புலிகளின் நான்காம் ஈழப்போருக்கான முஸ்தீபும், முஸ்லிம் மக்கள்மீதான இரண்டாம் இனச்சுத்திகரிப்பிற்கான ஒத்திகையும்.

 
 எஸ்.எம்.எம்.பஷீர்

தேசம் இதழ் -29

தம் தாயகப் பிரதேசமான யாழ் குடாவில் இருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதை கவனயீர்ப்பு ஊர்வலம்மூலம் முஸ்லிம் மக்கள் நினைவு கூர்ந்தனர். கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் டிசம்பரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நிரந்தர சமாதானத்தை அடைய அரசையும், புலிகளையும் வற்புறுத்தினர்.

மறுபுறம் மாவீரர் தின உரையில் தமிழர்கள்மீதான சிங்கள அடக்குமுறை குறித்து புலிகளின் கருசனையை பிரபாகரன் வெளிப்படுத்தினார். அதேபோல் புலிகளின் முஸ்லிம்கள்மீதான அடக்கு முறையினையையும் பிரதியீடு செய்யும் சந்தர்ப்பமும் ஏற்படுகின்றது. குறிப்பாக மூதூரை ஒரு பிரமாண்டமான வதை முகாமாக மாற்றிய புலிகளின் அடக்குமுறை பலிகளின் முஸ்லிம்கள்மீதான அடக்கு மறையின் கிட்டிய உதாரணமாகும். எனினும் காலியிலும், மூதூரிலும் தமிழர்கள்மீதான பதில் தாக்குதல்களை பாரிய அளவில் எதிர்பார்த்த புலிகளின் தோல்வியும் இவ்வுரையில் புலப்படாமல் இல்லை.

எந்தத் திருமலையில் 1960களில் முஸ்லிம் அரசும், தமிழ் அரசும் என இரு அரசுகள் குறித்து தந்தை செல்வா பிரகடனஞ்செய்தாரோ அந்தப் பிரதேச மக்கள் புலிகளின் இனச்சுத்திகரிப்பின் கெடுபிடிகளுக்கு உள்ளாகி துயர்பட்டனர். மேலும் கிழக்கிலே ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேச சபைகள் குறித்து பல்லினச் சூழலை கருத்தில்கொண்டு பண்டா ஒப்பந்தம் செய்த தந்தை செல்வாவின் கருத்துக்கள் இன்று தீர்க்க தரிசனமாக புலப்படுகையில் காலாவதியான தனித் தமிழீழ அரசு சிந்தனைகளில் பிரபாகரன் இன்னும் மூழ்கியிருக்கின்றார். சுய நிர்ணய உரிமைகோரும் சமூகங்களை கிள்ளுக் கீரை என நினைத்திருக்கின்றார்.


மேலும் இரு கட்சி இணக்கப்பாடு குறித்து பொம்மலாட்டம் எனக் கேலிசெய்யும் பிரபாகரனுடன் இவ்விணக்கப்பாட்டினை ஒரு ஜோடனை என எண்ணி வசதிக்கேற்ப சிங்களப் பேரினவாதம் பேசுகிறார் ரவூப் ஹக்கீம். இந்த ரவூப் ஹக்கீமும், ஒப்பந்தங்கள் மூலமாக சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்துகொள்கின்ற பிரபாகரனும் தங்களது சமூகங்களின் ஏகப்பிரதிநிதிகளென தங்களைத் தாங்களே பறைசாற்றுகின்றனர். இவர்கள் தனிமனித சமூகப் பலவீனங்களில் சூழ்ந்திருக்கின்ற மக்களினை ஆதாரமாகக்கொண்டு உயிர்வாழ்கின்றனர். அதனால் தெற்கிலே சிங்களத் தலைமைகள் புதிய ஆரோக்கியமான திசையில் பயணிப்பதற்கான சூழ்நிலை எற்படுவதைக்கண்டு கிலி கொண்டுள்ளார்கள்.

