மாபெரும் இலக்கியமும் மாவீரர் இலக்கணமும்


 

                                                                       எஸ்.எம்.எம்.பஷீர்


"என்னுடைய பெயர்
என்னவென்று
எனக்கு தெரியாது
நான் யாரென்பதும்
மறந்து விட்டது
ஆனால் -
ஒன்று மட்டும்
எனக்கு நல்ல ஞாபகம்
நான்
மரணமாகவில்லை
அகால மரணமானேன்"

             
எஸ். சண்முகதாசன் (கல்லறை கீதங்கள் )


மாவீரர் தினம் இலங்கையில் புலிகளின் தலைவரின் அஸ்தமனம் வரை வட புலத்தில் இறுதியாக கொண்டாடப்பட்டது. புலம் பெயர் தேசங்களில் இன்றுவரை கொண்டாடப்படுகிறது ஆனால் மீண்டும் அண்மையில் மாவீரர் தினம் கிழக்கில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த மாவீரர் தினம் அதே புலிகளில் இருந்தவர்கள் , அதிலிருந்து பிரிந்து ஜனநாயக வழிக்கு திரும்ப , முனைந்தபோது வன்னியை தளமாக கொண்ட பிரபாகரனின் புலிகள் கிழக்கிலிருந்த தமது சகோதர "புலிகளை" வெருகல் ஆற்றில் சொர்ணம் தலைமையில் அன்று அமுலிலிருந்த நோர்வேயின் சமாதான ஒப்பந்தத்துக் கெதிராக கிழக்குக்கு சென்று முழுமையாக அழிக்க முற்பட்டு முடிந்தவரை அழித்த  நாள் அண்மையில் இன்றைய தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவர், கிழக்கு மாகான முதலமைச்சர் சந்திரகாந்தனின் தலைமையில் நடைபெற்றிருக்கிறது. புலம் பெயர் யாழ் மையவாத புலிகளின் அறிவு ஜீவிகளின் ஆலோசனையின் பிரகாரம் அதுவும் குறிப்பாக இலண்டனிலுள்ள தமிழ் மனித உரிமை வாதிகளின் ஆதரவுடன்  அன்றைய ஜனாதிபதி சந்திரிகாவை அணுகி அன்றைய காலகட்டத்தில் அமுலிலிருந்த நோர்வே சமாதான ஒப்பந்தத்துக் கெதிராக சொர்ணத்தை கிழக்குக்கு ஆயுதங்களுடன் பயணிக்க அனுமதி பெறப்பட்டது.
அன்று ஆயுதங்களுடன் வந்த வட அல்லது வன்னி புலிகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு கிழக்கில் பலியாகிய கிழக்கு தமிழ் இளைஞர்கள் யுவதிகளின் உயிரிழப்பு தினம்தான் இப்போது மாவீரர்  நாளாக கொண்டாடப்பட்டுள்ளது .



படம்: சொர்ணம் தாக்குதலுக்கு பயன்படுத்தி கைவிட்டு சென்ற விசைப் படகுகளில் ஒன்று



இலக்கிய மாவீரனின் இலக்கணம்

கம்பரின் இராமாயணத்தில் சீதையின் சுயம்பரத்தில் , அவளின் தந்தை ஜனகன் வீரத்துக்கு சவாலாக வைத்த வில்லை ஒடித்து  (உடைத்து ) , அதற்கு மேலும் பரசுராமனின் வில்லையும் ஒடித்து மாவீரன் என புகழப்பட்ட இராமனை கம்பர் அவனது வீரத்துக்கு விவரிப்பு செய்கையில்;

"கையால், எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்” . இராமன் வில்லை கையால் எடுத்ததையே அங்கு கூடியிருந்தோர் கண்டனர்  , அடுத்த கணம் வில் முறிந்த சத்தம் மட்டுமே கேட்டது  , அவ்வளவு வேகமாமாக இராமன் கணப்பொழுதில் உடை(ந்)த்த வில்லையே அவர்கள் கண்டனர்  என்று நயந்து கூறும் மா வீரனைத்தான் பின்னர் கம்பன் 

"நேரும் அன்று மறைந்து நிராயுதன்
மார்பின் எய்யவோ வில்  இகல் வல்லதோ? "

