நேற்றும் இன்றும் நாளையும் ஒன்றே !





எஸ்.எம்.எம்.பஷீர் 

"மெல்ல மெல்ல செல்லுகின்ற
தந்தை செல்வா நாயகம்
சொல்லுகின்ற பாதையிலே
செல்லுகின்ற வீரர் நாம்"
                  ( எஸ்.ஜே.  வீ. பற்றிய   ஒரு பாடல்) 
இலங்கையின் மூன்று மாகாணங்களில் தேர்தல் நடைபெற்றாலும் வட மாகாணத் தேர்தல் , அதுவும் மன்னார்  ஆயர் ராயப்பு ஜோசப் ஒப்பிட்ட  அரசியல் முள்ளிவாய்க்கால் கிழக்கிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டவுடன் அங்கு ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை இழந்தவுடன் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் கிழக்கிலே மாகாண சபைத் தேர்தலிலே தோல்வியுற்றவுடன் ஆயர் சொன்னது போல் அங்கு நடந்தது அரசியல் முள்ளிவாய்க்கால் அல்ல , அது அரசியல் மாவிலாறு மட்டுமே , இப்பொழுதுதான் அரசியல் முள்ளிவாய்கால் முதற்போராட்டமே  ஆரம்பித்து,அதுவும் இன்றுடன்  போராட்டம் முடிவுக்கு வருகிறது,

ஆயுத மாவிலாற்றுப் போராட்டத்தில் கிழக்குப் புலிகள் வன்னிப்  புலிகளுக்கு எதிராக நின்று போரிட்டனர், பின்னர் மாவிலாற்று அரசியல் போராட்டத்திலும் அவர்கள் தங்களின் போராட்டத்தை புலிகளின் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்புக் கெதிராக போரிட்டனர், அதிலும் அவர்கள் வென்றனர்.

இம்முறை வடக்கு மாகாண சபைத் தேர்தலில்  கிழக்கிலே இரண்டாவது மாகான சபைத் தேர்தலிலே தோற்றதுபோல் தோற்று விடக் கூடாது , தோற்றால் தமிழ்த்தேசியமே  தோற்றுவிடும் என்ற அச்சம் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் புலிகள் அரசியல் கூட்டுருவாக்கம் செய்த தமித் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்பட்டுள்ளதை விட , தமிழ்த் தேசிய கூட்டமைப்பை குறை கோரிக் கொண்டிருந்த புலம் பெயர் புலித் தமிழ் தேசியவாதிகளுக்கும் ஏற்பட்டுள்ளது, நாளை தமிழ் ஈழம் மலரும் என்ற கனவு  என்றாவது ஒருநாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையை புதிதாக புலிகளின் தலைவரைப் போற்றும் அவரின் பெருமிதங்கள் பேசும் விக்னேஸ்வரன் ஏற்படுத்தியுள்ளார் என்று புலம் பெயர் புலித் தமிழர்கள் நம்புகிறார்கள்.!
   
