Saturday, 17 October 2020

நெருக்கடிகளிலிருந்து இலங்கை மீள்வது எப்போது, எவ்வாறு?

 நெருக்கடிகள் எனும்போது ஒரு நெருக்கடி அல்ல, பல நெருக்கடிகள் என்று அர்த்தம்.

வழமையாக அவை அரசியல் சூழல், பொருளாதார நெருக்கடி, அந்நிய நிர்ப்பந்தம், இனப்பிரச்சினை என்ற வகையறாக்களுக்குள் அடங்கிவிடும். ஆனால் இவ்வருட ஆரம்பத்தில் உருவான கொரோனா என்ற நோய்த்தொற்று மேலதிகமாக இலங்கையையும் பெருமளவுக்குப் பாதித்துள்ளது.

2019 நொவம்பர் வரை ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கம் இலங்கையை பெரிய அளவுக்குச் சீரழித்துவிட்டுச் சென்றது. சென்றது என்பதை விட அவ்வரசு மக்களால் தூக்கியெறியப்பட்டது என்பதே சரியான வார்த்தைப் பிரயோகமாகும். அந்த அரசை மக்கள் எவ்வளவு தூரம் வெறுத்தார்கள் என்பதற்கு கடந்த வருடம் நொவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச பெற்ற அமோக வெற்றியிலிருந்தும், இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தற்போதைய அரசுக்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கியதிலிருந்தும், ஐ.தே.கவுக்கு ஒரு உறுப்பினர் கூட வழங்காததிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

ஐ.தே.க. அரசு போதிய பெரும்பான்மை இல்லாத அரசாக இருந்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், ஜே.வி.பியினதும் வெளிப்படையான ஆதரவுடன் பல மக்கள் விரோத, தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டது. அவ்வரசு பொதுச் சொத்துகளை தனிப்பட்ட பெரும் முதலாளிகளுக்கும், அந்நியக் கொம்பனிகளுக்கும் மலிவு விலையில் தாரை வார்த்து தேசிய பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குக் கொண்டு சென்றது.

அது மாத்திரமின்றி, முன்னைய ராஜபக்ச அரசு இலங்கையை சீனாவுக்கு அடகு வைத்துவிட்டது எனப் பிரச்சாரம் செய்து பதவிக்கு வந்த ஐ.தே.க. அரசு, பின்னர் பொருளாதாரத் தேவைகளுக்காக அதே சீனாவின் காலடியில் விழுந்ததுடன், நாட்டின் நலனைக் கவனத்தில் கொள்ளாது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட காலக் குத்தகைக்கும் வழங்கியது.

அத்துடன், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற ஏகாதிபத்திய வட்டிக் கடைகளிடமும், அமெரிக்கா உட்பட பல மேற்கு நாடுகளிடமும் பல கோடி டொலர்கள் பணத்தை அறா வட்டிக்கு வாங்கி நாட்டைப் பெரும் கடனாளியாகவும் மாற்றியது.

இன்னொரு பக்கத்தில் நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையை ஏகாதிபத்திய சக்திகளுக்குச் சார்பாக மாற்றி, நாட்டுக்குப் பாதகமான பல ஒப்பந்தங்களைச் செய்ததுடன், மேற்கத்தைய சக்திகளுக்கு அடிபணிந்து மேற்கத்தைய சக்திகள் சர்வதேச அரங்கில் கொணடு வந்த நமது நாட்டுக்குப் பாதகமான – இறைமையையும் சுயாதீனத்தையும் பாதிக்கின்ற தீர்மானங்களுக்கு வழியமைத்துக் கொடுத்தது.

இன்னொரு பக்கத்தில் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதாக தமிழ் மக்களுக்குப் போலியான வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டு, மறுபக்கத்தில் தமிழ் பிரிவினைவாத (புலி சார்பு) சக்திகள் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் சுதந்திரமாக வந்து போகவும், தமது நாசகார வேலைகளைத் திரும்பவும் ஆரம்பிக்கவும் வழி சமைத்துக் கொடுத்தது.

அது மாத்திரமின்றி, சில முஸ்லீம் அரசியல் கட்சிகளுக்கு அரசில் உயர் பதவிகளையும், சலுகைகளையும் வழங்கிக் கொண்டு, சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதிகள் அவர்களின் உதவியுடன் நாட்டுக்குள் பயங்கரவாத இயக்கங்களை கட்டி வளர்த்து “ஈஸ்டர் தாக்குதல்” போன்ற பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றுவதற்கு ஐ.தே.க. அரசு ஒத்துழைப்பாக இருந்துள்ளது.

