காவு கொள்ளப்பட்ட கடாபியும் , கற்பனை ராச்சியங்களும்

      
 
 


 
எஸ்,.எம்.எம்.பஷீர்


கேணல் முஅம்மர் கடாபி கொல்லப்பட்ட செய்தி காட்டுத் தீபோல்  திகதி உலக ஊடகங்களில் இப்போது பரவி ஆக்கிரமித்திருக்கிறது. எங்கும் எதிலும் அது பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்படுகின்றன , விவாதிக்கப்படுகின்றன. கடாபி எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றிய செய்திகளும் பல விதங்களில் சில நிமிடங்களுக்குள் மாறு பட்டே வரத் தொடங்கின . குறிப்பாக முதன் முதலில் மேற்குலக செய்தி ஊடகங்களுக்கு பரவிய செய்தி  கடாபி சென்றதாக சந்தேகிக்கப்பட்ட வாகனத் தொடரணி மீது நேட்டோ படையினரின் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என்பதாகும். பரஸ்பர சண்டையில் ஒரு வீட்டில் குண்டடிபட்டு இறந்ததாகவும் செய்திகள் வந்தன , மிக இறுதியான செய்தியாக கடாபி ஒரு கழிவு நீரோடும் குழாயிலிருந்து சுடப்பட்டதாகவும் , வெளியாகின  , வீட்டில் சுடப்பட்டதான செய்தியின் போதும் கழிவு நீர் குழாயிலிருந்து சுடப்பட்ட செய்தியின் போதும் அவர் தன்னை சுட வேண்டாம் என்று கெஞ்சியதாகவும் செய்திகள் வந்தன. 

அதிலும் குறிப்பாக இறுதியில் வந்த செய்தி என்னவென்றால் கடாபி எதிர்த்து போரிடவில்லை தற்செயலாக -விபத்தாக சுடப்பட்டார். ( ஒசாமா பின் லாடனையும் ஆரம்பத்தில் தாக்குதல் நடத்த முற்பட்டார் என்றும் பின்னர் அவர் தங்களை தாக்க முற்படவில்லை என்றும் செய்திகள் வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.)   இந்த செய்திகள் எல்லாம் இப்போதைக்கு வேண்டாம் ; கடாபி கொல்லப்பட்டுவிட்டார் ; சர்வாதிகாரி ஒழிந்து விட்டான் என்பதுதான் தேவையான செய்தி என்று மேற்குலக ஊடகங்கள் சமரசம் செய்து கொண்டன. ஆனால் சில மேற்குலக செய்திகளின் நம்பக தன்மைக்கு சவால் விடும் சில சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் ஓரிரு செய்தி ஊடகங்கள் மெதுவாகவேனும் கடாபி எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்து கேள்வி எழுப்புகின்றன. அந்த வகையில் இறுதியாக சர்வதேச மன்னிப்பு சபையும் இடைக்கால தேசிய சபை கடாபி கொல்லப்பட்டது குறித்து ஒரு சுயாதீன விசாரணை செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளது. லிபியாவின்  இடைக்கால தேசிய சபையின் பேச்சாளர்கள் அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசத்தொடங்கி உள்ளார்கள்.
.
மேலும் சர்வதேச மன்னிப்பு சபை நேட்டோ நாடுகளின் குடிமக்கள் மீதான தாக்குதல்களை ஆப்கானிஸ்தானிலோ அல்லது லிபியாவிலோ ஆக்ரோஷமாக கண்டிக்கவில்லை என்பது ஒரு புறமிருக்க கடாபியின் மரணம் ( ஆயுதம் வைத்திருக்காத , எதிர்த்து சண்டைபுரியாத ஒருவரை விபத்தாக கொன்று விட்டோம் என்பதன் மூலம் கொலையை இடைக்கால தேசிய சபை மறைமுகமாக ஒத்துக் கொண்டிருக்கின்ற வேளையிலும் ) அடக்குமுறைக்கும் துஷ்பிரயோகத்துக்கும்   குறிப்பட்ட லிபியாவின் வரலாற்று  அத்தியாத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரினும் கதையை முடிக்கவில்லை என்றும் (The reported death of Colonel Mu'ammar al-Gaddafi would bring to a close a chapter of Libya's history marked by repression and abuse but does not end the story,) சூசகமாக கடாபியின் கொலை சம்பந்தமாக விசாரணையின் தேவைப்பாட்டையும் வலியுறுத்துகிறது. இதுவரை நேட்டோ நாடுகளின் குண்டுத்தாக்குதல்களினாலும் , லிபிய ஆயுத புரட்சியாளர்களினாலும் கொல்லப்பட்ட சித்திரவதை செய்யப்பட்ட  குடிமக்கள் கடாபி ஆதரவாளர்கள் பற்றிய தகவல்கள் கசிந்தவன்னமிருக்கின்றன. மேற்குலக மனித உரிமை நிறுவனங்கள் சிலிர்த்து எழுந்து சீண்டும் திராணியற்றவை என்பதால் நேட்டோ அலட்டிக் கொள்ளப்போவதில்லை , ஆக மிஞ்சினால் ஒரு விபத்து நிகழ்வாக மன்னிப்பு கேட்டுவிட்டால் போதும். அதைத்தான் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் செய்து வருகிறார்கள்.  
 