திரு விக்னேஸ்வரன் தனது புலி விசுவாசத்தை  இறுதியாகவும் அறுதியாகவும் உறுதியாகவும் தேர்தலின் இறுதிப பிரச்சாரத்தின் பொழுது வெளிப்படுத்தி விட்டார்.
"பிரபாகரன்  ஒரு விடுதலை போராட்ட வீரர் அவரை அரசாங்கமே கொடுமையானவராக   கருதுகிறது.  பிரித்தானிய அரசாங்கத்தில் குற்றவாளியாக கருதப்பட்ட கெபொட்டிபொல திஸ்ஸவேயின்  பெயரில் இலங்கையில் வீதிகளுக்கு பெயரிடப்பட்டமையை சுட்டிக்காட்டி பிரபாகரனை ஒரு தேசிய வீரனாக (மறைமுகமாக தமிழ் ஈழத்து தேசியவீரனாக  ) ஒப்பிடுகிறார். கெப்பெட்டிபொல ஆங்கிலேயர் ஆட்சியில் , ஆங்கில ஆட்சி எதிர்ப்பாளர்களை அடக்க அனுப்பப்பட்டு கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக தொடர் சண்டையிட்டவன் , இறுதியில் தனது போராட்டங்கள் வெற்றியளிக்காமல் தந்து போராளிகளுடன் , தப்பிச் சென்று மறைந்து வாழ்ந்த பொழுது கைது செய்யப்பட்டு அரச துரோக குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டவன் ( 25 /11/ 1818 ) ; அவனது மண்டையோடு கூட ஸ்காட்லாண்டிற்கு கொண்டுவரப்பட்டு  வைக்கப்பட்டிருந்தது. இலங்கை  சுதந்திரமடைந்த பின்னர் அவனது மண்டையோடு இலங்கையின் சுதந்திர அரசின் வேண்டுகோளில்  இலங்கைக்கு  ஒப்படைக்கப்பட்டது. அந்த சுதந்திர போராட்ட வீரனை , ஆங்கில அரசு குற்றவாளியாகக் காட்டியது , தூக்கிலிட்டது, என்பதற்காக உலகின் மிக கொடிய பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக  பல நாடுகளால் (வல்லரசுகளால் ) பிரகடனப்படுத்தப்பட்ட புலி பயங்கரவாதத்தின் தலைவனை;  நீதியரசர்  விக்னேஸ்வரன் நீதி செலுத்திய நல்கிய கொழும்பு நீதிமன்றங்களில் இலங்கையில் நடைபெற்ற பல படுகொலைகளின் சூத்திரதாரியான பிரபாகரனை,:  முஸ்லிம் மக்களை பள்ளியிலும் படுக்கையிலும் கொன்ற புலிகளின் பயங்கரவாதத் தலைவனை ;  பொதுவாக தமிழ் முஸ்லிம் சிங்கள அப்பாவி மக்களை அரசியற் தலைவர்களைக் ஈவிரக்கமின்றி கொன்றழித்த  பிரபாகரனை அந்நிய ஆக்கிரமிப்பு ஆட்சிக் கெதிராக போராடிய ஒரு தேசிய வீரனான  கெப்பெட்டிபொலவுடன்   ஒப்பிடுகிறார் என்பதை விட அவரின் சாயம் அவரின் இறுதிக் காலத்தில் நன்றாகவே வெளுத்துள்ளது. இதுவரை காலமும் சம்பந்தனும் ஆனந்த சங்கரியும் , ஏன் மாவை கூட பகிரங்கமாக இப்படி பிரபாகரனைக்  குறிப்பிடவில்லை. சும்மா சொல்லக் கூடாது, புலம் பெயர்ந்த மக்கள் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள் . எண்ணிய எண்ணியாங்கே நடக்கும் என்று ஆறுதலும் அடைந்திருக்கிறார்கள்.

இப்பொழுது நல்லாட்சிக்கான மக்கள் கூட்டாளிகளும் தங்கள் பங்கிருக்கு காத்தான்குடியில் தங்களின் சகோதர்களை சுட்டும் வெட்டியும் கொல்லவும்  ஆணையிட்ட புலிகளின் தலைவரை போற்றும் தமது கூட்டணித் தலைவரின் வெற்றிக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளக் காத்திருக்கிறார்கள். புலம் பெயர் புலி ஊடகங்கள் இந்த முஸ்லிம் கூட்டணியின் செய்திகளை அதுவும் முஸ்லிம் மத அறிவுக் கல்வி பெற்றதாக கூறப்படும்  நபர்களின் கூட்டிற்கு மிகுந்த  முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எப்படியோ திரு விக்னேஸ்வரனைப் பொருத்தவரை இலங்கை அரசுக் கெதிரான போராட்டத்தில் , அரசுக் கெதிராக போராடி ,இலங்கை அரசாங்கம் " குற்றவாளியாகக்  (வெறுமனே) கருதும்  " ஈழத்து  தேசியப் போராட்ட வீரன் பிரபாகரன்  பெயரில் வீதிக்குப் பெயரிட  விக்னேஸ்வரன் இப்பொழுதே  தயாராகிவிட்டார் என்பதையே அவரின் பேச்சுக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.  நல்லது , இப்பொழுதான் யாழில் சோனக தெரு என்பது சோனகர்கள் அதிகம் இல்லாத தெருவாகிவிட்டது, அந்த வீதிக்கு பிரபாகரன் பெயரைச் சூட்டினால் உலக முஸ்லிம்களே பிரபாகரனை என்றும் நினைவு கூர இலகுவாகிவிடும் ! ,

