தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது!


July 24, 2013 at 5:54am
 
 
1986 சித்திரை மாதம் 29ம் திகதி எமது தேசிய விடுதலைப் போராட்டம் தனது சாவு மணியை அடிக்க தொடங்கிய நாள்! நானும் எனது சகாக்களும் ஏன் எதற்கு என்று கூட கேள்வி கேட்க திரணியற்று மனித அவலம் ஒன்றிற்கு துணை போன நாள்!



சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்! தூங்கியவர்கள், தூங்க முடியாது வருத்தத்தில் படுத்திருந்தவர்கள், தப்பியோடியவர்கள் வெள்ளைக்கொடி பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று ஒருவரைக் கூட மிச்சம் வைக்காது வேட்டையாடல் நடைபெற்றது.
தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணிக்க தயாராக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகள் தெருநாயை சுடுவது போல் வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.














 படம்: விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் வாசுதேவன்

அன்று கோண்டாவில் சுற்றிவழைப்பில் எனக்கு கோண்டாவில் பஸ் டிப்போவிற்கு அருகில் காவல் கடமை! ஒரு வயது முதிர்ந்தவர் என்னுடன் பேசினார். நான் கொஞ்சம் விரக்தியாக பேசியதாலே என்னவோ துணிந்து ஒரு விடயத்தை கூறினார். தம்பி துவக்கெடுத்தவனுக்கு துவக்காலை தான் சாவு! இது எல்லாம் ஒரு பெரிய அழிவிலைதான் முடியும்! மேலை ஒருத்தன் பாத்துக் கொண்டிருக்கிறான் எண்டதை மறந்திடாதை என்று கூறிவிட்டு போய்விட்டார்.

சில மணித்துளிகளுக்குள் ரெலோ இயக்க தலைவரும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார் என்று வோக்கியில் செய்தி வந்தது. 1987 மே மாதம் ஒரு புகையிலைத் தோட்டத்தில் மறைந்து நிராயுதபாணியாக இருந்த சிறீ சபாரத்தினம் அவர்கள் கையை உயர்த்தியபடி கிட்டு பேசுவோம் பேசித் தீர்ப்போம் என்று கூறியபடி வெளியில் வந்து கிட்டுவின் மெய்ப்பாதுகாவல் கடமையிலிருந்த சாந்தமணியின் அருகில் சென்று அவரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டதாகவும் உடனடியாக கிட்டு அவரை சுட்டுக்கொன்றதாகவும் வோக்கி டோக்கி அலறியது! இந்தியாவுடன் சேர்ந்து புலிகளை அழிக்க சதி செய்த ரெலோ புலிகளால் அழிக்கப்பட்டது என்று செய்தி எங்கும் அலறியது.

சரியாக 22ஆண்டுகள் கழித்து 2009மே மாதம் தொலைக்கட்சி ரேடியோ ஏன் உலகம் எல்லாமே அலறியது வெள்ளைக்கொடியுடன் பேசச் சென்றவர்கள் சுட்டக்கொல்லப்பட்டார்கள் என்று!

50 வருடகாலமாக எதைப் பேசினோமோ அதையே இன்றும் பேசுகிறோம். உலக மாற்றம் பற்றிய எந்த சிந்தனையும் இன்றி அடுத்தவனை குறை கூறுவதிலும் எமது தவறுகளுக்கு நியாயம் கதைத்தபடி அடுத்தவன் தவறுகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதிலேயெ நாம் கண்ணும் கருத்துமாக நிற்கிறோம்.

காலாகாலமாக வேரூன்றி பெரு விருட்சமாக வடக்கில் வாழ்ந்து வந்த முஸ்லீம் சகோதரர்களை ஒரு இரவிற்குள் விரட்டியடித்து விட்டு சிங்களவன் எங்கடை காணியைப் பறிக்கிறான் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறோம். அந்த சமூகத்திடம் குறைந்த பட்சம் மன்னிப்புத்தான் கேட்க வேண்டாம் அது சரியென்று வியாக்கியானம் கொடுத்து அவர்களை இன்னமும் அவமானப்படுத்துகிறீர்கள். இலங்கை ஒரு பல கலாச்சாரங்களை, பல இனங்களை, பல மதங்களை கொண்ட ஒரு நாடு என்பதை மறந்து எனது சாதி உயர்ந்து நிற்க வேண்டும் என்ற சுயநலமும் மற்றவனை வீழ்த்த வேண்டும் என்ற ஆவேசமும் தான் எங்களை நோக்கிய சிங்கள பேரினவாதத்தை வளர்த்தது என்பதை நாம் என்று உணரப்போகிறோம்?

தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது. பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும். அது தன்னிலையுடையது

-  சிறீ சபாரத்தினம் உட்பட டெலோ அமைப்பினரைச் சகோதரப் படுகொலை செய்த 25வது ஞாபகார்த்த நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் வாசுதேவன் ஆற்றிய உரையிலிருந்து..... (நன்றி - மட்டை ஊறுகாய் முகநூல் பக்கம்)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...