காணி நிலம் வேண்டும் , அந்த காணி நிலத்திடையே காவல் துறை வேண்டும்.!

காணி நிலம் வேண்டும் , அந்த காணி நிலத்திடையே காவல் துறை வேண்டும்.!
  எஸ்.எம்.எம்.பஷீர்
"உண்மையான மனக்குறை ஏதாவது ஒரு சமூகத்திற்கு இருக்குமாயின் , அது கண்டிப் பிரதேச சமூகத்திற்கும் , அத்தோடு முஸ்லிம் சமூகத்திற்குமேயாகும் , இன்றுள்ள பிரதிநிதித்துவ முறை , நாலு லட்சம் முஸ்லிம்களுக்கு , ஐந்து லட்சத்து  ஐம்பது  ஆயிரம் இலங்கை தமிழர்களுடன் ஒப்பிட்டு பார்க்குமிடத்து , இந்த கவுன்சிலில் உரிய   பிரதிநிதித்துவத்தை பெற முடியாதவாறு செய்யப்பட்டுள்ளது. இன்றுள்ள நிலைமை என்ன ? இராஜாங்கக் கவுன்சிலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஏழு ஸ்தானங்கள் இருக்கின்றன.ஆனால் தமிழர்களுக்கு அடுத்தபடியாக , ஜனத்தொகையில் சொற்பமே குறைவாகவுள்ள முஸ்லிம்களுக்கு பிரதேசவாரியாக   பிரதிநிதித்துவம் வகிக்க ஒரு தொகுதிகூட இல்லை . ஒன்றோ இரண்டோ அங்கத்தவர்களை நியமனம் செய்யும் கவர்னரின் தயவில் அவர்கள் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுதான் அவர்களின் உண்மையான மனக்குறையாகும் "  எஸ்.டப்ளியு. ஆர் .டி . பண்டாரநாயகா
 ( 1939   ஆம் அண்டு இராஜாங்க கவுன்சிலில் திரு எஸ்.டப்ளியு. ஆர் .டி . பண்டாரநாயகா உறுப்பினராகவிருந்தபோது ஆற்றிய உரையில் ஒரு சிறு பகுதி இது. )  
மாகாணசபை சட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்று கூறும் பிரதான தமிழ் அரசியல் தரப்பினர் , இப்போது கிழக்கில் மாகான சபைகள் விரும்பியோ விரும்பாமலோ செயற்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் , வடக்கிலும் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறும் சூழல் தோன்றுவதாலும் , மறுபுறம் மாகாணசபை அதிகாரங்களை  பூரணமாக அமுல் படுத்தக் கோருவதையும் , வட கிழக்கு இணைப்பை கோருவதையும் அண்மைக்கால செய்திகளாகவே கேட்டு வருகிறோம். 


அதே போல் அரசும் பதிமூன்றாவது பிளஸ் பற்றியெல்லாம் கதைப்பதையும் , அதேவேளை வட கிழக்கு இணைப்பை , காணி நில அதிகாரத்தை மறுப்பதையும்  ஒரு இழுபறி நிலையூடாகவே இப்போதைய பேச்சுவார்த்தைகள் பயணிப்பதையும் காண்கிறோம்  
மாகாண சபைகள் தொடர்பான பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணை நிரல் ஒன்று போலீஸ் அதிகாரம் காணி அதிகாரம் பற்றி பேசுகிறது. இன்று ஒரு புறம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திலுள்ள காணி காவல் துறை அதிகாரத்தை தரவேண்டும் என்று தமிழ் தரப்பினர் கேட்கும் போது நாங்கள் புதிதாக ஒன்றையும் கேட்கவில்லை ஏற்கனவே சட்டத்தில் உள்ளதைத்தான் கேட்கிறோம் என்று கூறினாலும் மாகாண சபையின் நிலுவையாகவுள்ள அம்சங்கள் சட்டவாக்க  முழுமை பெறாத சூழலில் , காணி அதிகாரத்தை காவல் துறை அதிகாரத்தை கையளிக்கும் செயற்பாடு சாத்தியமா என்பதை பற்றிய ஒரு எதிர்காலப் பார்வையில்  பின்னோக்கியும் பார்க்க நேரிடுகிறது.
