முடிவற்றஅரசியலமைப்பு அரசியலமைப்புத்திருத்தங்களும் தீராத பிரச்சனைகளும்

  
1978 செப்டம்பர் 7 இல் அறிவிக்கப்பட்ட இலங்கையின் புதி 1978 ய
அரசமைப்புச் சட்டத்தில் இன்னுமொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில், புதிய அரசாங்கம் அவசர அவசரமாக களமிறங்கியுள்ளது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி நிறுவப்பட்டு, நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறுவதற்கு முன்னரே, 19ஆவது திருத்தத்தை நீக்கும் உத்தேச 20ஆவது திருத்தச்
சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான அமைச்சரவை அனுமதி
பெறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டிற்கும் அரசியலமைப்பு என்பது அனைத்துச்
சட்டங்களுக்கும் அடிப்படையானது. ஏனெனில் அதுவே முழுமையாக ஒரு அரசினை செயற்படுத்தும் கருவியாக இருப்பதோடு, ஒவ்வொரு அரசும் முழு நாட்டையும் ஆட்சி செய்வதற்கு ஏற்றவகையில் ஒற்றையாட்சி அல்லது சமஷ்டியாட்சி அரசியலமைப்பாகவும் அமைந்துள்ளது. இதன்படி இலங்கையில் இதுவரையில் ஏற்படுத்தப்பட்ட சகல அரசியலமைப்புகளும்
திருத்தங்களும் ஒற்றையாட்சித் தன்மையையே கொண்டுள்ளன.




இலங்கை ஏறத்தாள 450 வருட காலம் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டு இருந்தது. இதில் 150 வருடங்கள் பிரித்தானியாவின் கீழ் இருந்தது. பிரித்தானியா ஆட்சி செய்த காலத்தில் இலங்கையில் முறையே 1833, 1910, 1921, 1924, 1931, 1947 ஆண்டுகளில் பல்வேறு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள்
முன்வைக்கப்பட்டன. 1931 இல் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு டொனமூர் அரசியலமைப்பு எனப்படுகின்றது. இறுதியாக 1947 இல் சோல்பரி அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்டு சுதந்திரத்தை வழங்குவதற்காக இலங்கைச் சுதந்திரச் சட்டம் அமுலுக்கு வந்தது.


பிரித்தானியப் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டு 1947ஆம் ஆண்டு
டிசம்பர் 3 ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தின்
முன்வைக்கப்பட்ட சோல்பரி அரசியலமைப்பினால், 1948 ஆம் ஆண்டு
பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் இலங்கை சுதந்திர நாடாகப்
பிரகடனப்படுத்தப்பட்டது. இச்சட்ட மூலம் இலங்கை தொடர்பாகப்
பிரித்தானியப் பாராளுமன்றம் பெற்றிருந்த ஆணையிடும் சட்டங்களைப்
பிறப்பிக்கும் அதிகாரங்கள் இழக்கப்பட்டன,

அதேவேளை இலங்கைப் பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டன. இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியலமைப்பும், அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பும் அப்போதைய ஆட்சியாளர்களான ஸ்ரீல.சு.க வாலும் ஐ.தே.க வாலும் கொண்டு வரப்பட்டன. இவ்வாறு 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கையின் அரசியலமைப்பு
இன்றுவரையிலும் இலங்கையில் நடைமுறையில் இருந்தாலும், இது
இன்னமும் பல்வேறு குறைபாடுகளையும் நெருக்கடிகளையும் கொண்ட
அரசியலமைப்பாகவே காணப்படுகின்றது. அதனால் 1979 பெப்ரவரியில்
முதலாவது திருத்தத்துடன் ஆரம்பித்த தற்போதைய அரசிலமைப்பு,
2015 இல் 19வது திருத்தத்தைக் கண்டுள்ளது.

இதில் 1987 இல் 13வது திருத்தச்சட்டம், இலங்கை-இந்திய ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்டு, இலங்கையில் மாகாணசபை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இறுதியாகக் கொண்டுவரப்பட்டது 19வது திருத்தச்சட்டம். இது 18ஆவது திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட ஜனாதிபதி ஒருவர் எத்தனை தடவையும் பதவி வகிக்கலாம் என்பதை செயலற்றதாக்கி, மீண்டும் இரண்டு பதவிக் காலங்களுக்கு மட்டுமே ஜனாதிபதி ஒருவர் பதவி வகிக்க முடியுமென 1978 இன் பழைய ஏற்பாடுகளை மீளக் கொண்டு வந்துள்ளது. மேலும் இத்திருத்தம் ஜனாதிபதியின்
பதவிக்காலத்தைக் குறைத்ததோடு, நாடாளுமன்றத்தைக்
கலைப்பதிலும் கட்டுப்பாடுகளை விதித்தது. எனினும் 19ஆவது திருத்தம்
ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பெரிதளவில் குறைத்திருக்கின்றது
என்று சொல்ல முடியாது.

