Sunday, 12 June 2011

அர்ச்சுனனின் பலாப்பழமும் அங்கிடுதத்தி அரசியல் கோட்பாடும்எஸ்.எம்.எம்.பஷீர்        


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
                             ( அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் கூறிய கீதோபதேசம்அண்மையில் புளட் (PLOTE) கட்சி சார்பான இணையத்தளமொன்றில் அக்கட்சியின் ஆதரவாளரான பிரபல அரசியல் விமர்சகரான அர்ச்சுனன் என்பவர் எழுதிய "ஈழத்தமிழர் இதயங்களுக்கு " என்ற தலைப்புடன் வெளியான கட்டுரையை படித்ததும் , அதிலும் குறிப்பாக அக்கட்டுரையின் முடிவுரையில் "பின்னால் படப் போகும்  வேதனை அறியாது மகிந்தவின் வீட்டு வாசலில் பலர் பாவங்களாக பலாப் பழத்துடன்  காத்திருக்கிறார்கள் " என்ற  வரிகளை படித்ததும் இக்கட்டுரையை எழுத நேரிட்டது.  ஏனெனில் அவர் அந்த பலாப்பழ கதையை சொல்லாமல் சொல்லி மஹிந்த எப்படிப்பட்டவர் என்பதை அவரை நம்பும் குறிப்பாக தமிழர்களுக்கு அவரின் தமிழ் விருந்தாளிகளுக்கு என்ன நடக்கும் என்பதை சூசகமாக குறிப்பிட்டிருந்தார்.  
எனக்கு இலேசாக ஞாபகத்தில் உள்ள அந்த பலாப்பழக் கதையை மீட்டுக்கொண்டு நமது கதைக்கு செல்வோம். ஒரு அரசன் தனக்கு பிடித்த பழத்தை கண்டுபிடித்து கொண்டு வருவோருக்கு  மிகப் பெரும் வெகுமதி உண்டென்றும் , ஆனால் அவ்வாறு கொண்டுவரும் பழம் அரசனுக்கு பிடிக்காததாயின் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் முரசறைவித்தான். இதனை கேட்ட மக்கள் தாங்கள் கொண்டு போகும் பழம் அரசனுக்கு பிடிக்காவிட்டால் எந்த விதமான  தண்டனை கிடைக்கும் என்று அறியாது , ஆனால் தண்டனை பற்றி பெரிதாக அறிவிக்கப்படாமையால் , நிச்சயமாக தண்டனை  பெரிய பாரதூரமாக இருக்காது என்ற அனுமானத்துடன் , அரசனுக்கு பிடித்த பழம்  என்று  தாங்கள் ஊகித்ததை எடுத்துக் கொண்டு அரசனின் மாளிகையில் பலர் வரிசையில் நின்றனர். அரசனோ தனக்கு பிடிக்காத பழம் யாராவது கொண்டு வந்தால், தண்டனையாக அந்த பழத்தையே கொண்டு வந்தவரின் வாயில் திணிக்க பண்ணி வெளியில் அனுப்பி விடுவதையே தண்டனையாக விதித்தார்.   அன்னாசிப் பழத்துடன் உள்ளே அரசனை சந்திக்க சென்ற ஒருவர் தான் நோவுடனும் வாயில் இரத்தம் வழிய வெளியே வந்த போது வாசலில் அவருக்கு அடுத்ததாக உள்ளே செல்ல காத்திருந்தவர் ஒரு  பலாப்பழத்தை கொண்டு செல்வதைக் கண்டு அன்னாசிப்பழம் கொண்டு வந்ததற்காக எனக்கு இந்த கதி என்றால் , உள்ளே போகப் போகும் பலாப்பழம் வைத்திருபோருக்கு  ( அந்த பழம் அரசருக்கு பிடிக்காத பழம் என்றால்)  என்ன கதி என்று நினைத்து சிரி சிரி என்று தனது நோவையும் மறந்து சிரித்தாராம் . இதுதான் அந்த பலாப்பழக் கதை , ஒரு வேளை , அரசனுக்கு பலாப்பழம் தான் பிடித்த பழமா அதற்காக அதை கொண்டு சென்றவருக்கு வெகுமதி கிடைத்ததா என்று தெரியவில்லை , ஏனெனில் கதை அது பற்றி பேசவரவில்லை , தனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்ற வழக்கமான ஒரு வக்கிர தமிழ் அரசில் இயக்கங்கள் கட்சிகளின் அண்ணாசிக்கார  " அல்ப சந்தோசம்தான்" . புலிகள் உட்பட சகல தமிழ் இயக்கங்களும் காலத்துக்கு காலம் அரசுடன் தேவைக்கேற்றவாறு அரச விருந்தாளிகளாக இருந்தவர்கள் தான். அதேபோல் காலத்துக்கு காலம் எதிரிகளாகவும் இருந்தவர்கள் தான்.  ஆக பிரியாணியும் சாப்பிட்டவர்கள் தான் அர்ச்சுனனின் பாஷையில்  பலாப்பழமும் திணிக்கப்பட்டவர்கள் தான்.    
பாரதப்போரில் கர்ணன் அர்ச்சுனனுக்கு குருசேத்திர யுத்தத்தில் கடமையை செய் பலனை எதிபாராதே என்று கருமயோக பார்வையை கற்றுக் கொடுத்தான். ஆனால் இந்த அர்ச்சுனன் மாகாபாரத அருச்சுனனை போன்ற கர்மயோகப் பார்வை கொண்டவரல்ல , இவரை நான் ஒரு புலி பிரச்சாரகராக எண்ணுமளவு இவரை வேறு விதத்தில் நன்கு அறிந்திருந்தேன். அவரை பற்றி எனக்கு தெரிந்த அர்ச்சுனனுக்கு நெருக்கமான இன்னுமொரு முன்னாள் புலி ஆதரவாளர் பின்னால் புலி எதிர்ப்பாளர் அர்ச்சுனன் யார் தெரியுமா என்று அடையாளம் காட்டிய பொழுது உண்மையில் நான் அசந்தே விட்டேன். அவரும் இவரும்  ஒருவரே என்றபொழுது , அவரை நான் நேரில் நேருக்கமாக  2009 ஆம் ஆண்டு இலங்கையில் சந்திக்கும் வரை , அதுவும் இலங்கை ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் புலம் பெயர் சமூக பிரதிநிகளாக சென்ற மூவின மக்கள் சமூகத்தின் பெரும் திரளுக்குள் பெரிதாக கருத்தாடல் செய்ய முடியாத போதும் சந்திக்க கிடைத்த அந்த சந்தர்ப்பம் இன்னும் மனதில் ஞாபகத்திலிருக்கிறது.