முஸ்லிம்கள் கறித்து ஒரு வார்த்தை தானும் பிரபாகரனின் மாவீரர் உரையில் குறிப்பிடப்படவில்லை இது பிரபாகரனின் அல்லது பலிகளின் மமதையினையும், மறுபுறம் இப்போக்கு முஸ்லிம்களைத் தாக்குவது என்பது தமதுரைமை என புலிகள் வக்கிரமாக செயற்படுகின்ற கொடுரத்தினையும் உள்ளடக்கி இருக்கின்றது. புலிகள் 1990 அக்டொபரில் வட மாகாண முஸ்லிம்களை விரட்டியடித்து கிழக்கு மாகாண முஸ்லிம்களைக் கட்டம், கட்டமாக அதே அண்டிலே ஆங்காங்கே கொன்றொழித்தனர். இவ்வாறு முஸ்லிம்கள்மீதான இனப்படுகொலையினையும், (genocide) இனச்சுத்திகரிப்பையும் (ethnic cleansing)அரங்கேற்றினர். அதன்பின்னர் இலாப, நட்டக்கணக்கினை உலக அரசியல் பின்னணிகளுடன், மாற்றங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து புதிய உபாயங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகைதான் மூதூர்மீதான பலிகளின் முற்றுகை. அதன் விளைவாய் நிகழ்ந்த முஸ்லிம்களின் பாரிய வெளியேற்றம் திட்டமிட்ட முஸ்லிம் இளைஞர்கள் மீதான படுகொலை. மாவிலாறும் மூதூரின்மீதான புலிகளின் முற்றுகையும் காரணகாரியத் தொடர்பற்றவை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மூதூா முஸ்லிம்கள் தங்களது அரசியல் தனித்தவத்தைப் பேணி வந்துள்ளனர். அதுமட்டுமல்ல திருகோணமலை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களும் பல் வேறுபட்ட புலிகளின் நெருக்கடிக்கு மத்தியில் தமது தனித்துவத்தை நிலைநாட்டி வந்துள்ளனர். இது புலிகளை மிகவும் ஆத்திரமூட்டி வந்திருக்கின்றது. குறிப்பாக சமாதானச் சூழ்நிலையில் புலிகளுக்கும் மூதூர், தோப்பூர் முஸ்லிம்களுக்குமிடையிலான முரண்பாடுகள், அவை தோற்றுவித்த சிறு, சிறு தமிழ், முஸ்லிம் கலவரச் சூழ்நிலைகள் என்பவற்றினூடாக இதனைக் காண முடிகின்றது.

போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் 2002 ம் ஆண்டு ஆரம்பத்திலேயே முஸ்லிம்கள் மீதான புலிகளின் கட்டாயப் பணப்பறிப்பு, ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றது. இதன் எதிர் விளைவுகள் மார்ச் 2003 ல் பாரிய அளவில் ஆர்ப்பாட்டமாக கலவரமாக மாறியது. இக்கலவரங்களின் எதிரொலி வாழைச்சேனையிலும் பிரதிபலித்தது. புலிகளின் முஸ்லிம் எதிர்ச் செயற்பாடுகள். தமிழ், முஸ்லிம் மக்களை இன முரண்பாடுகளுக்குள் தள்ளியது. பரஸ்பர சந்தேகமும், அச்சமும் அவர்களது இன செளன்யத்திற்குத் தடையாக அமைந்தன.