மணலாறு
எழுபதுகளின் பிற்பகுதியில் நோர்வேயின் தொண்டர் நிறுவனமொன்றின் இலங்கையில் பணியாற்றிய ஒரு நோர்வே பிரஜையின் ஆலோசனைப்படி தமிழர் தரப்பில் ஆயுத பயிற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் செயற்பட  முல்லைத்தீவு பிரதேசத்தில்  ஒரு நீண்ட நிலப்பரப்பினை பெற்றுத்தரும்படி தமிழ் தீவிரவாத முனைப்புக் கொண்ட இளைஞர்கள் சிலர் அன்றைய தமிழர் கூட்டணி செயலாளர் நாயகம் அமிர்தலிங்கத்தை அணுகி அவ்வாறான காணியினை அரசிடம் பெற்றுத்தருமாறு கோரினர். அமிர்தலிங்கம் , அன்றைய பிரதம மந்திரியாகவிருந்த ஆர்.பிரேமதாசாவை அணுகி "சமூக   நடவடிக்கைக்காக"  ஒரு நிலப் பரப்பினை தருமாறு வேண்டினார். ஆனால் பிரேமதாசா , அது பற்றி கவனிப்பதாக கூறிவிட்டு, வாளாவிருந்துவிட்டார். மீண்டும் அந்த இளைஞர்கள் பிரபல தொழித் சங்கவாதியான , தொழிசங்க நடவடிக்கைகள் காரணமாக நீண்டகால அறிமுகத்தினை பிரேமதாசாவுடன் கொண்டிருந்த கே சி .நித்தியானந்தனை அணுகி, பிரேமதாசாவிடம் தமது கோரிக்கையை மீண்டும் விடுக்க கோரினர். ஆனால் நித்தியானந்தன் , யாரேனும் முன்னர் இது குறித்து பிரேமதாசாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்களா என்று கேட்டு, அமிதலிங்கம் முன்னரே  அவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளார் என்பதைக் கேட்டு , தன்னிடம் முன்னரே வந்திருந்தால், அதனைப் பெற்றிருக்கலாம் ஆனால் இப்போது, அமிர்தலிங்கம் கேட்ட பின்னர் பெறுவது என்பது கடினம் என்று தனது அபிப்பிராயத்தை கூறியதுடன் பிரேமதாசாவை அவரும் அணுகி அதே வேண்டுகோளை விடுத்தார். ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை. இது பற்றிய தகவலை எனக்கு வழங்கியவர் , எனது தெளிவு கோரும் கேள்விகளுக்கு  பதிலளிக்கையில் பிரேமதாசா ஒரு தந்திரமான அரசியல்வாதி என்றும் அதனால் அவர் அக்கோரிக்கை குறித்து சந்தேகம் கொண்டிருக்கலாம் அதனாலே அவர் அக் கோரிக்கையினை கவனிப்பதாக கூறி உதாசீனம் செய்திருக்கலாம் என்று குறிப்பட்டார். தொழிற் சங்கவாதியான நித்தியானந்தனுக்கு , என்ன நோக்கத்திற்காக அந்த காணிக் கோரிக்கை விடுக்கப்பட்டது என்பது தெரிந்திருந்ததா என்பது பற்றி எனக்கு தெளிவு கிடைக்கவில்லை.