என்று மறைந்து நின்று நிராயுதபாணியான  வாலியை கொன்றபோது தான் மாவீரன் எனப் புகழ்ந்த இராமனின் வீரத்தை வாலியின் வாய் மூலம் இகழச் செயகிறான்  (பின்னர் கடவுளுக்காக நக்கீரனும் வாலியும் சமரசம் காண்பது ஒரு முடிவுரையாக இருப்பினும் வீரம் செறிந்த விவாத்தத்தை இருவருமே தங்களின் கடவுளர்களுக்கு   எதிராக முன்வைக்கும் வீரியமே வீரம்  என்றால் , நக்கீரனை போல் வாலியினதும் விவாதம் அந்த சந்தர்ப்பத்தில் (context) வீரியம் நிறைந்ததுதான் )
இராமன் இராவணைகிடையிலான யுத்தத்தில் ஆயுதமிழந்து மகுடம் விழுந்து வெறும் கையனாய் வெட்கித்து நிற்கும் இராவணனை பார்த்து இன்று போய் நாளை வா என்று நிராயுதபாணியான இராவணனுக்கு யுத்த தர்மம் சொன்ன இராமனை யுத்த தர்மத்தை மீறிய குற்றத்திலிருந்து கம்பன் மீட்டெடுக்கிறான்இராமனை (வாலியை கொன்றதை பிழையெனக் கண்டவன் ) இராவணனை நிராயுதபாணியாய் கொல்வதை தவிர்த்ததை காட்டி தனது காவிய நாயகனை மாவீரனாக்குகிறான்! 


கிழக்கு மாவீரர் தினம்

அண்மையில் வெருகலில் நடந்த  மாவீரர் தினநிகழ்வில் உரையாற்றி சந்திரகாந்தன் கூறியதை கவனித்தால்  இன்றைய நாள் கிழக்கு மக்களின் விடிவுக்காய் வித்திட்ட வீரமறவர்களை நினைவு கூரும்   ஒரு சோக நாள். இத்தினத்தில் எம் சமூகத்தின் மறு மலர்ச்சிக்கும் அரசியல் ரீதியான தனித்துவத்திற்கும் களம் அமைத்து, தம்மை வித்தாக்கி அதில் சமூகத்தின் எழுச்சியை விருட்சமாக்கிய எம் உன்னத மாவீரர்களை நினைவு கூறும் ஒரு புனித நாள்.
இதோ இந்த வெருகல் ஆற்றங்கரையில் எமது சமூகத்தின் விடுதலைக்காய் தங்களையே அர்ப்பணித்து போராட முன்வந்த எம்மவர்கள் நயவஞ்சகமாய் கொல்லப்பட்டார்கள். அதுமாத்திரமன்றி சமூகத்தின் விடிவிற்காய் தன்னுயிரை துச்சமென நினைத்து ஆண்களுக்கு சமமாய் களமாடிய எமது சகோதரிகளும் களங்கப்படுத்தப்பட்டு காட்டு மிராண்டிகத்தனமாய் அழிக்கப்பட்டார்கள். இவை மேற்கொள்ளப்பட்டதும் இதற்கான உத்தரவு மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டதும்  வேற்றவனால்  அல்ல. எமது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாலேயேதான் இப்பாரிய கொடுமை எம்மீது ஏவப்பட்டது.

என்று குறிப்பிடுகிறார்.

கிழக்கின் முதலமைச்சர்  தனது சந்தோசமான இமைப்பிராயத்தினை புலிப் பாசிச இயக்கத்தில் தொலைத்தாலும் அதிலிருந்து மீண்டு தீர்க்கமான நிதானமான ஜனநாய அரசியல் செய்பவர் என்று பொதுவாக சிலாகித்து பேசப்படுபவர் , தமது இயக்க பாவங்களுக்கு பரிகாரம் தேடுபவராக அறியப்பட்டவர். ஆனால் அவரின் மாவீரர் உரை புலிகளின் வழக்கமான  வார்த்தைகள் சிலதை கொண்டமைந்திருக்கிறது, புலிகள் நடாத்திய பாணியில் அவர் அந்நிகழ்வை நடத்தாமல் கிழக்கின் தனித்துவத்திற்காக தங்களுடன் பயணித்த தமது சகோதர இளம் யுவன்கள் யுவதிகளின் உயிர்களை பறித்த புலிப் பாசிசத்தின் நிழல் படாத முற்றிலும் புலியின்  சடங்குகளுக்கும் மாற்றாக அந் நிகழ்வை நினைவு கூர்ந்திருக்கலாம். புலியின் பாசிஷ கலாச்சாரமும் அதன் சடங்குகளும், ஹிட்லரின் நாசி கலாச்சாரமும்  நடைமுறைகளும் ஜேர்மனிய மக்களால் எப்படி  தூக்கி எறியப்பட்டதோ ,  இளம் தலைமுறையின் நினைவுகளிலிருந்து மறக்கடிக்க பட்டதோ அவ்வாறே      இத்தியாதி நிகழ்வுகள் அவர்களை இழந்த உறவினர்களின் அவர்கள் சார்ந்த மக்களின் துயர நாளாக  சொந்த இன அடக்குமுறையினை சாட்சி பகரும் நிகழ்வாக நினைவுகூரப்படல்  வேண்டும்.