புலிகளின் ஊது குழல்கள், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் முஸ்லிம் ஊர்காவற் படையினர் அடிப்படைவாதக் குழுக்கள் என்று முஸ்லிம்கள்மீது பழி சுமத்தின. அத்துடன் தங்களது (புலிகளது) முஸ்லிம்கள்மீதான வன்முறைகளுக்கு மூன்றாவது சக்திதான் காரணமென்றும் குற்றஞ்சாட்டி வந்தன. இதற்கு முட்டுக்கொடுப்பது போல புலிகளின் வெற்றியிலேயே முஸ்லிம்களின் அரசியல் வெற்றியும் (win-win situation)தங்கியுள்ளதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்த அறிக்கை அமைந்தது. சமாதானத்திற்கு தடையாக முஸ்லிம்களிலும் ஒரு பகுதியினர் (தீவிரவாத) செயற்படுவதாக ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டமையினை புலிகளின் ஊடகங்கள் இன்றுவரை இழுத்துப் பிடித்துக்கொண்டுள்ளன.

இந்தக்காலப்பகுதியில்கூட பரஸ்பரமாக தமிழ், முஸ்லிம் மக்கள் அகதிகளாகத் தலை சுமார் 150 குடும்பங்கள் மட்டக்களப்பிற்கும், கந்தளாய்க்கும் முறையே இடம்பெயர்ந்தனர். மேலும் இந்தக் காலப்பகுதியிலே மூதூர் கிழக்கு மக்கள் தாக்கியபோது கொல்லப்பட்ட இரண்டு புலி உறுப்பினர்களான சங்கர் என அழைக்கப்படும் மகேஸ்வரன், குட்டி என அழைக்கப்படும் தர்மலிங்கம் கமலநாதனின் எட்டாம் நாள் ஙாபகாாத்த நிகழ்வின்போது வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் முஸ்லிம்களை விழித்து, சங்கரினதும், குட்டியினதும் மரணம் விதைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களது விளைச்சலால் மூதூர் மக்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்று தொடக்கம் மூதூா முற்றுகைவரை பல துண்டுப் பிரசுரங்கள் புலிகளின் முகவர் நிறுவனங்களால் வெளியிடப்பட்டன. அவ்வப்போது சமாதான ஒப்பந்தங்கள் புலிகளுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே (பள்ளிவாசல் நிர்வாகிகள்) ஏற்படுத்தப்பட்டாலும் அவை வெறும் காகிதங்களாக நடைமுறையில் மதிக்கப்பட்டன என்பதற்கு மூதூரில் நிகழ்ந்த அண்மைய நிகழ்வு முடிவான ஒன்றாக அமைகின்றது.

முஸ்லிம் ஆயுதக் குழுவினர் தோற்றம் பெறுவதாகவும் அவர்கள் கருணா குழுவினர்போல் தங்களது தமிழீழத் தாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைவார்கள் என்ற பரப்புரைகளை புலிகள் மேற்கொள்வதில் தீவிரம் காட்டினர். ஏனெனில் தாங்கள் செய்யப்போகின்ற செயற்பாடுகளை தமிழீழத்தின் இறுதி இலக்காக அல்லது முடிவான தீர்வாகக் கருதுகின்ற தமிழ் மக்களை (புலம்பெயர்ந்தவர்கள்) சங்கடத்திலாழ்த்தாமல் நியாயப்படுத்தும் மனப்பாங்கினை தோற்றுவிக்கின்ற வகையில் இப்பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது. குறிப்பாக காத்தான்குடி, ஏறாவூர், அழிஞ்சிப்பொத்தானை படுகொலைகளும் வடமாகாண வெளியேற்றமும் இப்பரப்புரைகளின் பின்னணியிலேயே இடம் பெற்றன. மறுபுறம் முஸ்லிம்களை இன்று மேற்குலகு பயங்கரவாதிகளாகக் காட்டும் போக்கை புலிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துகின்றனர்.

