“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )


      எஸ்.எம்.எம்.பஷீர் 
ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை தப்பாகிவிடமுடியாது.
-          மஹாத்மா காந்தி -
“An error does not become truth by reason of multiplied propagation, nor does truth become error because nobody sees it.”    - Mahathma Ghandi
இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்று சொல்வர் எனக்கு பாடசாலையில் சமஸ்கிருதம் கற்பித்த தியாகராஜ குருக்கள் கற்பித்த பல சம்ஸ்கிருத சொற்களும் , வாக்கியங்களும் மனதில் இடம் பிடிக்க தவறிவிட்டன ஒரு பாடம் என்ற வகையில் மட்டுமே சொல்லவும் எழுதவும் நேரிட்டவைகள் அவை., ஆனால் ஓரிரு சொற்கள் அல்லது வசனங்கள் மட்டும் மனதில் செதுக்கப்பட்டதுபோல் பதிந்துவிட்டன அவற்றில் பிரதானமானது எனது கட்டுரைத் தலைப்பான "சத்யமேவ ஜெயதே" எனும் "சத்தியமே வெல்லும்" என்ற அறம்சார் கோட்பாடாகும்.

 
சுத்தத் தமிழில் சொல்வதென்றால் "வாய்மையே வெல்லும்" என்று இலகுவில் எவரும் கூறுவார். ஆனால் இம்மாதம் (கார்த்திகை) இருபத்தேழாம் திகதி புலம் பெயர் நாடுகளில் களைகட்டியிருக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகளில் இலண்டன் மாவீரர் நிகழ்வுகள் குறித்து அதிலும் குறிப்பாக எக்ஸ்செல் மண்டபத்தில் (Excel Exhibition Hall)  நடைபெறும் நிகழ்ச்சி குறித்து பலர் ஒன்றை மட்டும் அடிக்கடி அழுத்தி அழுத்தி சொல்லக் கேட்கக் கூடியதாக விருக்கிறது .  அதுதான் தலைவனின் போராட்டம் தோற்காது , சத்தியம் வெல்லும் , என்ற வார்த்தைகளாகும். அவ்வாறு கருத்துக் கூறுபவர்கள்  சத்தியம் வெல்லும் என்று சொல்லும் பொழுது "ஸத்யம்" எனும் சம்ஸ்கிருத சொல்லே சத்தியம் என்று தமிழில் மருவியுள்ளது என்பது ஒருபுறமிருக்க , தூய தமிழில் உண்மை வெல்லும் என்றோ அல்லது வாய்மை வெல்லும் என்றோ சொல்லவில்லை. ஆனால் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதை மட்டுமல்ல விடுதலைப் புலிகள் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற பெயரில் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டியதும் தூய தமிழையே பயன்படுத்துவோம் என்று பல மொழி விநோதங்களைச் செய்ததையும் , புலிகளின் தலைமைகள் பிற மொழிச் சொற்களை "தமிழ் மொழி உணர்வால் பயன்படுத்தவில்லை என்பதும் பலரறிந்ததே. தமிழ் நாட்டில் விஜய் தொலைக்காட்சி "சத்யமேவ ஜெயதே "என்ற இந்தி தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சியை மொழி பெயர்த்து தமிழில் வெளியிடுகிறது. தலைப்பை 'வாய்மையே வெல்லும்' என தமிழில் மாற்றவில்லையே , அதில் தமிழருக்கு என்ன தயக்கம் என்று தமிழ் நாட்டில் இராஜ்குமார் பழனிசாமி என்பவர் ஏதோ ஒரு மூலையில் குமுறியிருந்தார். 
 
