புதிய ஜனாதிபதிக்கு முன்னால் உள்ள அவசர பணிகள்!


இலங்கையின் 7ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக 2019 நொவம்பர் 16ஆம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். புதிய ஜனாதிபதிக்கு சம்பிரதாய அடிப்படையிலும் மரியாதை நிமித்தமாகவும் ‘வானவில்’ சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்தத் தேர்தலில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் கோத்தபாயவை ஆதரித்து வாக்களித்திருக்கின்றனர். அதேநேரம் வடக்கு கிழக்கிலும், மலையகத்தின் நுவரெலிய பகுதியிலும் வாழும் தமிழ் – முஸ்லீம் மக்களில் பெரும்பாலோர் கோத்தபாயவுக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.






இப்படியான ஒரு நிலைமை உருவாக பிரதான காரணம், கோத்தபாயவுக்கு எதிராக சிறுபான்மை இன மக்கள் மத்தியில் சில இனவாத அரசியல் சக்திகளால் செய்யப்பட்ட அளவுக்கு அதிகமான பொய்யான, பீதியூட்டும் பிரச்சாரங்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எது எப்படியிருப்பினும், அடுத்த 5 வருடங்களுக்கு கோத்தபாயவே நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதியாக இருக்கப் போகின்றார். இந்த யதார்த்த சூழ்நிலையில் தவிர்க்க முடியாமல் நாட்டு மக்கள் அனைவரும், சகல அரசியல் கட்சிகள் உட்பட அவருடனேயே தமது விவகாரங்களைக் கையாளவேண்டி இருக்கும். எனவே அவருக்கு எதிராகப் போட்டியிட்டவர்களும், அவருக்கு எதிராக கீழ்தரமான பிரச்சாரம் மேற்கொண்டவர்களும் கூட, அதற்கு ஏதுவாக தம் நிலைப்பாட்டை தகவமைத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

இது ஒருபுறமிருக்க, புதிய ஜனாதிபதி கோத்தபாய முன்னால் முக்கியமான பல பணிகள் காத்துக் கிடப்பதைச் சுட்டிக் காட்டுவதும், அவற்றுக்கு சரியானதும், துரிதமானதுமான தீர்வுகளை காண வேண்டுமென வலியுறுத்துவதும் எமது கடமையாகும்.




அப்படிப் பார்க்கையில், நாட்டின் இறைமை, பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம், சிறுபான்மை இன மக்களின் நலவுரிமைகள் என்ற நான்கு விடயங்களும் மிக முக்கியமான விடயங்கள் என நாம் இனம் காண்கின்றோம்.

2015இல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் கீழ் அரசாங்கம் ஏற்பட்ட பின்னர், நாட்டின் இறைமை பெரும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. இலங்கை பிரிவினைவாத பயங்கரவாதத்துக்கு எதிராக நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தை சிறுமைப்படுத்தும் வகையிலும், நாடு தனது யுத்த காயங்களை குணப்படுத்திக் கொண்டு பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைவதைத் தடுக்கும் வகையிலும், மேற்கத்தைய சக்திகளாலும், அவையின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.நா. போன்ற நிறுவனங்களாலும் பல தடைகள் போடப்பட்டன.

இந்தத் தடைகளுக்கு கடந்த ஐ.தே.க. அரசாங்கமும் அதன் மேறகத்தைய சார்பு போக்குக் காரணமாக உடன்பட்டு செயற்பட்டது. அதனால் உலக அரங்கில் நமது நாட்டின் பிம்பம் பாதிப்புக்குள்ளானது. அதன் காரணமாக உலக அரங்கில் நாம் பல உண்மையான நண்பர்களையும் இழந்தோம். எனவே புதிய அரசு இந்த நிலைமையை மாற்றி அமைத்து, நாட்டின் நிலையை சீர்செய்ய வேண்டும். குறிப்பாக, நமது நாடு அணிசேரா இயக்கத்தின் 13 ஸ்தாபக நாடுகளில் ஒன்று என்ற வகையில் நாம் மீண்டும் எமது வெளியுறவுக் கொள்கையை உறுதியான அணிசேராக் கொள்கையாக மாற்றி அமைக்க வேண்டும்.




அதேநேரத்தில், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பொறுத்தவரையிலும் பெரும் அவலமான நிலையே காணப்படுகின்றது. அதன் கோரமான வடிவத்தை கடந்த ஈஸ்டர் தினத்தன்று நாட்டின தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட குண்டு வெடிப்புகளும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் எடுத்துக்காட்டின.

