“பிரித்தானியாவை வெறுத்த மனிதன்” ! (“The Man Who hated Britain” ! )


எஸ்.எம்.எம்.பஷீர்

“ஜனநாயகம் , சமத்துவம் , சமூக அசைவாற்றல் , வர்க்கபேதமின்மை, என்பவை அதிகம் அடையபெற்ற ஒரு சகாப்தத்தில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வாழ்க்கையின்  ஒரு அடிப்படை விஷயம் தொக்கி நிற்கிறது, இந் நாடுகளில் அநேக ஆண்களும் பெண்களும் பொருளாதாரத்தில் உயர் நிலையில்  உள்ள  ஒப்பீட்டளவில் தொலைவில் உள்ள வகுப்பினரால்  இழுக்கப்பட்ட  பிற மக்களால்  ஆட்சி செய்யப் படுகிறார்கள், பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள், நிர்வகிக்கப்படுகிறார்கள், நீதி செய்யப்படுகிறார்கள் யுத்தத்திற்கு ஆணையிடப்படுகிறார்கள்."  ( ரால்ப் மில்லிபண்ட் Ralph  Miliband) தொழிற் கட்சியின் தலைவரான எட் மில்லிபண்ட் பிரித்தானிய “டெய்லி மெயில்” (daily Mail)  பத்திரிகையில்    தனது தந்தையான ரால்ப் மில்லிபண்ட் ஒரு பிரித்தானிய வெறுப்பாளர் என்று நியாயம் கற்பிக்கும் விதத்தில் வெளியான கட்டுரையாக்கம் குறித்து தான் ஒரு அரசியல்வாதியாக, தொழிற் கட்சித் தலைவராக அல்லாமல் ரால்ப் மில்லிபெண்டின் மகன் என்ற வகையில் டெய்லி மெயில் பத்திரிகை சொல்ல வரும் செய்தியின் நியாயங்கள் குறித்தும் பத்திரிக்கையின் தரம், அதன் பண்பியல் குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளார். ஏனெனில் அக்கட்டுரையானது மில்லிபண்டின் தந்தை ஒரு மார்க்சிஸ்ட் சிந்தனையாளர் என்றும் , பொதுவுடைமை பொருளாதார சிந்தனைகள் குறித்து அவரின் எழுத்துக்கள் என்பன அவரை ஒரு சோவியத் ஆதரவாளராக   நிலை நிறுத்துகிறது என்றும்  ஆகவே அவர் பிரித்தானியாவின் பொருளாதார சமூக ஒழுங்கியலுக்கு எதிரானவர். என்றும் அவரின் வாழ்க்கை காலத்தில் அவர் வெளியிட்ட அரசியல் சார்பு கருத்துக்களை  விமர்சனங்களை முன்வைத்து தனது பக்க நியாயத்தைடெய்லி மெயில்” பத்திரிகை முன் வைத்துள்ளது.

தொழிற் கட்சியின் தலைவரான எட் மில்லிபான்ட்டின் (Ed Miliband ) தந்தை ( Ralph Miliband ) மார்க்சிய சிந்தனைகளில் ஆர்வம் கொண்டிருந்தவர் . அவர் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியவர். பெல்ஜியத்தில் இருந்து  நாஸிகளின்  அடக்குமுறைகளின்   காரணமாக பிரித்தானியாவிற்கு அகதியாக வந்தவர்.

இரண்டாம் உலக யுத்தம் முடிவுற்றபின் தனது கல்வியைத் தொடர்ந்து முடித்து பல்கலைக் கழக ஆசானாக செயற்பட்ட  அடோல்ப் ரால்ப் மிலிபண்ட் தனது பெயரில் உள்ள "அடோல்ப்" எனப்படும் பெயரை , அது ஜேர்மனிய நாஜிகளின் தலைவரான ஹிட்லரின் முதற் பெயராக உள்ளதால் தனது பெயரில் இருந்து அதனை ரால்ப் மிலிபண்ட் நீக்கிக்  கொண்டார்.   

உண்மையில் இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது பிரித்தானிய கடற்படையில் படையாற்றிய ஒரு போர் வீரனை அவரின்  தனி மனித அரசியல் சிந்தனைக்காக அரசியல் கருத்துக்காக விமர்சிப்பது என்பதையும் விட அவரின் மகனையும் அந்த சிந்தனை வழிப்பட்டவர் என்று பிரித்தானிய மக்களை எச்சரிக்கை செய்யும் நிலைப்பாட்டை  திடீரென்று ஒரு வலது சாரிகள் நலன் சார்ந்த பத்திரிகை மேற்கொண்டுள்ளது என்பதுவே இங்கு ஆராயப்பட வேண்டிய கேள்வி. பிரித்தானிய இடதுசாரி இயக்க அரசியல் வரலாற்றை அறிந்தவர்கள் சற்று ஆழமாகவே இன்றைய அரசியல் நிலவரங்களுடன் இதனை அணுக வேண்டும்.

