இது எங்கள் ஞாயம். - வடபுலத்தான்


'வடக்கிலே உள்ள சில பிரதேச செயலகங்களுக்குச் சிங்களப் பிரதேச செயRajapaksha cartoon-10லர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்' என்றொரு செய்தி சில மாதங்களுக்கு முன்பு வந்திருந்தல்லவா!

அந்தச் செய்தியைப் பார்த்த பெரும்பாலான தமிழர்கள் பதறியடித்தார்கள்.

'தமிழ்ப்பகுதியில் சிங்கப் பிரதேச செயலர்களா?' என்று கொதித்தவர்களும் உண்டு.

'இது ஒரு திட்டமிட்ட சதி' என்று சினந்தனர் சிலர்.

'சிங்களக் குடியேற்றங்களைத் தமிழ்ப்பகுதிகளில் செய்வதற்கு அரசாங்கம் போட்டுள்ள திட்டம் இது' என்று பொங்கினர் பலர்.

'ஆமிக்குக் காணி பிடிக்க வசதியாகவே இந்தச் சிங்களப் பிரதேச செயலர்கள்' என்றனர் வேறு சிலர்.

இப்படியே ஆளாளுக்கு ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளைச் செய்து அறிக்கைகளையும் வெளியிட்டார்கள்.

இதில் என்ன பிழை என்று நீங்கள் கேட்கலாம்.

'தமிழ்ப்பகுதிகளில் தமிழர்கள்தான் வேலை செய்ய வேணும். ஒரு சிங்களப் பயல்கூட இங்கே தலை வைக்க முடியாது. தமிழரின் சுதந்திர பூமியில் அந்நியருக்கு என்ன வேலை? அப்படி எல்லை மீறிக் காலை வைப்பவனின் தலையைக் கொய்வோம்...' என்று நீங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் பாணியில் பொங்கியெழவும் கூடும்.

தமிழர் என்றால் இப்படித்தான். ரத்தக் கொதிப்பு அதிகமானவர்கள்.

சாதாரணமான மேசன், தச்சு வேலைக்கே (இதெல்லாம் கூலிவேலைகள்) வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு வருகின்ற சிங்களவர்களைக் கண்டு முகத்தைச் சுளித்துக்கொள்கிறோம்.
மன்னிக்கவும். அவர்களைக் கண்டவுடனேயே தன்பாட்டில் முகம் சுளித்துக் கொள்கிறது.

அப்படியிருக்கும்போது பிரதேச செயலர் 'ரேஞ்'சுக்கு அதிகாரிகள் வாறதெண்டால் தாங்க முடியுமா? அதை நம் இதயம்தான் தாங்குமா?

தலைச் சுமையாக சுமந்து மேசை, கதிரை, கட்டில், உடுப்புக் கொழுவும் கங்கர், உடுபுடவைகள் என்று ஊர்ஊராக அலைந்து திரிகிற ஏழைச் சிங்களவர்களையே 'வேவுக்காரர்கள்' என்று இன்னும் எண்ணிக் கொண்டிருப்பவர்களல்லவா!

தமிழர்கள் இப்பிடிச் சிங்களவர்களை வெறுப்பதற்கும் சந்தேகப்படுவதற்கும் ஒடுக்கப்படுவதும் படைத்தரப்பினால் பாதிக்கப்படுவதுமே காரணம் என்று நீங்கள் சொல்லக்கூடும்.
ஆனால், அதை அப்படியே நாம் ஏற்க முடியுமா?

தமிழர்களைப் பொறுத்தவரையில் தங்களுடைய மடியில் யாரும் கை வைப்பதை விரும்பமாட்டார்கள். ஆனால், மற்றவர்களின் மடியில் மட்டுமல்ல, பறியிலும் தாராளமாகக் கைபோடுவார்கள். கையைப் போடுவது மட்டுமல்ல, மடையையே பரவிவிடுவார்கள்.

போர் நடந்த காலத்தில் ஒரு சிங்களவரோ முஸ்லிகளோ தமிழ்ப்பகுதிகளுக்குள் தலையைக் காட்டவே முடியாது. ஆனால், லட்சக்கணக்கான தமிழர்கள் புலிகளுக்கே தண்ணியைக் காட்டிவிட்டு, கொழும்பு, கண்டி, மாத்தளை, புத்தளம், நீர்கொழும்பு என்று எல்லா இடங்களிலும் காணி வாங்கிக் குடும்பமாகவே குடியேறிக் கடை வாங்கித் தொழில் செய்தார்கள்.