அதற்குக் காரணம், கடந்த அரசாங்கம் ஜனநாயகத்தை நிலைநாட்டுகிறோம் என்ற போர்வையில் வெளிநாட்டு சக்திகளின் ஆலோசனைகளுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பைப் பலவீனப் படுத்தியமையாகும்.

அதன் காரணமாக, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட சூழ்நிலையிலும் கூட, ஒரு பக்கத்தில் நாட்டின் மூவின மக்கள் மத்தியிலுமிருந்த இனவாத சக்திகள் மேழுந்து வந்து தமது ஆட்டத்தை நடத்தத் தொடங்கின. இன்னொரு பக்கத்தில் போதைவஸ்து வியாபாரிகளும், பாதாள உலக கும்பல்களும் நாட்டை ஆளும் நிலைக்கு வளர்ந்தனர். நாட்டை ஆட்சி செய்தவர்களே ஊழல் பேர்வழிகளுடன் சேர்ந்து நாட்டின் நிதி வளங்களைக் கொள்ளையடிக்கும் நிலைமையும் உருவானது.




எனவே, இத்தகைய நிலையை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுடன், வருங்காலத்தில் அவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு காத்திரமான, இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, நாட்டின் எப்பகுதியிலேனும் இன வன்செயல்கள் ஏற்படாமல் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஏனெனில், தோல்வியடைந்த அரசியல் சக்திகள் இனவாதத்தையே தமது மலினமான வழிமுறையாகப் பயன்படுத்த முனைவர்.

நாட்டின் பொருளாதார நிலைமையும் சீர்செய்யப்பட வேண்டும். கடந்த அரசாங்கத்துக்கு தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் திட்டமெதுவும் இருக்கவில்லை. அந்த அரசு நாட்டின் உற்பத்தியை விவசாயம் சார்ந்தும், கைத்தொழில் சார்ந்தும், திறமையான அறிவியல் மற்றும் முகாமைத்துவம் சார்ந்தும் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, நாட்டின் வளங்களை அந்நியருக்கு மலிவு விலையில் விற்பனை செய்து அதன் மூலம் அரசைக் கொண்டு நடத்த முனைந்தது.

இந்த நிலைமை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும். இன்று விவசாயம் செய்தால் நஸ்டமடைய வேண்டிவரும் எனக் கருதி பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்வதைக் கைவிட்டு வருகின்றனர் அதனால் நாமே விளைவிக்கக்கூடிய உணவுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்காக நாடு பெருமளவு அந்நிய செலாவணியை செலவிட வேண்டியுள்ளது. எனவே மானிய விலையில் நிலம் பண்படுத்தல், விதைகள், உரம், கிருமிநாசினி என்பன வழங்குவதன் மூலமும், விவசாயிகளது உற்பத்திகளுக்கு நியாயமான விலைகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலமும், விவசாயிகளுக்கு மீண்டும் விவசாயத்தில் ஊக்குவிப்பை ஏற்படுத்தி, உணவில் தன்னிறைவு காண்பதற்கான நாடு தழுவிய தேசிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.




அதேவேளையில், நாட்டின் கைத்தொழிலும் முடங்கிப்போய் உள்ளது. பெரும்பாலான பெரிய சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. உதாரணமாக, யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் ஆகியும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை போன்ற பெரும் தொழிற்கூடங்கள் இன்னமும் புனரமைக்கப்படவில்லை.

எனவே, தற்பொழுது இயங்காதிருக்கும் தொழிற்சாலைகளை இயங்க வைப்பதுடன், வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்கும் வகையில் கூட்டு முதலீட்டுத் திட்டங்களையும் ஆரம்பிப்பது அவசியம்.

அதேநேரத்தில், நாடு கடந்த காலத்தில் எதிர்நோக்கிய, தற்பொழுதும் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை சிறுபான்மை இனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அவை உரிய முறையில் தீர்க்கப்பட்டிருந்தால் நாடு எதிர்நோக்கிய யுத்தத்தைக்கூட தவிர்த்திருக்கலாம்.

