தர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகாசம் ( பகுதி மூன்று )எஸ்.எம்.எம்.பஷீர்  

ஒரு முஸ்லிம் நபரின் அடக்கஸ்தலம் (ஸியாரம்)  தனித்தே எங்கேனும் காணப்பட்டு , அந்த சமாதி தனிப்பட்ட வகையில் முக்கியத்துவமளிக்கப்பட்டு விஷேட  மரியாதைக்கு குரியதுமாக ஆக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு விழாக்களும் சடங்குகளும் செய்யப்பட்டாலோ அல்லது இறந்த அந்த சமாதியிலுள்ள மனிதரின் பிரார்த்தனைகள் அல்லது அவரின் சமாதியை தரிசிப்பது  ஆத்மா ஈடேற்றம் தரும் செயல் என கருதப்படும் வகையில் ஏதேனும் நடைமுறைகள் பின்பற்றப்படும்  பின்னணியில்தான் தர்க்காக்கள் உருவாகின்றன.  அவ்வாறான சமாதியை தரிசிப்பதும் அங்கு பிரார்த்தனைகள் புரிவதும் ஓர் இறை நம்பிக்கைக்கு   மாற்றமானது என்ற கருத்து கொண்டோர் இவ்வாறான தர்க்காக்களை தர்கத்துக் குள்ளாக்கி வருகின்றனர். கல்வி வளர்ச்சியுற்ற நிலையில் , மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு அதிகரித்த நிலையிலும்  தொழிநுட்ப வளர்ச்சியும் அதனால் மத அறிவுத்தேட்டம் இலகுவாக்கப்பட்டுள்ளமையும் தர்க்காகளை மட்டுமல்ல இஸ்லாம் என்ற பெயரில் செய்யப்படும் பல வழிபாட்டு அனுஷ்டான முறைகளை கேள்விகுள்ளாக்கியுள்ளது .
பிற சமயங்களின் அனுஷ்டான தனிமனித வழிபாடு சடங்குகள் செல்வாக்கு முஸ்லிம் மதத்துள்ளும் மனித இயல்புகளுக்கும் பலவீனங்களுக்கும்  அமைவாக  முஸ்லிம்களுக்குள்ளும் ஊடுருவத்தொடங்கிய வரலாறும் மிக பழமையானது. இஸ்லாமிய பரம்பல் பல நம்பிக்கைகள் கொண்ட சமூகத்துள் , நாடுகளுள் பரவிய போதும் அவர்கள் பின்பற்றிய கலாச்சார நம்பிக்கைகள் என்பவற்றையும் முழுமையாக தவிர்க்க முடியாது போன சூழ்நிலையிலும்  இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கை தொடர்பான பிறழ்வாக அவை பின்பற்றப்பட்டு வருகின்றன. 

அந்த பின்னணியில் தர்க்கா சார்ந்த விவகாரங்கள் , அதற்கெதிரான மதப்பிரிவினரால் சர்ச்சைகுள்ளாக்கப்பட்டு வருகின்றன. தனி மனிதரை அவர் கொண்டுள்ள்ள  தவிர இறைநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு  இறைத் தரகனாக காட்டும், அதிலும் குறிப்பாக அந்த மனிதரின் இறப்பின் பின்னர் அந்த நம்பிக்கையின் அடிப்படையில்   சமய அனுஷ்டானங்கள் செய்யும் பின்னணியில்தான் தர்க்காக்களில் அமைந்துள்ள  பல சியாரங்களில் தனிமனித வழிபாட்டை அல்லது அதனை சார்ந்து பின்பற்றப்படும் கிரிகைகளை ஊக்குவிப்பனவாக கண்டு கொண்டதால் அவற்றினை நீக்கும் அல்லது புறந்தள்ளும்  முயற்சிகள் சில இடங்களில் இடம்பெற்றன. அந்த வகையில்தான் பல உள்ளார்ந்த மத முரண்பாடுகள் அண்மைக் காலங்களில் அவதானிக்கப்பட்டன. ஆயினும் கருத்து முரண்பாடுகள்  முஸ்லிம் சமூகத்தில் தோற்றுவித்த பகை முரண்பாடுகளால் சில அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. சியா சுன்னி சமய பிரிவுகளிடேயே ஏற்படும் பரஸ்பர அழிவுகள் உலகின் பலரும் அறிந்த செய்தி. அங்கும் அடிப்படையில் தனிமனித முக்கியத்துவமே மூல காரணமாக பிரிவினைக்கு வலி வழி கோலியது. 

