பாலஸ்தீன பிறப்புச் சான்றிதழும் பரிதவிக்கும் பாலஸ்தீன மக்களும்




 எஸ்.எம்.எம்.பஷீர் 

“I give you the end of golden string;
Only wind it into a ball,
It will lead you in at Heaven’s gate,
Built in Jerusalem’s wall ”.
                                 William Blake (Jerusalem 1820)

"உனக்கு தங்கக் சரட்டின் அந்தத்தை தருகிறேன்
அதனை பந்தாக மாத்திரம் சுற்றிக் கொள் ;
அது உன்னை ஜெரூசலம் மதிலில்  எழுப்பப்பட்ட
சுவர்கத்தின் வாயிலுக்கு இட்டுச் செல்லும் "
ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ப்ளேக்  (கவிதை : "ஜெருசலம் 1820" )
                                           மொழியாக்கம் எஸ்.எம். எம். பஷீர் 
ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அரசு அங்கத்துவம் கோரும் விண்ணப்பத்தை  பாலஸ்தீன அரசின் தலைவர் என்ற வகையிலும் , பாலஸ்தீன  விடுதலை அமைப்பின் நிறைவேற்றுக்  குழுவின் தவிசாளர் என்ற வகையிலும்  மஹ்மூத் அப்பாஸ்   ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு 2011 ஆண்டு   சமர்ப்பித்திருந்தார் . அந்த விண்ணப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழுக் கூட்டத்தில் 29/11/1947 அன்று கொண்டு வரப்பட்ட 181  வது தீர்மானத்தின் அடிப்படையிலும் , அதன் பின்னர்    15/11/1988 அன்று பாலஸ்தீனம் மேற்கொண்ட பாலஸ்தீன தனிநாட்டுப்  பிரகடனத்தை  , 15/12/1988 அன்று   ஐக்கிய நாடுகளின்  பொதுச் சபை கூட்டத்தில்  43/177 இலக்க   தீர்மானத்தின் மூலம்  ஏற்றுக் கொண்டதன் பிரகாரமும் அந்த விண்ணப்பத்தை அப்பாஸ் சமர்ப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தில் அவர் இரு நாட்டு தீர்வு மூலம் சமாதானமாக இஸ்ரேல் -பாலஸ்தீன  பிரச்சினைக்கான தீர்வு காண விழையும்  தனது உறுதியையும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

படம் :  பாலஸ்தீன தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட சற்று முன்னர்ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் சுசான் ஈ ரைசின் (Susan E Rice) இப்படிக் காணப்பட்டார்.
அந்த விண்ணப்பமே இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் குழுக் கூட்டத்தில் 138க்கும் அதிகமான நாடுகள் பாலஸ்தீனத்தை ஐக்கிய நாடுகள் சபையின்  அங்கத்துவமற்ற அவதானிப்பவர் நாடாக (Non- member observer state)  தரமுயர்த்தியிருக்கிறது. பாலதீனத்தின்  ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமை கோரும் விண்ணப்பம் இம்முறையும் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் முழு உறுப்புரிமைக்கான  விண்ணப்பமாக சென்ற வருடம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் ஐ நா வின் பாதுகாப்புப் சபையினால் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கையை இம்முறை வழங்கப்பட்ட அந்தஸ்து தொடர்பான வரைபுத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனம் இஸ்ரேல பிரிவினை தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டு  ( 29 நவம்பர் 1948  )  சரியாக அறுபத்தைந்து வருடங்களின் பின்னர் பாலஸ்தீனம் மீதான அங்கத்துவமற்ற அவதானிப்பவர்  நாடு என்ற தீர்மானம் நிறைவேறி உள்ளது.பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு  1974ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளர்   அந்தஸ்து வழங்கப்பட்டது. அப்போது யாசீர் அரபாத் பா .வி இயக்க தலைவராக இருந்தார்,  அங்கு அவர் உலகப் புகழ் பெற்ற "இன்று நான் நன் ஒரு கையில் ஒலிவ் கிளையை  தாங்கிக் கொண்டு மறுகையில் சுதந்திரப் போராளியின் துப்பாக்கியைத் தாங்கி வந்துள்ளேன் , நான் மீண்டும் சொல்கிறேன் எனது கையிலிருந்து ஒலிவ் கிளையை விழச்செய்து விடாதீர்கள்  "( Today I come bearing an olive branch in one hand, and the freedom fighter's gun in the other. Do not let the olive branch fall from my hand. I repeat, do not let the olive branch fall from my hand. )  என்ற உரையை நிகழ்த்தினார். இந்த வார்த்தைகளை யசீரின் வாய்க்குள் போட்டவர் பாலஸ்தீன தேசியக் கவிஞன் மஹ்மூத் தர்வீஸ். இன்று இருவரும் உயிருடன் இல்லை , அவர்களின் கனவு நனவாக கால்கோள் இடப்பட்டுள்ளதா என்பதை தீர்மானிக்கும் நாட்களும் வெகு தூரத்திலில்லை. இந்த தீர்மானம் மூலம் ஐக்கிய நாடுகள் சபையில் இரு நாட்டுப் பிரிவினைத திட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் 29/11/1947ல் மேற்கொள்ளப்பட்ட பொழுது பாலஸ்தீனியர்கள் அதனை எதிர்த்தனர். தங்களின் நாடு பிடுங்கப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பொழுது மறுத்த அந்த இரு நாட்டு கொள்கையை மீண்டும் 65 வருடங்களின் பின்னர் அரபியர் அங்கீகரித்துள்ளனரா என்ற கேள்வியும் இங்கு எழாமலில்லை 

ஐ.நா அங்கத்துவமற்ற அவதானி  அங்கீகாரம் வழங்கப்பட்ட போப்பாண்டவரின் அதிகாரத்திற்குட்பட்ட வத்திக்கான் வரிசையில் அடுத்ததாக  பாலஸ்தீனம் சேர்ந்து கொள்கிறது. இந்த ஐ.நா அங்கத்துவம்ற அவதானி அந்தஸ்தின் மூலம் பாலஸ்தீனம் எதுவும் பெறப்போவதில்லை , இவ்வங்கீகாரம்  வெறுமனே ஒரு காகிதத் துண்டில் காணப்படும் உரிமையே என்று இஸ்ரேல மட்டுமல்ல பாலஸ்தீன மக்களில் பெரும்பாலானோரும் கருத்துரைக்கின்றனர். ஆனாலும் இந்த பிரகடனத்தில்  உள்ள அனுகூலங்களை பெற்றுக் கொள்வது பாலஸ்தீன விடுதலை இயக்கமும் ஹமாசும்  ஏனைய இயக்கங்களும்   செயற்படும் விதத்திலும் தங்கியுள்ளது.
