“அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை ( 10 )
எஸ்.எம்.எம்.பஷீர் 


தீதும் நன்றும் பிறர்தர வாரா !”
                                  பூங்குன்றனார்

( முன்னாள் நீதியரசர் திரு .விக்னேஸ்வரன் அவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் புறநானூற்றின் பாடல் வரிகளில் ஒன்றே இக்கட்டுரைக்கு தலைப்பாக இடப்பட்டுள்ளது ) 

வட மாகான சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர்   வேட்பாளராக முன் மொழியப்பட்டிருக்கும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சி அரசியலுக்கு, புதியவர் , ஆனாலும் அவரின் தெரிவு மாகாண சபை அதிகாரங்கள் குறித்த 13 திருத்தச் சட்டத்தை நீர்க்க இலங்கை அரசு முயற்சிக்கும் பின்னனியில்  ஏற்கனவே கூட்டமைப்புக்குள் புகை விட்டுக் கொண்டிருந்த உள்ளார்ந்த போட்டிப் புகைச்சலை தணித்திருக்கிறது.

ஆனாலும்
  “ தற்போதைக்கு அரசியலில் பிரவேசிக்கும் உத்தேசம் தனக்கு இல்லை  வடக்கில் முதலமைச்சர் பதவியை தான் விரும்பியதுமில்லை. சமூகப் பணிகளில் ஈடுபடவே நான் விரும்புகின்றேன். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வேண்டிய அறிவுரைகளை வெளியிலிருந்து நான் வழங்கிக்கொண்டிருப்பேன்என்று சொல்லி சுமார் இரண்டு மாதங்கள் கூட முழுமையாக முடியவில்லை  முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இப்பொழுது தான் முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பில் போட்டியிட்டு முதலமைச்சராகினால் செய்யப் போகும் ஆட்சிப்பணி குறித்து சிலாகித்து பேசி வருகிறார்.

கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கூட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளை கூட்டு விலகிவிடாமல் கட்டி  வைப்பதில் சமர்த்தர் என்றுதான் சொல்ல வேண்டும். சென்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடத் தேர்ந்தெடுத்த முதன்மை வேட்பாளரும் தேர்தல் அரசியலுக்கு புதியவர் . திருகோணமலையை பிறப்பிடமாகக் கொண்ட  ஒருவரை முதன்மைப்படுத்தும் எண்ணம் சம்பந்தனுக்கு இருந்திருக்க வேண்டும் , அதேவேளை உடகட்சிப் போட்டியினைத் தவிர்க்க அரசியலுக்கு புதியவரை வெளியிருந்து கொண்டு வர வேண்டும். அவரும் கல்வி ,பதவி நிலைகளில் மட்டுமல்ல , தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஊழல் அற்றவராகவும் நேர்மையானவராகவும் இருக்க வேண்டும் . அப்பொழுதான் தம்முடன் கூட்டு வைத்துள்ள முன்னாள்  ஆயுதபாணிக் கட்சியினரின் வேட்பாளார் தெரிவு தொடர்பான சவால்களைத் தவிர்க்கலாம் , அவர்களையும்   நிராயுதபாணியாக்கலாம்! , தமது கட்சியினையும் பலப்படுத்திக் கொண்டு தமது கட்சி அரசியலை முன்னெடுக்கலாம். மொத்தத்தில் கிழக்கு மாகான சபைத் தேர்தலில் தனிப்பட்ட வகையில் அதிக வாக்குகளை பெற்ற முன்னாள் ஆயுதபானிக் கட்சி ஈ.பீ ஆர் எல் எப்  (E.P.R.L.F) வேட்பாளாரான துரைரெத்தினம் , தமிழரசுக் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு ,  27,717 வாக்குகளைப் பெற்ற போதும் , கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படாமல் , கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட , துரைரெத்தினத்தை விடவும் குறைந்த வாக்குகளைப் பெற்ற (20,854 ) சி. தண்டாயுதபாணி  கிழக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். எதிர்கால மட்டக்களப்பு மாவட்ட எம்.பீ பதவியைக் குறி வைத்திருக்கும் , உறுப்பினரான  துரைரெத்தினம் , தனது தனிப்பட்ட செல்வாக்கினால் முன்னரும் கிழக்கு மாகான சபை உறுப்பினராக இருந்தவர் என்ற நம்பிக்கையில் தண்டாயுதபானியின் நியமனம்  தொடர்பில்  ஆக்ரோஷமான ஆட்சேபனையை  தெரிவிக்கவில்லை.
அந்த வகையில்தான் கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சின் முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய தண்டாயுதபாணி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருவேளை கூட்டாட்சி மூலம் கிழக்கு மாகாண சபையில் சுழற்சி அடிப்படியில் ஆட்சி அமைக்கக் கிடைத்திருந்தாலும் , தன்டாயுதபாணி பதவிப் போட்டி குறித்த  சவால்களை முறியடிக்கும் சரியான தேர்வாகவே அமைந்ததாக சம்பந்தன் கண்டிருக்க வேண்டும் 

