“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! “ (தொடர் ஐந்து )




                                                                                                                                         எஸ்.எம்.எம்.பஷீர் 


சிலர் தங்களின் கட்சியை தங்களுடைய கொள்கைகளுக்காக மாற்றிக் கொள்கிறார்கள் ; வேறு சிலர் தங்களின் கொள்கைகளை தங்களின் கட்சிக்காக மாற்றிக் கொள்கிறார்கள் -வின்ஸ்டன் சர்ச்சில் 

( “ Some men change their party for the sake of their principles; others their principles for the sake of their party.”-Winston Churchill )
 

        

எப்போதுமே தேர்தலின் பின்னர் ஹிஸ்புல்லாஹ் தன்னை எம்.எல்.ஏ .எம்.ஹிஸ்புல்லாஹ் என்றுதான் எழுதிக் கொள்வார் அல்லது எழுதுவதை , அவ்வாறே சகல ஆவணங்களிலும்  வெளிவருவதை வழக்கமாக்கி கொண்ட ஹிஸ்புல்லாஹ் அந்த தேர்தலின் பின்னர் ஆலிம் முஹம்மத் ஹிஸ்புல்லாஹ் எம்.எல் என்று தனது தகப்பனின் தொழிலை முன்னிறுத்தி , எழுதினாலும் தனது பெயரை அவ்வாறு வேறு அதிலும் எங்கும் அவர் பயன்படுத்துவதில்லை. நாடாளுமன்ற எம்.பிக்கள் பட்டியலிலும் அவரின் பெயர் ஹிஸ்புல்லாஹ் எம.எல்.ஏ .எம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. '' ( A- ஆலிம் என்பதை குறிக்கும் முதல் எழுத்து ) அவரின் இனிஷியலிலும் (Initials-  தலைப்பெழுத்துகள் ) மூன்றாவது இடத்திலே பயன்படுத்தப்படுவதை யாரும் அவதானிக்காமல் இருக்க முடியாது. இதை ஏன் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றால் ஹிஸ்புல்லாஹ் ஆரம்பம் முதலே அரசியலில் தனது சூட்சுமங்களை பயன்படுத்தி அரசியல் செய்து வருபவர் என்பதை சுட்டிக் காட்டவேயாகும்.


பிரேமதாசவுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலனான உறவு


தனது ஜனாதிபதி தேர்தலில் சாதி அடிப்படையில் அரசியல் ரீதியில் கட்சிக்குள் பல சதிகளுக்கு நெருக்குவாரங்களுக்கு உட்பட்டிருந்த பிரேமதாசா உள்ளார்ந்த எதிர்ப்புக்களை முறியடித்து தமது பிரதான அரசியல் எதிரிகளான லலித் அதுலத் முதலி, காமினி திஷ்ஷனாயக போன்றோரை ஓரங்கட்டிய பின்னரும்; ஜே ஆரின் நீண்ட ஆட்சியின் பின் மக்கள் மாற்றம் வேண்டி நின்ற சூழ்நிலையில் இந்திய எதிர்ப்பு  மூலம்  -இந்தியப்படை வெளியேற்றத்தை ‍பயன்படுத்தி கொண்டு புலிகள் மூலம் தமிழ் வாக்குகளையும் வெட்டுப் புள்ளி குறைப்பின் மூலம் முஸ்லிம் வாக்குகளையும் (அந்த காலகட்டத்தில் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் மாகான சபையில் பெற்ற வெற்றியை அடிப்படையாகக் கொண்டு ) வடக்கு கிழக்கில் இரு சமூகங்களின் இரு வேறு தேவைகளை நிறைவேற்றி , சிங்கள வாக்குளில் ஏற்படும் இழப்புக்களை ஈடு செய்து கொண்டு பீறேமதாசா வகுத்த வியூகத்தில் இரு சமூக (தமிழ் முஸ்லிம்) பகுதியினரும் தங்களின் அரசியல் இலக்குகளை அடைந்து கொள்ள முடிந்தது. மறுபுறம் பிரேமதாசாவின் ஆதரவாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் தொடர்புகளும் மிகைத்த புஹாரிதீன் ஹாஜியார் , முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் மறைந்த ஏ.சீ ஏஸ். ஹமீத்தின் நண்பர் எப்படி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியலுக்குள் எப்படி பிரவேசித்தார் . ஒரு புறம் அன்றைய இனப்பிரச்சினைகளின் குவிவுப் புள்ளியாக இரு இனங்களில் அரசியல் மையப்படுத்தப்பட்ட களமாக    திகழ்ந்த கிழக்கில் இரு சமூகமும் ஒரு புறம் வெற்றிபெற பிரேமதாசாவும் மறுபுறம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது மட்டுமல்ல இலங்கை அரசியல் செல் திசையில் கூட மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றிபெற்றார் என்பதை ஆழமாக அரசியல் பகுப்பாய்வு செய்யும் அரசியல் நோக்கர்களுக்கு புரியும்.

