அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (8)
"தொடங்குவார் சிலர் அதை முடிப்பதில்லை!"
 எஸ்.எம்.எம்.பஷீர் 

வரங்கொடுக்கும் தேவதைகள்
வந்தபோது தூங்கினேன்
வந்தபோது தூங்கிவிட்டு
வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்

கரங்கொடுக்கும் வாய்ப்புக்களை
கை கழுவி வீசினேன்
கை கழுவி வீசிவிட்டு
காலமெல்லாம் பேசினேன்
                         மு.மேத்தா  ( கண்ணீர்ப் பூக்கள் )வட மாகான தேர்தல் தேர்தல் பற்றிய செய்திகள் மெதுவாக அரச தரப்பிலிருந்து வெளிவரத் தொடங்கியவுடன்  ஒருபுறம் , அத் தேர்தல்களை எதிர் கொள்வது பற்றிய முடிவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  மேற்கொள்ள முன்னரே  மறுபுறம்  அரசாங்கமும் 13வது திருத்தச் சட்டத்தினை நீர்த்து போகச் செய்யம் அரசியற் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.   அந்த செயற்பாடுகளுக்கு சட்ட வலுவாக்கமளிக்கும் வகையில்  மாகாணங்களின் இணைப்பிற்கெதிராக   குறிப்பாக  19வது திருத்தச் சட்டத்தினையும் கொண்டுவர  உத்தேசிக்கும் சூழலில்பிராந்திய புவிசார் அரசியல் நலன்களை   கருத்திற்கொண்டும் உள்நாட்டு (தமிழ் நாட்டு) அரசியல் நலன்களைக்   கருத்திற் கொண்டும் மீண்டும் இந்தியா இலங்கையுள் மூக்கை  நுழைக்க முயற்சிக்கிறது.   தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளும் இயக்கங்களும் அதற்கான சூழலை ஏற்படுத்தி  வருகின்றனர் . இலங்கை அரசும் இந்தியாவின் ஒப்பந்தம்,  பிராந்திய வல்லாதிக்க  ஆளுமையை ,  இன்றைய சர்வதேச அரசியலில் இந்தியா வகிக்கும் பாத்திரத்தினையும் கருத்திற்கொண்டு , தவிர்க்கவொன்னாமல்  தனது ஒப்பந்தக் கடப்பாடுகளை இந்தியாவின் அங்கீகாரத்துடன் மாற்றிக்/திருத்திக் கொள்ள முயற்சிக்கிறது. 


தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி புளட்  இயக்கம் ஆகியன இந்தியா சென்று இந்திய அரசியல் தலைவர்களைச் சந்தித்து 13ம் திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போவதிலிருந்து காப்பாற்ற , மேலும் பலப்படுத்த பிரிந்த வட  கிழக்கை இணைக்க கோரிக்கை விடுத்திருக்கின்றனர்  அதேபோல் அரசும் இரு மாகாணம்  அதிகாரத்தை இல்லாதொழிக்க இந்திய    அரசின் அனுசரணையை அல்லது  அதன் ஆமோதித்தலைப்  பெற தமது பிரதிநிகளாக வெளிநாட்டு அமைச்சர் ஜீ .எல்.பீரிசையும்   பசில்  ராஜபக்சவையும் அனுப்பியிருந்தனர்.

இலங்கை குறித்த தென்னிந்திய அரசியல் ஆய்வாளரான என். சத்தியமூர்த்தி , நாடாளுமன்ற தெரிவுக் குழுவினை பகிஸ்கரிப்பது  குறித்து கூறுகையில் " பிரபாகரனுக்கு பிந்திய சகாப்தத்திலும் சிங்கள தேசியவாத விமர்சனங்களுக்குள்ளாகும்     அமிர்தலிங்கத்தின் அரசியல் விளையாட்டிலிருந்து தமிழர் தேசிய கூட்டமைப்பால் விடுபட முடியவில்லை என்பதும்;  இந்த அடையாளத்திலிருந்து  தமித் தேசியக் கூட்டமைப்பு விடுபடாமலிருக்கிறது என்றும் அவர் சொல்வது மிகச் சரியாகவே எனக்கும் தோன்றுகிறது.
அந்தப் பின்னணியில் பார்கின்ற பொழுது , 13வது திருத்தச் சட்டம் பற்றிய தமிழர் விடுத்தக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் என்ன நிலைப்பாட்டினை எடுத்திருந்தார் என்பது பற்றி நான் முன்னர் எழுதிய கட்டுரை  ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன் ,