யார் இவர்கள் ?
புகலிடத்தில் புலிகளின் தலைவர் உருவாக்கிய கூட்டமைப்புக்கே வாக்களித்து தலைவரின் வழி செல்ல வேண்டும் என்று பிரச்சாரங்கள் இன்றுவரை முடுக்கி விடப்பட்டிருந்தன, அந்த நிலையில் ஆனந்தசங்கரியும், சித்தார்த்தனும் கூட இந்தப் புலிப் புகழ் பாடும் கூட்டணிக்குள் சங்கமித்து விட்டார்கள். அதுவெல்லாம் பரவாயில்லை.  ஆனால் முஸ்லிம் மக்களின் இயக்கம் வேறு இவர்களுடன் கூட்டணி அமைத்து முஸ்லிம்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது என்று  முஸ்லிம்களை நட்டாற்றில் விட்ட இனவாதிகளுடன் அதீத நம்பிக்கையுடன் செயற்படுகிறார்கள்.

இன்றைய தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்களைப் பொருத்தவரை எப்படி நடந்து கொண்டார்கள் என்பதனையும் இவ்வேளையில் ஞாபகப் படுத்தாமலிருக்க முடியாது . சிறிமாவோ பண்டாரநாயகாவின் அரசாங்கத்தில் பதியுதீன் மஹ்மூத் கல்வி அமைச்சராகவிருந்த போது அவர் 1973 ல்  தரப்படுத்தலை கொண்டுவந்தார் என்பதற்காக யாழ்ப்பாணத்தில் மாணவர் சங்கங்களினால் ( மாணவர் பேரவை உட்பட ) பாரியளவில் எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. அதற்கு தலைமை தாங்கி நடத்தியவர்  புலிகளின் ஆதரவாளராகவிருந்த , இப்போதெல்லாம் அடிக்கடி முஸ்லிம் தமிழ் உறவு பற்றி பேசும்  தமிழரசு கட்சியின் சிரேஷ்ட  உறுப்பினரும் துணைத்தலைவருமான  மாவை சேனாதிராஜா. இப்பேரணியில் அவர் முன்னணியில் நிற்க அவரது (சேனாதிபதியின் படையினர் ) பேரணியில்  என்ன கோஷமிட்டார்கள் என்று வரலாற்று பக்கங்களை புரட்டி பார்த்தால்  முஸ்லிம்களுக் கெதிரான இனவாதத்தினை  எந்தளவு அவர்கள் கொண்டிருந்தார்கள்  என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

அந்த பேரணியில் சேனாதிபதி உட்பட கலந்து கொண்ட இளைஞர்கள் "உம்மா படிச்சது அஞ்சாம் வகுப்பு , வாப்பா படிச்சது எட்டாம் வகுப்பு, நாங்கள் படிச்சது ஏ எல் ( அதாவது பல்கலைக் கழக தெரிவுக்கான  க. பொ . த. உயர்தரம்  ) என்று தங்களிடேயே வாழும் முஸ்லிம்களின் மனநிலை பற்றி கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ளாமல் , திமிருடன் சத்தமிட்ட கோசங்களில் ஒன்றுதான் அது.