இஸ்ரேலின் கிளர்ச்சியைத் தூண்டும் வஞ்சகச் செயற்பாட்டுத் தூண்டில்களில் சிக்கிக் கொள்ளாது  காய் நகர்த்தல்களை மேற்கொள்வதில்தான் சுய தேசத்தைக் கட்டியெழுப்பி முழு உறுப்புரிமையை பெரும் தமது நீண்ட நெடும் போராட்டத்தில் வெற்றி பெற முடியும். ஆனால் ஹமாஸ் தொடர்ந்தும் இஸ்ரேலுக்கெதிரான தனது கொள்கைப் பிரகடனத்தை மாறிக் கொள்ள வேண்டி நேருமா என்ற கேள்விக்கான விடையும் இஸ்ரேலின் எதிர்கால நடவடிக்கைகளிலும் , இவ்விரு நாடுகளின் சர்வதேச ராஜீய நடவடிக்கைகளிலும் தங்கியுள்ளது . பாலஸ்தீனமும் இப்போது ஐக்கிய நாடுகளின் கீழ் இயங்கும் விஷேடத்துவம் பெற்ற சர்வதேச நிறுவனங்களின் மற்றும் பல சர்வதேச நிறுவனங்களின்  அங்கத்துவத்துக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது. ஒரு வகையில் சட்டபூர்வமாகவும் அந்த  வாய்ப்பு ஏற்பட்டுள்ளது . சென்ற வருடம்  பாலஸ்தீன அதிகார சபையை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான கலாச்சார ஸ்தாபனம்  (UNESCO) அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட பொழுது அமெரிக்க காங்கிரஸ் யுநெஷ்கோ” ஸ்தாபனத்துக்கான உதவியை நிறுத்திக் கொண்டது. இந்த தீர்மானத்தின் பின்னரும் அமெரிக்கா வாசிங்டனிலுள்ள பாலஸ்தீன அதிகார  சபை அலுவலகத்தை மூடி விடுவதென்றும் , பாலஸ்தீனத்துக்கான நிதி உதவிகளை நிறுத்தி விடுவதாகவும் பல எச்சரிக்கைகளை தமது செனட் சபை உறுப்பினர்கள் மூலம் விடுத்துள்ளது. ஆக  மொத்தத்தில் அமெரிக்காவினால்  பாலஸ்தீன மக்கள் காலங்காலமாக தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். அமெரிக்கா மத்திய  கிழக்கின் மீதான தனது  ஆதிக்கத்தை  தக்க வைத்துக் கொள்ள ; இஸ்ரேலின் அடாவடித்தனத்தை  இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கை என்ற கோதாவில் கட்டவிழ்த்துவிட அனுமதித்துள்ளது ,  இதன்  மூலம் இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்கு  வக்காலத்து வாங்குகின்ற  ஒரு உபாயத்தையும் , மறுபுறம் சமாதானத்தை அமெரிக்கா தலையிட்டே ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணப்பாட்டையும் தோற்றுவித்து செயற்படுவதுடன் , அதற்கு துணையாக பிரித்தானியா போன்ற மேற்குலக நாடுகளினை கொண்டு  பல்வேறு அழுத்தங்களை (நிதி உதவி உட்பட) பாலஸ்தீன அதிகார சபைக்கு மட்டுமே பிரயோகிக்கின்ற செயற்பாட்டினை செய்து வருகிறது. அந்த வகையில் பாலஸ்தீனம்  ராஜீய ரீதியில் தனது அந்தஸ்தை சர்வதேச  அவையில் தரமுயர்த்தியிருக்கிறது , அதன் பலாபலன்களை இனிவரும் காலங்களில் காண முடியும் . அதற்கான அரசியல் முதிர்ச்சியும் அனுபவமும் அப்பாஸிடம் நிறையவே இருக்கிறது.  மக்களின் செல்வாக்கு மிகு காஸா பிரதேச அதிகாரத்தைக் கொண்டுள்ள ஹமாசும் பாலஸ்தீனத்தில் பல பகுதிகளிலும் மக்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட அனுபமுடையவர்கள் மக்களின் செல்வாக்கை பெரிதும் பெற்றவர்கள் என்பதால் வரும் காலங்களில் பாலஸ்தீன ஆட்சி அதிகாரக் கொள்கைகளில் எத்தைகய சமரசம்   சாத்தியமானது என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனெனில்  அரசியல் கொள்கைகளில் (இரு மக்கள் இரு நாடு ( பீ எல்.ஓ ) : ஒரே நாடு , பாலஸ்தீனம் , இஸ்ரேல் என்று ஒரு நாடே இல்லை இருக்கவும் கூடாது (ஹமாஸ் )  , என்ற நிலைப்பாட்டில் இரு  பகுதியினரும் இனிமேல் பாரிய  சவால்களுக்கு முகங் கொடுக்க வேண்டி நேரிடும். 