கிழக்கில் ஒரே இனத்தின் , ஒரே இயக்கத்தின் உறுப்பினர்கள் பிரதேச கூறு போடப்பட்டதை அதற்காக இரத்தப் பலியிடப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளனர். இந்நிகழ்வு  நிச்சயமாக நினைவு கூறப்பட வேண்டிய நிகழ்வுதான் என்றாலும் இவர்களை கொன்றவர்களும் மறுபுறம் புலம் பெயர் தேசங்களில் வடக்கு தலைமைத்துவ (பிரபாகரனின்) புலிகளால் அவர்களின் ஆதரவாளர்களால் மாவீரர்களாக நினைவு கூரப்பட்ட நிகழ்வுகளும் புலிகளின் வழக்கமான நவம்பர் மாத மாவீரர் நிகழ்வில் வருடந்தோறும் நினைவு கூரப்படுகின்ற  நிகழ்வுகளும் உண்டு. புலிகளில் பலர் அவர்கள் எந்த பிரிவில் இருந்திருந்தாலும் ஒளித்து நின்று கொன்றவர்கள் , அப்பாவிகளை கொன்றவர்கள் , நிராய்தபனியாய் நின்ற தமது எதிரிகளை கொன்றவர்கள் என்பதற்காக மாவீரகள் ஆக்கப்பட்டவர்கள் பலர். அந்த வகையில் "வன்னி: புலிகளிடம் சரனடையச் சென்றவர்களை , தற்பாதுகாப்புக்காக போரிடவேண்டி நேரிட்டு அதில் கொன்றவர்கள் மாவீரர்களா அல்லது அவர்களால் கொல்லப்பட்டவர்கள் மாவீரர்களா. அல்லது பொதுவாக ஆயுதமேந்தி  தமக்கு வேண்டாதவர்களை அவர்கள் சார்ந்த மதம் இனம் மொழி குரோதத்துக்காக அல்லது அதற்கெல்லாம் அப்பால் நின்று சகட்டு மேனிக்கு மனித விரோதியாய் கொலை செய்து இன்புற்றவர்கள் மாவீரர்களா. தமிழர் இயக்கங்கள் பலவும் சிறுவர் படையணியினரை வைத்திருந்ததும் தமது சொந்த சமூகத்தையும் மாற்று சமூகத்தையும் கொன்றதும் அவர்களும் மாவீரர்களை வீர மக்களாய் அவர்கள் சார்ந்த இயக்கங்களினால் வருடந்தோறும் கொண்டாடப்படுவதும் யாருக்கு யார் வீரர் , யாரை யார் வென்றார் , யாரிடம் யார் தோற்றார்என்பதற்கப்பால் மக்களுக்காக மாவீரர்களுக்கான புதிய தாற்பரியத்தை கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருப்பதுபோல் எனக்கு தோன்றுகிறது.   

கொலையும் வீரமும்

கலாநிதி நரேந்திரன் 1988 இல் எழுதிய தமிழர்கள் - ஒரு சுய பரிசோதனைக்கான காலம் “ (Tamils- A Time for self-examination) என்ற ஆங்கில கட்டுரையில்  "சுதந்திரப் போராளிகள்: என்று குறிப்பிடப்படும் சகல தமிழ் ஆயுத இயக்க உறுப்பினர்களின் அவர்களை ஆதரிப்போரின் நன்னெறியை (Morality) கேள்விக் குட்படுத்தியிருந்தார். அதற்கு உதாரணமாக அல்பிரேட் துரையப்பாவை அரசியல் சதிக்கொலை செய்தததில் தாங்களும் பங்குபற்றியதாக  நூற்றுக்கு மேற்பட்டோர் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாக தன்னிடம் கனடாவிலுள்ள ஒரு மனித உரிமை சட்டத்தரணி கூறியிருப்பதாகவும்எழுதியுள்ளார்.   