குறிப்பாக, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பது அவசியம். ஒரு புதிய அரசியல் அமைப்பை வரைவதன் மூலம் இதைச் செய்யலாம். அதற்கு முன்னதாக தற்போது அரசியல் அமைப்புரீதியாக கைவசம் இருககும் மாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் சிறுபான்மை இன மக்களின் சில அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கலாம். இலங்கை போன்ற இனங்கள் பரவி வாழும் ஒரு சிறிய நாட்டுக்கு சமஸ்டி முறையை விட மாகாண சபை முறை சிறந்த தீர்வாகும். மாகாண சபை முறை நாட்டின் இறைமையையும் ஒற்றையாட்சியையும் பாதுகாக்கின்ற அதேநேரத்தில், இனங்களுக்கும் பிரதேசங்களுக்கும் ஒருமித்து அதிகாரப் பகிர்வை வழங்கும் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்ததொரு முறையாகும்.




தற்பொழுது உள்ள நிலையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக உடனடியாக தீர்வுகாணப்பட வேண்டிய சில பிரச்சினைகள் இருக்கின்றன.

குறிப்பாக, தமிழ் மக்களைப் பொறுத்தவரை யுத்தம் விட்டுச்சென்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த வகையில் காணாமல் போன அவர்களது உறவுகள் பற்றி திட்டவட்டமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல சுமார் 15 வருடங்களாக பயங்கரவாத குற்றச்சாட்டில் விசாரணையோ விமோசனமோ இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். இராணுவத்தின் பயன்பாட்டில் இன்னமும் மீதமிருக்கும் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு அக்காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இன முரண்பாட்டை ஏற்படுத்தும் குடியேற்றங்கள், மீன்பிடித்தல், மத வழிபாட்டிடங்களை நிறுவுதல் என்பன நிறுத்தப்பட வேண்டும்.




மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினையும் முன்னுரிமை கொடுத்துத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் அவர்கள் நாட்டிலேயே கடினமான உழைப்பாளிகளாகத் திகழுகின்ற அதேநேரத்தில், அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகின்றது.

அவர்கள் சம்பள உயர்வு கேட்டு காலத்துக்குக் காலம் பல போராட்டங்கள் நடத்திய போதிலும், தோட்ட முதலாளிகளினதும் அரசாங்கங்களினதும் பாராமுகத்தினால் அவை தோல்வி கண்டுள்ளன.

கடந்த ‘நல்லாட்சி’ அரசாங்க காலத்தில் அவர்கள் 1000 ரூபா சம்பள உயர்வு கேட்டு பல நாட்கள் போராடிய போதிலும், அவர்கள் சார்பாக அரசாங்கத்தில் அங்கம் வகித்த கட்சிகளின் செயலற்ற, பொறுப்பற்ற தன்மையாலும், அரசாங்கத்தின் பாராமுகத்தாலும் அந்தப் போராட்டம் தோல்வியடைந்தது.

எனவே புதிய அரசு அவர்களது 1000 ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் நிறைவேற்றி வைக்க முன்வர வேண்டும்.




அதேபோல, முஸ்லீம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். முக்கியமாக அவர்களின் மத, கலாச்சார மற்றும் பழக்க வழக்க அடையாளங்கள் மதிக்கப்பட்டு, அவர்கள் நாட்டின் எப்பகுதியிலும் அச்சமின்றி வாழும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக, 1990இல் வடக்கிலிருந்து புலிகளால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லீம் மக்கள் திரும்பவும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வாழ்வதற்கான சகல உதவிகளையும் அரசாங்கம் முன்னுரிமை கொடுத்துச் செய்ய வேண்டும்.

இந்த வகையான நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் துணிகரமாகவும், துரிதமாகவும், அர்ப்பணிப்புடனும் செய்வதன் மூலமே நாட்டின் பாதுகாப்பையும், இனங்களின் ஒற்றுமையையும் ஏறபடுத்தி, நாட்டை பொருளாதார ரீதியில் துரிதமாக அபிவிருத்தி செய்ய முடியும்.

இந்த நடவடிக்கைகளை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டால், அது நாட்டின் பிற்போக்குவாத, பிரிவினைவாத, தேசத்துரோக சக்திகளுக்கு கால அவகாசமும் சந்தர்ப்பமும் வழங்குவதாக அமைந்துவிடும்.




எனவே புதிய அரசு சரியான வழியில் விரைந்து செயற்பட்டு, அநாவசியமான சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே, தமிழ்பேசும் முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் சார்பாக ‘வானவில்’ புதிய ஜனாதிபதியிடம் விடுக்கும் வேண்டுகோளாகும்.



VAANAVIL 107_2019





No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...