ஏற்கனவே சிறிமாவோ பண்டாரனாயகாவிடம் அரசியல் கூட்டு வைத்துக் கொள்ளும் வகையில் முயற்சிகள் யாவும் செய்யப்பட்டபின் , வரப் போகும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் வாக்குகள் சிறிமாவோ பண்டாரநாயகாவிற்கு என்று முடிவெடுத்து அந்த முடிவுகள் உள்ளூர் கட்சி மட்டங்களில் பரப்புரை செய்யப்பட்ட பின்னர் திடீரென்று அஸ்ரப் தனது முடிவை மாற்றிக்கொண்டு பிரேமதாசாவுக்கு இரகசியமாக வாக்களிக்குமாறு  வேண்டி கொண்டார். இது பற்றி நான் முன்னர் எழுதிய கட்டுரை விரிவுக்காக இத்துடன் இணைக்கப்படுகிறது http://www.bazeerlanka.com/2011/03/1989.html ) “ முஸ்லிம்காங்கிரஸ் தலைமைத்துவம் 1988 தேர்தலில் சிறீமாவோ பண்டாரனாயக்காவுக்கு ஒத்தாசை வழங்குவதென்று ஏகமனதாக முடிவெடுத்து சிறீமாவோ பண்டாரனாயக்காவோடு பேச்சுவார்த்தைகளை நடாத்தியது. ஜனாதிபதி தேர்தல்காலங்களில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி வடகிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்களுக்கும் ,முஸ்லிங்களுக்கும் சிங்களவர்களுக்கும் வெவ்வேறான நிர்வாக அலகுகளை ஏற்படுத்தும் பிரேரணையைப் பிரேரித்தது.

இந்த வேலைத்திட்டம் கொள்கையளவில் முஸ்லிம் காங்கிரசாலும் தமிழ்க்காங்கிரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தத் தேர்தல் அறிக்கை மாத்திரம்தான் வடகிழக்கு மாகாண முஸ்லிம்களின் உரிமையை அங்கீகரித்தது. ஜனாதிபதி தேர்தலுக்குச் சிலநாட்களுக்கு முன்னர் முஸ்லிம்காங்கிரஸ் தலைமை இந்த நிலைப்பாட்டைப் தன்னிச்சையாகப் புறக்கணித்துவிட்டு முஸ்லிம்காங்கிரஸ் தேர்தலில் நடுநிலமையாக இருக்கப்போவதாகவும் தாம் ஒரு கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் பிரகடனப்படுத்தியது. கொழும்பில் நடந்த முஸ்லிம்காங்கிரஸ்சின் 8வது வருடாந்த மகாநாட்டில,; முஸ்லிம் காங்கிரஸ் சிறீமாவோ பண்டாரனாயக்காவுக்கோ அன்றி ரணசிங்க பிரேமதாசாவுக்கோ ஒத்தாசை வழங்கப் போவதில்லையென்று அஸ்ரப் எழுந்தமானமாகப் பிரகடனப் படுத்தினார். அவரது இந்தத் தன்னிச்சையான எழுந்தமானக் கொள்கைத் திருப்பமானது மத்திய குழு அங்கத்தவர்களையும் ஏன் தேசந்தழுவிய முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களையும் வியாகூலப் படுத்தியது. ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே சிறீமாவோ பண்டாரனாயக்காவுக்கு வாக்களிக்கும்படி முடுக்கியிருந்தது.

இருந்தபோதும் ஒரு சிலர் துணிந்து முஸ்லிம்காங்கிரஸ்சின் தலைமைத்துவத்தை ஏன் இப்படியான திடீர் திருப்பம் என்ற கேள்வியைக் கேட்டனர். முஸ்லிம் சமூகத்தின் நன்மைமக்காகத் தலைவரின் உள்ளுணர்வு அப்படியான கொள்கைத் திருப்பத்தை எடுக்க வைத்ததாக முஸ்லிம் காங்கிரஸ்சின் முக்கியஸ்தர்கள் விடையிறுத்தனர். ஒரு சிலருக்கே இந்தத் திடீர் திருப்பத்திற்கான காரணம் தெரிந்திருந்தது. அனேகர் வியாகூலத்தில் பிரமித்துப்போய் இருக்க விடப்பட்டனர்.