கியூபா வெனிசுவலா ஆகிய தென்னமரிக்க நாடுகள் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களை ஐ நா தீர்மானங்களை அலட்சியப் படுத்தும் அகங்காரத்தை , மனித இணைத்துக் கெதிரான இஸ்ரேலின் குற்றங்களை கடுமையாக கண்டித்தே பாலஸ்தீனத்துக்கு  ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. மேலும்  வெனிசுலாவின் பிரதிநிதி ஜோர்ஜ் வலேரோ பிரிசினோ (JORGE VALERO BRICEÑO ) தனது உரையில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற நாடு ஒரு தலைப்பட்சமாக உருவாக்கப்பட்டு அங்கு ஏழு  லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்ட “  நகப் என அழைக்கப்படும் பேரழிவு வரலாற்றை , அதே அரபுச் சொல்லை குறிப்பிட்டதன் மூலம்   இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வரலாற்றை பிரித்தானியாவின் வரலாற்றுத் துரோகத்தை   தனது உரையில் மறைமுகமாக சுட்டிக்காடியிருந்தார். பல ஆதரவு நாட்டின் பிரதிநிகளும் தங்களின் ஆதரவு உரையில் பாலஸ்தீன மக்களின் வரலாற்று சோகங்களை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அடாவடித்தனங்களை சுட்டிக் காட்டினர். கியூபா , வெனிசுவேலாவின் ஆதரவுக் குரல்கள் மிகவும் காட்டமாகவே இருந்தன   அமெரிக்க யூத சமவுடமைவாதியும் பாலஸ்தீன உரிமைகள் குறித்து மிக நீண்டகாலமாக குரல்கொடுக்கும் செயற்பாட்டாளருமான  பேராசிரியர் நோம் சொம்ஸ்கி ( Noam Chomsky ) காஸா நிலப்பரப்பு  உலகின் மிகப் பெரும் திறந்த சிறைச்சாலை (The Gaza Strip was the “largest open air prison in the world”,.) என்று குறிப்பிட்டதை மேற்கோள்காட்டி தனது உரையை ஜோர்ஜ் வலேரோ பிரிசினோ முடித்தது இங்கு  குறிப்பிடத்தக்கது. "பாலஸ்தீனம் என்ற யதார்த்தம் சகல மனித இனத்தினதும் மனட்சாட்சியில் இரத்தம் பொசியும் ஒரு ரணமாகும்" என்று துருக்கிய வெளிவிவகார அமைச்சர் அஹமத் டவூட்டகுலு (Ahmet   Davutoğlu )  . நா தீர்மானத்துக்கு அதாரவளித்து ஆற்றிய உரையில் குறிப்பிட்டதும இங்கு நினைவு கூரத்தக்கது  (The reality of Palestine is a bleeding wound in the conscience of all humanity,” ),

அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் ராஜீய தோல்வி

"இன்றைய பெரும் பிரகடனம் மங்கிப்போகும் , பாலஸ்தீன மக்கள் நாளை விழித்தெழுந்து தங்களின் வாழ்க்கையில் நிலையான சமாதனம் வரும் என்ற வாய்ப்பு பின்னோக்கி சென்றுவிட்டது என்பதைத் தவிர தங்களில் வாழ்க்கையில் வேறு ஏதும் மாற்றத்தைக் காண மாட்டார்கள்." என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் சுசான் ஈ ரைசின் (Susan E rice) கருத்து , பாலஸ்தீனத்தின் மீதான அமெரிக்காவின் கை நழுவிச்  செல்லும் ஆதங்கத்தின் பிரதிபலிப்பாகும். சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் இஸ்ரேலை இழுக்கப் போகும் பாலதீனத்தின் மீதான ஆத்திரத்தின் வெளிப்பாடாகும்

