தர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகாசம் (பகுதி இரண்டு )எஸ்.எம்.எம்.பஷீர்  

காழ்ப்பை காழ்ப்பினால் ஒழித்துவிட  முடியாது அன்பினாலே காழ்ப்பை ஒழிக்க  முடியும்
                                                                                                         கவுதம புத்தர்
( Not by hatred does hatred cease; By Love Hatred ceases  -Buddha)

அனுராதபுர சியாரத்தை உடைத்தவர்களில் முதன்மை பாத்திரம்
வகித்தவர்கள்  வெறுமனே தாங்கள் சிங்கள இளைஞர்களையும் பௌத்த  பிக்குகளையும் கொண்ட குழு என்பதற்கு அப்பால் சிங்கள ராவய இயக்கத்தினர் என்று தங்களை அடையாளம் காட்டியே  அந்த உடைப்பினை செய்திருக்கிறார்கள் . எனினும் சிங்கள ராவய இயக்கம் தமது இயக்க அகத் தூண்டுதலை (Inspiration) இருபதாம் நூற்றாண்டின் பௌத்த மத மறுமலர்ச்சியின் தந்தையாக இலங்கையிலும் இந்தியாவிலும் கருதப்படும் சிறீமத் அநகாரிக தர்மபாலாவிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.  சிங்கள ராவய அநாகரிக தர்மபாலாவின் நூற்றி நாற்பத்தி  ஏழாவது ஜன்ம தினத்தை கொண்டாடிய விதமே அவரின் கொள்கைகளை புதுப்பிக்கும் அவரின்  சிஷ்யர்களாக தங்களை அடையாள படுத்தும் முயற்சியாகவே புலப்பட்டது.  அவர்கள் தர்மபாலாவின் சிந்தனைகளை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் அவரின் கருக்களுக்கு பௌத்த மதம் தொடர்பில் அளிக்கும் முக்கியத்துவம் போலவே முஸ்லிம்  எதிர்பிற்கும்   சமதளத்தில்   முக்கியத்துவமளிக்கிரார்கள். இருபதாம் நூற்றாண்டில் பௌத்த மதம் இலங்கையில் புத்துயிர்ப்பு பெற , முஸ்லிம் இனவாதத்கினையும் கக்கியே   பௌத்த மதத்தை சிங்கள இனத்துடனான ஒற்றைப் பரிமாண தேசிய அடையாளத்துடன் , அவரால் முன்வைக்கப் பட்டது. அதே காககட்டத்தில் அவர் இந்தியாவில் புத்தரின் போதிமர ஞானம் பெற்றதாக கூறப்படும் புத்த காயா எனும் இந்தியாவின் பிகாரில் உள்ள பவுத்த தேவாலயம் ஹிந்துகளின் கட்டுப்பாட்டில் ஹிந்து கோவிலாக பவுத்த சிறப்புக்கள் இழந்து காணப்படுவதையும்  கண்டு அதனை மீட்டு அங்கும் புத்த மதத்தை நிலைபெற செய்ய முயன்றார் என்பது வரலாறு. ஆனால் அவரின் மத சகிப்புத்தன்மையின்மை காரணமாகவும் முஸ்லிம் மக்களின் தனித்துவம் , முஸ்லிம் வர்த்தகர்களின் வியாபார நடவடிக்கைள் மீதும் அவர் கொண்ட காழ்ப்புணர்ச்சி   ஆண்டு முஸ்லிம் சிங்கள கலவரங்களுக்கு காள் கோலிட்டது  என்பதும் வரலாறே.     
சிங்கள ராவய பௌத்த மத அடிப்படை தர்மங்களை புறந்தள்ளிவிட்டு முஸ்லிம் எதிர்ப்பும் சிங்கள தேசியவாதத்தியும் பெரும்பான்மை சிங்கள மக்களால் தூக்கி எறியப்பட்ட அனாகரிக தர்மபாலாவின்  சிங்கள பௌத்த தேசியவாதத்தினை முன்னெடுக்கும் முயற்சியில் எவ்வாறு அனகாரிக தர்மபாலா  தோல்வியுற்ராரோ , நாட்டைவிட்டு இந்தியாவில் கூட வாழ நேரிட்டதோ , அதையும் விட ஒரு சிறந்த முன்னேற்றகரமான சூழல் இப்போது நிலவுகிறது. எனவே சிங்கள ராவயவின் எதிர்ப்புணர்வு அவ்வப்போது ஏற்படுத்தும் , ஏற்படுத்தப்போகும் ஏனைய மத இனங்கள் மீதான அடக்குமுறை அட்டகாசங்கள் என்பற்றை எதிர்கொள்ளும் அணுகுமுறைகளை ஆராய்ந்து , அவர்களை புறந்தள்ளியுள்ள   பெரும்பான்மை சிங்கள சக்திகளுடன் , சேர்ந்தியங்க வேண்டிய தேவைப்பாடு பிற இன மத மக்களுக்கும் உண்டு. ஏனெனில்   இந்த சிங்கள ராவய இயக்கம் முஸ்லிம்களுக் கெதிரான பிரச்சாரத்தை எவ்வாறு அவர்களின் ஆதர்ஷன தலைவரான அநகாரிக தர்மபால முன்னெடுத்து 1915 ஆண்டு முஸ்லிம் மக்கள் மீதான கலவரத்துக்கு ஏதோ ஒரு விதத்தில் பங்களித்தது போல் , இவர்களும் ஒரு தொடர்ச்சியான முஸ்லிம் எதிர்ப்பு வாதத்தை கிளப்பி விட்டிருக்கிறார்கள் , அதேவேளை ஒப்பீட்டு ரீதியில் சிறிதளவாயினும் தமிழ் இன எதிர்ப்பையும் பௌத்த சமூக சிந்தனை தளததில் பதியமிட்டு வருகிறார்கள். 
   
