ஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா? (1)


பிரதீபன்
(பகுதி – 1)


“சுற்றிச்சுற்றி சுப்பற்றை கொல்லைக்குள்ளே” அல்லது “பழைய குருடி கதவைத் திறவடி” என்பது போல, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை மீண்டுமொருமுறை ஐக்கிய தேசியக் கட்சியிடம் சோரம் போயுள்ளது. 2019 நொவம்மர் 16இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.க. சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்குவது என்ற துரோகத்தனமான, வெட்கக்கேடான முடிவை எடுத்திருக்கிறது.
ஏற்கெனவே அவர்கள் இந்த முடிவை எடுத்திருந்தாலும், தமிழ் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு பல விதமான – பலகட்ட நாடகங்களை நடத்திவிட்டே தமது முடிவை அறிவித்திருக்கின்றனர்.
முதலில் சொன்னார்கள், “எல்லா கட்சிகளும் தமது வேட்பாளர்களை அறிவித்த பின்னர்தான் யாரை ஆதரிப்போம் என முடிவு செய்வோம்” என்று.
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்பு சொன்னார்கள், “பிரதான கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்ட பின்னர் அவற்றை ஆராய்ந்து பார்த்துத்தான் யாரை ஆதரிப்பது என முடிவு செய்வோம்” என்று.
இதற்கிடையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் கட்சிகளின் கூட்டமொன்றைக் கூட்டினார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றைய கட்சிகளுடன் உடன்படாமல் இடைநடுவில் வெளியேறிச் சென்றுவிட்டது.
இந்த நிலைமையில் பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த 13 அம்சக் கோரிக்கைளை ஏற்று மிகுதி ஐந்து கட்சிகளான தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் என்பனவும், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். என்பனவும் கைச்சாத்திட்டன.
இந்த 13 அம்சக் கோரிக்கை என்பது தமிழ் தலைமைகள் வழமையாக அரைத்து வரும் தாயகம், தன்னாட்சி உரிமை, சுய நிர்ணயம் என்பனவற்றின் சாராம்சம்தான். இந்தக் கோரிக்கைகளை எந்தவொரு தென்னிலங்கை கட்சியும் ஆதரிக்காது எனறு தெரிந்து கொண்டே அவை முன்வைக்கப்பட்டன.
இருந்தும் தாம் கொள்கை பிசகாத குன்றிமணிகள் என்பது போல, இந்த கோரிக்கைகளை ஏற்றுப் பேச்சுவார்த்தை நடத்துபவர்களைத்தான் ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்போம் என இந்தக் கட்சிகள், குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் சபதம் செய்து கொண்டனர். தமிழ் பொதுமக்களும் இவர்களது ‘உறுதிப்பாட்டை’க் கண்டு வியப்படைந்ததுடன், இந்த ‘அதிசயத்தை’ மகிழ்ச்சியுடன் ஆதரிக்கவும் முன் வந்தனர்.
ஆனால் இவர்கள் முன் வைத்த 13 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தக் கட்சியும் திரும்பியும் பார்க்கவில்லை.
இந்தச் கூழ்நிலையில், ஐந்து கட்சி கூட்டில் விரிசல் ஏற்பட்டு, தமிழ் மக்கள் கூட்டணியும், ஈ.பி.ஆர்.எல்.எப்பும் பிரிந்து சென்றுவிட, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிகள் தமக்குள் கூடி தமது கோரிக்கைகளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு கட்சியும் ஆதரிக்காததால் தாம் எவருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை எனவும், தமிழ் மக்கள் தமக்கு விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் எனவும் அறிவித்தனர். இந்த முடிவையும் தமிழ் மக்கள் வரவேற்றனர். ஒருநாளும் இல்லாத அதிசயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருந்திவிட்டதோ என அவர்கள் எண்ணினர்.
ஆனால் தமது முடிவையிட்டு இரண்டு நாட்களாக நித்திரையில்லாமலும், நிம்மதியில்லாமலும் தவித்த தமிழரசுக் கட்சி தலைமை (சம்பந்தன் – சுமந்திரன் – மாவை கூட்டு) திடீரென தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம் என்ற ஒரு கூட்டத்தைக் கூட்டி தாம் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதாக அறிவித்தனர்.
இதனால் கூட்டமைப்பின் மற்றைய இரு பங்காளிக் கட்சிகளான ரெலோவும் புளொட்டும் தாம் என்ன நிலைப்பாடு எடுப்பது என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களையும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான நிலை எடுக்க வைப்பதற்காக ஐ.தே.க. தரகர் சுமந்திரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்டு அந்த இரு கட்சிகளுடனும் பேச வைத்து அவர்களையும் தமது முடிவுக்கு சம்மதிக்க வைத்தனர்.
இங்கு குறிப்பிட வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில், தமது 13 அம்சக் கோரிக்கைகளை ஏற்பவர்களுக்குத்தான் ஆதரவு என்று சொன்னவர்கள், அது சாத்தியப்படாமல் போக தாம் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை, ஆனால் தமிழ் மக்கள் தமக்கு விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் என்று சொன்னவர்கள், திடீரென தமது முடிவை மாற்றி சஜித்துக்கு ஆதரவு தெரிவித்ததின் பின்னணி என்ன?
இந்த முடிவுக்கு இவர்கள் வந்ததிற்கு வர்க்க அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் வழமையாக ஐ.தே.கவுக்கு சார்பாக செயற்பட்டு வந்ததின் பழக்க தோசமா அல்லது மிகவும் கனதியான பணப்பெட்டிகளின் பரிமாற்றமா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் நிபந்தனை ஏதுமின்றி ஐ.தே.க. நிறுத்திய ‘பொது வேட்பாளரை’ ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அதன் பின்னரான நான்கு வருடங்களுக்கும் மேற்பட்ட காலத்தில் ரணில் தலைமையிலான ஐ.தே.க. அரசுக்கு முண்டு கொடுத்து வந்திருக்கிறது. அவர்களது நிலைப்பாட்டை மக்கள் ஏற்கவில்லை என்பதை கடந்த வருடம் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கிச் சரிவு எடுத்துக் காட்டியது. தற்போதைய முடிவால் கூட்டமைப்பின் வாக்கு வங்கி இன்னும் கூடுதலாகச் சரியும் என்ற நிலை இருக்கின்ற போதிலும், தமக்கு என்ன இழப்பு வந்தாலும் ஐ.தே.கவை காப்பாற்ற வேண்டும் என்ற துடிதுடிப்பில்; ஐ.தே.க. விசுவாசிகளான சுமந்திரனும், சம்பந்தனும் இந்தத் துரோக விளையாட்டில் இறங்கியுள்ளனர்.
ஆனால் இவர்களது இந்த முடிவை தமிழ் மக்கள் இம்முறை கண்ணை மூடிக்கொண்டு ஏற்பார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
(தமிழ் தலைமைகள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.தே.கவுடன் நடத்திய கூடிக்குலாவல்கள் பற்றிய விபரத்தை அடுத்து வரும் தொடரில் பார்ப்போம்)

மூலம்: சக்கரம்.காம் .

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...