“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” ( தொடர்: எட்டு)



                                                                              
 எஸ்.எம்.எம்.பஷீர் 


நாங்கள் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்ட ஒரே ஒரு விடயம் என்னவென்றால் நாங்கள் அனுபவத்திலிருந்து  ஒன்றையும் கற்றுக் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான்”     - சின்னு அச்சபே -

”The only thing we have learnt from experience is that we learn nothing from experience.”  ( Chinua Achebe)



ஹிஸ்புல்லாவின் நாடாளுமன்ற செயலாளர் இப்திகார் செய்த போலீஸ் முறைப்பாடும் அதனை தொடர்ந்த சட்ட நடவடிக்கைகளும் சடுதியாக நிறுத்தப்பட்டுப் போயின. வழக்கும் கைவிடப்பட்டுப் போயிற்று. இந்நிலையில் முஹைதீன் அப்துல் காதர் ஏமாற்றமடைந்தார். ஹிஸ்புல்லாவிற்கு எதிரான ஒரு துரும்பாக கருதிய குற்றவியல் வழக்கு கைநழுவிப் போனதால் , அஸ்ரப் மீதும் கட்சி மீதும் அப்துல் காதர் நபிக்கை இழந்து போனார். ஆகவே அவரின் ஊர்க்காரர்கள் கட்சியை விட்டு விலகி அஸ்ரபுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று மொஹிதீனுக்கு ஆலோசனை வழங்கினர். தனது மக்களின் அரசியல் சமூக தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தேவையும் மொஹிதீனுக்கு ஏற்பட்டது. ஏனெனில் பெரும்பான்மையான ஓட்டமாவடி மக்கள் காலங்காலமாக முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சராகவிருந்த கே டப்ளியு .தேவநாயகம் என்பருக்கு இன பேதமற்று கல்குடா தேர்தல் தொகுதியில் வாக்களித்தவர்கள் . அதுமட்டுமல்ல தமிழரசுக் கட்சி தமிழர் கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களை தோற்கடித்து முஸ்லிம்களின் வாக்குகளை கொண்டே  கே டபிளியு தேவநாயகம் அறுபத்தைந்தாம் (1965) ஆண்டு தொடக்கம் கல்குடா தொகுதி இல்லாமல் போகும் வரை அவரே அம்மக்களின் தெரிவாக இருந்தார். ஆனால் இம்முறை புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் கல்குடாவையும் இணைத்ததாய் விகிதாசாரப் பிரதிநித்திதுவ தேர்தல்   நடைபெற்றதால் தங்களுக்கும் ஒரு முஸ்லிம் பிரதிநிதி வரும் வாய்ப்பை முஸ்லிம் காங்கிரஸின் கணவான் ஒப்பந்தத்தின் மூலம் ஓட்டமாவடி மக்கள் நம்பியிருந்து ஏமாற்றப்பட்டார்கள் . இந்நிலையில் முன்னாள் கப்பற்துறை வணிகத்துறை அமைச்சர் ஏ .ஆர்.எம். மன்சூர் மூலம் தனது ஊர் தேவைகளை நிறைவேற்றி வந்த மொஹிதீன் ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்வாங்கப்பட்டார். இன்னொரு விதமாக பார்த்தால் பிரேமதாசாவின் அனுசரணையும் ஆதரவும் பெற்ற ஹிஸ்புல்லா மற்றும் பிரேமதாசாவுடன் நெருக்கமாக உறவுகொண்டிருந்த அஸ்ரப் ஆகியோரின் ஆபத் பாந்தவனாக விளங்கிய பிரேமதாசாவின் கட்சிக்குள் இவரும் எதோ ஒரு விதத்தில் காரணம் எதுவாகவிருப்பினும் இணைந்து கொண்டார். மொத்தத்தில் பிரேமதாதா எனும் அரசியல் கடலில் அன்று இவர்கள் எல்லோரும் சங்கமமாயினர். புலிகளும் பிரேமதாசாவுடன் இணைந்து அவரின் ஆலோசனைப்படி அரசியல் கட்சி யொன்றையும் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி”( People’s  Front of Liberation Tigers ) என்ற பெயரில் (1989)  பதிவு செய்தனர்.  1990ம் ஆண்டு தொடக்கத்திலேய  புலிகள் வட கிழக்கில் முஸ்லிம் காங்கிரசின் நடவடிக்கைகளை தடை செய்தனர். மேலும் ஐம்பதுக்கும்  மேற்பட்ட முஸ்லிம்களை (முஸ்லிம் காங்கிரஸ் தீவிர ஆதரவாளர்களை )  தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கைதியாக வைத்திருந்தனர் . அந்த வேளையில் புலிகளுடன் அரச அதிகாரிகளை பேச்சுவார்த்தை நடத்தச் செய்து அவர்களை விடுவிக்க முஸ்லிம் காங்கிரசுக்கு பிரேமதாசா உதவினார் .  ஆக பிரேமதாசாவுடனான நெருக்கம் வலுப்பெற இது போன்ற பல பல காரணங்களை நான் இங்கு கட்டுரையின் நீளமும் , அதற்கான சந்தர்ப்பமும்  (Context) இதுவல்ல என்பதால் தவிர்த்துள்ளேன். பிரேமதாசாவின் புலிகளுடனான உறவே இறுதியில் அவரின் உயிரைப் பறித்தது. புலிகள் யாருடன் சேர்ந்தாலும் எதிர்த்தாலும் அவர்களின் மாறாத குணமே அவர்களைக் கொல்வதே என்பதில் இவரும் சேர்த்தி, பின்னர் சேராதிருந்த அஸ்ரபுக்கும் அதுவே நடந்தது.