  
கடாபி மேற்குல எதிர்ப்பாளராக மூன்றாம் உலக நாடுகளின் அனுசரணையாளராக மாறிய போதே அமெரிக்க , பிரித்தானிய உள்ளிட்ட ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் அவர் மீது தீவிர கண்காணிப்பினை எதிர்ப்பினை கட்டமைக்கும் பணியை ஆரம்பித்திருந்தன. ஆனால் இந்நிலை பிரித்தானிய காவல்துறை பெண்மணியின்(ப்லேச்சேர் ) கொலையுடனும் லோக்கர்பீ விமான குண்டு வெடிப்புடனும் , ஐரிஷ் கெரில்லாக்கள் மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கான உதவிகளுடனும் (யூத எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொள்ள ) மேற்குலகின் கண்ணில் விழுந்த தூசி போல கடாபியின் இருத்தல் பிரித்தானியாவையும் அமெரிக்காவையும்  உறுத்தத் தொடங்கியது. அது தொடர்பான கடாபியினதும்   அவரின் மேற்குலக எதிரிகளினதும் ராஜரீய அணுகுமுறைகள் மாற்றமடைந்தன. எதிரியான இரு பகுதியினரும் இறுக்கமாக அனைத்து ஆரத்தழுவி ஆயுதங்களை கடாபிக்கு விற்றதும் மாற்றாக எண்ணைக் குதங்களையும் எரிவாயுக்களையும் குத்தகை கெடுத்ததும் நடந்தேறின. அணுவாயுத அச்சுறுத்தலை கடாபி இல்லாமல் செய்தார்.

ஆனால் கடாபியை கொல்ல வேண்டும் என்பதற்கு பிரித்தானியாவின் உளவுத்துறை முதன் முதலில் சதித திட்டம் தீட்டியது. நிச்சயமாக அது அன்றைய அரசின் அனுசரணையுடன்தான் நடைபெற்றது என்ற குற்றச்சாட்டை ஆரசு மறுத்தாலும் உண்மைகளை வரலாறுகள் பதிவு செய்யத்தானே செய்யும். எம்.ஐ சிக்ஸ் எனப்படும் பிரித்தானிய உளவு ஸ்தாபனம் இதற்காக தன்னை அமர்த்தியதென அதன் உளவாளியாக செயற்பட்ட (  அவர் எனது அயலில்  தான் வாழ்ந்திருக்கிறார் என்பதை பின்னரே அறிந்து கொள்ள முடிந்தது)  டேவிட் ஷய்லேர் (David Shayler)  தான் அப்பதவியிலிருந்து விலகி தனது பாதுகாப்புக்காக பிரான்ஸ் சென்று அங்கிருந்து இலண்டன் பத்திரிகை ஒன்றிற்கு தகவல் வழங்கியிருந்தார். அத்தகவலை வழங்கியதற்காக அவரை கைது செய்து நாடு கடத்துமாறு பிரித்தானிய ஆரசு பிரான்சை கேட்க, பிரான்ஸ் இறுதியில் அதனையே செய்தது. அவர் 1996 ம் ஆண்டு மாசி மாதம் லிபியாவிலுள்ள இஸ்லாமிய தீவிரவாத குழுவொன்றின் முகவருக்கு கடாபியை சதிக்கொலை செய்யும் பணியை தான் எம்.ஐ சிக்ஸ் உத்தரவிற்கிணங்க  வழங்கியதாகவும் அம்முயற்சியில் அவர்கள் மோட்டார் பவனி வாகனத்தின் கீழ்  பொருத்தி  குண்டு வெடிக்க வெடித்ததாகவும் ஆனால் அந்த குண்டு  வெடிப்பில் தெருவோரம் நின்றவர்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் கடாபி பாதிக்கப் படவில்லை என்றும் பின்னரும் 1996 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் (மார்ச்) மீண்டும் ஒரு சதிக்கொலை முயற்சி செய்யப்பட்டதாகவும் அது கடாபி பிறந்த நகரான சிரத்தில் ( இப்போது அவர் கொல்லப்பட்ட நகரத்தில் ) செய்யப்பட்டதாகவும் அதிலும் பிழையான வாகனமே குண்டு வெடிப்பிற்குள்ளானதென்றும்  அதிலும் கடாபி தப்பிவிட்டார் என்றும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். 