அந்த பேரணியில் கூவிய இன்னுமொரு  சுலோகம் "பதியுதீனுக்கு மேலுக்கும் தட்டை கீழுக்கும் தட்டை " ( அதாவது தலை மொட்டை , அதுபோல் கீழேயும்  .... தட்டை-  இச்சுலோகத்தில் சமய அடிப்படையில் செய்யப்படும்  விருத்தசேஷனத்தை  தங்களின் வக்கிரமான எதுகை மோனையுடன் வெளிப்படுத்தினர்  ) விவஷ்தையறற முறையில் ஒரு தனி மனிதனையும் அவன் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தையும் கேவலப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டனர்.
இந்த ஊர்வலத்தில் இவ்வாறான கோசங்கள் எழுப்பப் பட்டவுடன் , அதனை ஆட்சேபித்து அங்கிருந்து வெளியேறியவர்கள் இலங்கை கமுனிஸ்ட் கட்சி உட்பட்ட இடது சாரிக் கட்சியினர். பின்னாளில் இந்த ஊர்வலம் பற்றி புஷ்பராஜா எழுதிய தமிழர் அரசியல் போராட்டம் ஒரு வரலாற்றுத் தொடர் என்ற நூலில் பின்வருமாறு   குறிப்பிடுகிறார். 

 ஊர்வலத்தில் அரசின் கல்வியமைச்சருக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப்படாமல் , பதியுதீன் மஹ்மூத் என்ற  முஸ்லிமுக்கு எதிராகக் கோஷம் எழுப்பப்பட்டது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான அவர்களைக் கேவலப்படுத்தும் கோஷங்களைத் தரம் கேட்ட வார்த்தைகள் மூலம் ஊர்வலத்தில் சென்றவர்கள் எழுப்பினர். அன்றைய காலகட்டத்திலேயே எமக்கு ஆதரவான முஸ்லிம் இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டோம். “  

அந்நூலில் அவர் அவ்வூர்வலம்  பற்றிக் குறிப்பிடுவது என்பது அவரைப் போன்ற சிலரின் மனட்சாட்சியின் குரலாகவும் உள்ளது.

" முஸ்லிம் மக்களுக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு முறையில், சமஷ்டி கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும் " என்று இன்று கூட்டணி சொல்லும் முஸ்லிம் மக்க்ளையுள் உள்ளிட்ட தீர்வை சிறிமாவோ 1988 ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி விஞ்ஞாபனத்தில் மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரபுடனும் மறைத்த தமிழ்க் காங்கிரஸ்  தலைவர் குமார் பொன்னம்பலத்துடன்  சேர்ந்து முன் வைத்தார். அந்தக் கூட்டில் இருந்து இறுதி நேரத்தில் அஸ்ரப் பின்னர் பிரேமதாசாவின் ஆதரவாளராக மாறி அவருக்கு வாக்களிக்க அவரின் கட்சியினரைக்  கூறினார். ஆனால் அவ்வாறான தீர்வை முன் வைத்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும். பின்னர் ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பொழுது ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களுக்கு கிழக்கிலே சுயாட்சி வழங்குவதாக ஒப்பந்தம் பண்ணினார். இவையெல்லாம் முன்னரும் நடந்ததே  , ஆனால் தங்களுக்கே எதுவுமில்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்,  கிழக்கிலே அதிகாரமிழந்து போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்,  எப்படி முஸ்லிம்களுக்கு சுயாட்சி வழங்குவது, அப்படி வழங்குவதற்கு இவர்கள் யார்?. முஸ்லிம்களுக்கு சுயாட்சி வழங்கப் போவதாக எந்த முஸ்லிம்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கதை விடுகின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் மீண்டும் தமிழ்த் தேசிய வேதாளங்களை மரத்தில் ஏற்றும் முயற்சியாகவே தோன்றுகிறது! 

மெதுவாகச் சென்றார்கள் வின்கல வேகத்தில் (பிரபாகரன்) சென்றார்கள் மக்களுக்கு தீர்வு பெற்றுத் தருவதாகக் கூறியவர்கள் ஆனால் இன்றும் தமிழ் மக்கள் நடைப்பயணம்தான் செல்கிறார்கள் !

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...