அந்த சூழ்நிலையில் தான் காத்தான்குடி பயில்வானின் அடக்கப்பட்ட உடலும் அவர் நிர்மாணித்த தர்காவில் அடக்கம் செய்யப்பட்டு எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட சமாதி முக்கியத்துவத்தை தவிர்க்கும் வகையில் பிரதான சமய அடிப்படைகளை பின்பற்றும் பெரும்பான்மை சமயப்பிரிவினரில் உள்ள அதி தீவிர எதிர்ப்பாளர்களால் பயில்வானின் கொள்கைகளை பின்பற்றுபவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.  அடிப்படை இஸ்லாமிய பண்பியல்புகளுக்கு எதிராக சட்டத்தை தமதாக்கி கொண்டு அத்தகைய செயல் எதிர் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது.  அதன் விளைவாய் பயில்வானை பின்பற்றிய சிலரின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. எனினும் இந்த நிகழ்வுகளை தமிழ் ஆங்கில சிங்கள பத்திரிகைகள் தங்களின் சுய வியாக்கியானங்களுடன் வஹாபிகள் , ஜிகாதிகள் என்றெல்லாம் பெரும்பான்மை முஸ்லிம் சமய வழிபாட்டாளர்களை தீவிரவாதியாக்கினர். அதற்கான இன்னுமொரு முக்கிய காரணம் , முஸ்லிம்களுள் உள்ளோரே தமது எதிர் கருத்தாளர்களை அவ்வாறே அடையாளப்படுத்தியே தம்மையும் தமது கொள்கைகளையும்  பாதுக்காக்கவும்  முற்பட்டனர்.

முஸ்லிம் சமூகத்துள் பிற மத சமூகத்திலிருந்து ஊடுருவி முஸ்லிம் மத நம்பிக்கைகளாய் கலாச்சாரமாய் மாறிப்போன  பல மூட நம்பிக்கைகள் தனிமனித வழிபாடுகள் பற்றிய எதிர் பிரச்சாரங்கள் அதுபற்றிய விழிப்புணர்வு என்பன ஏற்படக் காரணம் தவ்ஹீத் இயக்கம்  வஹ்ஹாபி இயக்கம் ,ஜிஹாதி இயக்கம் என புதிய இயக்கங்கள் ஏற்பட்டிருப்பதுதான்  என ஒரு சாரார் பலி கூறுவதும் அவாறான குற்றச்சாட்டினை ஊடகங்கள் பல செய்தியாக்குவதும் இன்று சாதாரண நிகழ்வுகளாகி விட்டன. ஆனால் இந்த சியாரம் அது அமைந்துள்ள கட்டடமான தர்க்கா , அங்கு நடைபெறும் பிற மத நம்பிக்கைகள் நடைமுறைகள் அனுஷ்டானங்கள் என்பன காலங்காலமாக இலங்கையில் இருந்து வந்திருக்கிறது.  அவற்றிக் கெதிராக சமூகத்துள் கல்விமான்கள் , மதவறிஞர்கள் நீண்ட நெடும் காலமாக பணியாற்றி வந்திருக்கிறார்கள் அவ்வாறான  அறியாமையை மூட நம்பிக்கைகளை எதிர்த்து சமூக மறுமலச்சிக்காக உழைத்திருக்கிறார்கள். அந்த வகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர் அறிஞர் சித்தி லெப்பை. சித்தி லெப்பை தனது முஸ்லிம் நேஷன்  (Muslim Nation) என்ற பத்திரிக்கையில் பின்வருமாறு 1882 ல் எழுதியது அவரின் காலகட்டத்தில் நடைபெற்ற தர்க்காவும் அதனை சூழ்ந்த நடைமுறைகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.


