போடியாரின் பேராண்மையும் பிரபாகரனின் பேடிமையும்!




எஸ், எம்.எம். பஷீர்


"புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் - அந்தப்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்" 
      
          கவிஞர்  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்






கிழக்கில் காலனித்துவ ஆட்சிக்கால சமூக முறைமையில் வன்னிமை நிர்வாக  முறைமையின்  கீழ் ஆட்சி நிரவாகிகளாக நியமிக்கப்பட்ட  வன்னியனார் எனப்படுவோருக்கு அடுத்த தரத்தில் நிலவுடமையின் மூலம் செல்வாக்குப் பெற்றவர்களாக , சமூக ஒழுங்கு முறைமையில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக திகழ்ந்தவர்கள் போடியார் எனப்படும் நிலச்சுவாந்தர்கள் .
சுதந்திர இலங்கையில் வன்னிமை முறைமை இல்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து   நிலவுடைமைச் சமூக அமைப்பில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களும் போடியார் எனப்படும் நிலச்சுவாந்தர்களையும் மெதுவாக புறந்தள்ளியது.  பண்புமாற்றத்தின் பின்னர் நிலவுடைமைச் சமுதாய அமைப்பின் மிச்ச சொச்சங்கள் இருக்கவே செய்யும் என்பதற்கிணங்க   நிலவுடைமையாளர்கள் , மற்றும் நவீன பொருளாதார நடவடிக்கை மூலம் பொருள் சேர் த்தோர் என சமூக  அரசியல் சமய பண்பாட்டுத் தளங்களில் " போடியார்கள்" வேறு வடிவங்களில் காலூன்றி உள்ளார்கள், சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்  என்பதை இயங்கியல் அணுகுமுறை ஊடாக சமூகவியலாளர்கள் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், இந்த எழுத்தாக்கத்தின் நோக்கம் சமூகவியல் பற்றிய ஆய்வல்ல. ஒரு சமூகத்துள் பாசிசம் தலைதூக்கி ருத்திரதாண்டவம் ஆடிய பொழுது துணிச்சலாக அந்த பாசிசத்துக் கெதிராக குரல் கொடுத்த அருமைலிங்கம்  எனும் ஒரு மனிதனின் குரல் அண்மையில் நிரந்தரமாக அடங்கிப் போயிற்று  என்ற வகையில் அந்தக் குரலுக்குரியவன் , தனது வாழும் காலத்தில் சமூகம் சார்ந்து வகித்த பாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஒரு சமூகத்தின் வரலாற்றுப் பக்ககங்களில் அவனின் சமூக வகிபாகம் , காத்திரமானதாயின் ,  அவன் சார்ந்த அரசியல் நடவடிக்கைகளின் காரணமாய் எழுந்த , தனி மனித வாழ்க்கை பற்றிய  விமர்சனங்களுக்கு அப்பால் நிச்சயம் நினைவில் நிற்கும்  அதனை வரலாறும் ஏதோ ஒரு மூலையில் குறித்துக் கொள்ளும்.

அருமைலிங்கமும் தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி வாழ்ந்தார் என்பது பற்றி விமர்சனங்கள் இருக்கலாம் , ஏனெனில் அவர் ஆயுதம் தரித்த ஒரு இயக்க உறுப்பினராக இருந்தவர், அதில் இருந்தவர்களில் பலர் எப்படி செயற்பட்டார்கள் என்பது  பற்றிய விமர்சனங்களே அவர்களின் மரண சாசனங்களாகும் .


(படத்தில் இடமிருந்து வலமாக கட்டுரையாளர் இரண்டாவதாகவும் , போடியார் அருமைலிங்கம் ஆறாவதாகவும் உள்ளனர்.)
எனினும் இந்த அருமைலிங்கம்  மட்டக்களப்பு மண்ணின் நிலவுடமை சமூக அமைப்பு முறைமையின் அடையாளமாக விளங்கிய "போடியார்" எனும் பெயருடன் அங்கத அரசியல் செய்து தமிழ் புலிப் பாசிச சிந்தனைத் தளத்துக் கெதிராக அதன் அக்கிரமங்களுக்கு எதிராக எதிராக சவால் விடுத்தவர்.  போடியார், மறைக்கப்பட்டாலும்  இலகுவில் மறைந்து போக மாட்டார். மறைந்தும் போகப்படக் கூடாது.


