ஒரு எழுத்தாளர் என்ற வகையில் கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் தனித்துவமானவர் என்று பிரபல பிரித்தானிய ஆங்கில எழுத்தாளர் இயன் மக் இவான் சிலாகித்துக் கூறுகிறார்.கபிரியேல் கார்சியா மார்க்கேசின் மொழிநடையை , கதை சொல்லும் பாணியை தனது படைப்புக்களை தனது தாய் மொழியான ஸ்பானிய மொழியில் மந்திர யதார்த்தம் அல்லது மாய யதார்த்தம் எனும் கற்பனை வடிவமும் யதார்த்த வடிவமும் சேர்ந்ததான வகையில் படைப்பதில் இவர் தென் அமெரிக்காவில் மட்டுமல்ல ஸ்பானிய மொழியிலே முன்னோடியாக திகழ்ந்தார். அந்த வகையில் ஸ்பானிய மொழி இலக்கியத்துக்கு இவர் மூலமும் ஒரு முகவரி கிடைத்தது என்றால் மிகையாகாது.

இந்த வடிவ மொழி முன்னோடிகள் பற்றிய சர்ச்சைகள் இன்றுவரை இருந்து வந்த போதிலும்  இவரின் மந்திர யதார்த்த படைப்புக்கள் உலகளாவிய ரீதியில்  பல நவீன எழுத்தாளர்களின் எழுத்துக்களின் மீது பாதிப்பினை  ஏற்படுத்தி உள்ளது என்பதை பிரபல ஆங்கில எழுத்தாளர்கள் சிலரும் இன்று ஏற்றுக் கொள்கின்றனர்.  ஆங்கில நாவலாசிரியரும் சமூக ஈடுபாட்டளாருமான சார்லஸ் டிக்கன்ஸை ஆங்கில கற்பனையும் யதார்த்தமும் கலந்த நாவல் இலக்கியம், மற்றும் அரசியல் என்று பல அம்சங்களில் இவருடன்  ஒப்பீடு செய்வதும் பொருத்தமாகவே தோன்றுகிறது.   

தனது சட்டப்படிப்பையும் இடையிலே கைவிட்டு ஏதோ ஒரு விதத்தில் எழுத்து துறைக்குள் ஒரு இதழாளராக நுழைந்த  பின்னர்  பிரபல நாவல் சிறுகதை எழுத்தாளராக மாறி உலகம் அறியும் வண்ணம் 1982ல் நோபல் பரிசு பெற்ற படைப்பாளியாக மாறியபின்னரும் அவர் தனது இதழாளர் (Journalist) தொழிலை விடவில்லை. 1967ஆம் அண்டில் பிரசுரமான அவரின் " தனிமையின் நூறு ஆண்டுகள்" ( One Hundred Years of solitude) என்ற நாவல் யுத்தத்திற்கும் சமாதானத்திற்கும் இடையே மக்கண்டோ எனும் கற்பனைக் கிராமத்தில் வாழ்ந்த  புவேண்டா குடும்பத்தின் பல தலைமுறைகளின் கதையைப் பேசும் நாவலாகும். இவரின் கதாபாத்திரங்கள் உயித்துடிப்புள்ள நமக்கு மிக மிக நெருக்கமான மனிதர்களைப் பற்றிய கதைபோல்    வாசகர்களை ஆகர்சித்து ஆட்கொள்பவை மட்டுமல்ல நாம் நிஜமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற கற்பனை பாத்திரங்களும் சம்பவங்களும் கொண்டவையாகும். இந்நூல் உலக இலக்கிய படைப்பாளிகளின் பார்வையை இவர் மீது ஈர்த்தது.

கொலம்பிய சிவில் யுத்தகாலத்தில் இராணுவ கேர்ணலாக பணியாற்றிய தனது பாட்டனாரின் நிஜ  அனுபவத்தையும் தனது பாட்டியின் கற்பனையான பாட்டிக் கதைகளையும் பின்னியே தனது யதார்த்தத்துக்கும் , மந்திரத்துக்குமான கதைகருவின் இழையினை அவர் பின்னிக் கொண்டார். தனது சிறு பிராயக் கதைகளை நிஜ சம்பவங்களைக் கோர்த்தே அவரின்  "தனிமையின் நூறு ஆண்டுகள்" நூல் படைக்கப்பட்டது.

கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் , தனது நாவலில் தான் கையாண்ட மந்திர யாதார்த்த  எழுத்து நடையினை பற்றிய தனது அனுபவத்தைக் கூறுகையில்  "உண்மையாகத் தோன்றுவதிலிருந்து  கற்பனையாகத் தோன்றுவதை பிரிக்கின்ற  எல்லைக் கோட்டை அழிப்பதுதான் எனது மிகப் பெரும் பிரச்சினையாக இருந்தது என்று அவர் ஒப்புக் கொண்டார். 

இவரின் தனிமையின் நூறு ஆண்டுகள்"  நாவல்  வெளியாகி சுமார் 46 வருடங்களின் பின்னரே ஜூன் 2013 இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு  வெளியிடப்பட்டுள்ளது எனபது தமிழில் அந்த நூலை வாசித்து அனுபவிக்கும் சந்தர்ப்பம் மிக நீண்டகாலமாகவே இடம் பெறவில்லை என்பது வருத்துக்குரியதே.

ஒரு உலக இலக்கிய ஜாம்பவானின் மரணம் இன்று இலத்தீன் அமெரிக்கா முழுவதும் ஒரு சோகத்தை பரப்பியுள்ளது. இன்றைய அமெரிக்க ஜனாதிபதி தொடக்கம் முன்னாள் ஜனாதிபதி கிளிங்டன் வரை இவரின் எழுத்துக்கள் பற்றி சிலாகித்து பேசுகின்றனர், அதிலும் கிளிங்டன் தனிப்பட்ட வகையில்    ஒரு எழுத்தளார் ஒரு பத்திரிக்கையாளர் என்பதைக் கடந்து கொலம்பிய சமூகத்தை அவலப்படுத்திய போதைவஸ்து வியாபாரிகள். உள்நாட்டு யுத்தத்தில் மிகக் கொடூரமான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்ட  கெரில்லாக்கள் எனப்படுவோரை  ராஜீய ரீதியில் கையாள்வது தொடர்பில் தனது இலக்கிய பிரபல்யத்தை பயன்படுத்திய  ஒரு நவீன ஒரு அரசியல் சாணக்கியன்  ஆவார். அந்த வகையில் கொலம்பிய அரசுக்கும் கெரில்லாக்களுக்கும் இடையே ஒரு சமரசம் செய்பவராக   கொலம்பியாவின் போதை தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் நிதி உதவி பெறுவதிலும் இவர் முன்னின்று செயற்பட்டுள்ளார். கொலம்பியாவை ஒரு சமாதான பூமியாக்க வேண்டும் என்பதே அவரின் குறிக்கோளாக இருந்தது.  கற்பனையும் யதார்த்தமும் கடந்த எழுத்துகளுக்கு அப்பால் கொலம்பியாவில் போதை கடத்தல் கார்டேல்களின் (Cartel) ஆட்கடத்தல்கள் , சித்திரவதைகள் கொலைகள் என்பவற்றை கடத்தல் செய்திகள் என்று தலைப்பீட்டு போதைவஸ்து கடத்தல்காரர்களின் பயங்கரவாத செயற்பாடுகளை செய்தியாக தொகுத்து வெளியிட்டு வந்தார். இதனால் பல அச்சுறுத்தல்களுக்கு உள்ளானார். கொலம்பியாவின் சாபக் கேடான போதை வஸ்து வியாபாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது அவரின் குறியாக இருந்தது.