அது மாத்திரமல்ல சியோனிஸ குரலுக்கு முட்டுக் கொடுக்கம் விதத்திலே பாரக் ஒபமா சென்ற ஆண்டு ஐ. நா சபை குழுக் கூட்ட  உரையிலும் ஐ. நா பாலஸ்தீன பிரச்சினை குறித்து , பாலஸ்தீன சுதந்திர தேசம் குறித்து ஐ.நா முடிவெடுப்பது எந்த விளைவையும் தராது , சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் பரஸ்பரம் பேசிய முடிவெடுத்தால் மட்டுமே நிலையான தீர்வினை அடைய முடியும் என்று பாலஸ்தீன சுயாட்சி பிரகடனம் சபையேறாமல்  தடுத்தவர். இம்முறையும் அத்தீர்மானம் குறித்த பிரேரணையை முன்னெடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா ஜனாதிபது ஒபாமா ,  அப்பாசை கேட்டிருந்தார். ஆனால் அப்பாஸ் நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிட்டார். அதேவேளை பிரித்தானியாவும் முதலில் அப்பாசின் ஆதரவுக் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தது. ஆனால் சில நாட்களின் பின்னர் நிபந்தனையுடனான  ஆதரவு வழங்க விரும்புவதாக அப்பாசுக்கு அறிவித்தது. பாலஸ்தீன   சர்வதேச நீதி மன்றிற்கு International Court of Justice) , சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (International Criminal Court) அங்கத்துவம் கோரி விண்ணப்பிக்கக் கூடாது நிபந்தனையற்ற சமாதானத்துக்கு இஸ்ரேலுடன் செல்ல வேண்டும் என்றும் , அதிலும் குறிப்பாக மறைமுகமாக இஸ்ரேலுக்கு எதிராக குற்றவியல்  சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடாது என்ற கோதாவிலும் ஒரு உறுதியினை  வழங்கினால் மட்டுமே தாங்கள் ஆதரவளிக்கமுடியும் என்று கோரிக்கை விடுத்தும் ஆனால் ரமாலாவில் உள்ள பாலஸ்தீன  அதிகாரம் இந்த நிபந்தனைகளை ஏற்கவில்லை. அப்பாஸ் அதனையும் நிராகரித்தே தனது பிரேரணையை முன்னெடுத்தார் .  அண்மையில் காசாவில் நடந்த பாலஸ்தீன பொது மக்கள் மீதான  மிலேச்சத்தனமான இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலைகளை பசுமையாய் நினைவில் கொண்டிருந்த சர்வதேச சமூகம்  பாலஸ்தீன நாடு தொடர்பில் ஒரு முன் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பின்னோக்கிப் பார்த்தல் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை பெறுவது அவசியம் என்ற வகையில் பாலஸ்தீன புத்திஜீவிகள் பலர் பல வருடங்களாக பணியாற்றி வந்துள்ளனர். பிரித்தானிய தனது சர்வதேசக்  கடப்பாட்டிலிருந்து தவறி வருகின்றதையும் , அமெரிக்காவின் அடிவருடியாகி , இஸ்ரேலின் நட்புறவை  இறுக்கமாக பேணுவதில் அக்கறை காட்டி வருவதையும்  கண்டு பாலஸ்தீனம் எடுத்த அரசியல் நகர்வுகளில் ஒன்றின் விளைவாகவே ஸ்பெயினில்  மாட்ரிட் ஒப்பந்தமும் இடம்பெற்றது. பாலஸ்தீன மக்களின் செல்வாக்கு ஹமாஸை நோக்கி அதிகம் சார்ந்து காணப்படுவதும் , ஹமாசின் செல்வாக்கை ,  அதுவும் இஸ்ரேல் எனும் நாட்டை அங்கீகரிக்காத ஹமாஸை,  ஓரம் கட்டி மிதவாத இஸ்ரேலை அங்கீகரிக்கும் ஆட்சியை அங்கீகரிக்க  இந்த அந்தஸ்தை வழகுவது சிறந்தது என்று ஐரோப்பிய நாடுகள் பலவும் முடிவெடுத்துள்ளன என்பதும் இங்கு   அவதானிக்கத்தக்கது