எது எப்படியாயினும் காணி அதிகாரம் மத்திய அரசியல் இருந்தபோதும் அரசுக் கெதிராக  ஆயுதம் தூக்கி செயற்பட அரசிடமிருந்து காணி பெறவேண்டிய தேவை தமிழ் தீவிரவாத சக்திகளுக்கு அன்று தேவைப்பட்டது . பின்னாளில் ஆயதப் போராட்டம் வளர்ச்சி பெற்று , புலிகள்  தங்களின் சொந்த சட்டத்தையும் ஒழுங்கையும் உருவாக்கி , காவல் துறையை மட்டுமல்ல முப்படையினையும் உருவாக்கி வடக்கு கிழக்கில் கணிசமான பகுதியில் தங்களின் நிலத்தின் நீரின் ஆட்சி அதிகாரங்களை கொண்டிருக்கும்மளவு நிலைமைகள் மாற்றமடைந்த பொழுது சிங்கள முஸ்லிம் மக்களை வடக்கு கிழக்கிலிருந்து வன்முறை மூலம் அழித்தொழிக்கவும் , அகற்றவும் முடிந்தது. ஆயுதப் பயிற்சிக்கு காணி கேட்டவர்கள் பாரம்பரியமாக வடக்கு கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை அவர்களின் காணிகளிலிருந்து அகற்றியது மட்டுமல்ல, ஆட்  கொலையும் செய்தனர். ஆக மொத்தத்தில் புலிகள் காணி அதிகாரமும் காவல் துறை அதிகாரமும் கொண்டமைந்த போது சிங்கள முஸ்லிம் மக்களின் காணி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்தனர். தங்களின் சொந்த காவல் துறையின் மூலம் தமக்கெதிரான , மாற்றுக் கருத்துக் கொண்ட தமிழ் அரசியல், சமூக செயற்பாட்டாளர்களை கொன்றனர், சிறைப்பிடித்தனர். சிலர் தங்களின் காணி நிலம் வேண்டாம் , தப்பித்தால் போதும் என்று ஓட்டமும் பிடித்தனர்.   இவை யாவும் இன்று காணி நிலம் கேட்கும் சகல தமிழ் முஸ்லிம் கட்சிகளின் கண் முன்னாலே நடந்தது.  தமிழ் தேசிய கூட்டமைப்பு வாய் மூடி மவுனித்திருந்தனர். அன்று அந்த ஈனச் செயல்களில் பங்குகொண்டிருந்த புலிகளின் கிழக்கு தலைவர் கருணா பச்சாதாபத்துடன் தனது தவறை உணர்ந்து காணி அதிகாரமோ காவல துறை அதிகாரமோ வேண்டாம் என்று இப்போது சொல்கிறார். 
இந்திய இராணுவம் இலங்கையில் பிரசன்னமாயிருந்த காலகட்டங்களில் வட கிழக்கு மாகாணசபை ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருந்த ஈ பீ ஆர் எல் எப் , ஈ என் தீ எல் எப் ஆகிய கட்சிகளின் ஆயுத பாணிகளின் அட்டகாசத்தால் இந்திய இராணுவத்தின் உதவியுடன் திருக்கோணமலையில் வாழ்ந்த சிங்கள மக்கள் வெருண்டோட நேரிட்டது. புலிகளின் சிங்கள மக்கள் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக படுகொலைகள் காரணமாக வடக்கு கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் சிங்கள மக்கள் தங்களில் உயிரை காப்பாற்ற தம் வாழிடங்களை விட்டும் வெளியேறி உள்நாட்டில் அகதிகளாக வாழ நேரிட்டது. ஆக மொத்தத்தில் வடக்கு கிழக்கு மாகான சபை ஆட்சி கையிலிருந்தபோதும் சிங்கள முஸ்லிம் மக்களின் காணி நிலங்கள் பறிக்கப்பட்டன, வடக்கு கிழக்கில் ஆயுதப் போராட்டத்தினால் இராணுவ நடவடிக்கை அத்துமீறல் மூலம் தமிழர்கள் தங்களின் வாழிடங்களை விட்டும் இடம்பெயர்ந்து வாழ நேரிட்டதும் இங்கு மனக் கொள்ளத்தக்கது.
வெலி ஓயா
தனி நாடு அமைக்க ஆயுதப்பயிற்சி அளிக்க முல்லைத்தீவில் நிலம் கேட்டு அன்றைய ஐக்கியதேசியக் கட்சியின் தயவை நாடி அமிர்தலிங்கம் மூலம் தமிழ் இளைஞர்கள் சென்ற பின்னர் , எண்பதுகளின் நடுப்பகுதியில் ஆட்சியிலிருந்த ஐக்கியதேசிய கட்சி அரசு சிங்கள மக்களை முல்லைதீவிலேய மணலாற்றில் --வெலிஓயாவில்= குடியேற்றினர் , அதிலும் அவர்களும் தற்காப்பு ஆயதப் பயிற்சியுடனே வடக்கு கிழக்குக்கும்  இடையில் ஒரு நிலத் தடை ஏற்படுத்தும் கிராமங்களாக குடியேற்றங்கள் இடம் பெற்றன. ஆனாலும் தமிழ் ஆயுத இயக்கங்கள் வலுவடைந்த போது அங்கு வாழ்ந்த குடியேறிகளின் உயிருக்கு  அச்சுறுத்தல் ஏற்பட்டபோது , அவர்களும் காணி நிலம் இழந்து அகதிகளாயினர்.