இவர்கள் அநகாரிக தர்மபாலாவுக்கு முன்னர் பல நூற்றாண்டுகளாக இலங்கை வாழ் சகல சமூகங்கள் மத்தியிலும் பௌத்தம் போதித்த கருணை ,(Karuna)  நட்பு ,(Maitri) தோழமை அல்லது சமூக வாழ்வு (Sangha) என்ற மூன்று அடிப்பையிலும் இயல்பான பல்லின பல்மத சூழல் பரந்தளவில் பல்வேறு காலகட்டங்களில் நிலவியதனை அவதானிக்கமுடிகிறது. முஸ்லிம் எதிர்ப்பு எவ்வாறு முறியடிக்கப்பட்டதோ அவ்வாறே அநாகரிக தர்மபாலாவின் சிந்தனைகளும் தோற்கடிக்கப்பட்டன. என்றுமே முஸ்லிம்களை எதிரியாக கருத வேண்டும் என சூளுரைத்த அவரின் இனவாத சிந்தனை , சிங்கள பௌத்த தேசிய வாதம்  ஆங்கிலேய கல்வி கற்ற மேட்டுக்குடி சிங்களஅரசியல் ஆதிக்க போட்டிமுனைப்பான  சமூகத்தால் நிர்தாட்சண்யமாக நிராகரிக்கப்பட்டது. காலஞ்சென்ற எஸ் டப்லியூ. ஆர் டி பண்டாரநாயகா, டி  ஆர் சேனநாயகா ஆகியோரும் அநகாரிக தர்மபாலாவின் செல்வாக்கினை தடுப்பதில் கவனமாகவிருந்தனர என்பதும் நமது அலசி ஆராயும் கவனத்துக்குரியவை