எது  இஸ்ரேலை அச்சுறுத்துகிறதோ , அது அமெரிக்காவையும் அச்சுறுத்துகிறது.எது இஸ்ரேலை பலப்படுத்துகிறதோ  அது எங்களையும் பலப்படுத்துகிறது (“What threatens Israel threatens America, what strengthens Israel strengthens us. “ ) என்று திருமதி கிளிங்க்டன் அமேரிக்காவின் குரலாய் தமது இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மிகத் துல்லியமாகத் தெரிவித்துள்ளார். அவரின் வார்த்தைகள் காசாவில் அமையப்போகும் 3000 புதிய வீடுகளையோ கிழக்கு ஜெரூசலத்தில் ஈ ஒன்று எனப்படும் பாதையை அடைத்து அங்கு எதிர்காலத்தில் அமையப்போகும் பாலஸ்தீன தலைநகரை இல்லாமல் செய்கின்ற , பாலஸ்தீன நாட்டை துண்டாடுகின்ற நடவடிக்கைகளை இஸ்ரேல்  முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ள பின்னணியில் சொல்லப்பட்டதாகும் . மேலும் ஐ. நா பொதுக் குழுத்  தீர்மானத்தை நிராகரிப்பதாக நெட்டன் யாகூ அறிவித்துள்ளார். அத்துடன் ஒஸ்லோ ஒப்பந்தப்படி பாலஸ்தீன அதிகார சபையின் பெயரால் வசூலிக்கும்  பாலஸ்தீன அதிகார சபைக்கு வழங்கும் இவ்வருட வரிப்பனமான 120 மில்லியன் அமெரிக்கா டாலரை  பாலஸ்தீன அதிகார சபையின் கடன்களுக்காக இம்முறை திரும்பச் செலுத்தப்போவதில் என்று வேறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆக மொத்தத்தில் இஸ்ரேல் தனது மூர்கத்தனமான மிருகத்தனமான மனித விரோத  பலி வாங்கும் செயற்பாடுகளை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறது.  சென்ற மாத இஸ்ரேலின் தாக்குதல்களின் பின்னர் எய்தப்பட்ட யுத்த நிறுத்த மீறலை அடுத்தும் ஐ. நாதீர்மானத்தின் பின்னரும் முதலாவது  காஸா பகுதியில்  எல்லை மதில் கொலையும் துப்பாக்கிச் சூடும் இஸ்ரேலின் யுத்த நிறுத்த மீறலாக , பாலஸ்தீனத்தின் மீதான ஆத்திரமூட்டும் செயற்பாடாக அமைகின்றன. பாலஸ்தீன  அதிகார சபை என்றுமில்லாதவாறு அரசியல் ராஜீய நடவடிக்கைகளை , சர்வதேச நீதிமன்றுகளை அணுக வேண்டிய உடனடித் தேவை ஏற்பட்டுள்ளது.  
மொத்தத்தில் இந்த தீர்மானம் எல்லா விதத்திலும் அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் அரசியல் கபடத்தனதுக்கும் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்துக்கும் எதிராக  பாலஸ்தீன அதிகாரத்தின் ராஜீய அணுகுமுறைக்கு கிடைத்த பாரிய வெற்றி என்பதனை மறுக்கவும் முடியாது.
2/12/2012
பிற்குறிப்பு: இலங்கையின் கிழக்கிலே எழுபதுகளில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பினை ஏற்படுத்தி அதற்காக குரல் கொடுத்த , அந்த போராட்டத்தோடு மானசீகமாக தங்களை வரித்துக் கொண்ட  நண்பர்களான மறைந்த சாருமதி , மறைந்த தோழர் நிவாஸ் , கே .சிவராஜா (சித்தி) , மறைந்த கணித ஆசிரியர் நண்பர் கபூர் (காத்தான்குடி) , நண்பர் ஓட்டமாவடி அஹமத் ( அதிபர்  ) , ஆகியோரை  இக்கட்டுரை எழுதும் தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...