அதனை தொடர்ந்து இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இலங்கையில் இவரை மகிந்த அரசின் தமிழ் அமைச்சர் (அர்ச்சுனனின் பாஷையில் மகிந்தவினால் பலாப்பழம் இன்றுவரை திணிக்கப் பட்டவரின் ) ஒருவரின் அமைச்சு செயலகத்தில்  மீண்டும் சந்தித்து சிறிய ஒரு உரையாடலை நடத்தி இவர் பற்றி நான் கொண்டிருந்த முன்னைய அபிப்பிராயத்தை மறு பரிசீலனை செய்யும் நிலையில் பருவகாலங்கள் எதிர்பாராத விதமாக இப்போதெல்லாம் மாறுவதுபோல் இவரும் மாறிப்போய் விட்டார். இவர் மட்டுமல்ல இவருடன் நான் சந்தித்த இன்னும் சிலரும் அவ்வாறே மாறிப் போனார்கள்.  தன்னை அரசு காவலில் வைத்து உளரீதியாக உபாதைக்கு உள்ளாக்கினார்கள் என்று அர்ச்சுனன் குறிப்பிடுகிறார். இதனை அனுபவித்த பலர் இன்று அரச ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க புளட் இயக்கத்தினர் முன்னாள் புலிகளால் கொல்லப்பட்ட  பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னாவுடன் சேர்ந்து இயங்கியதையும் 2001 ஆண்டு சர்வதேச மன்னிப்பு அறிக்கையில் அரச புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த நபர்கள் தங்களின் புளட் முகாம்களில் அடைத்து வைத்துவைத்திருந்ததை சிறுவர்களை தமது இயக்கத்துக்கு சேர்த்ததை சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த வகையில் இவர்களால் கைதுசெயயப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட உடல் உள உபாதைக்கு உட்பட்ட  தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு புளட் இயக்க அடாவடித்தனத்துக்கும் இராணுவ அடாவடித்தனத்துக்கும் வேறுபாடு கிடையாது. இலங்கை அரசை குற்றம் சாட்டும் தகுதியும் புளட்டுக்கு இல்லாமல் போய்விடுகிறது 
       