அநகாரிக தர்மபாலா இந்தியாவிலிருந்த காலகட்டத்தில் புத்த காயாவை ஹிந்துக்களின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டு அங்கு ஜப்பானிலிருந்து தருவிக்கப்பட்ட புத்தரின் சிலை ஒன்றினையே   அங்கு  நிறுவினார் , ஆனால் அதேவேளை அவரை பின்பற்றுவதாக பௌத்த மதத்தை சிங்கள இனத்தினது மதமாக அதனை முன்னிலைப்படுத்தும் சிங்கள ராவய பௌத்த இயக்கம் அண்மையில் உலகின் ஏனைய தென்னாசிய நாடுகளில் பின்பற்றப்படும் பௌத்தத்தின் மகாயான பௌத்த பிரிவினரின் கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள புத்த வழிபாட்டுதலத்தில் ஜப்பானிலிருந்து வந்த மகாயான பிரிவினரின் சமய நடவடிக்கையை எதிர்த்து அவ்வழிபாட்டுத தலத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  பரஸ்பரம் சொற்கணைகளும் கல் வீச்சுக்களும் ஆக்ரோஷத்துடன் பரஸ்பரம் பரிமாறப்பட்டன என்றும் சிங்கள ராவய மிகவும் ஆக்ரோஷமாக அடாவடித்தனமாக நடந்து கொண்டதாக தெரியவருகிறது . அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இப்போது இந்த விவகாரம் சிறுவர் துஸ்பிரயோகம் பண மோசடி என அங்கு செயற்பட்ட ஜப்பானிய மதகுரு அவர்களை பின்பற்றும் சிலர் மீதும் அவர்களின் முன்னாள் சிஷ்யர்கள் சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளன. அசோகனின் மகன் மகிந்தர் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பௌத்த மதம் ஹிநாயன என அறியப்பட்டாலும் அது பௌத்த மதத்தின் தெரவாடா பிரிவினையே குறித்து நின்றதுடன் இன்றுவரை தேரவாடாவே இலங்கையின் பௌத்த மதமாக பின்பற்றப்பட்டு வருகிறது.  மகாயான பௌத்த ஊடுருவலை தடுக்கும் முயற்சியாக சிங்கள ராவய செயற்பட்டுள்ளதா என்ற கேள்விகள் இனிமேல் விவாதத்திற்குரியவையாக சிங்கள பௌத்த சமூகத்துள் எழப்போகின்றன.
இன்று இலங்கையில் மிகச் சிறியளவில் இனவாத சக்திகள் செயற்பட்டாலும் அவாறான சக்திகள் பாரியளவில் வெற்றிபெறாமல் தடுக்கும் தந்திரோபாய நடவடிக்கைகளை அரசியல் சமூக பொருளாதார நடவடிக்கைள் மூலம் முன்னெடுக்க முடியும் , மாறாக அவ்வாறான  சக்திகளின் எதிர்விளைவு எதிர்பார்ப்புகளுக்கு பலியாகாமல் இருக்க சிந்தித்து செயற்பட வேண்டும். சிங்கள ராவய மட்டுமல்ல அது போன்ற சிறு சிறு சிங்கள இனவாத இயக்கங்கள் கடந்த காலங்களிலும் இருந்தே வந்திருக்கின்றன , அவை அரசியல் சமூக ரீதியில் முறியடிக்கப் பட்டு வந்திருக்கின்றன. மாவனல்லை முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட பள்ளிவாசல் எரிப்பு சம்பவம் அண்மைக்கால குறிப்பிடத்தக்க நிகழ்வாயினும் இன்று அங்குள்ள சாஹிரா கல்லூரிக்கு அதிக நிதியுதவியினை அதாவுட செனிவிரத்தின வழங்கியுள்ளதும், கல்லேலியாவில்   முதலில் தாபிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் அரபுக்  கல்லூரிக்கு அப்பிரதேச சிங்கள  எம்.பீ  முத்திரை வெளியிட்டு கவ்ரவித்ததுடன் அக்கல்லூரிக்கு உதவி நல்குவதாக குறிப்பிடுவதும் , உலப்பனையில் பௌத்த  மடாலயத்துக்கு உரிமை கோரிய காணியை  பௌத்த குருமாரினதும் , அவர்களை சார்ந்தோரினதும் எதிர்ப்பையும் மீறி அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் சிறார்களின் விளையாட்டு மைதானத்துக்காக துணிகரமாக ஒதுக்கி கொடுத்த மஹிந்தானந்த எம்.பியின் ஆதரவு , என பலவற்றை முஸ்லிம்களும் கவனத்தில் கொள்ள வேண்டியதும் ஒரு பரந்துபட்ட கிளர்ச்சிக்கும் உணர்ச்சிக்குற்படாது நிதானமாக இன எதிர்ப்பலைகளை கையாள நிச்சயமாக உதவும்.
மத சர்ச்சைகளும் சியாரங்களும் !
இலங்கையின் பிரதான பௌத்த மதத்தலமான கண்டி தலதா மாளிகையினுள் முன்னர் ஒரு முஸ்லிம் "மகானின்"  சியாரம் இருந்ததாகவும் , இப்போதும் அதனை தலதா மாளிகையின் பௌத்த ஆலய வளாகத்தின் ஒரு பகுதியில் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் சொல்லப்படுவதனையும் நல்லூர் கந்தசாமி கோவிலின் பகுதியாக ஒரு சியாரம் கானப்பட்டதனையும் சில சமூகவியல் மத ஆய்வாளர்கள்  ஆதாரங்களுடன் நிரூபிக்கின்றனர். ஆனால் இங்கு அடக்கம் செய்யப்பட்ட மனிதர்கள் யாரென்பதும் அது பற்றிய அக்கறைகளும் இப்போது முக்கியத்துவம் இழந்து போன சமாச்சாரங்கள்.