நான் முன்னரே எனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டவாறு (ஊடகம் இனியும் பூடகமில்லை ) பிரபாகரனே துரையப்பாவை கொன்றதாக புலிகளின் வானொலியிலே பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தனர்.  "சுதந்திர போராளிகள்" எனப்பட்டோர்  போரில் வீழ்ந்தால் சாமான்ய மக்களை குண்டு வைத்து தற்கொலையாளியாக கொன்றாலும்  , தன்னை அவர் தற்கொடை அளித்தவர் என்றும்   வீரச்சாவு எய்தி புனித வித்துடலாகி ,  விதையாகி  புனித குழியிலே விதைக்கப்பட்டார் என்று ஒரு மாவீர கலாச்சாரமும் ஒரு தொழில் நிறுவன அமைப்புடன் பின்னாளில் கட்டமைக்கப்பட்டது. இந்த பின்னணியில் கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட அந்த இளைஞர்கள் யாழ் மைய வாத அடக்கு முறை ஆதிக்க வெறிக்கு பலியிடப்பட்டவர்கள். தாம் நம்பிய கிழக்கு தலைமைக்கு தமது விசுவாசத்தை மாற்றி கொண்டவர்கள், மேலும் யுத்தம் நடைபெறக்கூடாது சமாதானத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக உயிர் தியாகம் செய்தவர்கள் . இனிமேல் அவர்களை மாவீரர் மாயையிலிருந்து விடுவித்து தியாகிகளாக நினைவு கூரப்பட்டு , தியாகிகள் தினமாக கொண்டாடினாலே பொருத்தமாக விருக்கும். 

கல்லறை கீதங்களும் கரி நாட்களும்

 ஜூன் 2004 ல் உண்ணா விரதமிருந்து போராட்டம் செய்து உயிர் நீத்த ஐ ஆர் ஏ (   I.R.A  ) கட்சியின் வீரன் என போற்றப்பட்ட பொபி சாண்ட்ஸ் (Bobby Sands) எனும் குடியரசு கட்சியின் உறுப்பினர்   உட்பட்ட பபதினாறு ஐ ஆர் ஏ உறுப்பினர்களின் உடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட  பிரத்தியோக மில்டவுன்  சவக்காலையில் இனந்தெரியாதோர் புகுந்து அக்கல்லறைகளை உடைத்து அழித்தார்கள். அது  மதவாத அடிப்படியில் செய்யப்பட்ட ஒரு அங்கீகரிக்கப்படாத செயலாகும் . இங்கே அடக்கப்பட்டவர்கள் மாவீரர்கள் என்று ஐ ஆர் ஏ. மதிப்பளித்தவர்களின் கல்லறைகளை அழிக்க முயற்சிக்கப்பட்டது.   அது மாத்திரமல்ல அந்த அடக்கஸ்தலத்தில் ஐ ஆர் ஏ இயக்க தலைவரான ஜெரி அடம்ஸின்  2003 நவம்பரில் மரணித்து அடக்கபபட்டிருந்த அவரின் தந்தையின்  கல்லறை கூட சேதமாக்கப்பட்டது. இதுவெல்லாம்  உலகுக்கு நாகரீகத்தை போதிபதற்கும் நிறுவுவதற்கும்  அரபு நாடுகளுக்கும ஏனைய மூன்றாம் உலக நாடுகளுக்கும் யுத்தம் தொடுக்கவும் அச்சுறுத்தவும் செய்யும் உலகின் உச்ச ஜனநாயகம பற்றி போதிக்கும் அமெரிக்காவின் ஆத்மார்த்த  தோழன் பிரித்தானியாவில் தான்.

 



படம்: புலிகளின் தரவையில் நடைப்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்




படம்: தமிழ் மக்கள் விடுதலை புலிகளின்  " மாவீரர் "  நாள் நிகழ்வு   ( வெருகல் ஏப்ரல் 10. 2011)


யுத்தத்தில் பயங்கரவாத புலிகளை தோற்கடித்த இலங்கை இராணுவம் தங்களின் மாவீர்களை நினைவுகூரும்  வருடாந்த நினைவு நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த யுத்தங்களில் பங்கு கொள்ளாது  , எவ்வித சம்பந்தமுமில்லாது இரு புறமும் சிக்கி  அகால மரணமடைந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் எமது அநுதாபத்திற்குரியவர்கள். அவர்களும் இன்று பெற்றுள்ள அமைதிக்காக தமது உயிர்களை விரும்பாமலே இழந்தவர்கள்  யார் யாரோவெல்லாம் செய்த பயங்கர வேள்வியில் தங்களை ஆகுதியாக்கி தியாகம் செய்திருக்கிறார்கள். இன்று நாம் விடும் அச்சமற்ற மூச்சில் முகம் தெரியாத பெயர் மறந்து போன ஆயிரக்கணக்கான  அப்பாவி மனிதர்கள் (குழந்தைகள் உட்பட  ) அனைவரும் தியாகிகளாக நினைவு கூரப்பட  வேண்டும்.  




 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...