புலம் பெயர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இன்று மஹிந்த அரசுக்கு எதிராக இணையத்தளம் புனை பெயரில் நடத்தி கொண்டு இலங்கையில் தமது சொந்த பெயரில் அடிக்கடி விஜயம் செய்து , சிலவேளை இலங்கை அரசின் காவல் துறை பாதுகாப்பை மற்றும் சில சலுகைகளை பெற்றுக்கொண்டு நடமாடும் பிருகிருதிகள் சிலரை நான் அறிவேன் , அந்த வகையில் இவர் எந்த ரகம் என்பது ஒரு புதிராகவே இருக்குமா என்ற கேள்வி எனக்கும் எழுந்தது. ஏனெனில் இவர் ஒரு புளட் இயக்க ஆதரவாளர் என்பது வெளிப்படையான உண்மை , அவ்வாறே அவர் ஒரு தமிழ் தேசியவாதி என்பதும் மிகவும் துல்லியமாக அவரின் எழுத்துக்களின் மூலம் தெரிகின்ற இன்னுமொரு உண்மை. ஆக இவர் புலி சார்பு ஊடகவியலாளராக அறியப்பட்ட  (தொழிலுக்காக! ) காலத்தில் இருந்தது போல் இப்போதும் தான் சார்ந்திருக்கின்ற அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை மேம்படுத்த தனது கருத்துக்களை பிரச்சாரப்படுத்துகிறார் என்பதாகவே அவரது மேற்படி கட்டுரை அமைந்திருக்கிறது. தமது அரசியல் கட்சி காலத்துக்காலம் சார்ந்திருக்கும் அரசியல் நிலைப்பாட்டை ஒற்றியே இவரின் கருத்துக்களும் பயணிக்கிறது. என்றாலும் இவருக்கு மகிந்தவின் "மாளிகையில்" சகல விரும்பிய உணவுகளும் அன்று நான் சந்தித்த அந்த நாளில் கிடைத்தது. அப்போது அவரை அரச பாதுகாப்புடன் அரச விருந்தாளியாகவே அழைத்து சென்றார்கள் . அவரும் அவருடன் சென்ற அவரின் இயக்க தோழர்களும் மகிந்தவுக்கு விருப்பமான பழத்தையே அப்போது கையில் வைத்திருந்தனர்  என்று நம்புகிறேன். அதனால்தான் நன்கு ஏப்பமிட சாப்பிட்டுவிட்டு "மாளிகையை' விட்டு வெளியேறினார்கள் என்று நினைக்கிறேன்.      

No comments:

Post a Comment

"Tamil National Alliance being wooed by both Rajapaksa and Wickremesinghe" By Editor NewsinAsia

Colombo, November 18 (newsin.asia): In the confused political situation in Sri Lanka, where both major groups are struggling to retain or...