இந்த சியாரங்கள் முஸ்லிம் மக்களின் மகான்கள் எனப்படுவோரின் அடக்கஸ்தலங்கள் என்பது ஒரு புறமிருக்க ஹிந்துக்கள் பௌத்தர்கள் என பல மதத்தினரும் இவ்வாறான சியாரம் , தர்காக்களுக்கு போவோராக நேர்ச்சைகள் வைப்போராக இருக்கின்றனர். மொத்தத்தில் சகல மனிதர்களையும் இன மத பேதமின்றி ஈர்க்கும் இந் தர்க்காக்கள் , கற்பிதம் செய்யப்பட்ட தனி மனித வல்லமைகளை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு தெவட்டகாக பள்ளிவாசளுடன் கூடிய சியாரம் இலங்கையின் பிரபலமான சியாரம்க்களில்  என்பதுடன், இங்கு பௌத்தர்களும் வருகை தருவதாக சொல்லப்படுகிறது.  
சில சிங்கள அரசியல்வாதிகளும் இவ்வாறான சியாரங்களில் நம்பிக்கை கொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதியான மறைந்த பிரேமதாசா போன்றோரை கூட உதரணத்துக்கு கூறலாம். 
இலங்கையின் பல பாகங்களிலும் பல தர்காக்கள் இருக்கின்றன அவற்றில் பல தொழுகை நடத்தும் பள்ளிவாசல்கள் அமைந்துள்ள வளாகத்திலும் நிறுவப்பட்டிருக்கின்றன. சியாரம் எனும் ஒரு தனி மனிதனின் -மகானின்- அடக்கத்தலத்தை மசூதிகளோடு சேர்ந்த பகுதியில் கொண்டிருக்கின்ற மசூதிகள் பல அண்மைக்காலமாக அடிப்படை இஸ்லாமிய நம்பிக்கைக்கு மாறுபட்டவை என்பதால் முக்கியத்துவம் இழந்து வருவதும், அதிலும் சில இடங்களில் மீளாய்வுக் குட்படுத்தப்பட்ட இஸ்லாமிய  மூல அடிப்படைக் கோட்பாடுகளினால் உந்தப்பட்ட சமூக பிரிவினரால் முஸ்லிம் மகான்களின் சியாரம்( கல்லறைக் கட்டடம்   )  எனப்படும் பகுதியினை இடித்து நீக்கிய செய்திகளும் உண்டு. அந்த வகையில் காத்தான்குடி குழந்தையும்மா கபுரடி ( மவுலானா எனப்பட்டோரின் குடும்ப அடக்கத்தலமாக இருப்பினும் ) அது சியாரமாக பாமர மக்களால் முக்கியத்துவம் பெற்றதாக இருப்பதனை நீக்கும் வகையில் அங்கிருந்த சியாரம் என்ற நிறுமானம் அழிக்கப்பட்டது. மேலும் அதற்கு மேலாக இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயில்வான் எனப்பட்ட நபரினதும் , அவரை சார்ந்த கொள்கை கொண்டோரினதும் மசூதி -தர்கா -கட்டடத்தின் பகுதிகள் உடைக்கப்பட்டதும் , அவரின் இறந்த உடலம் கூட மிக மோசமாக மாசுபடுத்தப்பட்டதும் மத உட்பிரிவு முரண்பாட்டு சங்கதிகளாக உள்ளன.  இவ்வாறான சம்பவங்கள் சமூகத்தின் ஒரு பகுதியினரால் பாரிய மதப் பிறழ்வாக கொள்ளப்பட்டு சட்டத்தினூடாகவும் சட்டத்துக்கு வெளியேயும் நின்று பல அசம்பாவிதங்கள் நிகழ காரணமாகின. பயில்வான் எனப்படும்  நபரின்  அடிப்படை இஸ்லாமிய கொள்கை பிறழ்வு கொள்கை விளக்க நூல் ஒன்றினை அச்சில் கொண்டுவருவதற்கு எதிராக அந்நூல் இஸ்லாமிய மத நிந்தை செய்யும் வகையில் அமைந்துள்ளதென்று ஒரு வழக்கொன்று கொழும்பு நீதிமன்றில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்டதும் , அந்த வழக்கில் அரச சட்டத்தரணியான எனது தமிழ் நண்பர் ஒருவர் இஸ்லாமிய மத நம்பிக்கைகள் பற்றியும் பயில்வானின் நூல் பற்றியும் சட்ட "குஸ்தி" ( நட்புடன்) அடித்ததும் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.   
தொடரும்

No comments:

Post a Comment

President Chandrika and former Chief Justice Shirani Bandaranayke By Victor Ivan

  Former President Chandrika Kumaratunga and Former Chief Justice Shirani Bandaranayake    Publication of a biography by former Presid...