புலம்  பெயர்ந்து தமிழையும் வாழும் நாட்டின் மொழியையும் இரண்டறக் கலந்து  வாழும்  சூழலில் புலியின் மொழிக் கொள்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் புலம் பெயர் புலிகளிடம் மெதுவாக அற்றுப் போகும் என்பது ஒரு இயங்கியல் போக்காக பார்க்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.  இப்போது போய்  புலி வழித் தமிழுடன் எங்கே பயணிக்க முடியும், வேணுமென்றால் கனடாவில் வெதுப்பகம் என பகிரங்கமாக பலகையில் போட்டு வைக்கலாம்.!    
அது ஒருபுறமிருக்க , ஒருவேளை சத்தியம் என்ற சொல்லை பயன்படுத்தி தமது மாவீர எக்ஸ்சேல்  மண்டப நிகழ்வே  உண்மையானது மற்றவர்கள் நடத்தும் நிகழ்வெல்லாம் சிங்கள அரசின்  கைக்கூலிகளால் , தமிழர்களுக்குள் பிரிவினையை உண்டாக்க வேண்டும் என்பதற்காக , நடாத்தப்படும் நிகழ்வுகளாகும் . நாங்கள் தான் உண்மையான மாவீர்களை நினவு கூறுபவர்கள் , "போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்" என்று வேறு பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. எனவே காக்கை வன்னியன்களால் செய்யப்படும் மாவீரர் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதீர்கள் என்று  மாவீரர் கொண்டாடுவதிலும் எதிரிகள் துரோகிகள் என்று ஆகி விட்டது. இவர்கள் சொல்லுகின்ற சத்தியம் வெல்லும் என்றால் சத்தியத்தின் பொருளை சிறி காஞ்சி காமகோடிகளின் விளக்கத்துடன் பார்த்தல் சத்தியம் வெல்லும் என்று சொல்லும் இவர்கள் வெல்லாமல் பிரபாகரன் சத்தியம் இல்லாத போராட்டத்தில் தோற்றுப் போனாரா , ஆனானப்பட்ட பிரபாகரன் தோற்றபின் எந்தச் சத்தியப் போராட்டத்தை இவர்கள் பிரபாகரனின் பெயரில் பேசுகிறார்கள். இவர்கள் யாவரும் தோற்றுப் போன பிரபாகரனின் அசத்தியம் பற்றி சத்தியமாகவே பொய் சொல்கிறார்கள் என்பது என்ன கடினமான கணிதச் சமன்பாடா? .   சிறி காஞ்சி காமகோடிகள் " 
   “சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இருப்பதுதான். மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் : ...என்று குறிப்பிடுகிறார். பிரபாகரனும் அசத்தியம் பேசி அதர்மம் செய்தே அழிவை தேடிக் கொண்டார் . அதனயே அவரின் ஆத்மார்த்த விசுவாசிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள் . ஒரு வேளை வாய்மை என்பது 
"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்." (குறள் 292:)  என்று வள்ளுவர் குறளுக் கேற்ப பொய்யையே மெய்யாகக் கொள்ளலாம் . 
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால்,  பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.(கலைஞர் உரை)  அக்குறளுக்கு கலைஞரின் பொழிப்புரையே அவர்களின் விளக்கமாக நிற்கலாம்.ஆனால் இவர்களின் குற்றம் என்ன , காலம் காலமாக பொய்மையை நன்மை பயக்கும் என்று புரை தீர்க்க உரைத்து முழுச் சமூகத்தையும் முள்ளிவாய்க்காலில் முடக்கியதுதானே.! ஆக இப்போதும் அதையே செய்கிறார்கள் . அல்லது ஹிட்லர் சொன்னதுபோல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பொய்யுரைத்தால் அது இறுதியில் வாய்மை ஆகிவிடும் என்பதை செயலில் காட்ட புலியின் உண்மையான பிரதிநிகள் நாங்களே என்பவர்கள் செயற்பட்டு வருகிறார்கள் .
 
 எது எப்படியோ முண்டக உபநிடதத்தின் (3.1.6, ) புகழ் பெற்ற மந்திரமான , இந்தியக் குடியரசின் தேசியக் குறிக்கோளான "சத்தியமேவ ஜெயதே"  வாசகம் இந்தியாவின் தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளது ( ஆதாரம் : விக்கபீடியா). இந்திய அரசின் சத்தியம் பற்றிய கொள்கை வெறுமனே சிலையின் கீழ் பொறிக்கப்பட்ட சிதைந்து போன வார்த்தைகள்தான்.    
இன்னுமொரு சம்பவத்தையும் சுட்டிக்காட்டி "சத்தியமேவ ஜெயதே" பற்றிப் பார்ப்போம்.   ஆங்கில ராக்  பாடகர் மிக் சாகார் ( Mick Sagger) குழுவினரும் ஏ . ஆர் ரகுமானும் இணைந்து  "சத்யமேவ ஜெயதே" என்று தொடங்கும் ஒரு சம்ஸ்கிருத இசைப் பாடல் அல்பத்தை   சென்ற  வருடம் ஆகஸ்டில் இந்தியாவின் சுத்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டனர்.  ஏன் இதை இங்கு குறிப்பிடவேண்டி உள்ளதென்றால் அந்த  காணொளிப் பாடலில் இணைத்துக் கொள்ள  சத்தியத்தின் (உண்மையின்) பொருளை எவ்வாறு வெளிப்படுத்தலாம் என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் குறும் காட்சிகளைப் படமாக்கி அல்லது உருவாக்கி அனுப்புமாறு  வீ எச் ஒன்  இந்தியா நிறுவனம்  ஒரு போட்டியினை அறிவித்தது. அந்தப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட காணொளிகள் இரண்டில் சிலாகித்துப் பேசப்பட்ட காணொளி  ஒரு சிப்பாய் தனது துப்பாக்கியை வீசிவிட்டு கிடார் (guitar) எனும் இசைக் கருவியை கையிலெடுக்கும்  காணொளிக் காட்சியாகும்.