19ஆவது திருத்தத்தின் முதல் வரைபுகளில் ஜனாதிபதியின் சில
அதிகாரங்களைப் பிரதமர் பிரயோகிப்பதற்கான ஏற்பாடுகள்
சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால், இவற்றை நிறைவேற்றுவதற்கு பொதுசன
வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை உயர் நீதிமன்றம்
தீர்பளித்திருந்ததால், இந்தப் பிரிவுகளும் இறுதியில் திருத்தத்தில்
இடம்பெறவில்லை. இதுதவிர, 17ஆவது திருத்தம் மூலம் கொண்டு
வரப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் என்பதனை
நடைமுறைப்படுத்தும் வகையிலான சரத்துக்கள், 19ஆவது
திருத்தத்திலேயே உள்வாங்கப்பட்டன.

‘நல்லாட்சி’ என்று அழைக்கப்பட்ட கடந்த ஆட்சியில், ராஜபக்ஷ
குடும்பத்தினருக்கு எதிரானதாகவே 19ஆவது திருத்தத்தில் சில
விடயங்கள் உள்ளடக்கப்பட்டதென்ற பரவலான அபிப்ராயம்
நிலவுகின்றது என்பதை மறுக்க முடியாது. பொதுஜன பெரமுன பதவிக்கு
வந்தால், 19வது திருத்தம் இரத்துச் செய்யப்பட்டு, 20வது திருத்தம்
கொண்டு வரப்படும் என்பதை தேர்தல் பரப்புரையாக முன்வைத்தே
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளது.

சுதந்திரமடைந்ததிலிருந்து இலங்கையின் அரசியலின் கணிசமான
பகுதி, புதிய அரசியலமைப்புகள் மற்றும் திருத்தங்கள் தொடர்பில்
விவாதிப்பதிலும், ஏட்டிக்குப் போட்டியாக அவற்றினை
உருவாக்குவதிலேயுமே கழிந்துள்ளது. அரசியலமைப்பின்
உருவாக்கங்களின் போதும், பின்னர் ஏற்படுத்தப்படுகின்ற திருத்தங்களின்
போதும், ஆட்சி புரிவதிலுள்ள பிரச்சினைகளே அடிப்படைக்
காரணங்களாக உள்ளன என நியாயப்படுத்தப்பட்ட போதிலும், இந்த
மாற்றங்களின் போது ஆளுங்கட்சிகளின் எதிர்கால நலன்களும் கருத்தில்
எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதை மறுப்பதற்கில்லை. இதனால்
செப்டெம்பர் மாத நடுப்பகுதியில், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென
எதிர்பார்க்கப்படுகின்ற 20ஆவது திருத்தத்தில், தற்போதைய
ஆட்சியாளர்கள் என்னென்ன விடயங்களில், தங்களுக்கு சார்பான
மாற்றங்களை ஏற்படுத்தப்படுத்தப் போகின்றார்கள் என்ற கேள்வியும்
எதிர்பார்ப்பும், பரவலாக எழுந்துள்ளது.

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ
முதலாவது பாராளுமன்ற அமர்வில் கூறியது நாட்டில் தற்பொழுது பலத்த
சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லின மக்கள் வாழும் நாட்டில்
ஒவ்வொரு சமூகமும் தனித்தனியாக தமது உரிமைகளை அனுபவித்து
வந்த நிலை இதனால் இல்லாமல் போகிறது என்ற வாதம் ஒரு புறமும்,
நாட்டின் நலனுக்கு ஒரே சட்டம் இருப்பதே நன்மையானது என்ற
எதிர்வாதம் மறுபுறமும் வைக்கப்படுகின்றது.

இலங்கையின் இனப்பிரச்சனை உட்பட ஏராளமான பிரச்சனைகள்
உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. ஆனால்
அவற்றிற்கு முன்னுரிமை கொடுக்காது, இலங்கையில் அதிகாரத்திற்கு
வருபவர்கள் சட்ட திருத்தங்களிலேயே அதிக பிரயத்தனங்களை
மேற்கொள்ளுகின்றனர். அப்படியிருந்தும், இலங்கையில் வாழும் சகல
மக்களினதும் அபிலாசைகளையும் எண்ணங்களையும் நிவா;த்தி செய்யும்
வகையிலான அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்கி
நடைமுறைப்படுத்துவது என்பது இதுவரையில் தொடர்ந்தும்
சாத்தியமற்றதொன்றாகவே இருந்து வருகின்றது என்பதே வரலாறாகவும்
உள்ளது.

Source; Vaanavil 116-2020

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...