ஜூன் மாதம்   1988 ஆம் ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள மணல் ஆற்றில் வெலிஓயா என்று சிங்களப் பெயரையும் மாற்றி திட்டமிட்ட  சிங்கள குடியேற்றங்களை இலங்கை அரசு ஏற்படுத்தியதாக அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு மகஜர் ஒன்றினை கையளித்தனர். அப்போதே அந்த மகஜரில் மாகான சபை அவ்வாறான குடியேற்றங்களை தடுப்பதற்கான அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். எனவே காணி அதிகாரம் தேவை என்பதை , அதனூடாக அரச குடியேற்றத்தை தடுக்க இந்திய அரசின் உதவியை கூட்டணியினர் அன்று நாடியிருந்தனர். அதேவேளை தமிழ் விடுதலை கூட்டணியின் தலைவரான அமிர்தலிங்கமும் பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. ஆகஸ்து மாதாம் 1987 ஆண்டு  ராஜீவ் காந்தி  சென்னை மரீனா பீச் கூட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும் போது இந்தியாவிலுள்ள  மாநில அரசுகள் பெற்றுள்ள சுயாட்சி அதிகாரத்துக்கு குறையாத அளவு அதிகாரங்களை ஸ்ரீ லங்கா தமிழர்கள் பெறுவதை உறுதி செய்வதாக கூறியிருந்தார்   என்பதால் இந்திய அரசின் அனுசரணையுடன் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் அதற்கு நிகரானதா என அமிர்தலிங்கம் சென்னையில் 1988 ஆம் ஆண்டு தை மாதம் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் கேள்வி எழுப்பியிருந்தார் .
மொத்தத்தில் புலிகள் மட்டுமல்ல தமிழ் தேசியவாதிகள் புலிகள் போலவே செயற்பட்டு வந்துள்ளனர் என்பதுடன் , இவர்களால் வளர்க்கப்பட்ட புலிகளும் ஏனைய சில தமிழ் தேசிய வாத ஆயுத இயக்கங்களும் ,இன்றுவரை அவ்வாறான அடிப்படைக் கருத்துக்களிலிருந்து மாற்றமடையவில்லை. சுரேஷ் பிரேமசந்திரன் , சிறிதரன் , விநோதரலிங்கம் போன்றோர்  உட்பட பெரும்பாலான தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பதின்மூன்றாவது திருத்தச் சட்ட தீர்வினை நிராகரிக்கும் வகையில் கருத்து வெளிப்படுத்துவதிலிருந்து அவர்கள் அன்று அமிர்தலிங்கமும் புலிகளும் எடுத்த நிலைப்பாட்டிலேயே தாங்களும் உள்ளோம் என்பதை அவ்வப்போது வலியுறுத்தி வருகின்றனர் .
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் வடக்கு கிழக்குக்கு அப்பால் வாழும் நிலையில் இன்னமும் வடக்கில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மீள் குடியேறி வாழ்வதில் சிரமங்களை அனுபவிக்கும் நிலையில் , வடக்கு கிழக்கில் பெருமளவில் தமிழர்கள் முஸ்லிம் போலீஸ் சேவையில் சேர முன்வருவதில் ஆர்வம் காட்டாத நிலையில், இன்னமும் பல சர்ச்சைக்குரிய கானி நில   விவகாரங்களை தங்களுக்குள்ளே தீர்க்க வேண்டிய நிலையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருக்கும் யதார்த்த சூழ்நிலையில்  பதின்மூன்றாவது திருத்த சட்டம் கூறும் காணி அதிகாரம் காவல் துறை அதிகாரம் இப்போதைக்கு அரசியல் அசைவியலுக்கு  பிரதான தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கு தேவைப்படுகிறது.!

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...