ரால்ப் மில்லிபண்ட்  தொழிற் கட்சியில் அங்கத்தவாரக இருந்த போதும் புதிய தொழிற் கட்சி சிந்தனைகளை உருவாக்குவதில் இவரின் வகி பாகம் குறிப்படத்தக்கது, எரிக் ஹோப்ஸ்வேர்மும் ஆரம்பகால தொழிற் கட்சியின் நலனொம்புக் கொள்கைகளில் ஆலோசனைகள் நல்கி உள்ளார். சோசலிஷ சிந்தனைகளில் இருந்து தொழித் கட்சி வெளியேறிச் செல்கிறது என்பதை சுட்டிக் காட்டியது மட்டுமல்ல தனது அரசியல் கருத்துக்களை எழுத்துருவாக்கினார்.  அவை  நாடாளுமன்ற சோஷலிசம்”  (Parliamentary Socialism) என்ற பெயரில் 1961ல் வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற முறைமை உன்னத சோஷலிஸ முறைமையை உண்டாக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்

இவர் , மார்க்ஸ்சிசம் குறித்தும்  , பொதுவுடமைக்  கொள்கையை கொண்டு  பிரித்தானியா செயற்படுவது குறித்தும், முதலாளித்துவ சமூகத்தில் தேசம் குறித்தும் Marxism and Politics, Parliamentary Socialism, Divided societies, , Socialism for sceptical age, The State and capitalism, The State in capitalist Society –The Analysis ,  போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் போன்ற நூல்கள் முதலாளித்துவ ஐரோப்பிய நாட்டில்   சோஷலிஸ கொள்கைகள் பற்றிய நம்பிக்கைகளை தொழிற் கட்சி மூலம் முன்னெடுக்க முடியாது போனதும் சோஷலிசத்திற்கு பதிலாக தொழிற்கட்சி , அதற்கான அடிப்படை கொள்கைகளைக் கைவிட்டு தொழிற்கட்சிக்கான இசம் ( "Labourism") ஒன்றை தோற்றுவித்ததை அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

இங்கிலாந்தில் இடது சாரிச் சிந்தனையாளர்களுடன் நெருக்கமான உறவைப் பேணியவர் , அந்த வகையில் அண்மையில் காலம் சென்ற உலக சமூக நலச் சிந்தனைவாதியும் வரலாற்று ஆசிரியருமான எரிக் ஹோப்ஸ்வேப்புடனும் நெருங்கிய குடும்ப நட்பினைப் பேணியவர்.

“The Israel dilemma “ என்ற நூல் ரால்ப் மில்லிபன்டுக்கும் அவரின் நண்பரும் இடதுசாரியுமான  லிப்மன் ( Liebman)  என்பவருக்கும் இடையே பரிமாறப்பட்ட கடிதங்களை தொகுத்து வெளியிடப்பட்ட நூலாகும். இந்த நூலில் தொகுப்பட்ட கடிதங்கள்  இஸ்ரேலின் பாதுகாப்பு  , பாலஸ்தீனத்தின் உரிமை , முரண்பாட்டு தீர்க்கும் உபாயங்கள் , அரபுகளுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையே நிரந்தர அமைதிக்கான ஆலோசனைகள் குறித்து  மதச் சார்பற்ற  ஐரோப்பாவில் வாழும் இரண்டு இடது சாரி யூதர்களின் ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமாக  அமைந்துள்ளது.

ஈராக் யுத்தத்தினை தொழிற் கட்சி ( டோனி பிளயரின்  காலத்தில்)  ஐக்கிய நாடுகள் சபையினையும் குழிப் பறிப்புச் செய்து யுத்தம் தொடுத்தது பிழை என்றும் , அந்த பிழையான யுத்தமானது ஐக்கிய இராச்சிய மக்களையும் நாட்டையும் இரண்டுபடுத்திவிட்டது என்று தான் தலைவராக நியமிக்கப்பட்டவுடன் நடைபெற்ற கட்சி மாநாட்டில் முதன் முதலில்  தொழிற் கட்சியின் சார்பில் மில்லிபெண்ட் ஒரு பகிரங்க சுயவிமரிசனத்தை முன் வைத்தவர்.