திட்டமிட்ட  சிங்கள குடியேற்றங்களை இலங்கை அரசு ஏற்படுத்தியதாக அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு மகஜர் ஒன்றினை கையளித்தனர். அப்போதே அந்த மகஜரில் மாகான சபை அவ்வாறான குடியேற்றங்களை தடுப்பதற்கான அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். எனவே காணி அதிகாரம் தேவை என்பதை , அதனூடாக அரச குடியேற்றத்தை தடுக்க இந்திய அரசின் உதவியை கூட்டணியினர் அன்று நாடியிருந்தனர். அதேவேளை தமிழ் விடுதலை கூட்டணியின் தலைவரான அமிர்தலிங்கமும் பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. ஆகஸ்து மாதாம் 1987 ஆண்டு  ராஜீவ் காந்தி  சென்னை மரீனா பீச் கூட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும் போது இந்தியாவிலுள்ள  மாநில அரசுகள் பெற்றுள்ள சுயாட்சி அதிகாரத்துக்கு குறையாத அளவு அதிகாரங்களை ஸ்ரீ லங்கா தமிழர்கள் பெறுவதை உறுதி செய்வதாக கூறியிருந்தார்   என்பதால் இந்திய அரசின் அனுசரணையுடன் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் அதற்கு நிகரானதா என அமிர்தலிங்கம் சென்னையில் 1988 ஆம் ஆண்டு தை மாதம் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் கேள்வி எழுப்பியிருந்தார் .  ( முழுக் கட்டுரையையும்  பார்க்க (   http://www.bazeerlanka.com/2012/02/httpwwwtheneecomhtml280212-4html.html )

சிங்களத் தேசிய வாத சக்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  உடுக்கை அடித்து பேயாட்டம் ஆடுவதனால்  , உருவேறி ஆடுகிறார்கள் . அதற்கான காரணம் தமிழ்த் தேசிய அமைப்பின் அமிர்தலிங்க விளையாட்டுத்தான்.

“72 மணித்தியாலத்துக்குள் புலிகளை ஆயுத பரிகரணம் செய்வோம் என்று இந்தியா வாக்குறுதியளித்தே   இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கைச் சாத்திட்டது , அவ் வாக்குறுதியை இந்தியா நிறைவேற்றத் தவறி விட்டது. எனவே இந்திய இலங்கை ஒப்பந்தம் சட்டரீதியானது அல்ல என்று கூறுகிற ஹெல உறுமய பாட்டாளி சம்பிக்கவின் கருத்தை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு, அவர் கூறும் இன்னுமொரு விடயம் குறித்து கவனத்தைக் குவித்தால் , கூட்டமைப்பினரினால் கிளர்ந்தெழும் (சிங்கள ) தேசிய வாதத்தைக் காண முடியும். இந்தியா , ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம் , அல்லது பாகிஸ்தான் அமைந்தது போல் நேரடி நடவடிக்கை மூலம் ஈழம் அமைப்போம் என்று சம்பந்தன் மட்டக்களப்பில் பேசியதாக பாட்டாளி சம்பிக்க குறிப்பிடுகிறார். ( India promised President Jayewardene that it would disarm the LTTE within 72 hours when the Indo-Lanka accord was signed. But India failed to keep this promise. Therefore, it is an illegal document. Sampanthan during a speech made in Batticaloa said they plan to take their struggle forward with the help of India and United States of America (USA) or they would establish an Eelam state through direct action in the manner Pakistan did.” )

அப்படி அவர் பிறநாட்டு உதவியுடன் அல்லது உதவியின்றியோ நாட்டைப் பிரிக்கப் பேசியிருந்தால் இலங்கையின் அரசியல் யாப்பின் ஆறாவது சட்டத் திருத்தத்தினை  , நாடாளுமன்றத்தில் தான்  எம்.பீ யாக பதவியேற்ற பொழுது எடுத்த  சத்தியப் பிரமாணத்தை மீறி உள்ளார். ஏனெனில்   

"             …………ஆகிய நான் இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் அரசியலமைப்பை உறுதியாகப் போற்றி காப்பேன் என்றும் இலங்கையின் ஆள் புலத்துக்குள்ளாகத்  தனி அரசொன்று  தாபிக்கப்படுவதற்கு நேரடியாகவோ , மறைமுகமாகவோ , இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவு அளிக்கவோ   , நிதி உதவவோ,  ஊக்குவிக்கவோ பரிந்துரைக்கவோ மாட்டேன் என்றும் பயபக்தியுடன் உறுதி செய்கிறேன் சத்தியம் செய்கிறேன்.
என்று ஆறாவது திருத்தச் சட்டத்தின்படி எடுக்க வேண்டிய சத்தியப்பிரமாணம் நான்காவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