அஸ்ரப்பும் சேகு இஸ்சாடீனும் சிறீமாவோ பண்டாரனாயக்காவோடுகலந்துரையாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில் யூஎன்பியின் ஜனாதிபதி வேட்பாளரான ரணசிங்கா பிரேமதாசாவோடும் இரகசியப் பேச்சுக்களை நடாத்தினர். ஜனாதிபதித் தேர்தலில் தாம் நடுவுநிலையாக இருக்கப்போவதாக முஸ்லிம் காங்கிரஸ் பிரகடனப் படுத்தியிருந்த போதும் இரகசியமாகப் பிரேமதாசாவின் வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்யும்படி செய்திகள் எல்லாப் பிராந்திய கிளைகளுக்கும் 1989 இல் தேர்தலிற் போட்டியிட இருந்தவர்களுக்கும் மத்தியகுழு அங்கத்தவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் தனதுகொள்கை மாற்றத்திற்கான இரகசியத்தை
அஸ்ரப்பால் பாதுகாக்க முடியவில்லை. அவர் புத்திசாதுரியமற்று அந்த இரகசியத்தை பிரசித்தமாக வெளியிட்டு விட்டார். பிரேமதாசா அவருக்குத் தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு 'அஸ்ரப் நீங்கள் என்னை வெற்றியீட்டப் பண்ணியதற்காக நான் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன்.உங்களுடைய ஒத்தாசை இல்லாதிருந்தால் நான் ஒருபொழுதும் ஜனாதிபதியாகி இருக்கமாட்டேன்." இதைக் கேள்வியுற்ற அந்தச்சந்தர்ப்பத்தில் கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஓர் இரட்சகரிடமிருந்து ஓரு மதபோதனையைச் செவிமடுத்த உணர்ச்சியோடு 'அல்லாஹ_அக்பர்" (அல்லாஹ்வே பெரியவன்) என்று கூச்சலிட்டனர். பின்பு அஸ்ரப் கூறினார்,

அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் 12 வீதம் என்ற வெட்டுவீதமில்லாமல் அதை 5 வீதமாக்கி விகிதாசாரத் தேர்தல் முறையின்கீழ் அதிகமுஸ்லிம்கள் பாரளுமன்றத்திற்குப் போவதற்கு ஒத்துக்கொண்டதாகக் கூறினார்.


இவ்வாறான திடீர் அரசியல் மாற்றத்தினை வெட்டுப்புள்ளி மாற்றம் செய்வதற்கான ஏற்பாடான  அரசியல் அமைப்பின் பதினைந்தாவது திருத்த சட்டம் 17 ஆம் திகதி டிசம்பர் மாதம்  1988 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள்   10ஆம் திகதி நவம்பர் மாதம் 1988 கையளிக்கப்பட்ட பின்பே உறுதிப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் 19.12.. 1988  அன்று நடைபெற்றது. அதாவது ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சட்ட உறுதிப்பாட்டை பெற்றது என்பது இங்கு கூர்ந்து கவனிக்கத் தக்கது.   




பன்னிரெண்டரை (12 ½ %) விழுக்காடு வெட்டுப்புள்ளியை ஐந்து வீதமாக (5%)  மாற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் அது தொடர்பிளான  உறுப்புரைகள் 96A , 98, 99 , 99A  என்பன திருத்தப்படும் சட்டம் உறுதி செய்யப்பட்டது. இதிலிருந்தே அவசர அவசரமாக சட்ட மாற்றமும் , முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு மாற்றமும் நடந்த பின்னணிகளை புரிந்து கொள்ளலாம். எவ்வாறெனினும் முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல ஏனைய சிறிய கட்சிகள் சிஹல உறுமய உட்பட இந்த வெட்டுப் புள்ளி மாற்றத்தால் பலன் பெற்றனர் , பெறுகின்றனர் என்பதும் உண்மையே.


பிரேமதாசாவை தொடர்பு படுத்தாமல் அல்லது முஸ்லிம் காங்கிரசுக்கும் பிரேமதாசாவுக்கு மிடையே நிலவிய உறவினை மதிப்பீடு செய்து கொண்டு ஹிஸ்புல்லா பற்றி , முஸ்லிம் காங்கிரசுக்கு ஏற்பட்ட தர்ம சங்கடம் பற்றி , மொஹிதீன் பின்னர் யூ .என்.பீ கட்சி தாவியது , சேகு இஸ்ஸதீன் யு என்.பீ யின் நியமன எம்.பீ யாகியது என்பதை எல்லாம் தொட்டுக் கொண்டே  தொடர்ந்து நகர்வோம்.   .

தொடரும்.       

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...