யாரை யார் நோகுவது  என்ற இரண்டும் கெட்டான் நிலையில் நிலைமைகள் நடந்தேறினும் மொஹிதீன் தனது முஸ்லிம் காங்கிரஸ் உறவை முற்றாக அறுத்த நிலையில் , ஐக்கிய தேசிய கட்சியுடன் சங்கமமான சந்தர்ப்பத்தில் சேகு  இஸ்சதீனையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அங்கத்துவத்திலிருந்து இடை நிறுத்தியது.

இந்த கால கட்டத்தில் வெளியான "முஸ்லிம் முன்னணி" என்ற பத்திரிக்கையில்"ஹிஸ்புல்லாவே எம் பீ யாக இருக்க வேண்டும் " என்ற தலைப்பில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது " மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாஹ் தான் இப்பொழுது எம் பீ ஹிஸ்புல்லாவை வெளியில் போடுவது  முடியாத காரியம் . ஹிஸ்புல்லாவின் வழக்கு வைப்பதற்கு வாக்குக் கொடுத்த கதையை எடுத்துக் கொண்டு நீதிமன்றம் செல்ல முடியாது. இப்திகாரின் விஷயத்தைக் காரணம் காட்டி தனது அதிகாரத்தைப பாவித்து ஹிஸ்புல்லாவை கட்சியிலிருந்து விலக்கலாம். அப்படி விலக்கினால் ஹிஸ்புல்லா உயர் நீதிமன்றத்தில் வழக்கு வைக்கலாம் .இந்த வழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் மூடி மறைத்து வைத்துள்ள பல விஷயங்கள் சத்தியக் கடதாசியோடு வெளிவரும். மேலும் கட்சி இடை நிறுத்தி வைத்துள்ள தவிசாளர் சேகு இஸ்ஸதீன் கூட ஹிஸ்புல்லாவின் உதவிக்கு நிச்சயம் வருவார். அப்படி சேகு இஸ்ஸதீன் ஒரு சாட்சியாளராகவும் ஆலோசகராகவும் ஹிஸ்புல்லாவுக்கு உதவ முன்வந்தால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அரும் பெரும் பாடுபட்டுக் கட்டிக் காத்துவரும் ... " என்று பல பல செய்திகளை அப் பத்திரிக்கை எழுதி இருந்தது. முஸ்லிம் முன்னணி  பத்திரிகை நடத்தியவர்கள் சிலர் முஸ்லிம் காங்கிரஸின் அந்தரங்கங்களை அறிந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

எனினும் இந்த பின்னணியில் , ஹிஸ்புல்லா ஒரு தடை நீங்கி விட்டதை உணர்ந்தார். மீண்டும் முஸ்லிம் காங்கிரசுக்குள் நுழைந்து விடுவதற்கு வியுகம் வகுக்கத் தொடங்கினார். ஏனெனில்  நான் முன்னர் அழுத்திக் குறிப்பிட்டதுபோல் முஸ்லிம் காங்கிரஸ் ஹிஸ்புல்லாவை கட்சியை விட்டு நீக்கவில்லை  மாறாக  இடை நிறுத்தியே வைத்திருந்தனர். இந்த வேளையில் தான் தேர்தலில் போட்டியிட்ட அவ் வொப்பந்தத்தின் மூன்றாவது இடத்தில் இருந்த வேட்பாளரும் வெளிநாடு சென்று விட்டார். அவர் தனது காலத்துக்கு  முன்பாகவே சென்றுவிட்டார் . இந்த நிலையில் ஹிஸ்புல்லா உடனடியாக மீண்டும் முஸ்லிம் காங்கிரசுக்குள் தாவும் முயற்சிகளை துரிதப் படுத்தினார். அவரின் சகாக்களின் (முஸ்லிம் காங்கிரசுக்குள்ளும் இருந்தவர்வர்கள் உட்பட )   ஆலோசனையுடன் ஒரு பகிரங்க பத்திரிகை அறிக்கை ஒன்றினை ஹிஸ்புல்லா வெளியிட்டார், ஆக முஸ்லிம் காங்கிரசுக்கு இப்போது மன்னிப்பு வழங்கி ஹிஸ்புல்லாவை மீண்டும் அரவணைப்பது தான் ஒரே ஒரு வழி , அதன் மூலமே தாங்களும் ஹிஸ்புல்லாவுக் கெதிராக நடவடிக்கை எடுக்க முடியாதிருக்கும் தர்மசங்கடத்திலிருந்து தப்பிக்கவும் முடியும்  என்பதை முஸ்லிம் காங்கிரசும் உணர்ந்தனர். கட்சியின் உருவாக்கத்திற்கும் அதன் சகல நடவடிக்கைகளுக்கும் அதிகளவில் பங்காற்றிய சேகு இச்சதீனும் கட்சிக்கு எதிராக வரும் நிலையில் ஹிஸ்புல்லாவுடன் சமரசம் செய்து கொள்வதை தவிர வேறு வழி இருப்பதாக முஸ்லிம் காங்கிரசுக்கு தெரியவில்லை.


தொடரும்    

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...