"சில காலத்துக்கு முன்பு அவுலியா க்களுக்கு நேர்ந்து கொண்டு காது குத்தினோம் , தலையிற் குடுமி வைத்தோம் , தர்க்காக்களுக்குப்  போய் தோப்புக்கரணம் போட்டோம் புலிவேஷம் ஆடினோம் . கொடி  மரத்திடம் பிள்ளைத்தவம் கேட்டோம் . இப்படிப்பட்ட இன்னும் எத்தனையோ காரியங்களைச் செய்து வந்தோம் . ஆனால் தற்காலம் ஆலிம்கள் அவை மார்க்க விலக்கு   என்றும் ஹராம் என்றும் விளக்கிவிட்டபடியால் நடத்தப்படாமல் விடுபட்டு போயிற்று. " என்று சித்தி லெப்பை எழுதியிருந்தார்.  ( நன்றி: முஸ்லிம் நேஷன் -திரட்டு விரிவுரையாளர்  எம்.ஐ .எம் அமீன்)
அவர் வஹ்ஹாபி , தவ்ஹீத் என எந்த இயக்கமும் இலங்கையில் இல்லாத காலகட்டத்தில் அவதானித்ததை சுய விமர்சனப் போக்கில் தன்னிலை கூற்றாக எழுதியவை பல , அவை யாவும் இன்றைய சமூக மத சீர்திருத்தவாதிகள் என கூறுவோரின் பலருக்கு முன்பு சுமார் ஒன்றே கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறியவை. ஆனால் இன்னமும் கல்முனை கொடியேற்றம் வருடாவருடம் யாருமே அடக்கப்படாத சமாதியை வைத்து நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பல இடங்களில் தர்க்காக்களில் கொடியேற்றம் உட்பட நேர்ச்சை நிகழ்வுகள் என பல அனுஷ்டானங்கள் தனி மனித வல்லமைகளை நம்பிக்கையை கொண்டு நடத்தப்படுகின்றன.  

  
ஜீலானி தர்க்கா புதிய இலக்கல்ல !


அனுராதபுரத்தில் உடைக்கப்பட்ட சியாரம் யுனெஸ்கோ (UNESCO)  பாரம்பரிய பிரதேசத்தில் அல்லது துட்டகைமுனு அரசனின் உடல் தகனம் செய்யப்பட்ட  அஸ்தி  பரவிய ராஜமலகா வளாகப் பிரதேசத்துள் உள்ளதாக கூறப்பட்டே சிங்கள ராவய உறுப்பினர்களால் தகர்க்கப்பட்டது. சிங்கள ராவய இப்போது ஜீலானியை ( பலாங்கொடையில் ) அமைந்துள்ள அப்துல் காதர் ஜீலானி எனப்படும் ஈரானை பிறப்பிடமாக கொண்ட பக்தாத்தில் வாழ்ந்த ஒரு சூபியின் பேரில் அவர் தியானம் செய்ததாக  கூறபப்டும் ஜீலானி குகையில்  உருவாக்கப் பட்ட தர்க்காவை  குறிவைத்திருப்பதாக  அரசியல்வாதிகள் சிலர் கூறுகிறார்கள் . ஆனால் ஜீலானி அமைந்துள்ள இடம் தம்மா தீப எனும் பௌத்த புனித பிரதேசத்தில் அமைந்துள்ளதாக சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே எதிர்ப்புகள் எழுந்தன .  அதிலும் குறிப்பாக இலகுவாக பௌத்த இனவாத உள்ளூர் அரசியலை முன்னெடுத்து பலன் பெரும் வகையிலே அவை முன்னெடுக்கப்பட்டன. இதில் மேட்டுக்குடி ரத்வட்ட  குடும்பத்தினர் ஈடுபட்டனர். ஜீலானி ஒரு அகழ்வாராச்சிக் குற்பட்ட புராதன  பௌத்த பிரதேசம்  என்பதால் அதனை கலாச்சார அமைச்சு கையகப்படுத்த வேண்டும் என்றும் பௌத்த சங்க (பீட ) மட்டத்தின் ஆதரவுடன் பௌத்த இனவாதிகளின் தூண்டுதலுடன் முன்னெடுக்கப்பட்டன. எனவே தர்கா தகர்ப்பு  அல்லது அதனை சுற்றியுள்ள அரசியல் என்பது நீண்ட கால பின்னணி கொண்டது . அந் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அனுராதபுர சியார உடைப்பு அமைந்துள்ளது. மேலும் சியார உடைப்பு அல்லது சியாரம் அமைந்துளள காணியினை கையகப்படுத்தல்  என்பது இப்போது வெறுமனே பௌத்த இனவாத எதிர்ப்பு மையமாக சில இடங்களில் அமைந்துள்ளது என்பதை விட முன்னரும் பௌத்த எதிர்ப்பினை கொண்டிருந்தது என்பதற்கு ஜீலானி ஒரு உதாரணமாகும் . அதேவேளை முஸ்லிகளின் அடிப்படை நம்பிக்கைகள் குறித்து ஆய்வும் தர்க்கமும் செய்வோர்  எனப்படும் சில இஸ்லாமிய அமைப்புக்களில் ஒன்றான  தவ்ஹீத் அமைப்பின் எதிர்ப்பு மையமாகவும் மாறியுள்ளது. ஜீலானி தர்க்கவை அன்மியுள்ள பிரதேசத்திலும் தவ்ஹீத் செயற்பாட்டினால் ஜீலானி முன்னைய முக்கியத்துவத்தினை  இழந்து வருகின்ற சூழ்நிலையை முஸ்லிம் அடிப்படைவாதமாக மக்கில் வரி எனும் ஆய்வாளர் தனது முஸ்லிம் சமூக பற்றிய ஆய்வில் காண்பதையும் இங்கு நோக்கலாம்..  

இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பாகவே ஜீலானி தர்கா காணியை அரசு சட்ட உரிமை மூலம் அந்த தர்காவுக்கு வழங்க வேண்டும் என்ற விண்ணப்பம்  1940 ௦ம்  ஆண்டில் செய்யப்பட்ட போதும் அந்த விண்ணப்பம் அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களாலோ பின்னர் வந்த சுதந்திர இலங்கையின் அரசினாலோ  1960 ஆம் ஆண்டுவரை வழங்கப்படவில்லை ஆயினும் அந்த ஜீலானி அமைந்துள்ள காணி நிரந்தர குத்தகைக்கு அரசினால் பட்டயம் மூலம் வழங்கப்பட்டது. மேலும் ஜீலானிக்கு அருகாமையில் கலாச்சார அமைச்சு ஒரு சிறிய பௌத்த கோபுரமொன்றை  அமைக்க அகழ்வாராச்சி திணைக்களத்துக்கு அதிகாரமளித்தது. எனினும் அங்கு ஆரம்பிக்கப் பட்ட கட்டட வேலைகளை அதற்கெதிரான அரசியல் செல்வாக்கினை ஜீலானி நம்பிக்கையாளர் சபை பிரயோகித்து  மந்திரி சபை கட்டளை (Ministerial Order )  பெற்று  நிறுத்தினர். குறிப்பாக எழுபதுகளின் ஆரம்பத்தில் சிங்கள பௌத்த உரிமை கோரால் , எதிர்ப்பு செயற்பாடுகள் ஒருபுறமும் ஜீலானி நம்பிக்கையார் சபையின் அரசியல் செல்வாக்கு மறு புறமுமாக ஒரு பௌத்த முஸ்லிம் கலவரத்தை தவிர்த்தது.  எனவே அரசியல் ரீதியாக ஜீலானிக் கெதிரான எதிர்பினை ஆளும் கட்சி முஸ்லிம் அமைச்சர்களை நாடி அரசு மூலம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது. ஜீலானி பற்றிய பல தகவல்களை தனது முஸ்லிம் சமூகம் சம்பந்த பட்ட  ஆய்வுக்கு வழங்கியவர் ஜீலானின் நம்பிக்கையாளர்களில் ஒருவரான காலம்சென்ற முன்னாள் பலாங்கொடை எம்.பீ அபூசாலி   என்று மக் கில்வேரி குறிப்பட்டுள்ளார். .    


அவர் வஹாபி , தவ்ஹீத் என எந்த இயக்கமும் இலங்கையில் இல்லாத காலகட்டத்தில் அவதானித்ததை சுய விமர்சனப் போக்கில் தன்னிலை கூற்றாக எழுதியவை பல , அவை யாவும் இன்றைய சமூக மத சீர்திருத்தவாதிகள் என கூறுவோரின் பலருக்கு முன்பு சுமார் ஒன்றே கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறியவை. ஆனால் இன்னமும் கல்முனை கொடியேற்றம் வருடாவருடம் யாருமே அடக்கப்படாத சமாதியை வைத்து நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பல இடங்களில் தர்க்காக்களில் கொடியேற்றம் உட்பட நேர்ச்சை நிகழ்வுகள் என பல அனுஷ்டானங்கள் தனி மனித வல்லமைகளை நம்பிக்கையை கொண்டு நடத்தப்படுகின்றன.   சென்ற சில வருடங்களாக இலங்கையில் நடைபெறும் உள் மத முரண்பாடுகள் பல சட்ட அத்துமீறல்களுக்கும் அடாவடித்தனங்களுக்கும் காரணமாயின. அந்த வகையில் இரண்டு வருடத்துக்கு முன்பு மத உபன்யாசம் பண்ணி உருவேற்றி தனது மதத்தின் -சமூகத்தின் -இன்னொரு பிரிவினர் மீது கொள்கை வேறுபாட்டால்  மத தாக்குதலை மேற்கொள்ள  ஏவிவிட்ட மௌலவி ஒருவரை ஷேய்க் பிரபாகரன் என்று வர்ணித்த சம்பவங்களுடன் ...


தொடரும்……

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...