கடினமான சட்டத்தை அரசு கொண்டிருந்தாலும் அதனை அமுல்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக் கெதிராக நடவடிக்கை எடுக்கும் விடயத்தில் அரசு வெறும் விசாரணைகளை சிலர் அவ்வப்பொழுது மேற்கொண்டு வந்திருக்கிறதே  ஒழிய சட்டபூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. அதற்கான சூழல் இலங்கை அரசுக்கு உகந்ததாகயில்லை.

மீண்டும் முருங்கை மரமேறும் வேதாளங்கள் 

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் 13வது திருத்தச் சட்டம் தொடர்பிலான திருத்தங்கள் பற்றிய கருத்துக்கள் விவாதிக்கபப்ட உள்ளன. தங்கள் தரப்பு நியாயங்களை இந்தியாவிற்கு ஓடிச் சென்று ஒப்பாரி வைக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் அல்லது ஆனந்த சங்கரி போன்ற தமிழ்த் தலைவர்கள்   நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலாயினும்  கலந்து கொண்டு ஏன் தங்கள் கருத்துக்களை நிபந்தனையின்றி   முன்வைக்கக் கூடாது. இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு இந்தியாவை அல்லது ஏனைய சர்வதேச நாடுகளை இலங்கை மேவி நடக்க  வேண்டும் என்பதற்காக இலங்கை மீது யாரும் ஆதிக்கத் திணிப்பினை செய்ய முடியாது என்ற தேசியவாதக் கருத்து மேலெழும் நேரத்தில் , தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடாக்கண்டன் கொடாக்கண்டனாய் வில்லங்கம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.


இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாங்கள் ஏன் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஒரு நீண்ட கடந்த கால அரசுடனான தமது கூட்டக் குறிப்புக்களுடன் ஒரு பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் , வழக்கம் போல் தங்களின் "சட்ட  தொனியிலான" அறிக்கையை வெளியிட்டு தமது பக்கக் நியாயத்தை வெளியிட்டுள்ளார்கள். அரசின் மீது நம்பிக்கை இல்லை , மங்கள முனசிங்கவின் அறிக்கையில் இருந்து தொடங்க வேண்டும்   என்ற தமது கோரிக்கைக்கு   அரசு செவி சாய்க்கவில்லை , அரசின் நாடாளுமன்றத் தெரிவுக் குழு  வெறும் அரச நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் ஒரு உப குழுவே ஏனெனில் அதில் எதிர்க் கட்சி பிரதிநிதிகள் இல்லை .  அரசின் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் திஸ்ஸ விதாரண இல்லை , ஹக்கீம்  இல்லை  என்றெல்லாம் பல கவைக்குதவாத சாட்டுக்களை முன் வைத்திருக்கிறார்கள்  .


1957 பண்டா-செல்வா ஒப்பந்தம் வடக்கு மாகாணம் ஒரு பிராந்தியமாகவும்  கிழக்கு மாகாணம்  இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட  பிராந்தியங்களாக பிரிப்பதையும் ;, இரண்டு பிராந்தியங்கள் (மாகாணங்கள்) மாகான எல்லைகளைத் தாண்டி தங்களுக்குள் இணைந்து கொள்வது என்பதனை கொண்டிருந்ததால் , அவ்வாறான ஒப்பந்த ஏற்பாடுகள்   மூலம் வடக்கு கிழக்கு இணைந்து தமிழ் தாயக ஆட்சி உருவாகிறது என்று கூறி , அவ்வொப்பந்தத்திற்கு எதிராக ஜே ஆர். ஜெயவர்த்தனா கண்டிக்கு பாத யாத்திரை புறப்பட்டார் . அத்துடன் ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது.என்பது வரலாறு.