ஒரு நண்பர் அண்மையில் தொலைபேசிமூலம் 4.03.2014 அன்று திடீர் நெஞ்சுவலி காரணமாக அருமைலிங்கம்  (போடியார்) காலமாகி விட்டார் என்ற செய்தியைச் சொன்ன பொழுது அது பற்றிய தேடுதலில் அந்த மரணச் செய்தி பரபரப்பில்லாமல் ஓரிரு ஊடகங்களில் மட்டுமே தலை காட்டியது என்பதை கண்டு கொள்ள முடிந்தது துரதிஸ்டமே!. 

மட்டக்களப்பு மண்ணின் பாசிசத்துக் கெதிரான போராட்டத்தை போடியார் எனும் பாத்திரம் மூலம் வானொலி ஊடாக உலகுக்கு கொண்டு வந்தவர்களில்   அருமைலிங்கம் நினைவு கூறப்பட வேண்டியவர் .மட்டக்களப்பை பொருத்தவரை  அவரின் போடியார் பாத்திரம்  வானொலி அங்கத நாடக இலக்கியத்தின் (Satire) பாற்பட்டது. (ஊடக ) அங்கத  நாடக இலக்கியத்தில் அருமைலிங்கத்தின் பாத்திரம் அலட்சியப்படுத்தப்பட முடியாதது.  

குருக்கள்மடத்தைச்தைச்சேர்ந்த அருமைலிங்கம் தமிழரசுக் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி , சொல்லின் செல்வர் இராஜதுரையுடன் பின் நின்றவர். பின்னர் இவர்  டேலோவில் இணைந்து , அதன் பின்னர் ஈ பீ ஆர் எல்புடன் (E.P.R. L.F) சேர்ந்து வட கிழக்கு மாகான சபையில் உறுப்பினராகவிருந்து , இந்திய படையின் வெளியேற்றத்துடன் இந்தியாவிற்கு தப்பி ஓடி அங்கு ஒரிசாவில் சில காலம் வாழந்தவர். 

19 ஜூலை 1990ல் சென்னையில் வைத்து புலிகள் ஈ பீ. ஆர்  எல் எப் தலைவர் பத்மநாபாபையும் அவருடன் சேர்த்து 15 பேரைக் கொன்றுவிட்டு  இலங்கைக்கு தப்பி ஓடிவந்தனர். அந்தக் கோரக் கொலைகளில்ஈ.பீ ஆர் எல்.எப்  இயக்கத்தை சேர்ந்த முக்கிய உயர் பீட உறுப்பினரான கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மிஹிலார் எனும் முஸ்லிமும் கொல்லப்பட்டார். இவர் பற்றிய தகவல்களை , குறிப்பாக அவர் ஒரு முஸ்லிம் என்ற தகவல் பெரிதும் அன்றைய செய்திகளில்  பதிவு செய்யப்படவில்லை.

பத்மநாபாவினதும் அவரின் சகாக்களினதும் மரணச் சடங்கிற்கு ஒரிசாவில் இருந்து கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட  நான்கு பேரில் அருமைலிங்கமும் ஒருவர், என்பது அருமைலிங்கம் பத்மநாபாவுடன் கொண்டிருந்த  நெருக்கத்தையே காட்டுகிறது.   

சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தனாய் தனது உயிரை  காவு கொள்ள புலிகள் வலை விரித்திருக்கிறார்கள் என்று அறிந்தும் , இலங்கைக்கு திரும்பி டக்ளஸ் தேவானந்தாவின்  ஈ பீ தீ பீ (EPDP) கட்சியில் சேர்ந்து அவரின் "இதயவீணை"   நிகழ்ச்சியில் புலிகளை காரசாரமாக விமர்சிக்கும் வகையில் தனது நையான்டி பாணியை  கையாண்டு வானொலி நாடகத்தில் நடித்து வந்தார். போடியார் பாத்திர அங்கத நாடகங்கள் (Satire) புலிகளின் ஆத்திரத்தை கிளறியது . ஆனாலும் இவர் புலிகளின் பசிக்கு இரையாகாமல் , அதேவேளை தனது புலி பாசிச எதிர்ப்புக் குரலை ஓங்கி ஒலித்து  வந்துள்ளார். புலி-அரசு இறுதி பேச்சுவார்த்தைகளின் பொழுது வழக்கம்போல் புலிகளின் நரமாமிச வேட்டைகள் முடிக்கி விடப்பட்டு அரசியல்வாதிகள் , பத்திரிகையாளர்கள் , மாற்றுக் கருத்தாளர்கள் என பலர் வட கிழக்கில் கொல்லப்பட்ட பொழுது போடியாரும் இலக்கு வைக்கப்பட்டார்.  மிகவும் கவனமாக திட்டமிட்டு அவரின் வீட்டு கழிவறையில் குண்டு வைத்து அவரைக் கொல்ல புலிகள் முயற்சித்தனர் .  அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார் என்ற செய்தியும் உண்டு. புலிகள் கூட  அவரைக் கொல்லுமிடத்தை "நகைப்புக்குரியதாக்க"  கழிவறையை  வக்கிரமாக தெரிந்தெடுத்திருக்கலாம். 

வீரனும் கோழையும்

வீரன் என்று புலிகளும் அவரின் ஆதரவாளர்களும் போற்றி புகழும் பிரபாகரனின் கோழைத்தனத்தோடு  ஒப்பிட்டு பார்க்கையில் அருமைலிங்கம் போன்ற சிலர் உண்மையில் வீர்கள்; , எமது  மதிப்புக்கு  உரியவர்கள். சென்னையிலே தமிழ் இயக்கங்கள் காலூன்றிய கால கட்டத்தில் அவ்வியக்கங்களின் ஒருங்கிணைப்பாளராக இருந்த  மறைந்த காத்தான்குடி நண்பர் கபூர் (ஆசிரியர்) பிரபாகரன் பற்றி குறிப்பிடும் பொழுது அவர் ஒரு கோழை என்று குறிப்பிட்டார். அத்துடன் அதற்கான காரணத்தையும் அவர் சொன்னார். தனக்கு நெருப்புக் காய்ச்சல் வந்து  அவதியுற்ற பொழுது , மரணித்து விடுவேனோ  என்று உயிருக்கு பயந்து திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டவர் பிரபாகரன் என்று  ஒரு புரட்சிகர தேச விடுதலை இயக்கத்தை நடத்த தகுதியற்றவர் பிரபாகரன் என்றும் சொன்னார் கபூர். அதுவே இன்று யாதர்த்தமாகி உள்ளது. கபூர் ஒரு மார்க்சிய சிந்தனையாளர் என்ற வகையில் அவரின் பார்வை இருந்தாலும் அந்த பார்வை இன்று வேறு விதத்தில் நிரூபணமாகி உள்ளது.   தமிழ் ஈழம் காண புறப்பட்ட இயக்கங்கள் தமிழ் தேசிய வியாபாரிகள் (தமிழ்த் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள்) என்று கபூர் அன்றே சொன்னார்.  அதிலிருந்து அவரும் விலகியும் வந்து விட்டார். தவறுகளுக்கு துணைபோக அவர் விரும்பவில்லை. எனினும் தனிப்பட்ட வகையில் பத்மநாபா பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தார் கபூர் , பத்மனாபாவும்  பின்னர் கோழைகளால் கொல்லப்பட்டார்.
       
தமிழ் தேசிய அரசியல் முகாம்களுக்குள் சுழியோடிய அருமைலிங்கம் இலங்கை தேச அரசியலுக்குள் சுற்றி வர நேர்ந்தது. சில வருடங்களுக்கு முன்னர்  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில்  உறுப்பினராக அவர் இணைந்திருந்தார் , மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மட்டக்களப்பு  மாநகரசபையிலே முதன் முதலில் போடியாரைக் சந்திக்க எனக்கு நேரிட்டது. அந்த நினைவுகளுடன் ,  பாசிச புலிகளுக் கெதிராக குரல் எழுப்பிய அவரின் வகிபாகம் என்னைபோன்ற பலரின் நினைவுகளில் சஞ்சரிக்கும் . 



No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...