மாகாண சபைகளுக்கான தேர்தல் உடன் நடத்தப்பட வேண்டும்!


2020 ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கையில் ராஜபக்சாக்கள் தலைமையிலான மிகவும் பலம் வாய்ந்த அரசாங்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இப்படியான ஒரு பலமான அரசாங்கம் அமையும் என இலங்கை மக்கள் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தாலும், ராஜபக்சாக்கள் இவ்வளவு பெரிய வெற்றியை ஈட்டுவார்கள் என மேற்கு நாடுகள் ஏன் அயல் நாடான இந்தியா கூட எதிர்பார்த்திருக்கவில்லை.
2015இல் மேற்கு நாடுகள் முன்னின்று இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் வரை, மகிந்த ராஜபக்ச தலைமையில் இருந்த அரசுக்கெதிராக சர்வதேச அரங்கில் பலவிதமான பாரதூரமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்ததுடன், அதன் அடிப்படையில் தன்னிச்சையாக நடவடிக்கை எடுப்பதில் முனைப்பும் காட்டின. அவற்றின் அந்த செயல்பாடுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவும் வழங்கின.
2015இல் ஐ.தே.க. தலைமையில் அமைந்த அரசுக்கு மேற்கு நாடுகள் தமது பூரண ஆதரவை வழங்கியதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. ஆனால் மேற்கு நாடுகளின் செயல்பாடுகளையும், ஐ.தே.க. தலைமையிலான நான்கரை ஆண்டுகால ஆட்சியையும் இலங்கை மக்கள் ஏற்கவில்லை என்பதை கடந்த வருடம் நொவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவும், இவ்வாண்டு ஓகஸ்ட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் எடுத்துக் காட்டிவிட்டன.
அதேபோல ஐ.தே.க. ஆட்சிக் காலத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த அரசுடன் கூடிக்குலாவி வந்ததை தமிழ் மக்களும் ஏற்கவில்லை என்பதையும் இந்தத் தேர்தல் முடிவு எடுத்துக் காட்டிவிட்டது.
இத்தகைய ஒரு சூழ்நிலையில் இலங்கை மக்கள் அளித்த தேர்தல் தீர்ப்புகளை ஏற்றுக்கொண்டு மேற்கு நாடுகள் அமைதியாக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதேபோல ஐ.தே.கவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வாளாவிருப்பார்கள் எனவும் எதிர்பார்க்க முடியாது.
குறிப்பாக, ராஜபக்சாக்கள் அரசு சீனாவுக்கு சார்பானது என்ற கருத்து மேற்கு நாடுகளிடமும் இந்தியாவிடமும் எப்போதும் உண்டு. எனவே அதை வைத்துக்கொண்டு மேற்கு நாடுகள் ராஜபக்சாக்கள் அரசுக்குத் தொல்லை கொடுப்பதற்காக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மீண்டும் ‘போர்க்குற்றம்’ சம்பந்தமான பிரச்சினையைக் கிளற முற்படலாம். மனித உரிமைப் பிரச்சினையை கையில் எடுக்கலாம். எனவே இலங்கை அரசு தனது அயலுறவு கொள்கையில் அவதானமாகச் செயல்படுவது அவசியமானது. அணிசேராக் கொள்கையை உறுதியாகக் கடைப்பிடிப்பதன் மூலமே இந்தப் பிரச்சினையைச் சரியாகக் கையாள முடியும்.
அதேநேரத்தில், நான்கரை ஆண்டுகளாக ஐ.தே.க. அரசுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியும் தமிழ் மக்களின் ஒரு சாதாரண பிரச்சினையைக் கூட அந்த அரசைக் கொண்டு தீர்த்து வைக்க லாயக்கில்லாமல் போன தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மீண்டும் தனது பழைய பல்லவியை பாட ஆரம்பிக்கலாம். அதாவது, ராஜபக்சாக்களின் அரசு தமிழர்களுக்கு எதிரானது, சிங்கள இனவாத அரசு எனக் கூப்பாடு போடுவார்கள்.
ஏற்கெனவே அதற்கான முன்னேற்பாடுகளைக் கூட்டமைப்பினர் ஆரம்பித்துவிட்டனர். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் அது பற்றி கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பொதுஜன பெரமுனவின் வெற்றி பணம் கொடுத்தும் சாராயம் கொடுத்தும் பெறப்பட்ட வெற்றி என ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். மற்றைய பிரதான கட்சிகளான ஐ.தே.கவோ, ஜே.வி.பியோ, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளோ சொல்லாத ஒரு குற்றச்சாட்டை சம்பந்தன் கண்ணை மூடிக்கொண்டு சொன்னதின் மூலம் இலங்கை மக்களின் ஜனநாயகச் செயல்பாட்டை சம்பந்தன் மிக மோசமாகக் கொச்சைப்படுத்தி இருக்கிறார். இப்படி பச்சைப் பொய் சொன்னவர்கள் எதிர்காலத்தில் அரசுக்கெதிராக என்னென்ன பொய்ப் பிரச்சாரங்களைச் செய்வார்கள் என்பது சொல்லத் தேவையில்லை.
