ஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா? (2) பிரதீபன்


-
(பகுதி – 2)
லங்கை தமிழர்களின் தலைமை, குறிப்பாக யாழ்ப்பாணிய தலைமை, ‘இன விடுதலைக்காகப் போராடுகிறோம்’ என்று சொல்லிக்கொண்டு, அதேநேரம் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையின் படுபிற்போக்கான வலதுசாரி முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் (ஐ.தே.க.) கூட்டுச் சேர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை தமிழ் மக்கள் பலர் அறியாமல் இருக்கின்றனர்.
இலங்கை அரசியலில் ஐ.தே.கவின் வகிபாகம் இரண்டு வகைப்பட்டது. ஒன்று, அதன் இலங்கை தேசியத்துக்கு எதிரான ஏகாதிபத்திய சார்பு போக்கு. மற்றது, அதன் தமிழின விரோதப் போக்கு.
தமிழ் தலைமைகளைப் பொறுத்தவரை ஐ.தே.கவின் இந்த இரு போக்குகளுடனும் அன்றிலிருந்து இன்றுவரை கூட்டுச் சேர்ந்தே செயல்பட்டு வந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியே இன்று இரா.இசம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என எடுத்திருக்கும் முடிவு.


தற்காலத்திய தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் பலர், சிங்கள இனவாதத்தின் பிரதிபலிப்பாகவே தமிழ் இனவாதம் (அதை அவர்கள் தமிழ் தேசியவாதம் என அழைப்பர்) தோன்றியதாகக் கூறிக்கொள்வர். இது கோழியா முட்டையா முதலில் தோன்றியது என்பது போன்ற விவாதம். ஆனால் உண்மை என்பது முற்றிலும் அதுவல்ல.
அமரர் ஹன்டி பேரின்பநாயகம் போன்றவர்களின் தலைமையில் 1924இல் யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 1926இல் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசாக பெயர் மாற்றம் பெற்ற அமைப்பே தமிழர்கள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு முற்போக்கான அமைப்பு.
இந்த அமைப்பு, இலங்கைக்கு பூரண சுதந்திரம் கிடைக்க வேண்டும், தேசிய ஒற்றுமை உருவாக வேண்டும், சாதி அமைப்பு நீக்கப்பட வேண்டும், மது ஒழிக்கப்பட வேண்டும், பெண்கள் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பன போன்ற பல முற்போக்கான கோரிக்கைகளை முன்வைத்து செயல்பட்டு வந்தது. தமிழ் மக்களும் அந்த இயக்கத்துக்கு தாராளமாக ஆதரவளித்தனர்.
இந்த இயக்கத்தின் முற்போக்கான போக்கைப் பொறுக்காத யாழ்ப்பாணத்தின் உயர்சாதி வேளாள இந்துக்களின் பிரதிநிதியான ஜீ.ஜீ.பொன்னம்பலம், தமிழ் இனவாத கோசங்களை முதன்முறையாக முன்வைத்து யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் செயல்பாட்டை வெற்றிகரமாக முடக்கிவிட்டார். அந்த வகையில் பொன்னம்பலமே தமிழ் இனவாதத்தின் தந்தை எனலாம்.
பின்னர் 1948 பெப்ருவரி 4ஆம் திகதி இலங்கைக்கு பிரித்தானியரால் சுதந்திரம் வழங்கப்பட்டது. அதற்கு முன்னதாக 1947இல் சுதந்திர இலங்கைக்கான பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவழி தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் வாழும் மலையகப் பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இடதுசாரிகளாக இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்போதைய ஐ.தே.க. அரசாங்கத்தினதும் சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமருமான டி.எஸ்.சேனநாயக்க, தோட்டத் தொழிலாள மக்களைப் பழிவாங்குவதற்காக அவர்களது பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்து அவர்களை நாடற்றவராக்கினார்.
இலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களில் ஒரு பிரிவினரான இந்த மலையகத் தமிழர்களுக்கு எதிரான கொடுமையை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமாக நிறைவேற்றுவதற்கு உதவியவர் வேறு யாருமல்ல, இலங்கைத் தமிழர்களின் மூத்த அரசியல் கட்சியான தமிழ் காங்கிரசின் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலமே!
இந்த நிகழ்வுதான் ஐ.தே.க. தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட முதலாவது இனவாத நடவடிக்கை மட்டுமின்றி, தமிழ் தலைமையே அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த சம்பவமுமாகும். அதுமட்டுமின்றி, இதே டி.எஸ்.சேனநாயக்கவின் அரசே வடக்கு கிழக்கில் இருந்த தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் ஆரம்பித்து வைத்தது. அந்த நடவடிக்கையையும் பொன்னம்பலம் டி.எஸ்சின் அரசில் அமைச்சராக இருந்துகொண்டு ஆதரித்தார்.