பேரழிவு ஆயதங்களை ( Weapons of Mass Destruction) சதாம் ஹுசைன் இராக்கில் வைத்திருக்கிறார் என்று பொய்க் குற்றம் சாட்டி யுத்தம் தொடுத்து இராக்கியின் பேரழிவுக்குக் காரணமான    டோனி பிளையர்  அமெரிக்காவுடன் சேர்ந்து தான் தொடுத்த யுத்தம் தவறானது என்றோ அல்லது அதற்காக மன்னிப்பையோ  இதுவரை கோராத நிலையில் மில்லிபெண்ட் மிகவும் துணிச்சலுடன் இராக் யுத்தத்தை தமது கட்சியின் தவறு என்பதை சொல்லியிருந்தார்.

இவரின் சமவுடை சிந்தனையின் அடிப்படையிலான  கருத்துக்கள் தொழித் கட்சியின் முன்னாள் தலைவரான பிரபு கின்னோக்கையும் மீண்டும் கட்சியில் ஈடுபாடு கொள்ள வைத்திருக்கிறது . நவீன தலைமுறையின் தலைவராக அவரைக் காண்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். டோனி பிளையர்  காலத்தில் தொழிற்  கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து மிகத் தூரம் சென்றுவிட்ட கட்சியினை மீண்டும் அதன் கொள்கைத் தளத்தில் பயணிக்க,  அதிலும் சமதருமக்கொள்கை அடிப்படையிலான உழைக்கும் வர்க்க மக்களின் நலன் சார்ந்த பல கொள்கைத் திட்டங்களை எட் மில்லிபண்ட் நாளுக்கு நாள் முன் வைத்து வருகிறார். அதனால்தான் முன்னாள் தொழிற் கட்சியின் தலைவரான கின்னோக் " எங்களின்  கட்சியை நாங்கள் மீண்டும் பெற்று விட்டோம் " (“We have got our party back”) என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். தாட்சரின் ஆட்சிக் காலத்தில் மிகுந்த சவாலாக விளங்கிய தொழிற்  கட்சித் தலைவர் என்ற வகைளில் கின்னோக்கின் (Lord Kinnock) வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தன.

தந்தையின் சமவுடமைக்கோட்பாடுகளில் பாடம் கற்றுக் கொண்ட  எரிக் ஹோப்ஸ்வேர்மின்  (Eric Hobsbawm)  குடும்ப நட்பின்  மூலம்  பெற்ற கருத்துப் பரிமாற்ற சிந்தனைபோக்குகள் மில்லிபன்டின் சிந்தனைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது இப்பொழுது அவரின் சாமான்ய உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த அவரின் கொள்கைப் பிரகடனங்கள் மூலமாக நன்கு புலப்படுகிறது, 

இராக்கிய யுத்தம் தொழிற் கட்சியின் மிகப் பெரும் தவறு  என்று இப்பொழுது எட் மில்லிபண்ட்  சொன்னது போல் , சிரியா மீதான தாக்குதலுக்கு ஆதரவாக அமெரிக்காவுடன் சேர்ந்து பயணிக்க அண்மையில்  பிரித்தானிய நாடாளுமன்றத்தில்  எடுக்கப்பட்ட  வாக்கெடுப்பு தோல்வி அடையச் செய்ததில் எட் மில்லிபண்ட் தனது தந்தை வழி சென்றுள்ளார் என்பதை இங்கு நினைவு கூற வேண்டி உள்ளது, அவரின் தந்தை ரால்ப் மில்லிபண்ட் கூட வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவை நியாயப்படுத்திய தொழிற் கட்சி பிரதமர் ஹரோல்ட் வில்சனின்  செயலை தொழிற் கட்சியின் வரலாற்றில் மிகவும் கேவலமான அத்தியாயமாகும் ("Most shameful chapter in the history of the Labour Party")  என்று குறிப்பிட்டிருந்தார்.

எது எப்படி இருப்பினும்  எட் மில்லிபண்ட்டின் தந்தை மீதான டெய்லி மெயில் குற்றச்சாட்டு எழுந்த  பின்னணியைப்  பார்க்கின்ற பொழுது சிரியாவிற் கெதிரான யுத்த முனைப்புக்கு எதிராக எட் மில்லிபண்ட்  செயற்பட்டது ,  அமெரிக்காவின் , பிரான்சின் மக்கள் பிரதிநிதிகளின் அவையை நாடித் தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய  படிப்பினை ஊட்டும் சூழ்நிலையை ஏற்படுத்தியமை, ஐக்கிய நாடுகளை மேவி செயற்பட வேண்டிய அழுத்தத்தை ஏற்படுத்தியமை என்பன வலது சாரி சக்திகளின் ஆத்திரத்தை அதிகரித்திருந்தன. விதிவிலக்காக பிரான்ஸ் தலைவர் ஹொலண்ட் ஒரு சோஷலிச கட்சியின் ஆட்சித் தலைவராக இருப்பினும் ஆக்கிரமிப்பில் அவர் மாலி தொடக்கம் சிரியா வரை முன்னணியில் இருப்பது மிகவும் ஆச்சரியத்தை தருகிறது.

