செல்வி – சில நினைவுகள் -மணியம்


செல்வி” என்று அழைக்கப்படும் செல்வநிதி தியாகராசா பாசிசப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு 28 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கடத்தப்பட்ட அவர் பலத்த சித்திரவதையின் பின் கொல்லப்பட்டு சுமார் 22 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. (அவர் புலிகளால் கடத்தப்பட்ட இன்னொரு யாழ்.பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவனான மனோகரனுடன் சேர்த்து 1997இல் கொல்லப்பட்டதாக புலிகளிடமிருந்து கிடைத்த தகவல்கள் மூலம் அறிய வந்ததாக ‘விக்கிபீடியா’ குறிப்பிடுகின்றது)
செல்வி, அவர் தங்கியிருந்த யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் உள்ள ஆத்திசூடி வீதி அறையிலிருந்து 1991ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30 திகதி புலிகளால் கடத்திச் செல்லப்பட்டார்.
செல்வியின் பிறப்பிடம் வவுனியா மாவட்டத்திலுள்ள சேமமடு என்ற குடியேற்றக் கிராமமாகும்.


செல்வி கடத்தப்பட்ட பொழுது யாழ்.பல்கலைக்கழகத்தில் அரங்கியல் மற்றும் நாடகத்துறையில் மூன்றாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தார்.
முற்போக்கு சிந்தனைகளால் ஆகர்சிக்கப்பட்ட செல்வி ஆரம்பகாலத்தில் புளொட் இயக்கத்தின் ஆதரவாளராகச் செயற்பட்டு வந்தார். ஆனால் புளொட் இயக்கம் உட்பட அநேகமான ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்குள் அராஜகம் தலைவிரித்தாடியதால் அமைப்பு ரீதியிலான அரசியலிலிருந்து ஒதுங்கி சுதந்திரமாகச் செயற்பட ஆரம்பித்தார். அவருக்குத் துணையாக வேறு பல பல்கலைக்கழக மாணவர்களும் இருந்தனர்.