இந்த சட்டம் கொண்டுவரப்பட்ட சில நாட்களில் திருவாளர்கள் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கு.வன்னியசிங்கம் போன்றோர் தமிழ் காங்கிரசிலிருந்து விலகி தமிழரசுக் கட்சியை உருவாக்கினர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், பொன்னம்பலம் மலையக தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்ததால் தாம் விலகினோம் என்று.
ஆனால் அவர்கள் சொன்ன காரணம் பொய்யானது என சில தமிழ் காங்கிரசார் கூறுகின்றனர். அதாவது டி.எஸ். மலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமையைப் பறிக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கு குறைவாக இருந்ததால் செல்வநாயகம் போன்றோர் அந்த ஒரு வாக்கை அளிக்கும்படி பொன்னம்பலத்திடம் கூறிவிட்டு பின்னர் தாம் நல்ல பிள்ளைகள் போலும், பொன்னம்பலம் துரோகி போலவும் சித்தரிக்கின்றனர் என்பதாகும்.
இவ்வாறு விலகி வந்து தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தவர்கள் பொன்னம்பலத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ் மக்களிடம் தமது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக தமிழ் இனவாதத்தையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன்மூலம் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதக் கருத்தை பொன்னம்பலத்தையும் விட வேகமாகப் பரப்பினர்.
இருந்தும் 1956 தேர்தலில் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அமோக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும் செல்வநாயகத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி 1957 இல் பண்டா – செல்வா என்ற உடன்படிக்கையை ஏற்படுத்தி தமிழர்கள் அதிகமாகச் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சிமிக்க பிராந்திய சபைகளை அமைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
இதைப் பொறுக்காத ஐ.தே.க., ஜே.ஆர்ஜெயவர்த்தன தலைமையில் இனவாத பௌத்த பிக்குகளையும் அழைத்துக்கொண்டு “பண்டாரநாயக்க தமிழரசுக் கட்சியினருக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கப் போகிறார்” என்ற இனவாதப் பிரச்சாரத்துடன் அபகீர்த்திமிக்க ‘கண்டி யாத்திரை’ ஒன்றை மேற்கொண்டது. அதன் மூலம் பிரதமர் பண்டாரநாயக்கவுககு நெருக்கடி கொடுத்து பண்டா – செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வைத்தது.
இந்த நேரத்தில் பண்டாரநாயக்கவின் பக்கம் நின்று அவரது கரங்களைப் பலப்படுத்த வேண்டிய தமிழரசுக் கட்சியினர் தமிழ் பகுதிகளில் தேவையற்ற சிங்கள சிறீ எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்து பண்டாரநாயக்கவுக்கு சிங்கள மக்கள் மத்தியிலும், அவரது சொந்தக் கட்சியினர் மத்தியிலும் நெருக்கடியை உருவாக்கி, ஐ.தே.கவின் கையை ஓங்க வைத்து பண்டாரநாயக்கவை கையறு நிலைக்கு தள்ளி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வைக்க உதவினர்.
இது தமிழரசுக் கட்சி நன்கு தெரிந்துகொண்டு செய்த சூழ்ச்சி நடவடிக்கையாகும். அதற்குக் காரணம் பண்டா – செல்வா ஒப்பந்தம் நிறைவேறி இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட்டுவிட்டால் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தமது அரசியல் அடித்தளம் ஆட்டம் கண்டுவிடும் என்பதாகும். பிறிதொரு காரணம் அதன் மூலம் பண்டாரநாயக்கவின் செல்வாக்கு ஓங்கி ஐ.தே.கவின் அரசியல் எதிர்காலமும் சூனியமாகிவிடும் என்பதாகும்.
ஐ.தே.கவும் தமிழரசுக் கட்சியும் செய்த இந்த இனவாத அரசியல் குழப்ப சூழ்நிலையில் பிற்போக்கு சக்திகளால் 1958 செப்ரெம்பரில் பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கட்டுரையின் அடுத்த பகுதியில் பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்ட பின்பு சிறீலங்கா சுதந்திரக் கட்சியினதும், நாட்டினதும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவரது மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக தமிழரசுக் கட்சி எவ்வாறு ஐ.தே.கவுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டது என்பதைப் பார்ப்போம்.
தொடரும்…..

மூலம்: சக்கரம்.காம் 

No comments:

Post a Comment

இலங்கை வரலாற்றில் அழியாத சுவடுகளைப் பதித்துச் சென்ற1953 ஓகஸ்ட் 12 ஹர்த்தால்!--மாவலியான்

மே 18, 2022 1953 இல் ஒரு பெரிய ஊர்வலத்தில் என்.எம். பெரேரா உரையாற்றுகிறார் 1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலையும் தற்போது காலிமுகத்திடலில் முகாமிட்டிர...