தர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகாசம் (பகுதி நான்கு)

எஸ்.எம்.எம்.பஷீர்


2009 ஆம் ஆண்டு மத்திய பகுதியில் வேருவளையில் உள்ள இரண்டு முஸ்லிம் குழுக்கள் கொள்கை அடிப்படையில் தங்களுக்குள் முரண்பட்டு கருத்துக்களால் மோதி , இறுதியில் ஒரு பகுதியினர் வன்முறையை கையாண்டு மற்ற பகுதியினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் இலங்கையில் புதிய சம்பவம் அல்ல. முஸ்லிம்களுக்கிடையே சிறு சிறு அளவில் கொள்கை முரண்பாடுகள் சிறு சிறு கைகலப்புகள் என பல நெடுங்காலமாக இடம் பெற்றே வந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் பல வக்ப் மன்றில் (Wakf Board) அல்லது ஜம்யித்துள் உலமா எனும் தேசிய முஸ்லிம் மத அறிஞர்கள் சபையில் முறையீடுகளுக்கும் விசாரனைகளுகுமாக கொண்டு வரப்பட்டு எதோ ஒரு விதத்தில் தீர்க்கப்பட்டு , அல்லது கைவிடப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட ஸ்திரமான மத பிரிவினர் என்ற வகையில் காத்தான்குடி அப்துர் ரவூப் மிஸ்பாகி என்பரின் கொள்கையை பின்பற்றுவோர் எண்பதுகளின் ஆரம்பத்தில் மிகுந்த சவாலாக பிரதான முஸ்லிம் பிரிவினருக் கெதிராக திகழ்ந்தனர். இன்றும் அவர்கள் காத்தான்குடியில் ஒரு மதப் பிரிவினராக செயற்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கும் பிரதான முஸ்லிம் பிரிவினர்களுக்குமிடையிலான சச்சரவுகள் இன்றுவரை நிலவினாலும் இவ்விரு பிரிவினருக்கு மிடையே ஒருவித சமாதான நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான முக்கிய காரணம் அங்கு நிலவும் அரசியலுமாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்துர் ரவூப்பின் பிரிவினரும் கந்தூரி (சடங்கு விருந்து வழங்கல்) கொடியேற்றம் , தர்கா சார்ந்த செயற்பாடுகள் அனுஸ்டானங்கள் பலவற்றை செய்பவர்களுமாவார்கள். அதேவேளை காலங்காலமாக செயற்பட்டுவந்த ஆதரமற்ற , பிற மதங்களிலிருந்து உள்வாங்கப்பட்ட அனுஷ்டானங்கள் பலவற்றை கேள்விக்குட்படுத்தும் மத தூய்மை வாதம் மேலெழுந்து வரும் பின்னணியில் பல சம்பவங்கள் ஓரிரு கொலைகள் உட்பட நடைபெற்றன , அவற்றில் குறிப்பிடத்தக்க சம்பவங்களாக , சூபி தியான மண்டபம் ஒன்று காத்தான்குடியில் நிர்மூலமாக்கப்பட்டது தொண்ணூற்றி ஆறாம் ஆண்டில் , பயில்வானின் ஊர் பிரதிஷ்டம் செய்யப்பட்ட கொள்கையாளர்கள் உச்ச நீதிமன்ற கட்டளையுடன் மீண்டும் ஊர் திரும்ப நேரிட்டது. மத்திய மாகாணத்தில் உக்குவளையிலும்(மாத்தளை) நூற்றி ஐம்பது வருட தொன்மை வாய்ந்த சியாரம் ஒன்று மாசி மாதம் இரண்டாயிரத்து ஒன்பதில் தகர்க்கப்பட்டது. ஆக முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் தொன்மை வாய்ந்த முஸ்லிம்களின் (தங்களின்) வரலாற்று அம்சங்களாக சுட்டிக்காட்டப்படும் தலங்களை தகர்த்தெறிந்தனர். காத்தான்குடி குழந்தை உம்மா கபுரடிக்கும் (சியாரம்) இந்த நிலையே ஏற்பட்டது.வேருவளையிலும் ஜூலை மாதம் 2009 ஆம் ஆண்டு உள் மத வன்முறை ஏற்பட்டது. அதற்கான கொள்கை முரண்பாட்டு சூழல் இரு புறமும் நிலவியற்கு அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தவ்ஹீத் பள்ளிவாசல் ஒன்றின் மீது அக்கொள்கைக்கெதிரானவர்கள் , 2002 ஆம் ஆண்டு அப்பள்ளிவாசல் திறந்து வைக்கும் நிகழ்வையொட்டி கைக்குண்டு வீசி பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தனர்.சில தர்காக்கள் மசூதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.