செல்வியின் அவாவும் ஆற்றலும் பன்முகத்தன்மை வாய்ந்தவை.
அவர் ஒரு உணர்வுபூர்வமான கவிஞராகத் திகழ்ந்தார். அவரதும், அவருடைய நெருங்கிய தோழியான சிவரமணியினதும் (யாழ்.பல்கலைக்கழக மாணவியான இவர் யாழ்ப்பாணிய சமூகம் தந்த நெருக்கடி காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார்) சில கவிதைகள் ‘சொல்லாத சேதிகள்’ என்ற ஈழத்துப் பெண் கவிஞர்களின் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. செல்வி புலிகளால் கொல்லப்பட்ட பின்பு அவரது கவித்துவ ஆற்றலுக்காக சில சர்வதேச அமைப்புகளால் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதுமாத்திரமின்றி, செல்வி ஒரு நாடக நடிகையும் நெறியாளருமாவார். அவர் ‘சீதனம்’ மற்றும் ‘பாலியல் வன்முறைகள்’ என்ற இரு நாடகங்களை இயக்கியுள்ளார். புலிகளால் கடத்தப்படுவதற்கு முதல்நாள் Palestinian Intifada   என்ற நாடகத்தில் நடித்துள்ளார்.
பெண் விடுதலை சம்பந்தமான செயற்பாடுகளிலும் செல்வி அக்கறையுடன் செயலாற்றினார். அதற்காக தானே முன்னின்று ‘தோழி’ என்ற பெயரில் பெண்களுக்கான சஞ்சிகை ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். அந்தக் காலகட்டத்தில் வடக்கில் பெண்களுக்கான அமைப்பாக இயங்கி வந்த ‘பூரணி’ என்ற அமைப்புடனும் இணைந்து பணியாற்றினார்.
அன்றைய காலகட்டத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில் ‘கலாச்சாரக் குழு’ என்ற பெயரில் ஒரு அமைப்பு இயங்கி வந்தது. இந்த அமைப்பில் புலிகள் உட்பட எல்லா அமைப்புகளையும் சேர்ந்த மாணவர்கள் ஒன்றுபட்டு செயற்பட்டு வந்தனர். செல்வியும் அவரது நண்பர்களும் அதில் அக்கறையுடன் செயற்பட்டனர்.
இந்த அமைப்புடன் வெளியிலிருந்து தொடர்புபட்டிருந்த ஒரு ஆசிரியர் (இவர் புலிகளுக்காக சில பிரசார நாடகங்களை இயக்கியவர்) இந்த அமைப்பை புலிகளின் ஒரு உப அமைப்பாக மாற்றும் பிரயத்தனங்களில் ஈடுபடத் தொடங்கினார். இதனால் கலாச்சாரக் குழுவுக்குள் முரண்பாடுகள் தோன்றின. சில புலி ஆதரவாளர்கள் உட்பட பலர் அந்த ஆசிரியரின் முயற்சியை எதிர்த்தனர். அந்த எதிர்ப்பில் செல்வியும் அவரது தோழர்களும் முன்னணியில் நின்றனர். இந்த முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் சமரசத்தை ஏற்படுத்துவதற்காக நானும் ஒருமுறை அழைக்கப்பட்டிருந்தேன்.
அவர்களின் இந்தத் தீவிரமான எதிர்ப்பு நிலைதான் செல்வியையும் அவரது மற்றைய இரு பல்கலைக்கழக நண்பர்களான தில்லைநாதன் (தில்லை) மற்றும் மனோகரன் ஆகியோரையும் புலிகள் கடத்திச் சென்று கொலை செய்வதற்கு அடிப்படையாக அமைந்தது என்பதே பலரின் அபிப்பிராயமாக இன்றும் இருக்கின்றது.
செல்விக்கும் எனக்குமிடையிலான உறவு அவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் கற்க வந்தபோது ஆரம்பமானது. பல்கலைக்கழகத்துக்கு முன்னால் புத்தகக்கடை ஒன்றை நடத்தி வந்த என்னை அவர் சில நண்பர்களுடன் வந்து சந்தித்தபோது அந்த உறவு ஆரம்பமானது.
சமூகத்துக்காக அர்ப்பணிப்புடன் சில விடயங்களைச் செய்ய வேண்டும் என்ற பொது நோக்கு எமக்குள் இருந்ததாலும், நாங்கள் இருவரும் விவசாயக் குடும்பங்களிலிருந்து வந்ததாலும், அவரது சேமமடுக் கிராமத்தில் எனது உறவினர்கள் சிலர் வாழ்ந்து வாழ்ந்ததாலும், எல்லாவற்றுக்கும் மேலாக 1960களில் அவரது சேமமடு கிராமத்தில் நான் எமது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சில வேலைகளில் ஈடுபட்டிருந்ததாலும் எமது உறவு பலமாக வளரத் தொடங்கியது.
இந்தக் காலகட்டத்தில் செல்வியின் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் எனது ஞாபகத்துக்கு வருகின்றனர். அவர்களில் புலிகளால் கொல்லப்பட்ட தில்லை, மனோகரன், தற்கொலை செய்து கொண்ட சிவரமணி மற்றும் அஞ்சலி, கலா, அம்பிகா, மலையகத்தைச் சேர்ந்த இராதாகிருஸ்ணன், செல்வராஜ், புத்தளத்தைச் சேர்ந்த ரவி, கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த விஜயரத்தினம், மார்கிரெற்றா, செல்லத்துரை, ஜோதிலிங்கம், நாகராசா பிற்காலத்தில் அவரது துணைவியான வத்சலா, விஜி உட்படப் பலர் இருந்தனர். இவர்கள் அனைவரும் என்னுடனும் அந்நியோன்யமாகப் பழகினர். பெரும்பாலான நேரங்களில் என்னைச் சந்திக்க வரும்பொழுது செல்வியும், சிவரமணியும் ஒன்றாகவே சேர்ந்து வருவர். இறுதியாக இருவரும் சேர்ந்து வந்தது ஒரு ஆங்கில நாடகத்தின் நுழைவுச்சீட்டை எனக்குத் தருவதற்காக என்பது எனது மனதில் இன்றும் பசுமையாக இருக்கின்றது.