இவ்வாறான பிரித்தானியாவின் கேவலமான கபடத்தனமான முகமூடியை டேவிட் ஷய்லேர்  கிழித்தெறிந்ததற்காக அவர் கைதியாக்கப்பட்டு அரச இரகசிய வெளிப்படுத்தல் சட்டத்திற்கு அமைய தண்டனையும் வழங்கப்பட்டார். அனால் அவருக்கு ஆதரவாக நின்றவர் அவரின் காதலியான இன்னுமொரு எம்.ஐ சிக்ஸ் உத்தியோகத்தரான அண்ணி மாச்சொன் ஆகும். இவர் இப்போது ஜெர்மனியிலே வாழ்வதுடன் பிரித்தானிய அமெரிக்க நயவஞ்சகத்தனத்தை கடாபியின் மீதான பழிவாங்கலை நேட்டோவினதும அமெரிக்காவினது அத்து மீறல்களை மனித உரிமை பாசாங்குகளை பகிரங்கமாக சுட்டிக் காட்டி கட்டியுள்ளார்.  மிகவும் ஆணித்தரமாக தனது கருத்துக்களை தனது பட்டறிவின் பின் பட்டவர்த்தனமாக இவர் பேசுகிறார். 

நேட்டோ படைகள் கடாபி எதிர்ப்பு புரட்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கியதும் வான் தாக்குதல்கள் மேற்கொண்டதும் இறுதியில் கடாபியின் கொலையையும் செய்து முடித்திருக்கிறார்கள். ஐயனா நாவன்னவும் மேற்குலக ஏகாதிபத்தியங்களும் தங்களின் நிகழ்சி நிரலை கடாபி எதிர்ப்பு லிபியர்கள் இஸ்லாமிய ஆட்சி முறையை நிறுவ விரும்பும் சக்திகள் , தாராளவாத சக்திகள் என எல்லா தரப்பினரையும்  ஒன்றிணைத்து எண்ணெய்வளமிக்க  நாட்டை சுடுகாடாக்கியிருக்கிறார்கள். கடாபி தான் தோன்றித்தனமாக ஆட்சி அத்துமீறல்களும் ஜனநாயக மறுப்பும் பற்றிய குற்றச்சாட்டுக்கள் லிபிய மக்களின் உள்ளார்ந்த உரிமை , ஆனால் எகிப்து துனிசியா ஏன் ரோமொனியாவில் நடந்ததுபோல மக்கள் புரட்சி மூலம் மாற்றம் ஏற்படுவதற்கு இடமளிக்காமல் எதிர் ஆயுதப்புரட்சியையும் வான் வெளி தாக்குதலையும் மேற்கொண்டு கடாபியை கவிழ்த்ததன் மர்மம் என்ன .  


   
 இஸ்லாமிய தீவிரவாதிகள்  என தாங்களே கருதிய ஒசாமா பின் லாடனையும் முஹாஜிதீங்களையும் இரஷ்ய ஆக்கிரமிப்புக்கு கமுனிஸ்ட் எதிர்ப்பு போர்வையில் கூட்டமைத்து அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஆயுதம் அளித்து ஆட்சி மாற்றம் பண்ணியதையும் , நஜீபுல்லாவின் உடல் தெருவோரத்தில் தொங்கவிடப் பட்டதையும் ஞாபகப்படுத்தி கொண்டு இப்போது அமெரிக்கா முஸ்லிம் தீவிரவாதிகள் என்று அறியப்பட்டவர்களுக்கும் லிபியாவில் ஆயுதம்   வழங்கியது மட்டுமல்ல அவர்களை வைத்தே பல கொலைச்சதி முயற்சிகளை  கடாபியின் மீது மேற்கொண்ட வரலாறும் நீண்டது.


அமெரிக்காவின் 1986 ஆம் ஆண்டின் விமான இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலிலும் கடாபி தப்பிப் பிழைத்து இறுதியில் சுமார்  இருபத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகு நேட்டோவின் குண்டு வீச்சில் காயமடைந்து கொல்லப்பட்டாரா , தமது இலக்கை ஒரு கால் நூற்றாண்டின் பின்னர் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் சாத்தித்து விட்டனவா? வரப்போகும் நாட்கள் கடாபியை  கொன்றபோது அல்லாஹு அக்பர் சொன்ன மக்களின் ஒற்றுமையும் ஆட்சியும் எதிர்பார்த்த மாற்றத்தை கொண்டுவருமா

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...