கூட்டமைப்பினரின் ஆயுதம் வழமைபோல இனப்பிரச்சினையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதையும் அவர்கள் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டனர். மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வல்ல என்று சொல்லும் தமிழ் தேசியவாதிகள், இப்பொழுது வேறு வகையான பொய்ப் பிரச்சாரம் ஒன்றைச் செய்கின்றனர். அதாவது, அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள 20ஆவது திருத்தத்தில் 13ஆவது திருத்தத்தை இல்லாதொழித்து, அதன் மூலம் மாகாண சபைகளை இல்லாமல் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தமிழ் தேசியவாதிகள் சிலர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளதால் தமிழ் தேசியவாதிகளின் பிரச்சாரம் பிசுபிசுத்துப் போய்விட்டது. ஆனாலும் அரசாங்கம் இந்த விடயத்தில் ஆக்கபூர்வமாகச் செயல்படுவது அவசியம். அதாவது அரசாங்கம் அறிவித்துள்ளபடி மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்.
ஏனெனில் தமிழரசுக் கட்சி நீண்ட காலமாக இனப் பிரச்சினைக்குத் தீர்வாக சமஸ்டி முறையை வலியுறுத்தி வந்தது. பின்னர் 1976இல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூட்டி தமிழர்களின் பிரச்சினைக்கு தனிநாடுதான் தீர்வு எனத் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் 2009 மே மாதம் வரை நடைபெற்று தோல்வியில் முடிந்தது.
மறுபக்கத்தில் இனப் பிரச்சினைத் தீர்வுக்காக இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் 1957 முதல் பல ஒப்பந்தங்களும் செய்யப்பட்டன. ஆனால் எந்தவொரு ஒப்பந்தமும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலைமையில்தான் இந்திய அரசின் நிர்ப்பந்தத்தால் 1987இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட்டு, அதன் அடிப்படையில் இலங்கை அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் மாகாண சபைகள் அமைக்கப்பட்டு இயங்க ஆரம்பித்தன. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் இந்த ஒப்பந்தம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கின்றது.
இந்த ஒப்பந்தம் இலங்கைத் தமிழர்களின் அபிலாசைகளை முழுமையாக பிரதிபலிக்காவிட்டாலும், தமிழர்களின் பல தேவைகளை நிறைவேற்றக்கூடிய ஒன்றாக இருப்பதுடன், நிரந்தரத் தீர்வு ஒன்றை நோக்கிச் செல்வதற்கான அடிப்படையாகவும் இருக்கின்றது. எனவே மாகாண சபை முறைமையைப் பாதுகாப்பதும், அதை வளர்த்துச் செல்வதும் முக்கியமானதாகும்.
இந்த விடயத்தில் இலங்கை அரசுக்கு ஒரு முக்கியமான ஒரு கடமை உண்டு. அதாவது விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதுடன், மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்களையும் குறித்துரைக்கப்பட்டபடி வழங்க வேண்டும்.
ஏனெனில், சமஸ்டி கோரி, பின்னர் தனிநாடு கோரிய தமிழர்களுக்கு, மாகாண சபைகளினூடாகத்தன்னும் அதிகாரங்களைப் பங்கிட்டளிக்காவிடின், அவர்களது எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துவிடும். அப்படி ஏமாற்றம் ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு மீண்டும் தனிநாட்டுக்கான சிந்தனை ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி இனிமேல் ஏற்பட வாய்ப்பில்லை என யாராவது வாதிட்டால், அது மக்களின் உளவியலை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம்.
எனவே, நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்கி, அதனால் மீண்டும் நாட்டில் பேரழிவு ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமானால் அரசாங்கத்துக்கு முன்னால் தற்போதைக்கு இருக்கக்கூடிய ஒரே வழி, மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைந்து நடத்துவதும், அவற்றுக்கான அதிகாரங்களை இனியும் கால தாமதம் செய்யாமல் வழங்குவதும்தான்.
தேர்தல் வெற்றி என்ற மமதையில் இறுமாந்து அரசாங்கம் நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்றான தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கு கவனம் செலுத்தாமல் இருக்குமானால் அது இறுதியில் விபரீதத்தில் போய் முடியலாம். எனவே, அரசாங்கம் சரியான திசை வழியில் தீர்க்கதரிசனத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுவது அவசியம்
Source: Vaanavil 116-2020

No comments:

Post a Comment

UK Tory Party threatens war against Russia, prepares class war at home By Thomas Scripps

  Warning Russian President Vladimir Putin of “what could be a very, very bloody war”, UK Defence Secretary Ben Wallace announced yesterday ...