நான் 1070 களில் அறிந்த தன்டாயுதபாணி ஒரு ஆசிரியராக இருந்தவர் , கல்வியில் மிகுந்த ஆர்வமும் கடின உழைப்பும் கொண்டவர். இனிய சுபாவம் கொண்டவர். நேர்மையான மனிதர். பின்னர் அவர் கல்விப பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றவராக உயர்ந்து ஓய்வு பெற்ற போதும் ஆசியர் சமூகத்துடன் நல்லுறவைப் பேணியிருக்க வேண்டும். அந்த வகையில் இனங்களுக் கிடையிலான சமூக உறவையும் அவர் நன்கு பேணியிருக்க வாய்ப்புண்டு, ஆயினும் கூட்டமைப்பு அந்த உபாயத்தினை வடக்கிலும் பயன்படுத்துகிறது 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் , வட மாகாணத்தில் எதிர்கொண்ட பெரிய சவால் முதலமைச்சர் வேட்பாளரைத் தேர்வதுதான் , ஏனெனில் கிழக்கைப் போலல்லாது தமிழர்களின் பெரும்பான்மை பலம் கொண்ட வட மாகாண ஆட்சியைக் கைப்பற்றும் சாத்தியம் கொண்ட கட்சி என்ற எதிர்பார்ப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  கூர்மையடைந்திருந்த உள்முரன்பாடுகளை ஓரங்கட்டும் வகையில்  முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்

முன்னாள் நீதியரசர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் அரசியலில் ஈடுபாடு கட்டாமல்
 இருந்ததில்லை. குறிப்பாக அவர் ஓய்வு பெற்றதிலிருந்து அவர் சார்ந்த , அல்லது அவர் நம்புகின்ற அரசியல் கருத்துக்களை ஆங்காங்கே தெரிவித்து வந்திருக்கிறார். தமிழ் தேசியவாதியான் திரு விக்னேஸ்வரன் அடிப்படையில் தமிழ்த் தேசிய கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சார்ந்தே தன்னை அடையாளம் காட்டி வந்திருக்கிறார் .   ஓய்வு பெற்றபின் நீதியரசர் சரத் டீ சில்வாவும் தனது  அரசியல் கருத்துக்களை மட்டுமலல் , கட்சி சார்பு  அல்லது ( ஜனாதிபதி) வேட்பாளர் சார்பு அரசியல்  கருத்துக்களை பகிரங்கமாவே வெளியிட்டவர்.

"எந்த அறிக்கையும் வரலாம், போகலாம் எந்தப் பேச்சும் நடைபெறலாம். ஆனால், எங்கள் அடிப்படைக் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருந்து ஸ்திரத்தன்மையுடன் கூட்டமைப்பினர் அரசுடன் பேசவேண்டும். அதைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்"
அரசியலுக்குள் தான் கால் பதிக்க விரும்பவில்ல வெளியிலிருந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு  ஆலோசனைகளை வழங்கிக்  கொண்டிருப்பேன் என்று கூற முன்னரும்   தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆலோசனைகளை , கூட்டமைப்பு பற்றிய தனது அக்கறையை எதோ ஒரு விதத்தில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு கேட்கும் வண்ணம் முன்னாள் நீதியரசர் திரு விக்னேஸ்வரன்  

"இன்றைய காலகட்டத்தில் வடக்கு கிழக்குத் தமிழ்ப்பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். அதனை எந்தவிதத்திலும் ஆட்டங்காண வைக்க இடமளிக்கக்கூடாது. என்றும்  கூட்டமைப்பு தமது கட்சியின் அடிப்படை நோக்கங்களை கைவிட்டு அரசுடன் பேசக் கூடாது, பேசுவதானால் எப்படிப் பேச வேண்டும் என்று ஆலோசனையும் வழங்கி இருந்தார்.