தற்போதைய அரசு பதவிக்கு வந்த பொழுது ஐ.தே.க. செய்த இத்தகைய சீரழிவுகளுடனேயே நாட்டைப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. இத்தகைய சீரழிவுகளை நிவர்த்தி செய்ய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும், அவரது சகோதரர் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசும் பல திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டாலும், அடிப்படையில் நாட்டைப் பொருளாதார ரீதியில் அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கக்கூடிய வகையில் சரியான திட்டங்களைத் தீட்டிச் செயல்படாத வரையில் தற்போதைய அரசும் முன்னேறிச் செல்வது சாத்தியமற்றதே.
இத்தகைய ஒரு நிலைமையில், கொரோனா என்ற கொடிய நோயின் தாக்கம் ஏற்பட்டு நாட்டைப் பல வழிகளிலும் பாதிப்படைய வைத்துள்ளது. ஒரு காலத்தில் பெரும் தோட்ட உற்பத்திகளான தேயிலை, இறப்பர், கோப்பி, கொக்கோ போன்றவற்றையும் தெங்கு உற்பத்திகளையும் அந்நியச் செலாவணி ஈட்டுவதற்கு நம்பியிருந்த இலங்கைப் பொருளாதாரம், 1977இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம் அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக வேறு துறைகளுக்கு மாறியது.

77இற்குப் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட வேலை வாய்ப்புகள் மூலமும், சுதந்திர வர்த்தக நிலையங்களில் உருவான ஆடைத் தொழிற்சாலைகளின் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததின் மூலமும் ஓரளவு அந்நியச் செலாவணியை இலங்கை ஈட்டத் தொடங்கியது. அத்துடன், ஜே.ஆர். அரசாங்கம் தொடங்கிய உள்நாட்டு யுத்தம் காரணமாக பல தமிழர்கள் மேற்கு நாடுகளுக்குச் சென்று அகதி அந்தஸ்துப் பெற்றதால் அவர்கள் இலங்கையிலிருந்த தமது குடும்பத்தவர்களுக்கு அனுப்பிய பணமும் அந்நியச் செலாவணித் தேட்டத்தில் சேர்ந்து கொண்டது. பிற்காலத்தில் இலங்கையில் உல்லாசப் பயணத்துறை பெரும் தொழிலாக வளர்ந்ததால், பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டக்கூடியதாக இருந்தது.

ஆனால் இத்தொழில்கள் யாவும் வெளிநாட்டுச் சந்தைகளையும், சர்வதேசப் போக்குவரத்தையும் நம்பியிருந்ததால், கொரோனா நோய்த் தாக்கம் ஏற்பட்டதும், உலகமே முடங்கிப் போனதால் அதன் தாக்கம் இலங்கையையும் பெருமளவு பாதித்துள்ளது. இந்த நிலைமையில் நாட்டை இயல்பாகக் கொண்டு நடத்துவதற்கு சர்வதேச நிறுவனங்களிடமும், நாடுகளிடமும் மேலும் கடன் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், ஏற்கெனவே பெற்ற கடன்களுக்கு வட்டி செலுத்துவதற்காகவும் மேலும் கடன் பெற வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நாட்டை முற்றாக முடக்கிப் போடுவதுடன், அந்நிய சக்திகளுக்கு நாட்டை அடகு வைக்கும் நிலையையும் நிச்சயமாக உருவாக்கும். இதிலிருந்து எவ்வாறு நாட்டை மீட்டெடுப்பது என்பதே அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் முன்னால் உள்ள பெரும் கேள்வியாகும்.
இலங்கை இன்னமும் ஒரு விவசாய நாடு. எமது நாட்டில் போதிய நில வளமும், நீர் வளமும், கடல் வளமும், போதிய மனித வளமும் உண்டு. இருப்பினும், நாம் இன்னமும் அரிசி உட்பட பல உணவு தானியங்களையும், கடல் உணவுகளையும் இறக்குமதி செய்யும் நிலையிலேயே இருக்கின்றோம். உண்மையில் இந்த உணவு வகைகளை நாம் எமது தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்ய முடியும். அந்த மேலதிக உற்பத்தியை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அதன் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டி, எம்மால் உற்பத்தி செய்ய முடியாத சில அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும். அப்படி இல்லாமல் எம்மால் உற்பத்தி செய்யக் கூடிய உணவுப் பொருட்களையே நாம் இன்னமும் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம் என்றால், எமது பொருளாதாரத் திட்டமிடலில் ஏதோ கோளாறு இருக்கிறதென்றே அர்த்தம்.