ரோம் , பாரிஸ் , நியூ யோர்க், பார்சிலோனா, காரகாஸ் ஆகிய இடங்களில் எல் எச்பெக்டடர் என்ற செய்திப் பத்திரிகையின் வெளிநாட்டு  செய்தியாளராக பணியாற்றி அனுபவங்கள் அவரின் படைப்பிலக்கியங்களின் மூலம் பெற்ற பிரசித்தி என்பன உலகின் அரசியல் , தேச தலைவர்களுடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக்  கொடுத்தது, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இவர் ஒரு பத்திரிக்கையாளன் என்ற வகையிலும் நன்கு அறியப்பட்டவனானார். பலதடவை கொலொம்பிய முன்னால் ஜனாதிபதி அமைச்சர் பதவிகளையும் , தூதுவர் பதவிகளையும் வழங்கி அவரை நேரடி அரசியலில் பங்காற்ற அழைத்த  பொழுதெல்லாம் அவர் அதனை மறுத்தார். முதலில் நாட்டில் யுத்தத்தை நிறுத்துவோம் , அமைதியை கொண்டு வருவோம் பின்னர் எங்களின்  அபிப்பிராய வேறுபாடுகளை கண்டறிவோம் என்பதே சமாதானத்துக்கான வழி என்று அவர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார். 

பத்து நாவல்களையும் பல சிறுகதைகளையும் எழுதியுள்ள அவரின் நாவல்களில் தி ஓட்டம் ஒப் பட்ரியார்ச் (The Autumn of Patriarch)  எனப்படும் நாவல் ஒரு இராணுவ சர்வாதிகாரியினதும் அவனுக் கெதிரான புரட்சியாளர்களினதும் கதை. இந்நாவல் மிகவும் சுவாரசியமான கதை சொல்லும்  உத்திகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில் கிரகோரி ராபாசா மொழி பெயர்த்துள்ளார். இவரின் லவ் இன் தி டைம் ஒப் கொலரா , (Love in the time of Cholera)   தி ஜெனரல் இன் ஹிஸ் லப்ரிந்த் (The General in his Labyrinth) என்பன மிக பிரபல்யமான நாவல்களாகும் . இவை உட்பட இவரின் பல நாவல்களும் சிறுகதை தொகுதிகளும் ஆங்கிலம் உட்பட பல உலகின் முதன்மை மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 

அமெரிக்காவுடன் கொலம்பிய நாட்டு தேசிய விவகாரங்கள் தொடர்பில்  அவர் மேற்கொண்ட ராஜீய செயற்பாடுகள் காரணமாக அமெரிக்காவின் முன்னாள் ஆட்சித் தலைவர் பில்  கிளிங்டன் இவருடன் நட்புறவு பேணி வந்துள்ளார். அதே நேரம்   தென்னமரிக்க இடதுசாரி புத்திஜீவிகளில் சிலரைப் போல்  கபிரியேல் கார்சியா மார்க்கோஸ்ஸும்   கியூபாவின் முன்னாள் தலைவர் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்பினைப் பேணி வந்துள்ளார். ஆனால் அவரின் பிடல் காஸ்ட்ரோவுடனான தொடர்பு குறித்து கேள்வி எழுந்தபொழுது   " பிடெல் காஸ்ட்ரோ ஒரு பண்பட்ட மனிதர் , நாங்கள் சந்திக்கும் பொழுது இலக்கியம் பற்றியே பேசுவோம் " என்று அவர் பதிலளித்தார். 


கபிரியேல் கார்சியா மார்க்கேஸுன் ஆரசியல் குறித்த ஒரு சில எதிர் விமர்சனங்களுக்கு  அப்பால் இவரின் மறைவு ஒரு உலக இலக்கிய ஜாம்பவானின் மறைவு மட்டுமல்ல மனித நேயமிக்க , ஒரு சமூக மாற்றம் வேண்டி நின்ற , அதற்காக தனது எழுத்து ஆளுமையையும் , அதனால் பெற்ற கீர்த்தியையும் முதலீடு செய்த ஒரு அற்புத மனிதனின் மறைவுமாகும். தென்னமரிக்க வரலாற்று நாயகர்களில் இவர் பெயரும் நின்றுலாவும்.    

No comments:

Post a Comment

உலகம் உற்றுநோக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு--எம்.ஏ.பேபி

அக்டோபர் 16, 2022 சீ னக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு ஒக்ரோபர் 16ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. இதில...