இவ்வாறான சமிக்ஞைகளையும் சம்பந்தன் அவதானிக்கத்  தவறவில்லை , வட மாகாண  வேட்பாளர் யார் என்று உட் கட்சிப் போராட்டம் வலுத்த பொழுது நீதியரசர் விக்னேஸ்வரன் அவருக்கு ஆபத்பாந்தவனாக  "தோற்றமளித்தார்". இதன் மூலம் தனது வாரிசாக வர வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் சம்பந்தன் சரியான  ஆப்பு  வைத்துவிட்டார் .

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் பங்குபற்றப் போவதில்லை என்று முடிவெடுத்தவுடன்  அதனை பாராட்டியவர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் என்பதும் சென்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் திரு சரத் டி சில்வா வெளிப்படையாகவே சரத் பொன்சேகாவை ஆதரித்தார்.  அதேவேளை திரு விக்னேஸ்வரன் அவர்கள் தனது அரசியல் ஆர்வத்தால்  உந்தப்பெற்று தனது கருத்துக்களையும் சூட்சுமமாக வெளியிட்டார். ஆனால் இப்பொழுது அதனை மீட்டுப் பார்த்தால் ,

" இத்தேர்தலில் சிறுபான்மையினரும் பெரும்பான்மை இனமக்களும் தோளோடு தோள்நின்று சேர்ந்து இனத்துவேஷத்தை அழிக்கவேண்டும். ஊழலை ஒழிக்கவேண்டும். சட்டத்துக்கு உட்பட்ட நிர்வாக செயற்பாட்டு முறையை அறிமுகம்செய்ய ஒத்துழைக்க வேண்டும் "
என்று குறிப்பிட்டதன் மூலம் அவரின் மானசீக ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த பொன்சேக்காவாவையா அல்லது அதற்கு எதிராக  ராஜபக்சவையா  ஆதரிக்கச் சொல்கிறார் என்பது ஒரு புதிராகவே இருந்தது, ஒரு உன்னதமான இலங்கையை எதிபார்க்கும் அவரின் கனவாக அவரின் கருத்துக்கள் அமைந்திருந்தாலும் போட்டியிட்டவர்களில்  வெற்றியீட்டக் கூடிய வேட்பாளர்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இருவரில் யாரை குறிப்பிடுகிறார் என்பதை அவர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை . இனிமேல் தாராளமாக தனது அரசியல் கருத்துக்களை சூட்சுமமின்றி குறிப்பிடலாம் அதற்கான சந்தர்ப்பத்தை இந்த கூட்டமைப்பு இணைப்பு அவருக்கு வழங்கியிருக்கிறது. அந்தத் தொனியும் இப்பொழுது அவரிடம் வெளிப்படுகிறது, .

தீவிர தமிழ்த் தேசியவாதம் , அதனை மெருகூட்டும் சிங்கள எதிர்ப்பு (இன) வாதம் என்பன சில வேளைகளில் பல தமிழ் புத்திஜீவிகளையும் ஆட் கொண்டிருக்கிறது. சில வேளைகளில் அவர்கள் தமிழ் தேசிய கோட்பாட்டு இறுக்கம் கொண்ட அரசியல்வாதிகளை விடவும் தீவிரமாக இருக்கிறார்கள்.  இந்த அரசியல் சிந்தனை தளத்தில் கருத்துரைக்கும் புத்திஜீவிகளில் ஒருவராக திரு விக்னேஸ்வரன தன்னை அடையாளப்படுத்தி கொண்டாரா  என்று கேள்வியை அவரின் பின்வரும் கருத்து எழுப்புகிறது.