செல்வி புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட அன்று ஒரு பிற்பகல் நேரம் யாழ்.பல்கலைக்கழகப் பெண்கள் விடுதிக்கு முன்னால் இருந்த எனது கடைக்கு அவர் மிகுந்த பதட்டத்துடன் வந்தார். (பல்கலைக்கழக நடுவாசலுக்கு முன்னால் இருந்த எனது கடையை இந்திய அமைதிப் படையினர் 1990 ஒக்ரோபரில் பீரங்கித் தாக்குதல் நடத்தி தகர்த்துவிட்ட பின்னர் எனது கடையை அதே சேர்.பொன்.இராமநாதன் வீதியில் பெண்கள் விடுதிக்கு முன்னால் தற்காலிகமாக மாற்றியிருந்தேன்)


அப்போது கடையில் வேறு எவரும் இருக்கவில்லை.
செல்வியின் பதட்டத்தை உணர்ந்த நான், “என்ன செல்வி?” என வினவினேன்.
“மணியண்ணை தில்லையை கம்பசுக்கு பின்னாலை உள்ள றோட்டிலை வைச்சு பிடிச்சுப்போட்டாங்கள். அடுத்ததாக என்னிட்டை வந்தாலும் வருவாங்கள். அதுதான் என்ன செய்யிறது எண்டு தெரியல்லை” என பதட்டத்துடன் கூறினார்.
தில்லையை பிடித்தவங்கள் யார் என்பதை செல்வி சொல்லாவிட்டாலும் எனக்கு ஊகிப்பது சிரமமாக இருக்கவில்லை.
“அப்படியென்றால் நீங்கள் கொஞ்ச நாளைக்கு வேறை எஙi;கயாவது தலைமறைவாக இருப்பது நல்லது” என நான் கூறினேன்.
“இல்லை மணியண்ணை, நான் எங்கை ஒளிச்சாலும் அவங்கள் தேடிக் கண்டுபிடிச்சுப் போடுவாங்கள். இப்ப நான் என்ரை ரூமிலை போய் இருக்கப்போறன். அங்கை பிடிக்க வந்தால் சுத்தியுள்ள சனம் விடாது எண்டு நினைக்கிறன்” என்று சொல்லவிட்டு, சிறிது நேரம் உரையாடிய பின் அவர் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
அவரது பதிலில் இருந்த உறுதியைக் கண்டு நான் சற்றுப் பிரமித்துப் போனேன். அவர்தான் வசிக்கும் அயலிலுள்ள சனங்கள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை எண்ணியே வியந்தேன். உண்மையான ஒரு மக்கள் போராளிக்குத்தான் இந்த உறுதிப்பாடு வரும்.
செல்வி தங்கியிருந்த ஆத்திசூடி வீதியில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதை நான் அறிவேன். அங்கு எமது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிக்கு பல தோழர்கள் இருந்தனர். அவர்களில் பலர் அப்பொழுது நடுத்தர வயதை அல்லது முதுமையை அடைந்திருந்தனர்.
தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட இயங்கங்கள் ஆரம்பமான பின்னர் அப்பகுதி இளைஞர்களில் பலர் புளொட் இயக்கத்தில் இணைந்து செயல்பட ஆரம்பித்திருந்தனர். அந்த இளைஞர்களுக்கும் புலிகளுக்கும் இடையே தகராறுகளும் நடந்து வந்தன.
நான் வெளியே வந்து செல்வி எனது கடைக்கு அருகில் ஆத்திசூடி வீதியில் திரும்புவதைப் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் மீண்டும் கடைக்குள் வந்தேன். செல்விக்கு எதுவும் நடக்காது என்ற நப்பாசை எனது மனதில் உருவாகியிருந்தது.


செல்வி எதிர்பார்த்தபடியே புலிகள் சிறிது நேரத்தில் அவரது இருப்பிடத்துக்கு வந்து பொதுமக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அவரைப் பிடித்துச் சென்றுவிட்டதாக பின்னர் அறிந்தேன். அன்று இரவு முழுக்க மன வேதனையால் தூக்கமின்றிப் புரண்டேன். ஏனெனில் புலிகள் ஒருவரை, அதுவும் மாற்று இயக்கமொன்றில் இருந்தவரைப் பிடித்துச் சென்றால் அவர் திரும்பி வருவது சாத்தியமில்லை என்பதை எண்ணற்ற சம்பவங்கள் மூலம் அறிந்திருந்தேன்.
செல்வியை புலிகளின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு பல்கலைக்கழக மட்டத்தில் பல முயற்சிகள் நடந்தன.
செல்வியின் உடன்பிறந்த தங்கை ஒருவர் தனது கைக்குழந்தையுடன் சேமமடுவிலிருந்து வந்து செல்வியை விடுவிப்பதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டதுடன், புலிகளின் பல முகாம்களிலும் ஏறி இறங்கினார். எனது வீட்டுக்கும் பல தடவைகள் வந்து ஆலோசனை நடத்தினார். எதனாலும் ஒரு பிரயோசனமும் நிகழவில்லை. பல நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து செல்வியின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட அவர் ஈற்றில் வெறுங்கையுடனும் நிராசையுடனும் தனது ஊருக்குத் திரும்பிச் சென்றார்.