இன்னமும் யதார்த்தத்தை மூடி மறைத்து சத்தியமாய் மீண்டும் வருவான் தலைவன் போராடப் புறப்படு தமிழனே என்று புலம் பெயர் நாடுகளில் உரத்துக் குரல் கொடுத்துக் கொண்டு , எதிரியை துரோகியை அழி என்று பாடலிசைத்துக்  கொண்டு மீண்டும் மீண்டும் எஞ்சியிருக்கும் தமிழ் இளைஞர்களையும் இடுகாட்டுக்கு இட்டுச் செல்ல வழி  சொல்லும் பாணியில் மாவீரர் நாட்கள் கொண்டாடப்படுகின்றன. இலங்கை  அரசியல் களத்திலும்  இலங்கைத் தமிழ் இளம் சந்ததியினரை சக இனங்களின் மீது காழ்ப்புனர்ச்சி கொள்ளும் வகையில் , தமிழ் தேசிய அரசியல்வாதிகள்  தங்களின் பதவிநிலையைத்  தக்க வைக்கும் வகையில்  இனவாத அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள். தென்னிந்திய  தமிழ் உணர்வு அரசியல்வாதிகளும் இதனையே செய்கிறார்கள் . அதியமான் நெடுமான் அஞ்சி   நீண்ட நெடுங்காலம் மரனமிலாப் பெருவாழ்வு பெற்று வாழ அற்புத நெல்லிக்கனியை ஒளவை பிராட்டி முழுமையாக உண்ணவில்லை அதில் சிறு மீதியை அவர் விட்டுச் சென்றார் அதனை நாங்கள் கண்டுபிடித்து பிரபாகரனை உண்ண வைத்தோம் (வை. கோ இலங்கைக்கு பிரபாகரனைச் சந்திக்கச் சென்றபொழுது ) அதனால் பிரபாகரன் நீண்ட நெடுங்காலம் மரனமிலாப் பெருவாழ்வு வாழ்கிறார் என்று நெடுமாறனும் வைக்கோவும் திராவிடர் கழக மணிகளும் இலக்கியச்  சுவையுடன் விரைவில் கதை விடலாம்.  இப்போதும் பிரபாகரன் வருவார் , அவர் வரும் வரை  துப்பாக்கியை ஏந்தச்  சொல்கிறார்கள்.  புறநானூறு காண புறப்படச் சொல்கிறார்கள் .  இதனால் எதிர்வினையாகாவும் எச்சரிக்கையாகவும் இலங்கை அரசின் சிப்பாய்களும்  துப்பாக்கியை கைவிட சந்தர்ப்பம் இல்லாது போகும். சத்தியம் எனபது சாத்தியமற்றது பற்றி பேசும் பொருளாக  பொருள் கொள்ளப்படும் .  எதிர் எதிர் துப்பாக்கி ஏந்தலில் சத்தியம்  உண்மையில் சாத்தியமில்லாது போகும்.  புலியில் சேர்ந்து வீழ்ந்தாலும் இழப்பினைச் சந்தித்த குடும்பத்தினரின் துயரம் , மனித துயரங்களில் கொடுமையானதுதான்.
இந்த  மாவீரகள் எனப்படுவோரின் "வீர  தீர "  விளையாட்டுக்களில் ஒன்றான தற்கொலை தாக்குதலில் மாண்டுபோன ஆயிரக் கணக்கானோரின் குடும்பங்களும் மனித இழப்பின் துயரத்தை துய்த்தவர்கள்தான். உதாரணத்துக்கு இலங்கையின் இனப்பிரச்சினைக்கென அரசியல் தீர்வுப் பொதியை சந்திரிக்கா காலத்தில்  பின்புலமாய் நின்று  தயாரித்த முக்கியஸ்தர்களில் ஒரு தமிழர் நீலன் திருச்செல்வம் . தீர்வுப் பொதி அரசியலமைப்பு மாற்றம் குறித்து    நாடாளுமன்ற விவாதத்துக்கு செல்லப் போகிறது என்று 1999 ஜுனில் சந்திரிக்கா அறிவித்தவுடனே  கோழைத்தனமாக தற்கொலைதாரியாகி நீலன் திருச்செல்வத்தை 1999 ஜூலையில் கொன்று  பழி தீர்த்த புலிகள்  கொன்ற அத்தகைய மனிதர்கள்தான் உண்மையில் மாவீரகள் என்பதை இப்போது பதின்மூன்றாவது திருத்தமும் கைவிட்டுப் போகுமோ என்று அங்கலாய்க்கும் தமிழர்களுக்கு புரியும் நாள் தூரமில்லை.(24/11/2012)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...