“ஷேய்க் பிரபாகரன் “!!

நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த தீப்பொறி வேருவளை வன்முறையில் வெளிப்பட்டு. வேருவளை காதிரிய்யா பிரிவினரின் பள்ளியான புகாரி பள்ளிவாசல் பிரிவினர் ரகுமான் பள்ளிவாசலில் இரவில் கூடியிருந்த மக்கள் மீதுஅங்கிருந்த மின்சாரத்தை இருளச்செய்து (புலிகள் காத்தான்குடியில் பள்ளிவாசல் கொலைகளில் செய்த பாணியில்) அங்கு சென்று கத்தி வாள் தடி கொண்டு அங்கு கூடியிருந்தோரை தாக்கி அங்கிருந்த சொத்துக்களுக்கும் அழிவு ஏற்படுத்தினர். அந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர் . இலங்கையில் பொலிசாரால் ஒரே சம்பவத்துக்காக அதிக எண்ணிக்கையோரான 131 நபர்கள் தடுத்துவைக்கப்பட்ட நிகழ்வு இதுவென பத்திரிகைகள் குறிப்பிட்டிருந்தன. இந்த தாக்குதலின் சூத்திரதாரராக கருதப்பட்ட மௌலவியை பாதிக்கப்பட்ட தரப்பினர் அவரின் புலிகளை ஒத்த பயங்கரவாத செயலுக்காய் “ஷேய்க் பிரபாகரன் “ என்று கண்டித்திருந்தனர். ஆக மொத்தத்தில் தர்க்காக்கள் இலங்கையில் சர்ச்சைக்குள்ளாவது அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதுடன் அதனை நீக்கிவிடுவது அல்லது அங்கு பள்ளிவாசலை நிறுவி வேறு விதத்தில் முஸ்லிம் மத பாரம்பரியத்தை தக்க வைத்து கொள்வது பற்றிய செயற்பாடுகளும் சில இடங்களில் இடம்பெற்று வருகின்றதும் குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய நாகூரில் அடக்கப்பட்டுள்ள சாகுல் ஹமீத் என்பரின் சமாதியின் பிரதியீடாக கருதப்பட்டு கல்முனைக்குடி கடற்கரை பள்ளி செயற்பட்டு வருகிறது. நாகூரில் நடத்தப்படும் சடங்க்குளின் நம்பிக்கைகளின் அடிப்படையில் வருடந்தோறும் கொடியேற்றி இங்கும் பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இப்போது இப்பள்ளியும் சர்ச்சைக்குரியதாகி வருகிறது. என்றாலும் கிழக்கில் தர்கா சடங்குகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இப்பள்ளி -ஒரு தர்கா- செயற்பாட்டுடன் செயற்பட்டு வருகிறது. இந்த பின்னணியில் தனி மனித சமாதிகள் சில இன்னமும் முந்திய முக்கியத்துவம் இழந்திருப்பினும் முழுமையாக செல்வாக்கிழக்கவில்லை என்பதால் தனி மனித முக்கியத்துவத்தை முதன்மை படுத்தும் , சடங்குகளை சமய நம்பிக்கைகளை பின்பற்றும் பகுதியினருக்கு எதிராக தூய்மைவாத அடிப்படை சமய கொள்கையாளர்கள் தொடர்ந்தும் கருத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போர்வை தர்கா மீதான தாக்குதல்கள் ( !0-03-2009)

புலிகளின் அந்திம கால தாக்குதல்கள் பலவற்றில் அரசியல் வாதிகளை இலக்கு வைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்காகவிருந்தது. கொடபிட்டியாவில் நடைபெற்ற மீலாதுந்நபி நிகழ்சிகள். அது நடைபெற்ற இடத்துக்கு அண்மையிலான தர்கா அமைந்திருந்ததால் புலிகளின் தாக்குதல் இடம்பெற்ற இடத்தின் மூலம் அத்தாக்குதல் ஒரு தர்காவை அண்மிய பிரதேசத்தில் இடம்பெற்றதன மூலமும் அது ஒரு முஸ்லிம் சமய கலாச்சார நிகழ்வு என்றவகையில் புலிகளின் முஸ்லிம்கள் மீதான தாக்குதலாக கொள்ளப்படவும் வேண்டும் (இது பற்றிய எனது முன்னைய கட்டுரை( http://www.bazeerlanka.com/2011/05/blog-post_25.html) முஸ்லிம்களை யாழிலிருந்து வெளியேற்றிய இளம்பருதியின் யாழ் முஸ்லிம்களின் மீலாதுன் நபி நிகழ்வுடன் ஒப்பீடு செய்து பார்க்க முடிகிறது). ஆனால் இந்த கொடபிட்டிய பகீர் முஹித்யதீன் தர்கா கூட 1915 கலவரத்தில் சிங்கள பௌத்த தாக்குதலுக்கு உள்ளாகியதும் பின்னர் பிரித்தானிய அரசு (சுதந்திரத்துக்கு முன்னர்) அதனை மீள கட்ட உதவியதும் செய்திகளாகும்.