ஏனெனில்  , 24.06.2010ல் யாழ். நீதிமன்ற வளாகத்தில் நடைபெற் நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள் நீதியரசர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் தெற்கிலிருந்து வரைவின் மகளிர்கள் கொண்டுவரப்பட்டு எமது இளைஞர்களுக்கு வலை விரிப்பதாகவும் கேள்விப்பட்டேன்”  என்று  கூறிய கருத்தே சமூக நல்லிணக்கச் செயற்பாட்டாளர்கள் பலரின் கண்டனத்துக்குள்ளானது. ஒரு முன்னாள் நீதியரசர் ஆதாரமற்ற இனவாத கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார் என்று ஒரு கண்டன  அறிக்கையொன்றினை யாழ் ஆய்வறிவாளர் அணியம் வெளியிட்டது ( அறிக்கையைப் பார்வையிட:   http://www.thenee.com/html/070710.html  
அவ்வறிக்கையினை அடுத்து இக்கட்டுரையாளரும்   முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் சிங்கள விலை மாதர்  பற்றிய  கருத்துக் குறித்து  அங்கதத்தொனியில்   "கணம் கோட்டார் அவர்களே"  என்று ஒரு ஆக்கத்தினை வெளியிட்ட்ருந்தார், அதனை இங்கே பார்க்கவும் : http://www.bazeerlanka.com/2011/04/blog-post_9224.html )

திரு விக்னேஸ்வரன் அவர்களின் தெரிவு குறித்து மாவை சேனாதிராஜா மிகுந்த ஏமாற்றம் அடைந்திருக்கிறார் , ஆயினும் பிரேமச்சந்திரன் எங்களுக்குள் எவ்வித பிளவும் இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரான  பா.  அரியேந்திரன் மாவையை விட புலி பக்தி கூடியவர். பிரபாகரனைப் பூஷிப்பவர். முஸ்லிம் சிங்கள மக்கள் மீது இனவாதக் கருத்துக்களை அள்ளி வீசும் தீவிர தமிழ் தேசியவாதி.   அவருக்கு மாவை தெரிவு செய்யப்படாதது மிகுந்த ஏமாற்றத்தையும்  , ஆத்திரத்தையும்  ஏற்படுத்தியிருக்கிறது. எனவேதான் அவர் திரு விக்னேஸ்வரனின் நியமனம் குறித்து குறிப்பிடுகையில்  

விக்னேஸ்வரன் ஐயாவுக்கு வடக்கில் நல்லூர் கந்தன் ஆலயம் மட்டும்தான் தெரியும். ஆனால், மாவை அண்ணனுக்கு வடக்கு, கிழக்கின் மூலைமுடுக்கெல்லாம் தெரியும். எனவே, தமிழ்த் தேசியத்திற்காக அயராது பணியாற்றி வருபவரும், தமிழ்ச் சமூகத்தால் அதிகம் விரும்பப்படுபவருமான மாவை சேனாதிராஜாவை வட மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கக் கூட்டமைப்பின் தலைமை முடிவெடுக்கவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாத விசத்தை கக்குவதில் முதலிடத்தை வகிக்கும்  அரசியல்வாதி,  பா. அரியேந்திரன் ஆகும், அவருக்கு அடுத்த இடத்தை வகிப்பவர் முன்னாள் டெலோ எம்.பீயும் , பிரித்தானியப் பிரஜை என நம்பப்படும் இன்றைய கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உறுப்பினராகவிருக்கும் ஜனா எனப்படும்  கோவிந்தன் கருனாகரமும் ஆகும்.

அரியேந்திரன் ஒரு படி மேலே சென்று தனது காலங்கடந்த கவைக்குதவாத பிற்போக்குத்தனமான தமிழ் இனவாதக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரன், சிறந்த நீதியரசராக இருந்துள்ளார். அதேவேளை, அவர் ஆன்மீகவாதியாகவும் உள்ளார். அவரை நான் மதிக்கின்றேன். ஆனால், அவரின் குடும்ப சூழ்நிலை கேள்விக்குறியாகவுள்ளது. அவரின் குடும்பம் சிங்களப் பேரினவாதத்தோடு இரண்டறக் கலந்துள்ளது. அதாவது அவரின் இரு பிள்ளைகளும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களையே திருமணம் செய்துள்ளார்கள். இதனால்தான் அவரின் குடும்பம் மீது எனக்கு மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்திற்கே சந்தேகம் எழுந்துள்ளது.