ஆனாலும் எட் மில்லிபண்ட்  ,  சிரியா மீதான இராணுவ ஆக்கிரமிப்பற்கு எதிராக அமெரிக்காவிற்கும் அதன் சார்பு அணிகளுக்கும்  ஒரு நல்ல பாடத்தை போதித்துள்ளார் எட் மில்லிபண்ட். மேலும் தொழிற் கட்சியின் இறுதி ஆட்சிக் காலத்தில் சக்தி  , கோள வெதும்பல் பிரதி அமைச்சராக ( Energy and global warming ) இருந்த அனுபவத்துடன்  தமது கட்சி எதிர் காலத்தில் பதவிக்கு வருமிடத்து சக்தி கட்டணங்களை உறையச் செய்வேன் என்று வேறு வாக்குறுதி அளித்துள்ளார். இதையொத்த அன்றாடங்காச்சி மக்களின் அவலங்களை பற்றிய அவரின் வாக்குறுதிகள், அதிலும் குறிப்பாக பொருளாதார மந்தம் பீடித்துள்ள சூழ் நிலையில்,  சாத்தியமாகுமா என்ற கேள்விக்கப்பால் , முதலாளித்துவ பல்தேசிய நிறுவனங்களின் இலாபச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட  பிரித்தானியாவில் அப்படியான மக்கள் நலன் நோக்கிய கொள்கைப் பிரகடனங்கள் வலது சாரி சக்திகளை ஆத்திரமடையச் செய்திருக்கின்றன.
அந்த வகையில் 1994ல் காலமான  எட் மில்லிபண்டின் தந்தை ஒரு பிரித்தானிய வெறுப்பாளர் என்பதாகவும் அவரின் மகன் ஆட்சிக்கு வருமிடத்து தந்தையின் கொள்கை வழி நிற்பார் , சோசலிசக் கொள்கையினூடாக சோவியத் சார்பு ஆரசியல் முன்னெடுக்கப்படும் என்பதாகவே எட் மில்லிபண்டுக் கெதிராக எதிர்ப் பிரச்சாரங்களை டெய்லி மெயில் முன்னெடுத்துள்ளது.   மில்லிபண்டின் தந்தை தேச வெறுப்புக் கொள்கைகளைக் கொண்டிருந்தார் என்று  பரப்பிவிடப் பட்டிருக்கின்ற கருத்தானது எட் மில்லிபண்டின் அரசியல் எதிர்காலத்துக்கு  ஆபத்தானது .    ஆனாலும் ஆட்சியிலுள்ள மரபுவாதக் கட்சியின் தலைவராகட்டும் , தாராளவாதக் கட்சியின் தலைவராகட்டும் எட் மில்லிபண்டின் மீது அனுதாபம் கொண்டிருக்கிறார்கள்.

இதன் விளைவாக பத்திரிகை சுதந்திரம் என்பது குறித்து  அரச பட்டயம் (Royal Charter) மூலம் கட்டுப்பாடுகளை கொண்டு வரப்படல் வேண்டும் என்பதற்காக விவாதம் ஒன்றினை எதிர்வரும் புதன்கிழமை பிரிவுக் கவுன்சிலில் (Privy Council)  இடம்பெற உள்ளது. என்றாலும் பத்திரிகை சுதந்திரத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வருவதில் எட் மில்லிபாண்டுக்கு உடன்பாடில்லை.

தனது  தந்தை ரால்ப் மில்லிபண்ட்  மூலம் எட் மில்லிபண்ட் மீதான தாக்குதல்கள்   நாடாளுமன்றத்தேர்தல் நெருங்க நெருங்க  உக்கிரமடையும் , ஏனெனில் ஒரு நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் ஊடகங்களும் இயங்குகின்றன , அதேவேளை தனது சிந்தனைகளில் எந்தளவு எட் மிலிபண்ட் உறுதியாக இருக்கபோகிறார் என்பதும் அந்த உறுதியை விட அவரின் கொள்கைகளை மக்கள் எப்படி எதிர்காலத்தில் முதலாளித்துவ  படிமுறை  சிந்தனைகளில் இருந்த வேறாக்கி பார்க்கப் போகிறார்கள்,  எட் மில்லிபண்டின் தலைமையின் கீழ் தொழிற் கட்சி எந்தளவு மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளில் , வெளிநாட்டுக் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருக்கப் போகிறது , என்பதும் எம்முன் எழும் கேள்விகளாகும்!
06/10/2013

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...