கோட்டமுனை அப்பா சியாரம்

ஒரு உதராணத்துக்கு (நீண்ட கட்டுரையை தவிர்ப்பதற்காக ) மட்டக்களப்பின் நகர மத்திய பகுதியில் உள்ள வாவிக்கரை ஓரமாக அமைந்துள்ள கோட்டமுனை பள்ளி அல்லது கோட்டமுனை அப்பா சியாரம் எனும் சியாரம் பற்றிய கர்ணபரம்பரை கதைகள் , நேரிடையாக அறிந்த சம்பவங்கள் என்பவற்றின் மூலம் சியாரம் எவ்வாறு உருவாகிறது / உருவானது , அதனோடு தொடர்புபட்ட ஐதீகங்கள் , நம்பிக்கைகள் , நடைமுறைகள் ஏனைய பல நாடெங்கிலுமுள்ள தர்க்காக்களை -சியாரங்களை -பற்றிய ஒரு பார்வையினை ஒப்பீட்டு அடிப்படையில் செலுத்தமுடியும் கோட்டமுனை வாவியில் ஒரு சடலம் கரை ஒதுங்கியதாகவும், அதனை கரை சேர்க்க அதனைக் கண்ட தமிழ் மீனவர்கள் முயன்றபோதும் அச்சடலம் கை நழுவிச் சென்றதாகவும் பலமுறை முயன்றும் முடியவில்லை என்றும் அதே வேளை , அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த முஸ்லிம் மீனவர்கள் அச்சடலத்தை கரைக்கு கொண்டு வர முடிந்ததாகவும் அதனால் அவர்கள் அந்த சடலத்தை இஸ்லாமிய முறைப்படி வாவிக் கரையினை அண்மிய காணியில் அடக்கம் செய்ததாகவும் அன்றிலிருந்து அச் சடலம் அடக்கப்பட்ட இடம் ஒரு மகானின் சமாதி அந்தஸ்துடன் போற்றப்பட்டு வருகிறது ,: என்று . சுமார் மூன்று நான்கு தலைமுறைக்கு முற்பட்ட கதை ஒன்று உலவுகிறது.


அதிலும் குறிப்பாக அச்சமாதி உள்ள இடம் ஒரு தமிழ் வழக்கறிஞருக்குரியது என்றும் , அவர் அந்த சடலம் அடக்கப்பட்ட போது அதன் தலைமாட்டில் , கால்மாட்டில் நடப்பட்டிருந்த கற்களை (முஸ்லிம்கள் இறந்தவர் அடக்கப்பட்ட இடத்தில் , அடக்கப்பட்டவரின் கால் மாட்டிலும் தலைமாட்டிலும் இரண்டு சிறிய பலகைகளை (மீசான் கட்டை) நடுவதுண்டு-ஆனால் அங்கு அவர்கள் இரண்டு கற்களை நட்டிருந்தார்கள் ) அகற்ற அவர் யானை ஒன்றினை கொண்டு கட்டி இழுத்த போதும் முடியாமல் போனதாகவும், அதனால் அந்த காணியை தனது காணியிலிருந்து நீக்கி , அங்கு அந்த சியாரம் இருக்க அனுமதித்ததாகவும் கதை உண்டு. ஆனால் அங்கு முன்னரைபோலவன்றி முஸ்லிம்கள் பெருமளவில் விஜயம் செய்வது , தரிசிப்பது , சடங்குகள் செய்வது என்பன அருகிவருகின்றன. மட்டக்களப்பு நகர்புற மக்களில் சிலரும் காத்தான்குடி ரவூப் மிஸ்பாகி கொள்கையை பின்பற்றும் காத்தான்குடி மக்களில் சிலரும் இங்கு வருடந்தோறும் நடைபெறும் கொடியேற்ற , கந்தூரி வைபவங்களில் கலந்து கொள்கின்றனர். கொட்டமுனையை சுற்றியுள்ள தமிழ் மீனவர்களும் இச்சியாரத்துக்கு நேர்ச்சை –நேர்த்திக்கடன்- வைப்பவர்களாகவும் காணிக்கை செலுத்துபவர்களாகவும் உள்ளனர். இங்கு இப்போது நடைபெறும் சடங்குகள் கல்முனைக்குடி கடற்கரை பள்ளியோடு ஒப்பிடும் போது சிறிய அளவிலே நடைபெறுகின்றன. தொடரும்

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...