அம்பாறையில் தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு நிகழ்ந்த சம்பவம் விக்னேஸ்வரனுக்கும் ஏற்படக்கூடும்.
தாய் வழி மூலம் சிங்களப் பேரினவாதத்தோடு கலந்திருந்த பியசேன, இறுதியில் தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான பின்னர் அரசால் மூளைச்சலவை செய்யப்பட்டு மாற்றப்பட்டார். இதே நிலைமை விக்னேஸ்வரனுக்கும் வராமல் இருக்க முடியும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? “

என்று கேள்வியும் எழுப்பி  உள்ளார். பியசேனா சிங்களக் கலப்புக் (தாய் வழி ) கொண்டவர் , அவரைப்போல் தனது பிள்ளைகளை சிங்களப் பெண்களுக்கு மனம் செய்து கொடுத்ததனால் , மாமனார் விக்னேஸ்வரன் மூளைக் சலவை செய்யப்பட்டு  கட்சி மாறி விடுவார் என்று இனவாத சிறு மூளை மூலம் சம்பந்தமில்லாமல் கருத்துச் சுய சலவை செய்திருக்கிறார் அரியேந்திரன். அது மட்டுமல்ல புலிகளின் முன்னாள் "போலீஸ் மா  அதிபர்"  பாலசிங்கம் நடேசன் சிங்களப் பெண்ணையே மணந்திருந்தார்  ( அன்டன் பாலசிங்கத்தை  இங்கு விட்டு  விடுவோம்) , புலிப் புகழ் அன்றும் இன்றும் பாடும் அரியேந்திரனின் மூளைக்குள் நடேசன்  பற்றிய கேள்வி எழவேயில்லை.

ஆண்டகையும் ஆண்டவனும்!

அந்தக் காலத்தில் நான் இடதுசாரிப் போக்குக் கொண்டவன். சமஷ்டிக் கட்சியை அவ்வளவு விரும்பாதவன். சமஷ்டிக் கட்சி என்று பெயர் வைக்காது தமிழரசுக் கட்சி என்று பெயர் வைத்ததே ஒரு ஏமாற்று வித்தை என்ற கருத்தில் இருந்தவன் என்று தன்னைப் பற்றி முன்னொரு தடவை குறிப்பிட்ட திரு விக்னேஸ்வரன் அவர்கள் பின்னாளில் சாயி பக்தனாக , இராம பக்தனாக மத ரீதியில்  தன்னை மாற்றிக் கொண்டவர். அது போலவே தமிழரசுக் கட்சி தமிழர்களின் தனி ஆட்சி குறித்து -பிரிவினை குறித்து- சமஷ்டி என்ற பெயர் வைக்காமல் தமிழரசுக் கட்சி என்று பெயர் வைத்ததே ஒரு ஏமாற்று வித்தை என்று குறிப்பிட்டவர். பின்னாளில் அக்கருத்தினை மாற்றி இன்று இலங்கை தமிழரசுக் கட்சியில் முதலமைச்சராகப் போட்டியிடுகிறார். அக்கட்சியைக் காக்க பிரதிக்கினை எடுத்துள்ளார்.  

தமிழ் மக்களின் அரசியலில் அதிகம் தனது தலையீட்டைக் காட்டிவரும் மன்னார் ஆயர் வண.இராயப்பு யோசெப் " தமிழ்மக்கள் மிகப்பெரிய இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் அவர்களின் விடிவிற்காக பாடுபடக்கூடிய ஒருவர் வட மாகாண முதல்வர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது ஆண்டவனின் தெரிவு என்று குறிப்பிட்டுள்ளார். திரு . விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டது ஆண்டவனின் சித்தம் என்று ஆண்டகை குறிப்பிட்டு ஆசீர்வாதம் வழங்கிய நிலையில் யாழில் நல்லூர் கோவில் குருக்களின் ஆசீர்வாதம் நிலுவையாக இருக்கிறது.

எப்படியோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது கட்சிக்குள் நீண்ட கால அங்கத்தவர்களை இரத்தம் சிந்திய போராளிகளை , பணம் படைத்த செல்வாக்கு தேடும் பிரபலங்களை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு கல்வியும் ஆளுமையும் கொண்ட ஒரு மனிதனைத் தேர்ந்த்தெடுத்திருக்கிறார்கள் பின்னணி எதுவாக விருப்பினும் கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடார் என்பதாக மாகாண சபைத் தலைவராகா திரு விக்னேஸ்வரன் பதவி ஏற்றாலும் , மாகாண  சபை பற்றிய தனது இலட்சியங்களை   அடையப் போவதாக சூளுரைத்தாலும்  பூசாரி வழியில் நிற்கிறார் என்பதே யதார்த்த அரசியல் !!

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...