இருபத்தியொரு வருடங்களின் இரத்தம் சுவறிய நினைவுகள் !! பொலன்னறுவை ( அக்பர்புரம் , அகமட்புரம் ) படுகொலைகள் (15/10/1992)



எஸ்.எம்.எம்.பஷீர்

இதே திகதியில் இன்றைக்கு சுமார் 21 வருடங்களுக்கு முன் அதிகாலைப் பொழுது புலர இன்னும் ஓரிரு  மணித்தியாலங்கள் இருந்தன. இன்னும் இருள் மண்டிக் கிடக்கிறது. கதிரவன் நாளை வழக்கம் போல் வைகறையில்  எழுவான் என்ற நம்பிக்கையுடன்தான்  அகமட்புரம் , அக்பர்புரம் கிராம மக்கள் அதற்கு முன் தினம் துயிலச் சென்றிருந்தனர்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக மறுநாள் காலை அக்டோபர் மாதம் பதினைந்தாம் திகதியை தங்களின் இரத்தமும் தசையும்  காக்கும் எத்தனத்தில் அல்லோல கல்லோலப்பட்டு அவலத்துடன் விடியப் போகிறது என்று அவர்கள் யாரும் கனவிலும் நினைத்திருக்கவில்லை.


அடர்ந்த காடுகள் சூழ்ந்த இரண்டு கிராமங்களிலும் காலங்காலமாக  தான் உண்டு தன் பாடு உண்டென்று விவசாயமும் . கால்நடை வளர்ப்பும்,  காட்டுத் தொழிலும் செய்து வாழ்ந்த அப்பிரதேச முஸ்லிம்  கிராமங்களில் வாழ்ந்த மக்கள் புலிகளின் கிழக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இன சம்ஹார தொடர்ச்சியின் இலக்காக மாறினார். அக்டோபர் பதினைந்து அவர்களின் இன்னுயிர்களை மனித வேடம் தரித்த புலிகள் கொன்றழித்த தினம்.   

பொலன்னறுவையிலுள்ள பள்ளியகொடல்ல,  பங்குரான ஆகிய புராதன சிங்கள கிராமங்களின் எல்லைப்புறக் குடியேற்ற முஸ்லிம்  கிராமங்களான அஹமட்புரம் , அக்பர்புரம்  முஸ்லிம்களை இலக்கு வைத்து புலிகள்  மேற்கொண்ட மிலேச்சத்தனமான அக்டோபர் பதினைந்து 1992 தாக்குதல்கள் 1990 களில் காத்தான்குடி ஏறாவூர் போன்ற முஸ்லிம் பகுதிகளில் மேற்கொண்ட தாக்குதல்களை ஒத்ததாகும்.

இந்த இரண்டு முஸ்லிம் கிராமங்களின் வட மேற்கில் அமைந்துள்ள அழிஞ்சிப் பொத்தானை எனும் முஸ்லிம் கிராமத்தின் மீது புலிகள் இதே வருடம் ஏப்ரல் மாதம் 29ம் திகதி ஒரு தாக்குதல்களை நடத்தி அங்கு 69 பேரைக் கொன்றிருந்தனர். மேலும் அக்பர்புரம் அஹமட்புரம் முஸ்லிம்களிடம் இருந்து கால்நடைகளை கபளீகரம் செய்வது , வரி வசூலிப்பது என்று தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்த புலிகளின் உச்சக் கட்ட நடவடிக்கையே அக்டோபர் மாதம் பதினைந்தாம் திகதி புலிகள் நடத்திய தாக்குதல்களாகும்.

"புலிகள் வருகிறார்கள் புலிகள் வருகிறார்கள் ஓடுங்கள் ஓடுங்கள்"  என்று சத்தமிட்டே புலிகளே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மக்களை வெளியேறப் பண்ணினார்,

அவ்வாறு தங்களின் உயிரைக்  கையில் பிடித்துக் கொண்டு வெளியேறியோரை ஈவிரக்கமின்றி கத்தியால் வெட்டியும் துப்பாகிகளால் சுட்டும் புலிகள் கொன்றனர். புலிகள் இவ்வாறுதான் ஏறாவூரிலும் முஸ்லிம்களை  வீடுகளிருந்து  வெளியே ஓடச் செய்து சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்தக் கொளைஞர்களில் ஒரு புலிக் கொலைஞனை அடையாளம் கண்டு கொண்ட ஒரு முஸ்லிம் பெண்மணி  அப்புலியால் சுடப்பட்டார், ஆயினும் அவர் காயங்களுடன் உயிர்தப்பினார் என்பது அவரின் வாக்கு மூலம் இன்னும் பலரின் வாக்கு மூலங்களுடன்  சேர்த்து புலிகள் இந்தக் கொலைகளைச் செய்தனர் என்பதை நீருபித்தது. 