அதே ஜே ஆர் ஜெயவத்தனா அங்கத்துவம் வகித்த ஐக்கிய தேசிய கட்சியுடன் ஆட்சியமைக்க ஒத்தாசை வழங்கிய  தமிழரசுக் கட்சி 1965ல் டட்லி செல்வா ஒப்பந்தம் செய்து மாவட்ட  சபைகளை  அங்கீகரித்தனர் .  பின்னர் போயும் போயும் திருக்கோனேஸ்வரர் ஆலயத்தை புனித பிரதேசமாக பிரகடனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் முரண்பட்டு அரசாங்கத்தை விட்டு தமிழரசுக் கட்சி வெளியேறியது என்று சொல்லப்படுகிறது. அதனால் இறுதியில் டட்லி செல்வா ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டது.

சுமார் 30 வருடங்களின் பின்னர் , வரலாறு   எதிர்த் திசையில் பயணித்தது , எந்த ஜெயவாத்தனா எந்த அடிப்படையில் பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்தாரோ அதே ஜெயவர்த்தனாவை  கொண்டே  இந்திய தலையீட்டுடன் இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம்  வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக நிபந்தனையுடன் இணைக்கப்பட்டன. இம்முறை வடக்கு கிழக்கை தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசமாக ஆக்கிய  இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைச் சாத்தியமற்றதாக்கியவர்கள் தமிழ் மக்களின் "ஏக போக பிரதிநிகளான புலிகள்".  இந்த ஒப்பந்தம்  பண்டாவும் செல்வநாயகமும் கிழக்கில் முஸ்லிம்களையும் கருத்திற் கொண்டு இரண்டுக்கு மேற்பட்ட பிராந்தியங்களை கிழக்கில் கொண்டிருப்பதை பேசுகின்ற பொழுது இலங்கை இந்திய ஒப்பந்தம்  பொதுவாக தமிழ் பேசும் மக்களுக்கு என்று பொதுமைப்படுத்தியது  , இந்தியா முஸ்லிம்களைப்  புறக்கணித்து தனது பிராந்திய வல்லாதிக்க  ஆக்கிரமிப்பை இலங்கை மீது இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் திணித்தது. முரண் நகையாக , புலிகளும் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை  இந்தியா இவ்வொப்பந்தத்தின் மூலம் புறக்கணித்தது என்றே நடைமுறையில் இவ்வொப்பந்தத்தை புறக்கணித்தார்கள் .

மாகாண சபை அமைப்புக்களை அதன் ஏனைய அதிகாரங்களை  ஆதரிக்கின்ற பொழுதும் வாசு தேவ நாணயக்கார இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்களை இ ணைக்க வழி செய்யும்  சரத்துக்களை இரத்து செய்வதனை பற்றிய கேள்வியைப் பொருத்தவரை வட கிழக்கு மீண்டும் இணையும்  சாத்தியமில்லை என்பதால் அந்த சரத்து அவசியமற்றது , வடக்கு கிழக்கு இணைப்பு 1988 லே தோல்வி கண்டு விட்டது. வரதராஜப் பெருமாள் தனிநாட்டுக் பிரகடனம் செய்து  இரண்டு மாகாணங்களையும் பிரிபட நிர்பந்தித்து விட்டார். எனவே அந்த சரத்துக்கள் இரத்துச்  செய்யப்படுவது தேவையானதும் அவசியமானதுமாகும்  என்று குறிப்பிடுகிறார்.

இன்று திருத்தங்களை எதிர்நோக்கும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தைப்  பற்றி புலிகளின் தென்னிந்திய ஆதரவாளர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்