எனவே, தற்போதைய அரசாங்கம் முதலில் உணவில் தன்னிறைவு பெறுவதற்கான இலக்கை நிர்ணயித்துச் செயல்பட வேண்டும். அதன் பின்னர் அப்பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான இலக்கை எட்ட வேண்டும். அது மட்டுமின்றி, எமது பாரம்பரிய ஏற்றுமதி பொருட்களான பெருந்தோட்ட உற்பத்திகளை பெருக்கும் வகையில் நவீன உத்திகளைக் கையாண்டு அவற்றின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அத்துடன் தைத்த ஆடைகள் உற்பத்தி, இரத்தினக்கல் ஏற்றுமதி, வாசனைப் பொருட்கள் ஏறறுமதி, ஆயுர்வேத மருந்து உற்பத்தி, துறைமுக சேவைகள், பெரிய – சிறிய தொழிற்சாலைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி சகல துறைகளிலும் உற்பத்தியைப் பெருக்கி, நாட்டை தன்னிறைவான நிலைக்குப் படிப்படியாகக் கொண்டு செல்வதற்கு முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே நாட்டை படிப்படியாக அந்நியக் கடன்களிலிருந்து விடுவிக்க முடியும்.

உதாரணமாக, எமது நாட்டின் பொருளாதார நிலையை விளக்க ஒரு விடயத்தைக் குறிப்பிடலாம். சீனா எமது மிக நெருங்கிய நட்பு நாடு. பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நெருக்கடியான தருணங்களில் இலங்கைக்கு உதவிய – உதவுகின்ற நாடு. ஆனால் எமது இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் சமமாக இருக்கின்றதென்றால், இல்லை என்பதே பதில். 2019இல் இலங்கை சீனாவுக்கு ஏற்றுமதி செய்த பொருட்களின் பெறுமதி 229 மில்லியன் டொலர்கள். ஆனால் சீனாவிடமிருந்து இலங்கை இறக்குமதி செய்த பொருட்களின் பெறுமதி 4 பில்லியன் (400 மில்லியன்) டொலர்கள்!

இந்த நிலையை எட்டுவதற்கு உள்நாட்டில் மக்கள் சமாதானமாகவும், மன நிம்மதியாகவும் வாழக்கூடிய சூழல் இருக்க வேண்டும். உள்நாட்டில் குழப்ப நிலையைத் தோற்றுவித்திருந்த 30 வருடகால யுத்தத்துக்கு 2009இல் வெற்றிகரமாகத் தீர்வு கண்டது இன்றைய அரச தலைவர்கள் அன்று நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த அளப்பரிய சேவை என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால் போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்தப் போர் உருவாவதிற்குக் காரணமாய் அமைந்த இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் பழைய நிலையிலேயே அப்படியே தொடர்கிறது. போரை முடித்தவர்கள் என்ற வகையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய கடமையும் இன்றைய அரச தலைவர்களுக்கு உண்டு. நாட்டில் சிறுபான்மை இன மக்களைப் புறக்கணித்து வைத்துக்கொண்டு, இன ஐக்கியம் நிலவாத ஒரு சூழ்நிலையில் பொருளாதார அபிவிருத்தி என்பது நினைத்தும் பார்க்க முடியாத விடயமாகும்.

இந்த விடயத்தில் வண்டிக்கு முன்னால் மாடுகளைப் பூட்டுவதா அல்லது மாடுகளுக்கு முன்னே வண்டியைப் பூட்டுவதா என்ற ஒரு தர்க்கத்தில் அரச தலைவர்கள் இருப்பதாகத் தெரிகிறது. பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தினால் இனப்பிரச்சினை தானாகத் தீர்ந்துவிடும் என அரச தலைவர்கள் கருதுகிறார்கள். அது தவறான கருத்தோட்டம். அவர்கள் கருதும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதற்கே முதலில் இனப்பிரச்சினை தீர்கப்பட்டு நாட்டில் இன ஒற்றுமையும் சமாதானமும் நிலவ வேண்டும் என்பது முக்கியமானது என்பதை முதலில் அரச தலைவர்கள் உணர்வது அவசியமானது.

Source: vaanavil 118

No comments:

Post a comment

Biden’s Drone Wars BY BRIAN TERRELL

  On Thursday, April 15, the   New York Times   posted an  article   headed, “How the U.S. Plans to Fight From Afar After Troops Exit Afghan...