இன்று கிழக்கின் தனித்துவம் குறித்து எழுந்துள்ள அரசியல், இராணுவ நடவடிக்கைகளும் கிழக்கு முஸ்லிம்கள்மீது புலிகளை சந்தேகம் கொள்ள வைத்துள்ளது. எனவே மூதூர் முஸ்லிம்கள் மீதான முற்றுகைமூலம் புலிகள் கிழக்கு முஸ்லிம்களை கிலிகொள்ள வைத்துள்ளனர். மேலும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களென இராணுவத்தினரைக்கொண்டே முஸ்லிம்கள்மீதான தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். மறுபுறம் தங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் இளைஞர்களை அடையாளங்கண்டு அழித்து, ஒழித்தும் உள்ளனர். இவற்றினைச் செய்வதற்கான அகப்புறச் சூழ்நிலைகளை தந்திரோபாயமாகச் செய்து முஸ்லிம்களை வெளியேற்றினர்.

இந்த அதிரடி நடவடிக்கை எதிர்காலத்தில் கிழக்கு முஸ்லிம்கள்மீதான தங்களின் தாக்குதலுக்கு, தங்களது இராணுவ பலத்திற்கு எடுத்துக்காட்டாக செயற்பட்டதாகும். மேலும் திருகோணமலைத் துறைமுகத்தினை இலங்கை இராணுவம் தக்கவைத்திருக்கின்ற மூதூரைச் சார்ந்த கிராமங்கள் யாவற்றினையும் கட்டுப்படுத்திக் கொண்டு வருகின்ற செயற்பாடாகும்.

எவ்வாறெனினும் இலங்கை அரசின் இராணுவ எதிர்த், தாக்குதல்கள், களநிலை யதார்த்தங்கள்  புலிகளை பின்வாங்கச் செய்திருக்கின்றன. தங்களைப் புலிகள் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையிலிருந்த மூதூர் தமிழ் மக்களும் அகதிகளாக காட்டுப் பிரதேசங்களினூடாக அழிவுகளைச் சந்தித்தே இடம்பெயர்ந்தனர். சேருவில சிங்கள மக்களும் மூதூர் முற்றுகை தொடங்கும் முன்னரே மாவிலாறு பிரச்சினை சூடுபிடிக்கத் தொடங்கவே இடம்பெயர்ந்தனர். ஒட்டு மொத்தமாக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் வெளியேற்றம் அதிலும் முஸ்லிம் மக்களிடம் கொள்ளையிட்டமை, முற்றுகையிட்டு துன்புறுத்தியமை, முஸ்லிம் இளைஞர்களை கடத்திக் கொன்றமை, தங்களது தந்திரோபாயத்தால் இராணுவத்தின்மீது முஸ்லிம்கள் அகதிகளாய் தஞ்சமடைந்திருந்த இடங்களிலிருந்தே தாக்கியமை, மற்றும் புலிகளின் பின்வாங்கிய நகர்வுகள் தமிழர்களையும் இராணுவத் தாக்குதலுக்கு உட்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் புலிகளின் தன்முனைப்பான மூதூர் முற்றுகை முஸ்லிம்களை மட்டுமல்ல தமிழர்களையும் பாதித்திருக்கின்றது. முஸ்லிம்களைப் பொறுத்தளவில் மீண்டும் ஒரு இனப்படுகொலையும், இனச்சுத்திகரிப்பும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. ஒரு புறம் புலிகளும்ஈ மறு புறம் இராணுவமும் பொதுமக்களை அழிவுக்குட்படுத்தி இருக்கின்றன. இலங்கை அரசு தனது மக்களை பாதுகாக்கவேண்டிய தார்மீகக் கடமையிலிருந்து தப்பிவிட முடியாது. சகல மனித அழிவுகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். மூதூரிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் மீண்டும் ஒன்றாகவே வாழ விரும்புகின்றார்கள்.

மூலம்: தமிழ் முஸ்லிம் இன உறவுகள் -சிறப்பு மலர் பங்குனி 2007

No comments:

Post a Comment

Soaring food prices drive hunger around the world-by John Malvar

The 2021 Global Hunger Index (GHI), published on Thursday, revealed soaring levels of hunger among the poor and working populations around t...