"சிங்கள அதிபர் ஜெயவர்த்தனேவின் நரித்தந்திரத்தால், போஃபர் ஊழலில் சிக்கி இருந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, மக்கள் கவனத்தைத் திசை திருப்ப ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம்தான், 1987 இந்திய- இலங்கை ஒப்பந்தம் ஆகும். அந்த ஒப்பந்தத்தில், வடக்கு மாகாணத்தோடு கிழக்கு மாகாணத்தை இணைப்பது குறித்து, கிழக்கு மாகாணத்தில் மூன்று மாத காலத்துக்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ' என்று மட்டுமே கூறி உள்ளார்.
ஆனால் இந்த  ஒப்பந்தப்படி புலிகள் செய்த ஆயுத ஒப்படைப்பு தில்லுமுல்லுகள் பற்றி வாய் திறக்காமல் , சர்வஜன வாக்கெடுப்பினை புலிகளின் ஆயுத  ஒப்படைப்பின் அடிப்படையிலே ஏற்றுக்  கொல்லப்பட்டது என்பது பற்றி கருதச் சொல்லாமல் இந்திய இலங்கை அரசுத் தலைவர்களை மட்டும் குற்றம் காணுகிறார்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த பிரச்சனைகளைப்  பற்றிய  லோக் சபாபில் 1989ம் ஆண்டு நடைபெற்ற விவாதத்தின் பொழுது அப்பொழுது லோக் சபா எம் ,பீ யான  வைகோ போஃபர் ஊழலில் சிக்கி இருந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, என்று குற்றம் சாட்டவில்லை , ஆனால் தமிழ் ஈழ குறிக்கோளை அடைவதற்காக தான் தொடர்ந்து போராடுவேன்  என்று  பிரபாகரன் குறிப்பட்டதை கோடிட்டுக் காட்டி  வைக்கோ பேசினார். ஆனால் ராஜீவ் காந்தி புலிகள் தங்களுக்கு வழங்கிய செயல் திட்டங்களிலிருந்து பின் வாங்கி விட்டார்கள். இது வருத்தத்திற்குரியது என்று வைகோ விற்கு அவர் பதிலளித்திருந்தார்.
இப்பொழுது ராஜீவைக் கொன்றாகிவிவிட்டது பிரபாகரனும் கொல்லப்பட்டுவிட்டார். புலிகள் பிரேமதாசாவுடன்  சேர்ந்து 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முட்டுக் கட்டை போட்டனர்.  இப்பொழுது 13 வதை தக்க வைக்க வேண்டும் , அதனை மேம்படுத்த வேண்டும் , வடக்கு கிழக்கு இணைப்பை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் அதற்கு இந்தியா உதவ வேண்டும் என்பதே இன்றைய தமிழ் தேசியக்  கூட்டமைப்பின் ராஜீய நிலைப்பாடு. அதற்கான வேலைத் திட்டங்களையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்ய வேண்டும் என்பதே புலம் பெயர் புலி ஆதரவுத் தமிழர்களின் அறிவுறுத்தல். உட்கிடையாக ஈழம் காண 13ஐ இப்போதைக்கு எப்படி நீர்த்துப் போகாமல் காப்பாற்றுவது தொடர்பில் இந்தியாவின் உதவி மிக அவசியமாக தேவைப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு சுமந்திரன் இந்தியா  தமிழ் மக்கள் சார்பில் இந்த ஒப்பந்தத்தை செய்தது என்று இந்தியாவிற்கு பொய்யுரைத்து  குளிரூட்டுகிறார். ஆனால் பிரபாகரன் இவ்வொப்பந்தம் தமிழர்களை -புலிகளை- கலந்தாலோசிக்காத ஒப்பந்தம் , "ஈழத் " தமிழர்கள் மீது திணிக்கப்படட் ஒப்பந்தம் என்று கூறியவர். இந்தியா எனும் அயல் நாடு தனது வல்லாதிக்க வலிமையை எம்மீது திணித்தது என்று சொன்னவர்,  ஜே ஆரின் மீதும் இந்தியா தனது வல்லாதிக்க வலிமையை விமானத்தில் பருப்பு பொட்டலம் போட்டு காட்டியே  பயமுறுத்தி வசைத்தது , கூட்டிக் கழித்துப் பார்த்தால் பிரபாகரனும் பிரேமதாசாவும் சொன்னதுபோல் இந்தியப் படையை வெளியேற்ற கூறிய "இது அண்ணன் தம்பிக்கிடையிலான பிரச்சினை இதில் இந்தியா தலையிடத் தேவையில்லை நாங்களே தீர்த்துக் கொள்வோம் " என்பது உண்மையில்  சரியான நிலைப்பாடு ,

அதுபோலவே பாட்டாளி சொல்லும் சிங்கள தேசியவாதத்தை  ஒருபுறம் வைத்து விட்டு இலங்கையர் என்று கோதாவில் அனைத்து மக்களுக்கும் இலங்கையின் ஒருமைப்பாட்டை  பாதுகாக்க எமது நாட்டுப் பிரச்சினையில் அந்நிய தலையீட்டை ( இந்தியாவோ அமெரிககாவோ , பிரித்தானியாவோ அல்லது ஏனைய பிற நாடுகளோ  ) , நாட்டின் பிரிவினையை ஆதரிக்க அனுமதிக்க முடியாது என்பதால்  " இது அண்ணன் தம்பிக்கிடையிலான பிரச்சினை இதில் இந்தியா தலையிடத் தேவையில்லை நாங்களே தீர்த்துக் கொள்வோம் " என்று செயற்படுவதே பொருத்தமாக விருக்கும். 
07/07/2013


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...