புலிகள் முதன் முதலில் இக்கிராமத்தில் செப்டெம்பர் மாதம் 1991 ஆம் ஆண்டு ஒரு தாக்குதலை மேற்கொண்டிருந்தனர், அந்த தாக்குதலில் 16 முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அத் தாக்குதலை முன்னின்று நடத்திய புலி முஸ்லிம் ஊர்காவல் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இது புலிகளுக்கு ஆத்திரத்தை ஊட்டியது. அக்கிராம மக்கள் தங்களைப் புலிகலிடமிருந்து பாதுகாக்க  இராணுவ உதவியை நாடி ஊர்காவல் படை  அமைத்திருந்ததும் , பாதுகாப்புக்கு ஆயுதங்களை போலீஸ் காவலரண்களைப் பெற்றிருந்ததும் , தங்களின் தலைவர்களில் ஒருவரைக் கொன்றதும் புலிகளின் 1992ஆம் ஆண்டு அக்டோபர் 15 தாக்குதலுக்கு காரணமாக அமைந்து என்று கருதப்படுகிறது,

ஆனால் "தமிழ் ஈழ" எல்லைக்குள் வராத இந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலின்  பின்னணி என்னவென்று நோக்குமிடத்து . புலிகளின் மூலோபாய நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே இத்தாக்குதல்கள் அமைந்தன. எல்லைப்புறங்களில் உள்ள தமிழ் கிராமங்களில் தமிழ் கிராம சிறுவர்களை சேர்த்து இனவாத முஸ்லிம் விரோத விசமூற்றி அவர்களை தங்களின் தேவைகளுக்கு புலிகள் பயன்படுத்தினர். புலியில் சேர்ந்த இளம் சிறார்கள், இரக்கமற்ற கொலைகளை செய்வதற்கு , அதிலும் அப்பாவி பெண்களின் சிறுவர்களின் குழந்தைகளின் இரத்தத்தில் குளிப்பதற்கும் மனித உயிர்களைக் காவு கொள்வதில் ஈவிரக்கமற்றுப் போவதற்கும் பயிற்சிக் களமாக இப்பிரதேசத்தில் மனித உயிர்களுடன் விளையாட அவர்கள் பயிற்று விக்கப்பட்டனர். இப்படியேதான் சிங்கள எல்லைப்புறக் கிராமங்களிலும் பலிகளில் சேர்ந்த இளம் சிறார்கள்
கொலைக் களப் பயிற்சி பெற்றனர். மேலும் இக்கொலைகள் மூலம் பரவலாக கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் புலிகள் பற்றிய ஒரு உளப்பயப் பீதியுடன் வாழும் சூழலை ஏற்படுத்தவும் , எல்லைப்புறங்களில் தாக்குதல் மேற்கொள்வதன் மூலம்  கிழக்கில் தமிழர்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்கள் அடங்கி வாழ வேண்டும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தனர். மேலும் புலிகளின் வன்னி- திருமலைக் காட்டுப் பாதைப் பயனத்தில் இந்த பிரதேசங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை , அங்கு வாழ்ந்த மக்களும் தமக்கு எதிராக செயற்படுவதை தடுக்க , அடக்கி வைத்திருக்க முயன்ற பல முயற்சிகளின் ஒரு தாக்குதலாகவே இந்த அக்டோபர் 15 தாக்குதலும் அமைந்தது.

 ஆனால் புலிகளின்  முஸ்லிம்  மக்கள் மீதான மிலேச்சத்தனமான தொடர் அடக்கு முறைகள் உயிரழிப்பு தாக்குதல்களாக மாறிய பொழுது முஸ்லிம் தரப்பிலிருந்தும் , அவர்களுக்கு துணை புரிந்த காவல்த் துறை , மற்றும் இரானுவத் தரப்பிலிருந்தும் தமிழ் மக்கள் வாழ்ந்த அயல் கிராமங்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் பல அப்பாவித் தமிழ் மக்களும் உயிரிழந்தனர். ஆனால் இந்த பின் விளைவுகளை அறிந்தே புலிகள் முஸ்லிம் சிங்கள பொதுசனங்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இனங்களுக் கிடையிலான தீராத பகைமை மூலம் தமது இன வெறியை உரமூட்டி , புலிகள் தமது  நீண்டகால மூலோபாய தனித் தமிழ் ஈழ திட்டங்களில் குறியாயிருந்தனர். அதனால் தமிழ் மக்களின் உயிரிழப்பு அவர்களைப் பொருத்தவரை ஒரு வேள்விக்கு இடப்பட்ட ஆகுதி என்றே கருதினர். இறுதியிலும் முள்ளி வாய்க்காலிலும் புலிகள் மக்கள் அழிவு பற்றி பொருட்படுத்தவில்லை. அவர்களைக் கேடயமாக பயன்படுத்தினர்.

சுமார் அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கி புலிகள் சுமார் காலை 7.30 வரை மேற்கொண்ட தாக்குதலில் ஒரு குழுவினர் கொலை செய்யவும் , மறு குழுவினர் கொள்ளையிடவும் இன்னுமொரு குழுவினர் வீடுகளுக்கு தீ மூட்டினர் . பள்ளியகொடள்ள படுகொலைகள் என பொதுவாக அறியப்பட்ட புலிகளின் அக்டோபர் 15 அக்பர்புரம் அஹமட்புரம்  படுகொலைகளில் சுமார் 187 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கோரக் கொலைகளில் ஒன்றரை வயதுக் குழந்தை தொடக்கம் , குழந்தைகள்,  கர்ப்பிணிப் பெண்கள் என்று பல அப்பாவி உயிர்கள் தூக்கத்தில் இருந்து விழித்தெழுப்பப்பட்டு வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டு இன்றுடன் 21 வருடங்கள் கடந்து விட்டன. அந்த மக்களின் இழப்புக்களும் அதனால் பின்னர் விளைந்த எதிர் தாக்குதல்களால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் இழப்புக்களும் மனதில் கொள்ளத்தக்கவையே.! இனி இனத்தின் பெயரால் மதத்தின் பெயரால் மனிதர்களை மனிதர்கள் காக்க கற்றுக் கொள்ள வேண்டும் , அதுவே இந்த துன்ப நினைவுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய மிகப் பெரிய பாடமாகும். 

15/10/2013



No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...