செல்வியை புலிகள் பிடித்துச் செல்வதற்கு முன்னர் அவரது நட்பு வட்டத்தில் கடைசியாக அவரைச் சந்தித்த நபர் நான்தான் என நினைக்கிறேன்.
ஆனால் வரலாறு எப்படியெல்லாம் நடை போடுகிறது. செல்வியை பிடித்துச் சென்ற அதே 1991ஆம் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி புலிகள் என்னையும் பிடித்துச் சென்றனர். ஒன்றரை ஆண்டுகள் அவர்களது பல்வேறு வதை முகாம்களில் தடுத்து வைத்துச் சித்திரவதை செய்த பின்னர் என்னை விடுதலை செய்தனர்.
என்னை விடுதலை செய்வதற்கு முன்னர் என்னுடன் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் உரையாடிய புலிகளின் புலனாய்வுப் பிரிவு துணைப் பொறுப்பாளர் கபிலம்மான் என்பவன், “நீங்கள் ஒரு கட்சிக்காரன் (அவன் குறிப்பிட்டது எனது கம்யூனிஸ்ட் கட்சியை) எண்டபடியால் தப்பிப்பிழைச்சுப் போறியள். இயக்கக்காரன் எண்டால் கதை வேறை” என ஒரு நமுட்டுச் சிரிப்புடன் கூறினான்.
புலிகள் என்னைப் பிடித்து வைத்திருந்த காலத்தில் இரு தடவைகள் செல்வியைப் பிடிப்பதற்கு சற்று முன்னர் புலிகளால் பிடிக்கப்பட்ட தில்லையை காணும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் செல்வி புலிகளின் பெண்கள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால் அவரைக் காணும் வாய்ப்புக் கிட்டவில்லை.
ஆனால் ஒருமுறை புலிகள் பிடித்து வைத்திருக்கும் ‘கைதி’களுக்குப் பொறுப்பான காந்தி என்பவன் என்னை அழைத்து, “நீதான் செல்வி தரும் கடிதங்களை கொழும்புக்கு இரகசியமாக அனுப்புவது எண்டு தகவல் கிடைச்சிருக்கு. உண்மைதானா?” எனக் கேட்டான்.
நான், “அப்பிடி ஒருக்காலும் நான் செல்வியிட்டை கடிதங்கள் வாங்கி அனுப்பவில்லை” என மறுத்தேன்.
அவன் அதை நம்ப மறுத்து, “பொய் சொல்லதே” எனக் கூறி ஒரு மரக்கொட்டனால் என்னைத் தாறுமாறாகத் தாக்கினான்.
நான் “இல்லை” என மறுத்ததுடன், “நீங்கள் நம்பாவிடில் எனக்கு முன்னால் செல்வியை வைத்துக் கேளுங்கள்” என்று கூறினேன்.
“என்னடா எங்களுக்கு சுத்தப் பாக்கிறியா? செல்வி எப்பிடி இருக்கிறாள் எண்டு அறிய பிளான் போடுறியா?” என மேலும் தாக்கினான்.
அவன் சொன்ன வார்த்தைகளிலிருந்து செல்வியின் நிலை அவ்வளவு நல்லதாக இல்லை என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.
செல்வியையும் என்னையும் சித்திரவதை செய்த புலிகள் இறுதியில் அழிந்தே போனார்கள். ஆனால் அதற்கு முன்னர் செல்வி போன்ற ஆயிரக்கணக்கான உண்மையான மானிட நேயமிக்கவர்களை புலிகள் அழித்தொழித்துவிட்டார்கள் என்பதுதான் வேதனையான விடயம்.


செல்வி ஒருவேளை என்னைப்போல தப்பிப்பிழைத்து இருந்திருந்தால், 2009இல் புலிகள் முள்ளிவாய்க்காலில் முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட பொழுது பலரைப் போல அவரும் மகிழ்ச்சி அடைந்திருக்கக்கூடும்.

மூலம்: வானவில் இதழ் 104

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...