இது மட்டுமா? வெளிநாடுகளில் இருக்கின்ற பெரும்பாலான புலம்பெயர்ந்த 'நாட்டுப்பற்றாளர்கள்' 'தேசபிதாக்கள்' எல்லாம் தங்களின் தாய், தந்தையரையும் அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளையும் கூடப் புலிகளுக்குக் காசடித்துச்  சிங்களப் பகுதிகளிலேயே கொண்டு போய்க்குடியேற்றினார்கள்.

சண்டை உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நாட்களில்தான் நூற்றுக்கு எண்பது வீதமான ஆட்கள் கொழும்பிலே 'பிளாட்' வாங்கினார்கள்.
இதுக்கெல்லாம் என்ன 'ஞாயம்' என்று எனக்குத் தெரியாது.
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

நாங்கள் எங்கயும் எப்பிடியும் நடந்து கொள்வோம். நீங்கள் யாரும் அப்பிடி நடக்க ஏலாது' என்பதே தமிழரின் பண்பாடு, சிந்தனை, அறிவு, நியாயம்....எல்லாம்.

'சுவிஸில் நடு வீதியில் தேரிழுப்போம். பாரிஸில் தெருநீளம் அங்கப்பிரதட்சினை செய்வோம். லண்டனில் றோட்டை மறித்துக் காவடி ஆடுவோம். ரொறொன்ரோவில் நடுச்சந்தியில் போர்த்தேங்காய் அடிப்போம். எதிர்காலத்தில் ஜேர்மனியிலோ, நோர்வேயிலோ வண்டிச் சவாரிகூட நடத்துவோம். ஒரு பயல் ஏன் எண்டு கேட்கேலாது....'

இதுதான் தமிழ் ஞாயம்.

இப்படிச் சிந்திக்கின்ற தமிழ்ப் பெருங்குடிகள் தங்கள் தாயகத்தைத் 'தலிபான்களின் புனித பூமி'யைப்போல வைச்சுக்கொண்டு, மற்றவர்களின் இடங்களில் தாராளமாகக் கழிவைக் கொட்டலாம் என்று நினைக்கிறார்கள்.

இது எப்பிடியான நியாயம் தெரியுமா?

தன்னுடைய மனைவி பத்தினியாக இருக்க வேணும். மற்றவனின் மனைவி விபச்சாரியாக வாழவேணும் என்றமாதிரித்தான்.

சரி, இதைப்பற்றியெல்லாம் சொல்லி என்ன பயன்? இப்படியான நியாயங்களோடுதான் தமிழர்கள் உலகமெல்லாம் வாழ்கிறார்கள்.
நாலு இடத்துக்குப் போய், நாலு பேரைப் பார்த்து நாலு விசயங்களைப் படித்தாலென்ன, வயசு ஏறிப் பழுத்து அனுபவங்கள் வாய்த்தால் என்ன? ஒரு மாற்றமும் கிடையாது. மண்ணாங்கட்டி கூட தண்ணீர் பட ஒரு மாதிரியும் நெருப்பில சுட இன்னொரு மாதிரியும் மாறிப் பயன்தரும். தமிழர்களோ...!

இறுதியாக ஒரு குட்டிச் செய்தி - இப்படித் தமிழ்ப்பகுதிகளுக்கு சிங்களப்பிரதேச செயலர்களைப் போடுவதாகச் செய்தி வந்தபோது, ஒரு தமிழ் எம்.பி ஜனாதிபதியிடம் கேட்டார் ; 'தமிழ்ப்பகுதிகளுக்குச் சிங்களப் பிரதேச செயலர்களை அனுப்பினால்... அங்க மக்கள் குழம்புவார்கள்... அதைக் கொஞ்சம் தவிர்த்தால் நல்லது...' என்று.
இதற்கு ஜனாதிபதி சொன்ன பதில் - 'தமிழ்ப்பகுதிகளுக்குச் சிங்கள டொக்ரர்மார் தேவை. சிங்கள பிரதேச செயலர்தான் வேண்டாமா...'
 நன்றி .தேனீ

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...